சனி, 31 ஆகஸ்ட், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 20 - இந்திரா சவுந்தரராஜன்

சத்ராஜித்தைக் காண சததன்வா புறப்பட்ட வேகத்தைப் பார்த்து அக்ரூரரும், கிருதவர்மாவும் உள்ளபடியே மிகவே அச்சப்பட்டனர்
""சததன்வா.... ஆத்திரத்தால் அவதியில் சிக்கிக் கொள்ளாதே. ஒருவேளை நீ அந்த சமந்தக மணியை அடைந்தாலும், அந்த கண்ணன் அதை உன்னிடமிருந்து மீட்காமல் விட மாட்டான். அப்போது யுத்தம் வந்தால் என்ன செய்வாய்?'' என்று அக்ரூரர் அந்த நிலையிலும் அவனைத் தடுக்க முனைந்தார்.
""அக்ரூரரே! சமந்தகமணி என்னை அடைந்த மாத்திரத்தில், நானே வலிமையானவன். அப்படி இருக்க, என்னைக் கண்ணனால் எப்படி வெல்ல முடியும்? கண்ணன் எப்போதும் தந்திரசாலியே அன்றி பலசாலி அல்ல. அழகனேயன்றி வீரனல்ல. அவன் அழகும் தந்திரமும் என்னை எதுவும் செய்யாது...'' -அக்ரூரரும், கிருதவர்மாவும் தடுத்திட முடியாதபடி ஒரு பதிலைக் கூறி விட்டுப் புறப்பட்டான் சததன்வா.
துவாரகைக்குள் சததன்வாவின் ரதம் நுழைந்தபோது, துவாரகையே சோகத்தில் இருந்தது. கண்ணனும், பலராமரும் புறப்பட்டு போய் விட்டிருந்தனர். சததன்வா துவாரகை வீதிகளை வெறித்தபடி சென்றான். கடற்காற்று மேனியில் படர, பெண்கள் மண்பானைகளில் பால், தயிரைச் சுமந்தபடி சென்று கொண்டிருந்தனர். சில பெண்கள் வீட்டின் முகப்பில் காராம்பசுக்களை நிறுத்தி வழிபாடு செய்தனர். சிலர் குதிரை மீது தங்கள் பணி நிமித்தமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். சிறு ரதங்களும் கடந்து சென்றன.
செழுமையான துவாரகையைப் பார்த்த சததன்வாவின் மனம் குமுறியது. துவாரகையைத் தன் வசப்படுத்தி, தானே அரசனாக இருக்க வேண்டும் என்று எண்ணினான் சததன்வா.
அந்த நினைப்புடன் சத்ராஜித் அரண்மனை வாசலில் ரதத்தை விட்டு இறங்கினான். எப்போதும் போல கட்டியம் கூறுபவன் சொல்லிட, அவன் உள்ளே நுழைந்தான். பாமாவின் திருமணத்திற்காக கட்டப்பட்ட மாவிலைத் தோரணம், வண்ணக்கொடிகள் ஆடிக் கொண்டிருந்தன. அன்ன கூடத்தில் பலரும் வந்து சாப்பிட்டு விட்டு தாம்பூலம் தரித்தபடி சென்றனர். பிராமணர்கள் சிலர் தானம் பெற்ற பொன் மூடையை சுமக்க முடியாமல் சென்று கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் கண்ட சததன்வா பெருமூச்சு விட்டான். இடைவாளை இறுகப் பற்றியபடி நடந்த அவன், மைய மண்டபத்தை அடைந்தான். அங்கே இருக்கையில் அமர வைக்கப்பட்டான். ஒரு ஊழியன், சததன்வா வந்திருக்கும் சேதியை சத்ராஜித்துக்கு சொல்லப் புறப்பட்டான்
அப்போது சத்ராஜித், "பொன்சேரை' என்னும் அறைக்குள், சமந்தகமணியால் கிடைத்த தங்கப்பாளங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.
ஊழியன் சத்ராஜித்தை வணங்கி விட்டு, ""மாவீரர் சததன்வா எழுந்தருளியுள்ளார்,'' என்றான்.
""சததன்வாவா?''
""ஆம் பிரபோ...!''
""உடன் வேறு யாராவது வந்துள்ளனரா?'' 
""இல்லை.... அவர் மட்டும் தனியே வந்துள்ளார்...''
""நல்லது.... அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். நடந்து முடிந்த பாமாவின் திருமணம் குறித்து பேசி சிக்கலை உண்டு பண்ணக் கூடும். எனவே, எனக்கு உடல்நலமில்லை- பிறகு பார்க்கலாம் என்று பக்குவமாகச் சொல்லி அனுப்பி விடுங்கள்...'' என்றான் சத்ராஜித்.
ஊழியனும் சததன்வாவிடம் அப்படியே சொன்னான்.
அதைக் கேட்டு சததன்வாவின் மீசை துடித்தது.
""யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்து பேசு'' - என்று கோபத்தில் கத்தியவன், சட்டென்று விவேகத்துடன் அடக்கிக் கொண்டவனாக, ""அடடா.... அந்த மகாபுருஷருக்கு உடல்நலமில்லையா? அவரைப் பார்த்து பாமாவின் திருமணத்திற்காக வாழ்த்த அல்லவா வந்தேன். கடைசியில் இப்படி ஆகி விட்டதே....! என் நண்பர்கள் தனியே செல்லாதீர்கள். அவர் மதிக்க மாட்டார் என்று தடுத்தும், கேட்காமல் வந்தது என் குற்றம்,'' - என்று அந்த ஊழியனின் காதுபடவே சொன்னான்.
ஊழியனும் அதைக் கேட்டுக் கொண்டான்.
சததன்வாவும் சற்று சிந்திப்பவன் போல குறுக்கிலும், நெடுக்கிலும் நடந்தான்
பின், ""ஊழியனே... உன் பிரபுவிடம் நான் உடல்நலம் விசாரித்து விட்டு சென்று விடுவேன் என்று கூறி அனுமதி பெற்று வா,'' என்றான்.
ஊழியனும் அப்படியே கூறினாலும் சத்ராஜித்துக்கு, சததன்வா மீது அச்சமே உண்டானது
இருப்பினும் வேறு வழியின்றி உடல்நலம் இல்லாதவன் போல படுத்துக் கொண்டு, சததன்வாவை அழைத்து வரச் சொன்னான்
சததன்வாவும் வந்து சத்ராஜித்தைப் பார்த்து விட்டு இடி இடியென்று சிரித்தான்.
சத்ராஜித்தின் பயம் மேலும் அதிகரித்தது.
இருந்தாலும், ""சததன்வா.... என்ன இது! உடல்நலம் இல்லாதவன் முன் இப்படியா சிரிப்பாய். இது தான் நீ நலம் விசாரிக்கும் விதமா?'' என்று ஆவேசமாக எழுந்தான் சத்ராஜித்.
""நீ எனக்கு பயந்து கொண்டு நடிப்பதை எண்ணினேன். சிரிப்பு வந்து விட்டது. நீயும் உன்னை அறியாமலே நடிப்பதை விட்டு, கோபத்துடன் எழுந்து விட்டாயே. உண்மையைச் சொல். உன் மகள் பாமா மீது சத்தியம் செய்து சொல். நீ உடல்நலம் இல்லாமலா இருக்கிறாய்?''
""உனக்காக நான் சத்தியமெல்லாம் செய்யத் தயாரில்லை. நீ எதற்கு வந்திருக்கிறாய் என்பதையும் நான் அறிவேன். நீ ஒரு மூர்க்கன். என் மகள் கிருஷ்ண பிரபுவை மணந்து கொண்டதைச் சகிக்க முடியாமல் சண்டை போட வந்திருக்கிறாய்....''
""இது தெரிந்த உனக்கு இன்னொன்றும் தெரிந்திருக்க வேண்டுமே?'' - என்று கட்டாரியை உருவியபடி கேட்டான் சததன்வா.
""சததன்வா.... பேசும் போதே எதற்கு கையில் கட்டாரியை எடுக்கிறாய்?'' 
""கட்டாரியை எதற்காக வடிவமைத்தார்களோ அதற்காக...'' 
""சததன்வா... உன் பேச்சு குரூரமாக இருக்கிறது. நீ யாரிடம் பேசுகிறாய் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறாய்''
""சத்ராஜித்.. நான் அடிபட்ட புலி. உன் மகளால் அவமானப்படுத்தப்பட்டவனும் கூட. சமந்தக மணி உன் வசம் இருந்த வரை, எப்படி எல்லாம் மாயக்கிருஷ்ணனை இகழ்ந்தாய் என்பதை எண்ணிப்பார். இன்று அவன் உனக்கு மாப்பிள்ளை. ஆனால், அன்று உனக்கு ஆறுதல் அளித்த நான் இப்போது எதிரியா?'' - என அடுக்கிக் கொண்டே சென்ற சததன்வா கட்டாரியால் அவனைக் கொல்ல முயன்றான்
தடுக்க வந்த ஊழியர்களைக் கொன்றான்
இறுதியில் அங்கு அலங்கார சின்னமாக இருந்த வாளை எடுத்து சத்ராஜித்தைக் குத்தினான். அலறியபடியே அவன் உயிர் விட்டான்.
இன்னும் வருவான்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக