புதன், 25 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 24 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ண ஜாலத்தில் மிக விசேஷமானது கிருஷ்ணனுக்கும், பெண்களுக்குமான சம்பந்தம் தான். தேவகி, யசோதை, குந்தி, பலராமனின் மனைவி ரேவதி, தங்கை சுபத்ரை, திரவுபதி நீங்கலாக மற்ற எல்லா பெண்களும் கிருஷ்ணனை புருஷனாகவும், தங்களை அவனது அடிமைகளாகவுமே கருதினர். இதில் காமம் கலந்திருந்தாலும், அதை விட பக்தியே அதிகமாக இருந்தது. திருமாலின் அவதாரங்களில் நர நாராயண அவதாரமும் ஒன்று. 
நரன், நாராயணர் என்னும் இருவர் பத்ரிகாசிரமத்தில் பெரும் யோகிகளாக இருந்தனர். பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து வாழ்ந்த அவர்களை, தேவகன்னியர் கண்டனர். அவர்களின் அழகில் தங்களின் மனதைப் பறி கொடுத்தனர்.
இயற்கையை ரசிக்கும் சமயத்தில் நம்மை மறந்து விடுகிறோம். அழகிய பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, பரந்த கடற்கரை, மலர்ந்த பூக்கள், பனிப்பொழிவு, அந்தி வேளை சூரியன், பறவைகளின் கீச்சு ஒலி, மயிலின் நடனம் என்று இயற்கையில் ரசிக்க எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. இவற்றை ரசிக்க நமக்கு கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், மனிதனை மனிதன் ரசிக்க முயலும் போது தான், நம் நலன் கருதி பல கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டுள்ளன. அதிலும் ஆண், பெண் ரசனையாகப் பார்த்துக்கொள்ள அதிக கட்டுப்பாடு இருக்கும். 
தேவகன்னியர் நர நாராயணர் முன் மனம் உருகி ரசித்த விஷயத்திலும் இந்தக் கட்டுப்பாடு குறுக்கிட்டது. கடுமையான பிரம்மச்சரியமே தவ வாழ்வின் நோக்கம் என்பதை உணர்த்துவதற்காகவே, திருமால் நர நாராயண அவதாரம் எடுத்தார். பிரம்மச்சரியம் மேற்கொண்டால் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் இதன் மூலம் வெளிப்படுத்த இருந்தார். இந்த சமயத்தில் தேவகன்னியரே நேரில் வந்தாலும் மனம் சலனப்படக் கூடாது. மனோதிடம் மிக முக்கியம் என்பதை உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்பதும் இவர்களது நோக்கம். 
இந்த நிலையில் தங்களை ரசித்த தேவகன்னியரிடம், “பெண்களே! உங்கள் விருப்பத்தை எங்களால் நிறைவேற்ற முடியாது. அதே நேரம் உங்கள் மீது பிழையில்லை. உடல் பலமும், பொருள் வளமும் நிறைந்த ஒரு ராஜகுமாரனை விரும்புவதில் சுயநலம் இருக்கிறது. ஆனால், சன்னியாசியான எங்களை நேசிப்பதில் சுயநலத்திற்கு வாய்ப்பில்லை. தவசக்தியோடு சேர வேண்டும் என்ற எண்ணமே உங்கள் முன் நிற்கிறது. இது போற்றி வரவேற்கத்தக்க விஷயம். எனவே உங்களுக்கு ஒரு வரம் தருகிறோம்,'' என்றவர்கள் அந்த வரம் பற்றியும் விவரித்தனர். 
''பெண்களே! எதிர்காலத்தில் நான் கிருஷ்ணனாக அவதாரம் எடுப்பேன். அப்போது உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்,'' என்று வாக்களித்தனர். இதில் நரன் அர்ஜுனனாகவும், நாராயணர் கிருஷ்ணராகவும் பிறந்தனர். அந்த தேவகன்னியர்களே ராதை, ருக்மிணி, பாமா, ஜாம்பவதி, காளிந்தி என பல பெண்களாகப் பிறப்பெடுத்தனர்.
கிருஷ்ண பெண் சம்பந்தத்தின் பின்னே இது போல வரங்களும், முன்னேற்பாடுகளும் இருப்பதை தெரிந்து கொள்வது அவசியம். இவர்களில் கிருஷ்ணனை முதலில் அடைந்தவள் ருக்மிணி. இவள் விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனின் மகள். இவனுக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். ருக்மணி ஒருத்தி மட்டும் பெண். ஆண்களில் மூத்தவன் பெயர் ருக்மி! இதன் சேதி நாட்டு மன்னனான சிசுபாலனின் நெருங்கிய நண்பன். இதனால் இவனிடம் சற்று அசுர புத்தி இருந்தது. தன் தங்கையை சிசுபாலனுக்கும் மணம் செய்து ரத்த சம்பந்தம் ஏற்படுத்தவும் விரும்பினான்.
ஆனால் ருக்மிணியின் மனம் முற்பிறவி சம்பந்தத்தாலும், அவளிடம் இருந்த மகாலட்சுமியின் அம்சத்தாலும் கிருஷ்ணனைப் பரபுருஷனாகக் கருதியது. நேரில் கூட பார்க்காமல், கிருஷ்ணனின் பெருமையைப் பிறர் மூலம் கேட்டே மனம் உருகினாள். மணந்தால் கிருஷ்ணன், இல்லாவிட்டால் இறப்பது என்று ஒருதலைக்காதல் கொண்டாள்.
எப்போதும் இப்படிப்பட்ட காதல் தோற்பதில்லை. இதனிடையே ருக்மி, சிசுபாலனோடு ருக்மிணிக்கு திருமணம் நடத்த நாள் குறித்தான். ருக்மிணியின் மனம் 'கிருஷ்ணா...கிருஷ்ணா...' என்று துடித்தது. ஒரு பிராமணர் மூலம் தன் காதலைச் சொல்ல தூது அனுப்பினாள். தன்னை அழைத்துச் செல்ல விட்டால் மணமேடை பிண மேடையாகி விடும் என்று தெரிவித்தாள்.
உலகில் மானசீகமாக காதலித்த முதல் பெண் ருக்மிணி தான். கிருஷ்ணனும் அவளைக் கைவிடவில்லை. பஞ்சகல்யாணிக் குதிரைகள் பூட்டிய ரதத்தில் விதர்ப்ப நாட்டுக்குள் நுழைந்தான். மணமேடை அருகில் அந்த ரதத்தைக் கொண்டு வர, 'கிருஷ்ணா' என்று கூவிய படி ரதத்திற்குள் ஏறினாள் ருக்மிணி. யாரும் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கிருஷ்ணர் திருமணத்தில் பங்கேற்க வந்திருப்பதாக அனைவரும் கருதினர். ருக்மணி ரதத்தில் ஏறவும், அது துவாரகை நோக்கிப் புறப்பட்டது. சிசுபலான் எரிமலையாகி கோபத்தைக் கக்க, ருக்மி கிருஷ்ணனுடன் மோதத் தொடங்கினான். அப்போது ருக்மியின் தலையை வெட்ட கிருஷ்ணரின் கையில் உள்ள சக்ராயுதம் புறப்பட்டது. ருக்மிணி, கிருஷ்ணனின் காலில் விழுந்து தன் சகோதரனை மன்னிக்கும்படி வேண்டினாள். ருக்மியும் உயிர் பிழைத்தான். 
துவாரகையில் ருக்மணி வாழ்ந்த காலத்தில் அவளைப் போலவே கிருஷ்ணனிடம் அன்பு கொண்டவள் பாமா. இவள் சத்ராஜித் என்னும் செல்வந்தனின் மகள். சத்ராஜித்துக்கு கிருஷ்ணனைக் கண்டால் பிடிக்காது. 
கிருஷ்ணனைப் பின்னுக்குத் தள்ளி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக, சூரியனை மனதில் நினைத்து தவம் செய்து, அபூர்வமான சமந்தக மணி என்னும் பொக்கிஷத்தைப் பெற்றான். இந்த அபூர்வ மணி இருக்கும் இடத்தில் தினமும் எட்டு யானை எடைக்கு தங்கம் குவியும். எங்கும், எதிலும் வெற்றி உண்டாகும். இந்த மணியைப் பூஜிக்கத் தவறினாலோ அல்லது அதற்கு தீட்டு உண்டாகி விட்டாலோ எதிர்விளைவுகளை உண்டாக்கும். 
தொடக்கத்தில் சத்ராஜித் சமந்தக மணியை சரியாகவே கையாண்டான். ஆனால், நாள் செல்லச் செல்ல நிலை மாறினான். 
கிருஷ்ணனின் மீது கொண்ட பொறாமை எண்ணம் அவனைத் தவறு செய்ய வைத்தது. அந்த மணி காணாமல் போனது. அதைக் கிருஷ்ணன் தான் கவர்ந்திருப்பான் என நினைத்தான். இறுதியில் கிருஷ்ணன் மணியைத் தேடிக் கண்டுபிடித்து சத்ராஜித்திடம் ஒப்படைத்தான். உண்மையை உணர்ந்த சத்ராஜித், அதற்குப் பரிசாகத் தன் மகள் பாமாவை கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்ய சம்மதித்தான். 
இங்கும் முற்பிறவி சம்பந்தம் பாமாவை கிருஷ்ணனை மணக்கத் தூண்டியது. கிருஷ்ண பத்தினியாக பாமா வாழத் தொடங்கினாள். இதற்கிடையில், ஜாம்பவானின் மகள் ஜாம்பவதியும் கிருஷ்ணனை மணந்தது தனிக்கதை.
அடுத்தவள் காளிந்தி. சூரியனின் மகளான இவள், யமுனை நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து கிருஷ்ணனை புருஷனாக அடைய வேண்டும் என்று தவம் செய்தாள். சாகாவரம், தலைமைப்பதவி, புத்திரப்பேறு, மோட்சம் ஆகியவற்றை பெற தவம் செய்பவர்களுக்கு நடுவில், கடவுளைக் கணவராக அடைய தவம் புரிவது என்பது வித்தியாசமானது மட்டுமில்லை. வினோதமானதும் கூட....

காளிந்தியிடம் காணப்பட்டது காமம் இல்லை. கிருஷ்ணனை அடைவதில் பக்தி பாவனை (தவம், தியானம் செய்தல்), தாஸ்ய பாவனை (உருக்கமாக பிராத்திப்பது) என இரு வழிகள் உண்டு. பெண்கள் இதில் தாஸ்ய பாவனையை மிகவும் விரும்புவர். ஏனெனில் கிருஷ்ணனை அடைய உருக்கம் ஒன்றே குறுக்குவழி. பல கிருஷ்ண பக்தர்கள் இதையே கடைபிடித்துள்ளனர். தாஸ்வ பாவனையுடன், பக்தி சேரும் போது கிருஷ்ணன் அருள்புரிவது உறுதியாகி விடும்.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக