புதன், 25 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 20 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணன் என்றதுமே, துவாரகை நம் நினைவுக்கு வந்து விடும். கடற்கரையில் அமைந்த எழில் மிக்க நகரம் தான் துவாரகை. இதை உருவாக்கியதன் பின்னே இரண்டு சம்பவங்கள் உண்டு.
சர்யாதி என்றொரு அரசன்... 
பிரகலாதனின் தந்தை இரண்யனைப் போல தன்னையே கடவுளாகக் கருதிக் கொண்டவன்... இரண்யனுக்கு பிரகலாதன் எப்படியோ, அப்படி சர்யாதிக்கு பிள்ளையாக வந்து பிறந்தவன் ஆனர்தன். 'நாராயணனே கடவுள்! அவனே பரமாத்மா, மற்ற அனைத்து உயிர்களும் ஜீவாத்மாக்கள் மட்டுமே' என்றான் அந்த மகன். இதனால் மகன் என்றும் பாராமல், ''நீ இந்த மண்ணில் எங்கும் இருக்கக் கூடாது. ஏனென்றால் இந்த மண்ணுக்குரிய அரசன் நான் தான். எனவே, கடலில் போய் விழு....உன் நாராயணன் காப்பாற்றினால் வாழ். 
இல்லாவிட்டால் என் மதிப்பு தெரிந்த பின் திருந்தி வா,'' என்று கூறி துரத்தினான். 
ஆனர்தன் சற்றும் தயங்கவில்லை. 
நாராயணனும் அவனைக் கைவிடவில்லை. கடல் நீரை உள் வாங்கச் செய்து, அதில் ஒரு நிலப்பரப்பை உருவாக்கி, ''இது உன் பக்திக்காக நான் அளிக்கும் இடம். இங்கே ஒரு நகரம் உருவாகும், வருங்காலத்தில் இங்கு நானே சிலகாலம் மனிதனாகப் பிறக்கும் போது வாசம் செய்வேன்,'' என அருள்புரிந்தார். 
நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம். ஆனால் நாராயணனுக்கு தெரியாமல் போகுமா... கிருஷ்ணாவதாரத்தில் மதுராவை விட்டு, தனக்கென தனி நாடு அமைக்க விரும்பிய போது, காத்துக் கொண்டிருந்தது கடல் அலை தாலாட்டும் துவாரகை!
இங்குள்ள கடல் நடுவே கோட்டையை உருவாக்கி ஒரு தெய்வீக அதிசயத்தை உலகம் காண வேண்டிய தருணம் வந்தது. கம்சனை வதம் செய்த நிலையில், அவனது மனைவியரான அஸ்தியும், பிராப்தியும் தங்கள் தந்தையான மகதநாட்டு மன்னன் ஜராசந்தனிடம் சென்று, தங்கள் அவலநிலையை எடுத்துக் கூறினர்.
அதைக் கேட்ட ஜராசந்தன் கொதித்து எழுந்தான். கிருஷ்ணனை மட்டுமில்லாமல் அவன் பிறந்த யதுவம்சத்தையே அழிப்பதாக சபதமிட்டான். அசுர குல அரசர்களில் ஜராசந்தன் பிறப்பிலேயே அரிய சக்திகள் பெற்றவன். குறிப்பாக அவனை வெட்டிக் கொல்லவோ, சிதைத்து அழிக்கவோ முடியாது. வெட்டிய பாகத்தில் இருந்து சிதைந்த திசுக்கள் வினாடி நேரத்திற்குள் திரும்பச் சேர்ந்து விடும். இப்படிப்பட்ட சக்தி இருந்ததால் அவனை எதிர்த்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 
இந்நிலையில் கிருஷ்ணன் மீது, ஜராசந்தன் குறி வைத்தான். சாமான்ய பிறவிகளால் ஜராசந்தன் போன்றோரை ஏதும் செய்ய முடியாது. அதற்காக ஜராசந்தன், கம்சன் போன்றவர்களை அப்படியே விட்டு விடவும் முடியாது. பூமியில் கிருஷ்ணனாக அவதரித்ததே அசுரர்களை அழிக்கத் தான்!
எதற்காக இப்படிப்பட்டவர்களைப் படைக்க வேண்டும், பின் எதற்காக அழிக்க வேண்டும் என்ற கேள்வி கேட்கத் தோன்றலாம். இதைத் தான் சைவர்கள் திருவிளையாடல் என்கின்றனர். வைணவர்கள் லீலை என்று குறிப்பிடுகின்றனர்.
பொழுது போகாத போது விளையாட்டுகளை உருவாக்கிக் கொண்டு அதில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும், நம் வாழ்வை வாரஸ்யப்படுத்துவது போலத் தான் இதுவும்.
இங்கே கிருஷ்ண லீலையின் நோக்கமே அசுர சக்திகளை அழித்து நல்ல தேவசக்திகளை காப்பது தான். கிருஷ்ணனும் அதற்கேற்பவே செயல்பட்டான். கம்சனைக் கொன்றவுடன் அதற்கான வேகம் ஜராசந்தனிடம் எதிரொலிக்கும் என்பதும் கிருஷ்ணன் தீர்மானித்தது தான். ஜராசந்தனைப் போலவே அவன் படையும் வலிமை மிக்கது. அதை ஒரு ஜனசமுத்திரம் என்றே கூறலாம். அவர்கள் அனைவரும் மதுராவின் மீது படையெடுத்து வந்தால் பெரும் அழிவு உண்டாகும்.
போர் என்றாலே இரு பக்கமும் அழிவு உண்டாகுமல்லவா! இதை விரும்பாத கிருஷ்ணன் மதுராவை விட்டு விலகி துவாரகைக்கு செல்ல முடிவெடுத்தான். 
ஜராசந்தனின் இலக்கும் மதுராவை விட்டு மாறி, துவாரகை என்றானது. துவாரகை மீது படையெடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் மட்டுமே எஞ்சி நிற்க, படை முழுவதும் நாசம் அடைந்தது. ஜராசந்தனைச் சார்ந்த அசுரவழித் தோன்றல்களும் கிருஷ்ணனால் கொல்லப்பட்டார்கள். 
கிருஷ்ணனால் அவர்களுக்கு வீரசுவர்க்கம் கிடைத்தது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். 
ஒரு கட்டத்தில் ஜராசந்தனின் படைபலம் என்பது அவனைத் தவிர யாரும் பெரிதாக இல்லை என்ற நிலைக்கு சுருங்கி விட்டது.
அது அவனது கோபத்தை அதிகரித்தது.
அப்போது தான் கிருஷ்ணனின் தந்திரம் ஜராசந்தனுக்குப் புரிந்தது.
அசுர புத்திக்கு மிக தாமதமாகவே உண்மை எட்டியது என்றும் கூறலாம். இம்முறை ஜராசந்தன் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தான். நிகரில்லாத ஒரு பெரும்படையோடு சேர்ந்து வந்து துவாரகையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது தான் அவனது முடிவு.
இந்நிலையில் கிருஷ்ணனும் தன் மக்களைக் காக்க, கடல் நடுவே கோட்டை கட்டி அவர்களை அங்கேயே பாதுகாப்பாக வைக்க முனைந்தான். இந்த கோட்டை கட்டும் முடிவு மிக ரகசியமாகவும், தேவசக்திகளின் ஆதரவால் மிக வெற்றிகரமாகவும் முடிந்தது.
கால யவ்வனன் என்று ஒருவன் இருந்தான். இவன் சிவனின் அருள் அம்சத்தோடு பிறந்தவன். இவனது பிறப்பின் நோக்கமே யாதவர்களை அழித்து விட வேண்டும் என்பது தான். அதற்கான பெரும் சக்தியும் அவனுக்கு இருந்தது. காலயவ்வனன் படை எடுத்து வந்தால், எப்படி ஜராசந்தன் நீங்கலாக அவன் படையை கிருஷ்ணன் அழித்தானோ அதுபோல கிருஷ்ணனைத் தவிர யாதவர்கள் அவ்வளவு பேரையும் அவன் கொன்று குவிப்பதும் உறுதி. காலம் இங்கே காலயவ்வனன் மூலம், கிருஷ்ணனுக்கே சவால் விட்டது!
ஒருபுறம் தன்னை அழிக்கத் துடிக்கும் ஜராசந்தன், மறுபுறம் தன் இனத்தையே அழிக்கத் துடிக்கும் காலயவ்வனன்!
இப்படி இரு பெரும் எதிரிகளுக்கு இடையே கிருஷ்ணன் துவாரகையில் கடல் நடுவே கோட்டை கட்டி அதில் யாதவர்களை பாதுகாப்பாக வைத்து விட்டு போருக்குத் தயாரானான்.
முன்னதாக காலயவ்வனனுக்கு, யாதவர்கள் மீது அப்படி என்ன கோபம் என்பது தெரிய வேண்டுமல்லவா? அது ஒரு வினோதமான கதை....
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக