சனி, 31 ஆகஸ்ட், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 21 - இந்திரா சவுந்தரராஜன்

சத்ராஜித் அநியாயமாக உயிரை விடவும், வந்த வேகத்தில் சததன்வா அந்த சமந்தகமணியைத் தேடினான். அதுவோ, பூஜையறையில் சூரிய பகவானின் சிலாரூபத்தில்(சிலை) கழுத்தில் கிடந்தது. பிரசேனஜித்தின் மரணத்தால் சூதக காரியம் காரணமாக பூஜையின்றி இருந்தது. சூதகம் முடிந்த பின்னும், சத்ராஜித் அதை பெரிதாகக் கொண்டாடவில்லை. அந்த அளவு சோகம் ஏற்பட்டு விட்டது
சமந்தக மணிக்குரிய கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காவிட்டால் எதிர்விளைவு ஏற்படும் என சூரியன் எச்சரித்தபடியே நடந்து விட்டது. உச்சபட்சமாக, சத்ராஜித் உயிரையே குடித்து விட்டது தான் கொடுமையிலும் கொடுமை.
சமந்தகமணியைத் தன் ரத்தம் தோய்ந்த வாளாலேயே எடுத்த சததன்வா, தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டான். பெரும் சத்தத்துடன் சிரித்தான்.
"இனி நான் தான் பேரரசன். எனக்கு இணையானவர் எவரும் கிடையாது...'' என்று முழங்கினான். நடுங்கியபடியே அங்கிருந்த ஊழியர்களும், சேடிப்பெண்களும் அதைக் கேட்டனர்
அப்படியே நிலம் அதிர நடந்தவன் சத்ராஜித்தின் மாளிகையை விட்டு வெளியேறி, சிட்டாகப் பறந்தான். அவனது ரதம் துவாரகையை விட்டு மதுராபுரி நோக்கி சென்றது. கண்ணனும், பலராமனும் இல்லாத துவாரகை அரண்மனை வெறிச்சோடிக் கிடந்தது
குறிப்பாக, நந்தவனத்தில் மயில்களும், மான்களும் கூட கண்ணன் இல்லாத சோகத்தை எதிரொலித்தபடி இருந்தன. பூக்களுக்கு கூடவா கண்ணன் இல்லை என்பது தெரியும்? பாதி பூத்தும் மீதி பூக்காமலும் இருந்தன.
நந்தவனம் பக்கமாய் பூப்பறிக்க வந்துஇருந்தாள் பாமா. அவளும் நந்தவன சோகத்தை உணர்ந்தாள். உள்ளே ருக்மிணி வீணை இசைத்துக் கொண்டிருந்தாள். பாமா அங்குள்ள மான் ஒன்றை அருகில் அழைத்து, அதன் கழுத்தை வளைத்து தன் கன்னத்தோடு பொருத்தி, "அடியே! கருங்கண்ணி .... நீ என்ன என்னை விட சோகமாக இருக்கிறாயே! என் மணவாளர் உன்னைக் கூட இப்படி கெடுத்து வைத்திருக்கிறாரே....'' என்று வாஞ்சையோடு வருந்தினாள்.
அப்போது தான் சேடிப்பெண் ஒருத்தி, அலை பாய அங்கு ஓடி வந்து, சததன்வா சத்ராஜித்தை கொன்று விட்டு சமந்தக மணியையும் கவர்ந்து சென்று விட்டதை கூறினாள்.
அந்த நொடியே பாமாவுக்கு "அப்பா....' என்று உள் மனது ஓலமிட்டது. அடுத்து உதடுகளும் பாசத்தோடு குரல் கொடுக்க, சத்ராஜித் மாளிகை நோக்கி ஓடினாள். மாளிகையில் சத்ராஜித்தின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அந்தக் காட்சி அவளை உலுக்கி எடுத்தது. அவளிடம், நடந்து முடிந்ததை அப்படியே காட்சிப்படுத்தினர் அங்குள்ள சேடிப் பெண்கள்
""அம்மா..... நல்லவன் போல் வந்து நயவஞ்சகமாய் கொன்று விட்டானம்மா.... அந்த சததன்வா.... வெறி பிடித்தவன் போல, சமந்தக மணியை எடுத்து அணிந்து கொண்டு அவன் புறப்பட்டுச் சென்றது அதை விடக் கொடுமை....'' - என்றாள் ஒரு சேடிப்பெண்.
பாமா அந்த நொடியே கண்கள் சிவக்க எழுந்தாள்.
""அந்த வஞ்சகனை பழிக்குப் பழி வாங்குவேன். என் மணவாளர் இல்லாத தருணத்தில் அவன் வந்து போனதில் இருந்தே அவன் எத்தனை பெரிய வீரன் என்பது புலனாகி விட்டது. அவன் மண்ணோடு மண்ணானால் தான் என் தந்தையின் ஆத்மா சாந்தியுறும்'' என்றவள், அப்போதே இரு தாக்கோலைக்காரர்களை அழைத்து கிருஷ்ண பிரபுவுக்கு நடந்ததை விளக்கி, கடிதம் ஒன்று எழுதி, ஹஸ்தினாபுரம் நோக்கி அனுப்பினாள்.
""வீரர்களே! இதைத் தருவதோடு அவரை கையோடு அழைத்து வாருங்கள். அவர் வந்தால் தான், இங்கே என் தந்தையின் ஈமக்காரியங்கள் நடக்க இயலும்'' - என்று கண்ணீர் விட்டவளை, ருக்மிணி வந்து கட்டிக் கொண்டு ஆறுதல் அளிக்கத் தொடங்கினாள்.
""பாமா..... வருந்தாதே! நம் பிரபு வருவார்..... அந்த சததன்வாவை நரகத்துக்கும் அனுப்பி வைப்பார். அவன் விதி நல்ல விதியில்லை. அவன் நயவஞ்சகன். நம் பிரபுவைப் பற்றி தெரிந்திருந்தும் அவன் செய்யக் கூடாததை செய்து விட்டான். இனி அவனும் அவனைச் சார்ந்தவர்களும் மண்ணோடு மண்ணாவர்'' என்று சபதம் செய்தாள்.
இதனிடையே சமந்தக மணியோடு வந்து சேர்ந்த சததன்வா முதலில் சென்று நின்றது அக்ரூரரிடம் தான். தகவல் அறிந்து அங்கேயே வந்து விட்டான் கிருதவர்மா. சததன்வா உடையில் அங்கங்கே ரத்தக்கறையைக் கண்ட அக்ரூரர், ""சததா... நீ சொன்னபடியே செய்து விட்டாயா? '' என்று தான் கேட்டார் அக்ரூரர்
""இது என்ன கேள்வி... பார்த்தால் எப்படி தெரிகிறது? ஜொலிக்கும் சமந்தகமணி அசலானது அக்ரூரரே...!''
""அது சரி... அதற்காக இப்படியா ஆபரணம் போல அணிந்திருப்பாய். இது பூஜைக்குரியது.... பூஜித்த சத்ராஜித்தையே குலத்தோடு அழிந்து விட்டது. நீ இப்படி நிற்பதைப் பார்த்தால் என் வயிற்றையே கலக்குகிறது...'' 
""பயப்படாதீர்கள்... அச்சமே நரகம் என்பதை அறியாதவரா நீங்கள்?''
""அது மட்டுமல்ல.. அடாத செயல்களும், ஆசைகளும் கூட நரகத்தில் தான் தள்ளும் சததன்வா...''
""என்ன உபதேசமா... இது என்னை பாராட்ட வேண்டிய தருணம்''
""இருக்கலாம். ஆனால், கிருஷ்ணனை நினைத்து என்னால் கலங்காமல் இருக்க முடியவில்லை''
""கிருஷ்ணன்... பொல்லாத கிருஷ்ணன்... அவனை வெல்ல இந்த மணியே உதவாதா என்ன?''
""இது என்ன காமதேனுவா.... கேட்டதை எல்லாம் தர! இது பொன்னை மட்டும் தர வல்லது....''
""பொன்னே போதும் அக்ரூரரே.... எனக்கு உதவிட முன் வருபவர்க்கெல்லாம் நான் இதன் மூலம் கிடைக்கும் பொன்னை அள்ளித் தருவேன் என்னும் போது எவர் எனக்கு உதவாமல் போவார்கள்...''
""சததன்வா... முதலில் இதை பாதுகாப்பாக வைத்து விட்டு வா. பிறகு பேசலாம். முதலில் புறப்படு...'' - அக்ரூரர் படபடத்தார். கிருதவர்மாவோ ஸ்தம்பித்தே போயிருந்தான்
நீங்கள் இருவரும் வீரர்கள் இல்லை. நான் அப்படியல்ல! வரட்டும் அந்த கிருஷ்ணன்! அவனா... நானா... என்று பார்த்து விடுகிறேன் ஒரு கை! முன்னதாக, அந்த மாயாவிக்கு எதிரான அவ்வளவு பேரையும் ஒன்று திரட்டுகிறேன்'' - சததன்வா சபதமிட்டபடியே புறப்பட்டான். ஆதித்தனும் வானத்தில் இருந்து சுடர் விட்ட படியே தான் அளித்த ஒரு மாலை, பூலோகத்தில் பாடாய் படுத்துவதையும், பாடாய் படுவதையும் பார்த்தபடி இருந்தான்.
இன்னும் வருவான்...
நன்றி - தினமலர்

கண்ணன் என்னும் மன்னன் - 20 - இந்திரா சவுந்தரராஜன்

சத்ராஜித்தைக் காண சததன்வா புறப்பட்ட வேகத்தைப் பார்த்து அக்ரூரரும், கிருதவர்மாவும் உள்ளபடியே மிகவே அச்சப்பட்டனர்
""சததன்வா.... ஆத்திரத்தால் அவதியில் சிக்கிக் கொள்ளாதே. ஒருவேளை நீ அந்த சமந்தக மணியை அடைந்தாலும், அந்த கண்ணன் அதை உன்னிடமிருந்து மீட்காமல் விட மாட்டான். அப்போது யுத்தம் வந்தால் என்ன செய்வாய்?'' என்று அக்ரூரர் அந்த நிலையிலும் அவனைத் தடுக்க முனைந்தார்.
""அக்ரூரரே! சமந்தகமணி என்னை அடைந்த மாத்திரத்தில், நானே வலிமையானவன். அப்படி இருக்க, என்னைக் கண்ணனால் எப்படி வெல்ல முடியும்? கண்ணன் எப்போதும் தந்திரசாலியே அன்றி பலசாலி அல்ல. அழகனேயன்றி வீரனல்ல. அவன் அழகும் தந்திரமும் என்னை எதுவும் செய்யாது...'' -அக்ரூரரும், கிருதவர்மாவும் தடுத்திட முடியாதபடி ஒரு பதிலைக் கூறி விட்டுப் புறப்பட்டான் சததன்வா.
துவாரகைக்குள் சததன்வாவின் ரதம் நுழைந்தபோது, துவாரகையே சோகத்தில் இருந்தது. கண்ணனும், பலராமரும் புறப்பட்டு போய் விட்டிருந்தனர். சததன்வா துவாரகை வீதிகளை வெறித்தபடி சென்றான். கடற்காற்று மேனியில் படர, பெண்கள் மண்பானைகளில் பால், தயிரைச் சுமந்தபடி சென்று கொண்டிருந்தனர். சில பெண்கள் வீட்டின் முகப்பில் காராம்பசுக்களை நிறுத்தி வழிபாடு செய்தனர். சிலர் குதிரை மீது தங்கள் பணி நிமித்தமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். சிறு ரதங்களும் கடந்து சென்றன.
செழுமையான துவாரகையைப் பார்த்த சததன்வாவின் மனம் குமுறியது. துவாரகையைத் தன் வசப்படுத்தி, தானே அரசனாக இருக்க வேண்டும் என்று எண்ணினான் சததன்வா.
அந்த நினைப்புடன் சத்ராஜித் அரண்மனை வாசலில் ரதத்தை விட்டு இறங்கினான். எப்போதும் போல கட்டியம் கூறுபவன் சொல்லிட, அவன் உள்ளே நுழைந்தான். பாமாவின் திருமணத்திற்காக கட்டப்பட்ட மாவிலைத் தோரணம், வண்ணக்கொடிகள் ஆடிக் கொண்டிருந்தன. அன்ன கூடத்தில் பலரும் வந்து சாப்பிட்டு விட்டு தாம்பூலம் தரித்தபடி சென்றனர். பிராமணர்கள் சிலர் தானம் பெற்ற பொன் மூடையை சுமக்க முடியாமல் சென்று கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் கண்ட சததன்வா பெருமூச்சு விட்டான். இடைவாளை இறுகப் பற்றியபடி நடந்த அவன், மைய மண்டபத்தை அடைந்தான். அங்கே இருக்கையில் அமர வைக்கப்பட்டான். ஒரு ஊழியன், சததன்வா வந்திருக்கும் சேதியை சத்ராஜித்துக்கு சொல்லப் புறப்பட்டான்
அப்போது சத்ராஜித், "பொன்சேரை' என்னும் அறைக்குள், சமந்தகமணியால் கிடைத்த தங்கப்பாளங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.
ஊழியன் சத்ராஜித்தை வணங்கி விட்டு, ""மாவீரர் சததன்வா எழுந்தருளியுள்ளார்,'' என்றான்.
""சததன்வாவா?''
""ஆம் பிரபோ...!''
""உடன் வேறு யாராவது வந்துள்ளனரா?'' 
""இல்லை.... அவர் மட்டும் தனியே வந்துள்ளார்...''
""நல்லது.... அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். நடந்து முடிந்த பாமாவின் திருமணம் குறித்து பேசி சிக்கலை உண்டு பண்ணக் கூடும். எனவே, எனக்கு உடல்நலமில்லை- பிறகு பார்க்கலாம் என்று பக்குவமாகச் சொல்லி அனுப்பி விடுங்கள்...'' என்றான் சத்ராஜித்.
ஊழியனும் சததன்வாவிடம் அப்படியே சொன்னான்.
அதைக் கேட்டு சததன்வாவின் மீசை துடித்தது.
""யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்து பேசு'' - என்று கோபத்தில் கத்தியவன், சட்டென்று விவேகத்துடன் அடக்கிக் கொண்டவனாக, ""அடடா.... அந்த மகாபுருஷருக்கு உடல்நலமில்லையா? அவரைப் பார்த்து பாமாவின் திருமணத்திற்காக வாழ்த்த அல்லவா வந்தேன். கடைசியில் இப்படி ஆகி விட்டதே....! என் நண்பர்கள் தனியே செல்லாதீர்கள். அவர் மதிக்க மாட்டார் என்று தடுத்தும், கேட்காமல் வந்தது என் குற்றம்,'' - என்று அந்த ஊழியனின் காதுபடவே சொன்னான்.
ஊழியனும் அதைக் கேட்டுக் கொண்டான்.
சததன்வாவும் சற்று சிந்திப்பவன் போல குறுக்கிலும், நெடுக்கிலும் நடந்தான்
பின், ""ஊழியனே... உன் பிரபுவிடம் நான் உடல்நலம் விசாரித்து விட்டு சென்று விடுவேன் என்று கூறி அனுமதி பெற்று வா,'' என்றான்.
ஊழியனும் அப்படியே கூறினாலும் சத்ராஜித்துக்கு, சததன்வா மீது அச்சமே உண்டானது
இருப்பினும் வேறு வழியின்றி உடல்நலம் இல்லாதவன் போல படுத்துக் கொண்டு, சததன்வாவை அழைத்து வரச் சொன்னான்
சததன்வாவும் வந்து சத்ராஜித்தைப் பார்த்து விட்டு இடி இடியென்று சிரித்தான்.
சத்ராஜித்தின் பயம் மேலும் அதிகரித்தது.
இருந்தாலும், ""சததன்வா.... என்ன இது! உடல்நலம் இல்லாதவன் முன் இப்படியா சிரிப்பாய். இது தான் நீ நலம் விசாரிக்கும் விதமா?'' என்று ஆவேசமாக எழுந்தான் சத்ராஜித்.
""நீ எனக்கு பயந்து கொண்டு நடிப்பதை எண்ணினேன். சிரிப்பு வந்து விட்டது. நீயும் உன்னை அறியாமலே நடிப்பதை விட்டு, கோபத்துடன் எழுந்து விட்டாயே. உண்மையைச் சொல். உன் மகள் பாமா மீது சத்தியம் செய்து சொல். நீ உடல்நலம் இல்லாமலா இருக்கிறாய்?''
""உனக்காக நான் சத்தியமெல்லாம் செய்யத் தயாரில்லை. நீ எதற்கு வந்திருக்கிறாய் என்பதையும் நான் அறிவேன். நீ ஒரு மூர்க்கன். என் மகள் கிருஷ்ண பிரபுவை மணந்து கொண்டதைச் சகிக்க முடியாமல் சண்டை போட வந்திருக்கிறாய்....''
""இது தெரிந்த உனக்கு இன்னொன்றும் தெரிந்திருக்க வேண்டுமே?'' - என்று கட்டாரியை உருவியபடி கேட்டான் சததன்வா.
""சததன்வா.... பேசும் போதே எதற்கு கையில் கட்டாரியை எடுக்கிறாய்?'' 
""கட்டாரியை எதற்காக வடிவமைத்தார்களோ அதற்காக...'' 
""சததன்வா... உன் பேச்சு குரூரமாக இருக்கிறது. நீ யாரிடம் பேசுகிறாய் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறாய்''
""சத்ராஜித்.. நான் அடிபட்ட புலி. உன் மகளால் அவமானப்படுத்தப்பட்டவனும் கூட. சமந்தக மணி உன் வசம் இருந்த வரை, எப்படி எல்லாம் மாயக்கிருஷ்ணனை இகழ்ந்தாய் என்பதை எண்ணிப்பார். இன்று அவன் உனக்கு மாப்பிள்ளை. ஆனால், அன்று உனக்கு ஆறுதல் அளித்த நான் இப்போது எதிரியா?'' - என அடுக்கிக் கொண்டே சென்ற சததன்வா கட்டாரியால் அவனைக் கொல்ல முயன்றான்
தடுக்க வந்த ஊழியர்களைக் கொன்றான்
இறுதியில் அங்கு அலங்கார சின்னமாக இருந்த வாளை எடுத்து சத்ராஜித்தைக் குத்தினான். அலறியபடியே அவன் உயிர் விட்டான்.
இன்னும் வருவான்...
நன்றி - தினமலர்