புதன், 25 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 23 - இந்திரா சௌந்தர்ராஜன்

காலயவ்வனன் சாம்பலாகி கிடப்பதைக் கண்ட கிருஷ்ணன், 'இவனும் என் படைப்பு தானே' என்று கேட்டதும், முசுகுந்தனின் மனம் வருந்தியது. 
“பிரபு... பிறருக்கு உதவியே பழகி விட்ட எனக்கு இந்த வதம் வருத்தம் அளிக்கிறது. இது நேராமல் இருந்திருக்கலாமே,” என்றான்.
“இது இப்படி தான் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருப்பதை மாற்ற முடியாது முசுகுந்தா...” என்றான் கிருஷ்ணன்.
“இப்படி கூடவா ஒருவனின் விதி இருக்கும்?”
“இருக்கப் போய் தானே நிகழ்ந்தது”
“பிரபோ... விதி உன்னால் தானே எழுதப்படுகிறது”
“நான் எழுதுகிறேனா.... முசுகுந்தா.. என்ன இது புதுமையான விளக்கம்?”
“சகல உலகையும் படைத்து, அவற்றை இயக்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நீ தானே!”
“நீ சொல்வதில் பிழையில்லை. ஆனால் என் இயக்கத்திற்குள் உன் இயக்கம் என்றொரு விஷயமும் இருக்கிறது. நான் அதில் தலையிடுவதில்லை. இது எப்படி என்றால், ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு வித்தை கற்பிக்கிறார். பின் அவர்களுக்குள் போட்டி வைக்கிறார். போட்டிக்கு அவரே நடுவராக இருக்கிறார். போட்டியாளர்களின் வீரத்தில் அவர் தலையிடுவதில்லை. வெற்றி பெறுவதும், தோற்பதும் அவர்கள் கற்றுக் கொண்ட விதம், செயல்படும் விதத்தைப் பொறுத்தது. நானும் அப்படித்தான்... சகலத்தையும் படைத்தேன். வாழும் நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தேன். அதுவே வேதம் என்றானது. அதைப் பின்பற்றி நடப்பதும், நடக்காததும் வாழ்வில் ஏற்ற, இறக்கங்களை உண்டாக்குகின்றன. அதுவே கர்ம பயனாகி உயிர்களை நடத்துகின்றன. காலயவ்வனனும் அவனுக்குரிய கர்மபயனுக்கு ஆளாகி, இப்போது வைகுண்டத்தை அடைந்துள்ளான். நீ இதைச் சிந்தித்து சலனப்படாதே...” என்ற கிருஷ்ணனின் விளக்கம் கேட்ட முசுகுந்தன் சிலிர்த்துப் போனான்.
அது சரி... யார் இந்த முசுகுந்தன்? அவன் பின்புலம் என்ன?
முசுகுந்தனின் தோற்றமே விசித்திரமானது. இவன் தந்தை மாந்தாதா உலகின் முதல் விசித்திர பிறப்பாளன்.
மாந்தாதா ரிஷிகள் நடத்திய வேள்வியின் பயனாக பெண்ணின் தொடர்பு இல்லாமல், யுவனாசுவன் என்பவனுக்குப் பிறந்தவன். இவனுக்கு நூறு மனைவியர் இருந்தனர். ஆனால் ஒருவரிடமும் புத்திரப்பேறு உண்டாகவில்லை. ரிஷிகளின் உதவியை நாடினான். அவர்கள் இந்திரனின் அருளால் புத்திர உற்பத்தி செய்ய வேள்வி ஒன்றைத் தொடங்கினர். இந்த வேள்வி பல நாட்கள் நடந்தது. ஒருநாள் நள்ளிரவில், யுவனாசுவனுக்கு தாகம் ஏற்பட, தண்ணீருக்காக அலைந்தான். வேள்வி சாலையில் இருந்த கலசம் அவன்கண்ணில் பட்டது. அதில் மந்திர தீர்த்தம் இருந்தது. மறுநாள் யுவனாசுவனனின் நூறு மனைவியருக்கும் வழங்குவதற்கு வைத்த தீர்த்தம் அது. விஷயம் அறிந்த ரிஷிகள் கலக்கம் அடைந்தனர்.
தீர்த்தம் பிள்ளையாகித் தீர வேண்டும் என்பதால் யுவனாசுவனிடம் குழந்தை உற்பத்தி ஏற்பட்டது. அது அவனது தொடையை கருப்பையாக்கிக் கொண்டு வளர்ந்தது. ஒருநாள் தொடையைக் கிழித்துக் கொண்டு பிறந்தும் விட்டது.
வேள்வியின் பயனாக, ஒரு ஆணுக்குப் பிறந்த அதிசயக் குழந்தையை காண இந்திரன் வந்தான். அவன் வந்த சமயம் குழந்தை பசியோடு அழுதது. தாய் இருந்தால் பால் கொடுப்பாள். ஆணுக்குப் பிறந்த பிள்ளைக்கு பாலுக்கு எங்கே போவது?
இந்திரன் இதற்கு ஒரு வழியைத் தேடினான். தன் கட்டை விரலை வாயில் வைத்தான். அதன் வழியாக தான் உண்ட அமுதத்தை குழந்தைக்குப் போய் சேர வைத்தான். இப்போதும் சிறு குழந்தைகள் கட்டை விரலை சூப்புவதைக் காணலாம்.
அபூர்வமாகப் பிறந்து இந்திரனின் கட்டை விரல் வழியே அமுதம் அருந்திய காரணத்தால் 'மாந்தாதா' என்று அழைக்கப்பட்டான். இதன் பொருள் 'பெரும் பலவான்' என்பதாகும். 
இவ்வாறு வித்தியாசமாகப் பிறந்த, மாந்தாதாவின் வம்சாவளியே ராமர் அவதரித்த சூரிய வம்சம்.
இப்படி யுவனாசுவனின் வேள்விப் பயனாக மாந்தாதா பிறக்க, அவன் புதல்வனாக பிறந்தவனே முசுகுந்தன். மாந்தாதாவுக்கு இந்திரன் ஒருவிதத்தில் தாயாக இருந்ததால், முசுகுந்தனுக்கு பாட்டன் உறவாகி விட்டான். இதனால் பூலோகத்தில் ஆட்சி புரிந்தாலும், தேவர்களின் தலைவன் இந்திரனின் சம்பந்தம் முசுகுந்தனுக்கு சுலபமானது. இந்திரனுக்கு துன்பம் நேரும் போது உதவவும் வழி வகுத்தது.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் ஏற்படும் போதெல்லாம், முசுகுந்தன் தன் படையை அழைத்துக் கொண்டு இந்திரனுக்காக போர் செய்தான். இதனால் இந்திரன் வெற்றிகளை சுலபமாகப் பெற்றான்.
முசுகுந்தன் தன் நாட்டை ஆட்சி செய்வதை விட, இந்திரனுக்காக போர் செய்த காலம் அதிகம். இதனால் களைப்பும், சோர்வும் அவனை ஆட்கொண்டது. இதை அறிந்த இந்திரன் அவனை நீண்ட காலம் ஓய்வெடுக்கும் விதத்தில் ஆனந்த நித்திரை கொள்ளும் வரம் அளித்தான். அதற்கு இடையூறு ஏற்படக் காரணமானவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்றும் கூறினான். அந்த வரத்தால் தான் காலயவ்வனன் பலியானான்.
தன்னை எதிர்த்ததோடு, தன் யாதவ குலத்தையும் அழிக்க எண்ணிய காலயவ்வனனை தந்திரத்தால் கிருஷ்ணன் வதம் செய்தான். இந்நிலையில் முசுகுந்தனும், கிருஷ்ணனை விஷ்ணுவாக உணர்ந்து சரணாகதி அடைந்தான். கிருஷ்ணன் அவனிடம், 'இப்பிறப்பில் ஆட்கொள்ள உன் கர்ம பயனில் இடமில்லை. அடுத்த பிறப்பில் உன்னை ஏற்றுக் கொள்வேன்' என்று கூறி அனுப்பி வைத்தான்.
காலயவ்வனனை கிருஷ்ணன் கொன்றதை அறிந்த ஜராசந்தன் ஆவேசம் கொண்டான். பெரும் படையுடன் போருக்குப் புறப்பட்டான். பல முறை தோற்றும் அவனுக்கு புத்தி வரவில்லை. கிருஷ்ணன் நினைத்தால் ஜராசந்தனை முதல் போரிலேயே கொன்றிருக்கலாம். அப்படி கொல்லாமல் விட்டதன் பின்னணியில், ஜராசந்தனின் ஆயுள் பீமனால் முடிய வேண்டும் என்னும் விதியிருந்ததே ஆகும்.
ஜராசந்தன் போரிட வருவதை அறிந்த கிருஷ்ணன் பயந்தோடுவதைப் போல நாடகமாடினான். இதையே தனக்கு கிடைத்த வெற்றியாக கருதிய ஜராசந்தன் மகிழ்ந்தான். கிருஷ்ணனும், பலராமனும் ஒரு மலை மீது எரிந்த காட்டுத்தீயில் குதித்து உயிர் விட்டதாக, ஜராசந்தன் எண்ணும் விதத்தில் நடந்து கொண்டனர்.
ஆனால் சில நாட்களில் துவாரகை திரும்பிய கிருஷ்ணன் அரசாளத் தொடங்கினான். விஷயம் அறிந்த ஜராசந்தனுக்கு தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது. திரும்பவும் போர் புரிய மனம் இல்லாமல் காலம் வரட்டும் என்று காத்திருந்தான்.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக