புதன், 25 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 26 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணன் சத்யபாமாவோடு, கருடவாகனத்தின் மீதேறி வருவதைக் கண்ட முரன் திடுக்கிட்டான். ஆனாலும், ஐந்து தலை கொண்ட அவன் கிருஷ்ணனை எதிர்க்கத் தயங்கவில்லை. ஆனால்... ஒரு குழப்பம்! போர்க்களத்திற்கு கிருஷ்ணன் எப்போதும் இப்படி பெண் துணையுடன் வந்ததில்லையே...! 
அவருக்கு பத்தினிகளாக ருக்மிணி, ஜாம்பவதி, காளிந்தி ஆகியோர் இருக்கும் போது பாமாவை மட்டும் அழைத்து வந்தது ஏன் என புரியவில்லை. நரகாசுரன் பெற்ற வரம் அவனுக்கு தெரியுமோ... தெரியாதோ...!
பாமாவைப் பொறுத்த வரை, அவள் கண் எதிரில், சததன்வா என்பவனால் அவளது தந்தையான சத்ராஜித் வெட்டிக் கொல்லப்பட்டார். பாமாவை எப்படியாவது அடைய சததன்வா படாதபாடு பட்டான். ஆனால், பாமா கிருஷ்ணனை நேசித்ததால் சததன்வாவின் ஆசை நிறைவேறவில்லை. இந்நிலையில் சததன்வா, சத்ராஜித்தை கொலை செய்தான். 
சததன்வாவின் அரக்க குணத்தின் உச்ச நிலையைக் கண்ட பாமா கொதித்தாள். இந்த கொதிப்பை அப்படியே விட்டால் பழி உணர்வாக மாறி மனதைப் பாதிக்கும். அசுர சக்திகளிடம் போரிட்டால், கோபம் வெளியேறி மனம் அமைதி பெறும். 
இந்நிலையில் தான் பாமா கிருஷ்ணனுடன் போருக்கு வந்தாள்.
நரகாசுரனைப் பொறுத்தவரை பாமாவுக்கு தாய் ஸ்தானம். கிருஷ்ணனுக்கு தந்தை ஸ்தானம்! தாயும், தந்தையும் மகனைக் கொல்லப் போவது உலகில் இல்லாத அதிசயம் மட்டுமல்ல! தர்மத்தை நிலைநாட்டும் உயர்ந்த நிலையும் கூட.
இப்படி ஒரு பின்புலத்தோடு கிருஷ்ணன் வந்த போது தான், முரனை எதிர்க்க நேர்ந்தது. அவன் நெருப்பு, நீர், ரத்தம் என நாலாபுறமும் மாறி மாறி உமிழ்ந்தபடி போரிட்டான். கிருஷ்ணன் சக்ராயுதத்தை ஏவ, அது முரனின் ஐந்து தலைகளையும் அறுத்து விட்டுத் திரும்பியது. முரனை அழித்ததால் கிருஷ்ணன் 'முராரி' என பெயர் பெற்றான்.
முரனைத் தொடர்ந்து நரகாசுரனின் ஏழு மகன்கள் ஆவேசமாக போருக்கு வந்தனர். அவர்களையும் கிருஷ்ணன் சக்ராயுதத்தை ஏவிக் கொன்றான். ஒருவகையில் இவர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான்! தெய்வீகமான சக்ராயுதத்தால் இறுதி முடிவு ஏற்பட்டு வைகுந்தம் செல்வது என்பது சிறப்பு தானே! அசுரர்களுக்கும் நல்ல முடிவு கிடைக்க ஏதாவது நல்ல செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும்.
முரனும், தனது ஏழு மகன்களும் இறந்த செய்தி நரகாசுரனை எட்டியது. அவன் போர்க்களம் புறப்பட்டான். அவனது படை பலத்தை அழிக்க விரும்பிய கிருஷ்ணன் வாள் ஏந்தினான். மறுபுறம் பாமாவும் அசுரப்படை வீரர்களைக் கொன்று குவித்தாள். ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி இரவில், விடிந்தால் 
அமாவாசை என்னும் நிலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிருஷ்ணன் தன் சக்ராயுதத்தை ஏவ, நரகாசுரனின் உயிர் பிரிந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 
நரகாசுரனின் தாயான பூமாதேவி தலை துண்டிக்கப்பட்ட மகனின் உடம்பை மடியில் கிடத்தி கண்ணீர் விட்டாள். தாய்ப்பாசம் என்பது தேவர், அசுரர் என்பதைக் கடந்த அன்பு உணர்வு என்பதை உணர்த்தும் விதமாக இது இருந்தது.
சக்கரத்தின் சம்பந்தம் ஏற்பட்டதால் நரகாசுரனின் அசுர குணம் அழிந்தது.
“தந்தையே! நான் இப்போது நல்ல மனநிலையில் இருக்கிறேன். ஆணவம், கோபம், பழி உணர்வு, பாதகச் செயல் என இவ்வளவு காலமும் இருண்ட வாழ்க்கை வாழ்ந்தேன். என்னை அசுரவழியில் நடத்தியதும் நீங்கள் தான். இப்போது நல்லவனாக்கியதும் நீங்கள் தான்! இதை என்னவென்று சொல்வது.... இதனால் யாருக்கு என்ன பயன்?”
நரகாசுரன் கேள்வி கேட்டான்.
“பவுமா... இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இருப்பது போல, இப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணம் வேண்டுமல்லவா? நீ இரண்டுக்கும் உதாரணமாகி விட்டாய்,” என்றாள் பாமா.
“தாயே... தீமைக்கு பொருந்துவது போல, நன்மைக்கும் நான் எப்படி பொருந்துவேன். உங்கள் பேச்சு எனக்கு புரியவில்லை” என்றான் நரகாசுரன்.
“தீமையில் இருந்து தோன்றிய நன்மை நீ. உனக்கு கடந்த காலம் தீமை என்றால், இனி வரும் காலம் நன்மை. பாவச்சகதியில் மூழ்குவோரை நீ மனம் வைத்தால் விடுவிக்கலாம்,” என்று பாமா நல்வழி காட்ட, நரகாசுரனும் புரிந்து கொண்டான்.
“அம்மா... நான் இறந்த இந்த நேரம் அகந்தை, அரக்க குணம் அழிந்த நேரம். இந்த நேரத்தில் என்னை எண்ணி தீமைகளை விலக்கி, தேவியாகிய உன் பாதங்களை எண்ணி வழிபடுவோருக்கு நன்மை அனைத்தும் ஏற்படும் என்று வேண்டுகிறேன். அருள்புரியுங்கள்,” என்றான் நரகாசுரன்.
பூமாதேவி, “பிரபோ... இது சாதாரண காலைப் பொழுதல்ல. ஒரு பாவ விமோசனப் பொழுது. இந்த நேரத்தில் ஒருவர் எண்ணெய் ஸ்நானம் செய்வதும், தீமைகளுக்கு முழுக்கு போடுவதும் ஒன்றல்லவா? என் மகன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுவது போல இந்த குளியல் விளங்கட்டும். பூமியில் நீர் நிலைகள் அனைத்தும் கங்கையாக மாறட்டும். பரம தரித்திரன் கூட காலைப் பொழுதில் நீராடி செல்வச் செழிப்பு அடையட்டும். இருள் நீங்கி எங்கும் ஒளி மிகுந்து, தீபங்களின் வரிசையாகத் திகழட்டும். நவக்கிரகங்களின் பிடியில் சிக்கித் தவிப்போர் மனதிலும் மகிழ்ச்சி நிரம்பட்டும். இந்த நல்ல நேரத்தில் ஒருவர் வாழ்த்தினால் கோடி வாழ்த்துக்கு இணையாகட்டும்,” என பூமாதேவி கிருஷ்ணனிடம் வேண்டி நின்றாள்.
அந்த நொடியில் கிருஷ்ணனும் அதை ஏற்பது போல மகாவிஷ்ணுவாக காட்சியளித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் தீபாவளித் திருநாள் நமக்கு கிடைத்தது.
- முற்றும்
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக