கண்ணன் என்னும் மன்னன் - 7 - இந்திரா சவுந்தரராஜன்

சத்ராஜித் முகத்தில் தெரிந்த கோபம் கண்ணனையே சற்று அதிரச் செய்தது. அதே சமயம் சத்ராஜித்திடம் இருந்து கண்ணனுக்கான மறுமொழி.
""கண்ணா... இப்போது நீ என்னிடம் கூறியது உண்மையில் உன் அண்ணன் பலராமனின் விருப்பமா.... இல்லை உன் விருப்பத்தைத் தான் அண்ணன் விருப்பம் என்று என்னிடம் உளறிக் கொண்டிருக்கிறாயா?'' - சத்ராஜித்தின் மறுமொழி கண்ணனை கூர்ந்து பார்க்கச் செய்தது.
""என்ன பார்க்கிறாய்....?''
""நீங்கள் மிக மாறி விட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். அதை இப்போது அனுபவப்பூர்வமாகப் பார்க்கிறேன்...''
""நான் மாறி விட்டது உண்மை தான்..... எப்போது ஆதித்தனின் இந்த மணி என் வசமானதோ, அப்போதே நான் தேவேந்திரனுக்கு நிகராகி விட்டேன். என்னை மேலானவனாக்கிய இந்த மணியை, யாருக்காகவும் எதற்காகவும் நான் இழக்க மாட்டேன். என்னைக் கண்டு பொறாமைப்பட்டு இதை அபகரிக்க யார் முயன்றாலும் அவர்களின் எண்ணம் பலிக்காது.''
""நல்லது.... மேலான இந்த சமந்தகத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று என்னிடம் வெளிப்படுத்திய வார்த்தைகளை எண்ணி எதிர்காலத்தில் நீங்கள் வருந்தாமல் இருந்தால் சரி. நான் வருகிறேன்...'' - கண்ணன் சராசரி மனிதனைப் போல 
"வார்த்தைகளை அளந்து பேசுங்கள்' என்று கோபப்படாமல் பூடகமாய்ப் பேசி விட்டு புன்னகை மாறாமல் புறப்பட்டுப் போனதைக் கண்ட சத்யபாமா அதிசயித்தாள்
சத்யபாமா சத்ராஜித்தை, "தந்தையே' என அழைத்தாள்
அவனும், ""என்ன குழந்தாய்....? என்றான்
""நான் குழந்தையில்லை... குமரி..''
""எனக்கு நீ எப்போதும் குழந்தை தானம்மா....''
""இந்த பாசமும் அன்பும் ஏன் அவரோடு பேசும் போது இல்லாமல் போனது...''
""கண்ணனைச் சொல்கிறாயா?''
""ஆம்.. ஆனால், அவர் ஒரு ராஜயோகி போலத் தான் உங்களிடம் நடந்து கொண்டார்..''
""அவன் ஒரு மாயாவியம்மா... அவனைப் பற்றி உனக்குத் தெரியாது..''
""என்ன தெரியாது... அவர் உங்கள் நல்லதுக்கு தானே சொன்னார். அவர் சொன்னதில் என்ன தவறு! இந்த மணி அரசரிடம் இருந்தால் கஜானா நிறையும். வரி விதிப்புக்கே தேவை இருக்காது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வர்....''
""பாமா... புரியாமல் பேசாதே. தவம் செய்து வரம் பெற்றவன் நான். நானும் இப்போது அரசனுக்கு சமானன்.'' - சத்ராஜித் மகள் என்றும் பாராமல் கர்ஜித்தான்.
அப்போது சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனஜித் வந்தான்.
""திவ்ய வந்தனங்கள் அண்ணா...''
""மங்கள ஆசிர்வாதங்கள் தம்பி...''
""நான் உங்களைப் பார்க்கும் போது இந்திரன் போலவே தெரிந்தீர். இப்படி உங்களை நான் பார்த்ததேயில்லை...'' என்று பூரித்தான்.
""சரியாகச் சொன்னாய். நான் இப்போது இந்திரன் தான். பூலோக இந்திரன். இப்போது வந்து சென்ற கண்ணனிடமும் இதைத் தானே சொன்னேன்....''
""அடடே... கண்ணபிரான் வந்தாரா! ஆச்சரியமாக இருக்கிறதே..'' 
""இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை ப்ரசேனா.... எல்லாம் இந்த சமந்தகமணி புரியும் மாயம்.''
""புரிகிறதண்ணா... இது நம்மை எல்லாம் எங்கோ கொண்டு சென்று விட்டது. அது சரி.... கண்ணபிரான் இதைத் தான் காண வந்தாரா?''
""அப்படித்தான் நானும் எண்ணினேன். ஆனால், அந்த மாயாவி பொறாமையின் உச்சிக்கே போய் விட்டான் என்பது, இங்கு வந்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது..''
""நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''
""இது போன்ற அரிய விஷயங்கள் சாமான்யப்பட்டவர்களிடம் இருக்கக் கூடாதாம்! அரசர் பெருமக்களிடம் தான் இருக்க வேண்டுமாம்! அதனால், இந்த மணியை பலராமனிடம் தந்துவிடு என்றான். உளறாமல் புறப்படு என்று சரியான பதில் கொடுத்து அனுப்பி விட்டேன்...''
""அப்படிச் சொல்லுங்கள்.... இந்த துவாரகையில் அவர்களை விஞ்சி நாம் வாழ்ந்து விடுவோம் என்கிற அச்சம் தான், இப்படி குறுக்கு வழியைக் காட்டியுள்ளது...''
""சரியாகச் சொன்னாய்... உனக்குப் புரிந்த இந்த உண்மை.. இதோ இந்த பேதைக்குப் புரியவில்லையே.... என்ன செய்வது?'' - சத்ராஜித் சொன்னபடியே சத்யபாமாவைப் பார்த்தான்.
""என்ன பாமா.. தந்தை வருந்தும் படி பேசினாயா?''
""சித்தப்பா.... நான் பேசவில்லை. ஆனால், அப்பா அப்போதும் பேசினார். இப்போதும் பேசுகிறார். நீங்களும் கூட்டு சேர்ந்து கொண்டு விட்டீர்கள். உண்மையில் கிருஷ்ண பிரபு சாத்வீகமான ஒரு தூதுவன் போல இதமாகப் பேசினார்.''
""பிரசேனா... அந்த மாயாவியால் பிருந்தாவனமே மயங்கிக் கிடந்தது. சத்யபாமா சின்னப் பெண்ணல்லவா? இவளும் மயங்கி விட்டாள் என்று தான் கூற வேண்டும். நீ இவள் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே....''
""உத்தரவு அண்ணா... அதே சமயம் ஒரு விக்ஞாபனம்''
""என்ன?''
""இந்த மணியை நானும் அணிந்து கொண்டு ஜொலிக்க விரும்புகிறேன்...''
""ஆஹா! நீ என் சகோதரன். உனக்கில்லாத உரிமையா? அருகில் வா....'' - சத்ராஜித் பிரசேனஜித்தை அருகில் அழைத்து சமந்தகமணியை அணிவித்து அப்படியே தழுவிக் கொண்டான்.
""அண்ணா! இது நம் வசம் இருக்கையில் தோல்வியே ஏற்படாது தானே?''
""அதிலென்ன சந்தேகம்?''
""என்றால், நம் அருகாமை வனத்தில் ஒரு சிங்கம் வனம் புகுவோரை எல்லாம் கொன்று வருவதாக அறிந்தேன். அதை வீழ்த்தினால் என்னை இந்த ஊரே மாவீரன் என்று போற்றும்.''
""நீ என்ன சொல்ல வருகிறாய் என்பது புரிகிறது பிரசேனா... தாராளமாக நீ இதை அணிந்து வேட்டைக்குச் செல்லலாம். ஆனால், இதன் மேல் கவனம் எப்போதும் இருக்கட்டும்
""உத்தரவு அண்ணா!''
""அடுத்து அந்தி சாய்வதற்குள் நீ வந்து விட வேண்டும். இரவில் தான் இந்த மணி பொன்னை உதிர்க்கும்.''
""அப்படியே ஆகட்டும் அண்ணா!' - பிரசேனஜித் உற்சாகமாய் வேட்டைக்கு புறப்பட்டான். சத்யபாமா முகத்திலோ சலனம்
""அப்பா...''
""என்ன?''
""சித்தப்பாவை இப்படி அனுப்புவது தவறு...''
""பயப்படாதே. அவன் மாவீரன் என்று பேர் பெற்றால் நமக்கும் தான் பெருமை...''
""வழியில் மாலையை யாராவது களவாட முனைந்தால்?'' - பாமாவின் கேள்வி சத்ராஜித்தை யோசிக்க வைத்தது. உடனே தம்பியுடன் நூறு வீரர்கள் பாதுகாப்பாக உடன் சென்று வர கட்டளையிட்டான்
நூறுவீரர்கள் புடை சூழ ஒரு ரதத்தில் சமந்தகமணி மார்பில் ஜொலிக்க வனம் நோக்கிப் புறப்பட்டான் பிரசேனஜித்!
அப்போது சத்ராஜித்தின் மாளிகை மேல், ஆந்தை ஒன்று வந்து அமர்ந்தது.
- இன்னும் வருவான்

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை