நப்பின்னை யார் என்று ஆராய்ந்தபோது, அவள் நீளா தேவியின் அம்சம் என்று கோடிக்காட்டினோம். இந்தக் கட்டுரையில் தமிழ் மரபில் நீளா தேவி யார், எப்படிப்பட்டவள் என்று ஆராய்வோம்.
நீளா தேவி என்பவள் திருமாலின் துணைவி என்று சொன்னால், ‘அப்படியா’ என்று ஆச்சரியப்படுபவர்கள் நிறைய பேர் இருந்தாலும், இந்துக் கடவுளர்களைக் கொச்சைப் படுத்தி இழிவு படுத்துபவர்களுக்கு, நல்ல அவல் கிடைத்த மாதிரிதான். ஏற்கெனவே, துணைவி என்று ஒரு தெய்வம் தாயார் சந்நிதியில் அமர்ந்திருக்க, பெருமாள் வீற்றிருப்பதோ, ஸ்ரீ தேவி, பூதேவி என்ற இரு நங்கயருடன். வீதி வலம் வந்தாலும், இந்த இவருடன்தான். இந்த இருவருடன் மூன்றாவதாக நீளா தேவியுமா என்று கேட்பவர்கள் உண்டு. அவர்களுக்கு ஒரு செய்தி. இந்த நீளா தேவியும் எப்பொழுதும் 2+1 என்றுதான் பெருமாளுடன் வீற்றிருக்கின்றாள். வீதி வலத்திலும் அவள் வருகின்றாள். ஆனால் அவளை நம்மால் பார்க்க முடியாது. அவள் பெருமாளை ஒட்டி, அவரது நிழலாக – இருட்டாக இருக்கிறாள் என்று பெரியோர் கூறுவர்.
அவள் யார் என்று தேடினால் அவளைக் குறித்த செய்தி, வேதத்தில் எட்டு வரிகளாக மட்டுமே உள்ளன.
விஷ்ணுவைக் குறித்த வேத சூக்தங்கள் ஐந்து. (சூக்தம் என்றால் சிறப்பாகச் சொல்லப்பட்டது என்று பொருள்.) அவற்றுள் மூன்று, விஷ்ணு பத்தினிகளைப் பற்றியது. இவர்கள், ஸ்ரீதேவி, பூதேவி. நீளாதேவி ஆவர். நீளா சூக்தம் எனப்படும் நீளா தேவியைப் பற்றிய எட்டு வரிகள் தைத்திரிய சம்ஹிதையிலும், யஜூர் வேதத்திலும் காணப்படுகின்றன. வடமொழி இலக்கியங்களிலோ, கதை வழியாகவோ இவளைப் பற்றி ஒரு குறிப்பும் கிடையாது. ஆனால் தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது. வேத மரபையும், வேதக் கருத்துக்களையும் தமிழர் ஐயம் திரிபுறக் கற்றுக் கொண்டது மட்டுமல்லாது, கற்ற படி நடக்கவும், நிலை நிறுத்தவும் செய்துள்ளனர். கசடறக் கற்பதைப் பற்றி வள்ளுவர் போதனையாக மட்டும் சொல்லவில்லை. நம் பழம் தமிழர் அவ்வாறு இருந்தமையையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
கசடறக் கற்கும் வகையில், மூன்று மனைவியர் ஒருவருக்குக் கூடுமா என்ற கேள்வியை, மறை அறிந்த நம் முன்னோர் எழுப்பியுள்ளனர்.
இரண்டாம் சங்கப் பலகையை அலங்கரித்த கீரந்தையார் என்னும் புலவர் ‘தொன் முறை’ என்று ஆரம்பிக்கும் தனது பரிபாடலில் இதை ஆராய்ந்துள்ளார்.
திருமகள் சேர்ந்த குற்றமற்ற மார்பினை உடைய திருமால், வராஹமாக அவதரித்து இந்தப் புவியை நீரிலிருந்து வெளியே எடுத்து, பூமகளை மணந்து கொண்டது, வான் மதியானது களங்கம் கொண்டதற்கு ஒப்பாகும் என்று கூறுவர். ஒருத்தியோடு மனையறம் நடத்தி வருகையில், இன்னொருத்தியோடு அகலம் (மார்பு) சேர்த்தல் கூடாமையில் சிறந்தது என்பது வழக்கு. அப்படி இருக்க நிலமகளை, நீரினின்று எடுத்ததாலேயே அவளை, இவர் மணந்ததாகக் கொள்ளலாமோ, என்னும் கேள்வி வருகிறது. ஆம். திருமால் பூ மகளை மணந்தார் என்று சொல்வோர், அதற்குச் சாட்சியாக, திருமால் அவளை வெள்ளத்திலிருந்து வெளிக் கொணர்ந்த பிறகு, புள்ளி அளவு நிலமும், அத்தகு வெள்ளத்தால் வருந்தியதில்லை என்னும் உண்மையை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர் பூமகளை மணக்கவேதான் அவ்வாறு ஆனது என்பர். இது சிறந்த உரை அல்ல என்கிறார் கீரந்தையார்.
நித்தில மதாணி அத்தகு மதி மறுச்
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று
(அகலம் – மார்பு, களிறு – பன்றி ஆகிய வராஹம்.)
அது எவ்வாறு சிறந்த உரை அல்ல என்பது குறித்து அந்நாளில் விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். அந்த விவாதங்கள் இப்பாடலில் இடம் பெறவில்லை. ஆனால், மறை பொருளாக புலவர் இரு செய்திகளைக் காட்டியுள்ளார்.
(1) திருமால் அகலம் (மார்பு) வான் மதியைப் போல மாசு பட்டது அல்ல. செய்யோள் என்னும் திருமகள் வீற்றிருக்கும் இடம் களங்கமில்லாதது. எனவே அவள் ஒருத்திதான் திருமாலின் துணைவி!
(2) புள்ளி அளவு நிலமும் வெள்ளத்தால் வருந்தியதில்லை. எனவேதான் புவி மகள் திருமால் துணைவி ஆவார் என்று சொல்லப்படுவது சிறந்த உரை அல்ல.
இவற்றை ஆராய்கையில், பூமகளும் திருமாலின் தேவிஆவார் என்ற வேதக் கருத்தும் மெய்ப்பட வேண்டும். அதே நேரம், திருமால் அவளைச் சேரவே திருமகளுக்குப் போட்டி என்றோ, சக்களத்தி என்றோ இருக்கக் கூடாது. வேறு துணை ஒருத்தியைக் கொண்டவன் என்னும் அவப்பெயரும், களங்கமும் திருமாலுக்கு வரக் கூடாது. இந்த வகையில் ஆராய்ந்து, ஒரே வார்த்தையாக ‘சிறந்தன்று’ – இந்த உரை என்று கீரந்தையார் கூறி விட்டார்!
அது எப்படி ‘சிறந்தன்று’ என்று ஆராயப் புகுமுன், திருமாலின் மற்றொரு துணை எனப்படும் நீளா தேவி குறித்த தமிழ்ப் பாடலையும் பாப்போம்.
“வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதான்”
என்னும் ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் (சிலப்பதிகாரம்), வையம் அளந்த பெருமாளாகிய திருமால், தன மார்பின் கண் உள்ள திருமகளை நோக்காமல், நப்பின்னையை நோக்கினான் என்று வருகிறது. இங்கும் திருமகளை ஒதுக்கிவிட்டு, நப்பின்னையை நோக்கினான் என்று சொல்லப்படுகிறது. இந்த நப்பின்னை பூ மகள் அல்லள். எனவே இவள் மற்றொரு தேவியான நீளா தேவி என்பது உள் பொருளாகக் காட்டப்படுகிறது. வேறு எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாமல், தமிழ் இலக்கியத்தில் மட்டுமே இங்ஙனம் நீளா தேவியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளாள்.
ஒருவருக்கு மூன்று பேர் துணைவியர் என்றால் அது களங்கம் ஆகாதா என்றால், ஆகாது என்று மறை பொருள் அறிந்த நம்மாழ்வார் காட்டுகின்றார்.
“குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்”
( திருவிருத்தம் – 3 ) என்கிறார்.
இங்கு கோவலர் மடப் பாவை என்று நப்பின்னையை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்) காட்டுவதால், அவள் நீளா தேவி என்பதும் புலனாகிறது. இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும். அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும் தெரிகிறது.
இந்தக் கருத்தை, நாம் முன்பு சொன்ன வாதங்களில் வைத்துப் பார்ப்போம்.
முதலில், கோவிலில் திருமால் ஸ்ரீ தேவி பூ தேவியருடன் எழுந்தருளி இருப்பதும், வீதி வலம் செல்லும் போதெல்லாம், அவர்களுடனே செல்வதும், நிழலை விட்டுப் பிரியாதிருப்பதைக் காட்டுகிறது. நம்மால் பார்க்க முடிந்த இவ்விரு நிழல்களுடன், கண்ணுக்குத் தெரியாத நீளா தேவியும் அவருடன் இருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.
பரிபாடல் விவாதத்தின்படி, மண் மகளை மணந்தாலும், அது களங்கமல்ல. மண் மகளை அவன் மணந்தான் என்பது உலகோருக்கு. என்றுமே மண் மகள், திருமகளைப் போல அவர் மார்பைச் சார்ந்தே இருக்கிறாள் என்பதே உண்மை. மண்மகளும் திருமகளே.
அதுபோலவே நப்பின்னை என்னும் நீளா தேவியும் அவருடனேயே இருக்கின்றாள் என்பதும் உண்மை என்று ஆகிறது. “நப்பின்னை நங்காய் திருவே’ என்று ஆண்டாள் கூறுவதும், நீளா தேவி திருமகள்தான் என்று தெளிவிக்கிறது.
இந்த வேதக் கருத்தையே இராமானுசர் ‘சரணாகதி கத்யம்’ என்னும் பாவினில் திருமாலை விட்டுப் பிரியாதவளாக திருமகள் இருக்கின்றாள் என்று முதல் சூர்ணையில் சொல்லி, பின் 7 -ஆம் சூர்ணையில், அத்தகு திருவுக்குத் திருவான, திருவின் மணாளனே, ஸ்ரீ வல்லபனே என்று சொல்லி, மேலும் ‘நீ ஒருவனே பூமி, நீளா நாயகனும் ஆவாய்’ என்று ”ஏவம் பூத பூமி நீளா நாயக’ என்கிறார். இதன் மூலம் இம்மூன்று நாயகியருமே சமம். வேறுபாடு இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு திருக்கோவிலிலும், அந்தந்த இடத்தில், தன துணைவியான திருமகளின் அம்சமான தேவியைத் திருமணம் கண்டு, அவளும் தனி சந்நிதி கண்டு ஆண்டு வந்தாலும், நிழல் போன்ற இம்முத் தேவியர் திருமாலை இணை பிரியாது இருப்பார்.
எதற்கு மூன்று தேவியர்? திருமகள் என்னும் இலக்குமி ஒருத்தியுடனேயே மாயங்கள் செய்ய முடியாதவனா இந்தத் திருமால்?
முடியும்.
இலக்குமி என்னும் தமிழ்ச் சொல்லும், லக்ஷ்மி என்னும் வடமொழிச் சொல்லும் ‘ இலக்கு இவனே’ என்று திருமாலையே நம் இலக்காக, இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என்றுதான் காட்டுகின்றன. ஆனால் கர்ம வினையில் அகப்பட்டு சுழலும் நமக்கு திருமாலா இலக்கு? வேறு இலக்குகள் இல்லையா? முக்கியமான மூன்று இலக்குகள் இல்லையா? மண், பொன், பெண் என்னும் மூன்று இலக்குகளைச் சுற்றியே நம் வாழ்க்கை இயங்குகிறது அல்லவா?
மக்களை மயக்கும் மண், பொன், பெண் என்னும் மூன்று சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டால் தான் வீடு பேறு கிடைக்கும், எனவே தான் இந்த சக்திகளுக்கு மூலமாக மூன்று தேவியரை திருமால் ஆட்கொண்டுள்ளார் என்று கூறலாம். இதில் மண் என்பது பூமகள் என்பதும், பொன் என்பது திருமகள் என்பதும் வெளிப்படை. ஆனால் பெண் என்பவள் எவ்வாறு நீளா மகள் என்னும் ஆயர் பாவை ஆகிறாள்?
இதற்கு விடையை, நம் தமிழ் முன்னோர் தராமலா போயிருப்பார்? இதோ இருக்கிறது விடை, காஞ்சிக்கு அருகில் உள்ள தூப்புல் என்னும் ஊரில் அவதரித்த தேசிகர் இயற்றிய ‘தயா சதகம்’ என்னும் பாவினில். திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமானின் தேவியராக இம்மூவரையும் போற்றுகையில், நாம் செய்யும் அநேக பாபங்களையும், தோஷங்களையும் அவன் காணாதவாறு, அவனை மயக்குபவள் என்று நீளா தேவியைக் குறிப்பிடுகிறார்.
மைத் தடங்கண்ணியான நப்பின்னை, எத்தனை போலும் அவன் துயிலேழவொட்டாள் காண். அவனைத் துயில் எழுப்ப மாட்டாள். அவள் துயில் எழுப்பினால் தான், அவன் எழுந்திருப்பான். அவள் மயக்கத்தில் அவன் ஆழ்ந்திருக்கவே, அந்த மயக்க நிலையிலேயே அவள் நம்மைப் பற்றி நாலு வார்த்தை நல்லதாகச் சொன்னால், நம்மிடம் உள்ள குற்றம் குறைகள் எதுவாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் அவன் நமக்கு அருள் பாலித்துவிடுவான்.
நப்பின்னையை நம்மில் ஒருத்தியாய், நம் தங்கையாய், நம் பின்னையாய்க் காட்டி, அவளிடம் கொண்ட மயக்கத்தில் அவன் நம் குறைகளைப் பொருட்படுத்தமாட்டாமையைக் காட்டவே அவள் (நீளா தேவி) ஜீவத் தொகுதிகளின் உருவகம் என்றும் நினைக்க ஏதுவாகிறது.
ஜீவர்களிடம் அவன் மயங்கி உள்ளான்.
திருமாலுக்கோ காக்கும் வேலை.
யாரைக் காக்க வேண்டும்?
நம்மை, நம் போன்ற உயிரினங்களை.
எவ்விடத்தில் காக்க வேண்டும்?
இந்தப் புவியுலகில்.
அவன் தன் தொழில் செய்ய நாமும் வேண்டும்,
நாம் இருக்கும் இந்தப் புவியும் வேண்டும்.
மார்பில் திருமகளைத் தாங்கிக் கொண்டு,
இந்த இருவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது அவன் வேலை.
இதில் நாம் என்ன அட்டூழியம் செய்தாலும், அவன் பொறுத்து, பொறுத்து, நம்மைத் திருத்தப் பார்க்கிறான். அவன் கண்டிப்பாக நடந்து கொள்ளலாம். மாறாகத் தண்டித்தால் நாம் அவனை வெறுத்து விடுவோமே!
நம்மிடம் உள்ள பொறுப்பினால், மயக்கத்தால், அவன் நம் குறைகளைப் பெரிதுபடுத்துவதில்லை.
இதையே நம் தமிழ்க் குடியைச் சார்ந்த பிள்ளை உலகாசிரியர் என்னும் பெருமான், ஸ்ரீவசன பூஷணம் என்னும் நூலில் அழகாகச் சொல்லியுள்ளார். நம்மிடம் பல தோஷங்கள் உள்ளன. நாம் செய்யும் தவறுகளுக்கோ அளவில்லை. ஆயினும், நாம் செய்யும் செயல்களில் ஏதேனும் நல்லது இருக்காதா என்று பார்ப்பவன் அவன். ( நீளா தேவி என்னும் உயிர்த் தொகுதிகளின் பிரதிநிதியின் பொருட்டு ).
பொற்கொல்லனிடம், பொன்னைக் கொடுத்து சோதித்துத் தருமாறு கேட்டால், அவன் அதை உரை கல்லில் தேய்த்துப் பார்ப்பான். நம் கண்ணுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் மிக மிகக் குறைந்த அளவில் பொன் துகள் கல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும். அதை மெழுகில் ஒற்றி எடுத்து வைத்திருப்பான். இப்படியே பலரிடமிருந்தும் வந்த பொன்னை சோதனை செய்கிறேன் பேர்வழி என்று கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அப்படி எடுத்த பொன், நாளடைவில் கால் பொன்னாயிற்று, கழஞ்சு பொன்னாயிற்று என்று திரட்டி விடுவான்.
அந்தப் பொற்கொல்லனைப் போன்றவன்தான் திருமாலும்.
‘இவன் என் பேரைச் சொன்னான்’, இவன் என் ஊரைச் சொன்னான்’, இவன் அவனுக்குத் தண்ணீர் கொடுத்தான்’, இவன் தங்க நிழல் கொடுத்தான்’ என்று எப்படியோ கணக்கு பண்ணி நம் குறைகளைக் கண்டு கொள்ளாமல் நமக்கு நல்லதே நடக்கும்படி செய்து விடுவான் என்கிறார் பிள்ளை உலகாசிரியர்.
நாம் தற்சமயம் பார்க்காததா என்ன ? –
‘இவர் உன்னைத் துவேஷிக்கவில்லையா?
நீ நாட்டிய மதத்தை ஏசவில்லையா?
சாது முதல் சேது வரை அனைத்தையும் அலட்சியப் படுத்தவில்லையா?’ என்று நாம் கேட்டால், இவன் சரியான பதில் வைத்திருப்பான்.
‘என் அடியாரைத் துவேஷித்தாலும், மஞ்சள் துண்டு போட்டிருக்கிறானே,
அதன் மகிமை அவனுக்குத் தெரிந்திருக்கிறதே’ என்பான்!
‘ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோ அடிகளை சப்போட்டுக்குக் கூப்பிட்டுக் கொண்டாலும், செய்வது என்னவோ சூரிய நமஸ்காரம்தானே,
அதுவும் தேவர்கள் விரும்பும் அதிகாலையில் செய்கிறானே’.
என்று கணக்கு போட்டு கண்டு கொள்ளாமல் போவதைத்தானே பார்க்கிறோம்!
இது நியாயமா?
அவனைப் போற்றும் நமக்குப் பல கஷ்டங்கள்.
அவனைத் தூற்றுவோர்க்கு என்றும் வெற்றிதானா என்றால், அது அப்படியல்ல.
பாதையை விட்டு விலகுவோரை முதலில், பாதைக்குத் திருப்ப வேண்டும். பாதையில் நடப்போருக்கு இலக்கு எது என்று காட்ட வேண்டும்.
மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி
அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும்.
தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை – கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.
பாதையில் நாம் நடக்க ஆரம்பித்த பிறகு, நமது இலக்கு என்ன என்று வழிபடுத்துகிறான். அப்படிப் போகையில் துன்பங்களும், அவற்றிலிருந்து பிறக்கும் பாடங்களும் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன. மண், பொன், பெண் என்று நாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி, சுற்றி வராமல், எது நம் இலக்கு என்று அறிந்து கொள்ள நம் தமிழ் ஆன்றோர் சொல்லாமல் இல்லை.
முன் கூறிய பரிபாடலிலேயே, கீரந்தையார் நம் இலக்கைச் சுட்டியுள்ளார்.
திருமால் கொடுத்த செல்வத்தில் மிகச் சிறந்தது அவன் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியது. அதனால் அவர்களுக்கு சாவாமை, மூவாமை (மூப்பு இல்லாமை) , அழிவில்லா ஆற்றல் கிடைத்தது. இந்த மூன்றையும் நாமும் பெற்று, கொடும்பாடு அறியாமல், மெய்யுணர்வு பெற வேண்டும் என்று அவன் அருள் புரிய வேண்டும் என்று பாடலை முடிக்கிறார்.
“வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
… … … மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே”
இப்படி விழையும் நிலைக்கு நாம் வருவதற்கு, அவன் மூன்று தேவியருடன் வலம் வர வேண்டியிருக்கிறது.
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால்,
இந்த முத்தேவியரும் கோவிலில் எழுந்தருளி அருள் பாலிப்பது,
நம் தமிழக மரபில் கட்டப் படும் கோவில்களில் மட்டும்தான்.
அதிலும், நீளா தேவி சமேதராக திருமால் காட்சி தருவது,
தமிழ்ப் பகுதியான திருத்தங்கல் என்னும் ஊரில்தான்.
அன்ன நாயகி என்னும் பெயருடன், ஸ்ரீதேவியும்,
அனந்த நாயகி என்னும் பெயருடன் நீளா தேவியும்
திருமாலுக்கு வலப்புறம் இருக்க,
அமிர்த நாயகி என்னும் பூதேவி,
ஜாம்பவதி என்னும் – இந்த சம்புத்தீவு எனப்படும் நாவலம் தீவினை உருவகப்படுத்தும் ஜாம்பவதி தேவி இடப்புறம் இருக்க,
நடுவில் இருக்கும் திருமாலின் திருபெயரோ ‘நின்ற நாராயணன்!’
நாராயணன் நின்றிருந்த காட்சி ஒன்று உண்டு. அது, பாரதப் போர் முடிந்தபின், அம்புப் படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்க, கிருஷ்ணன், யுதிஷ்டிரர் உள்ளிட்ட அனைவரும், சூழ்ந்திருந்து நின்றிருந்த நேரம். திருமாலின் ஆயிரம் திருப் பெயர்களையும் ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’ என பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, யுதிஷ்டிரரின் கேள்விக்குப் பதிலாகச் சொல்கையில், அந்த ஆயிரம் நாமங்களுக்கு உரியவனான திருமால், கிருஷ்ணனாக, நின்று கொண்டுதான் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நின்ற நாராயணனின் பேரும், பெருமையும் சொல்கையில், அவன் முத்தேவியர் உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களும் அவனுடம் இருப்பர். ஏனென்றால், அவர்கள் உள்ளடக்கி , இந்தப் பிரபஞ்சம் முழுவதும் குறித்தே அவன் லீலைகள், அவதாரங்கள், அவன் சிறப்புகள் எல்லாம் சஹஸ்ரநாமத்தில் சொல்லப்படுகின்றன. அவன் நின்ற நாராயணனாக திருத்தங்கலில் நிற்கையில், மூன்று தேவியருமே உடன் இருப்பதாக வடித்தது, நம் தமிழ் முன்னோர், அந்த வேதப் பொருளின் முழு உண்மையை அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்று.
மேலும் நீளா தேவியை அனந்த நாயகி என்பதிலும் ஒரு உட்பொருள் புலனாகிறது. அனந்தன் என்பது ஆதி சேஷனின் பெயர்.
இறைவன் சேஷி எனப்படுபவன்.
அவனைத் தவிர்த்த மற்றெல்லாப் பொருட்களும் –
உயிருள்ளவை, உயிரில்லாதவை என அனைத்து பொருட்களும் –
சேஷன் எனபப்டுவர்.
இவர்களின் பிரதிநிதி ஆதிசேஷன் ஆவார்.
ஆதிசேஷன் இல்லாமல் திருமால் இல்லை. அவனுக்காக, அவன் பொருட்டு, அவனோடு, அவனில் என்று திருமாலுக்கு ஆதிசேஷனோடு என்றும் தொடர்புண்டு.
அந்த ஆதிசேஷனே முக்குணங்களின் தொகுதியாக மூன்று வரிசை அரவணையாகவும், ஐம்பூதங்களின் தொகுதியாக ஐந்து தலைகளுடனும், இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் தன்னகத்தேகொண்டுள்ளான்.
இப்படிப்பட்ட ஆதிசேஷனை ஆள்பவனாகத் திருமாலும்,
வைகுந்தத்தில் அவன் மேல் அமர்ந்து,
மன்வந்திரங்களுக்கும், கல்பத்திற்கும் இடைப்பட்ட பிரளய காலத்தில் பாற்கடலில் அவன் மீது பள்ளி கொண்டு,
நின்றால் அவன் மீதே நின்று (திருவல்லிக்கேணியில்),
நடந்தால், கூடவே அவன் குடையாகப் பின்தொடர என்று –
பிரியாது இருக்கும் உறவில், ஸ்ரீதேவி, பூதேவி என்று காட்சி தரும் போது, எங்கே போனான் அந்த சேஷன்?
அவன்தான் அவளோ?
அனந்த நாயகி என்று நீளா தேவி திருத்தங்கலில் காட்சி தருவது,
நிழலாகப் பின் தொடரும் சேஷனே என்று காட்டவோ?
ஜீவக் கூட்டங்களின் தொகுதியாக உள்ள அவனில் திருமால் மயங்கியமையால்தான், ஓயாது குற்றங்கள் பல நாம் செய்கினும், நம் தோஷங்களைக் காணாமல் நம்மைக் கை தூக்கிவிடப் பார்க்கிறானோ?
நீளா தேவி என்ற பெயரைப் பாருங்கள்.
வடமொழியில் நீலா என்றுதான் எழுதப் படுகிறது.
ஆனால் உச்சரிக்கையில், அவள் நீளா ஆகிறாள்.
இதற்குத் தமிழில்தான் சிறந்த அர்த்தங்கள் உள்ளன.
அவள் நீளா. அதனால் நீளாது, குறுகியே, அவனில் ஐக்கியமானவளோ?
நீளாமையால் அவனுக்கும் (திருமால்) அவளுக்கும் உள்ள உறவு, பின்னிப் பிணைந்த ஒன்றோ?
மற்ற இரு தேவியருடன் அல்லாமல், நப்பின்னையுடன் மட்டுமே மனையியல் இன்பத்தில் திருமால் ஈடுப்பட்டுள்ளதாகக் காட்டியுள்ளது,
இந்த ஜீவக்கூட்டங்களைத்தான் அவன் முயக்குகிறான், மயக்குகிறான் – விரைவில் இவர்கள் தன் நிலை அடைய வேண்டும் என்பதற்காக என்று நமக்கு அறிவிக்கவோ?
நன்றி - தமிழ்ஹிந்து வலைத்தளம்