ஶ்ரீமத் பாகவதம் - 106


நான்காவது ஸ்கந்தம் – இருபத்து எட்டாவது அத்தியாயம்

கீழ்ச் சொன்ன புரஞ்ஜனோபாக்யானத்தின் கருத்தை வெளியிடுதல்.

ப்ராசீனபர்ஹி சொல்லுகிறான்:- நாரத மஹர்ஷி! நீர் மொழிந்த விஷயம் எமக்கு நன்றாகத் தெரியவில்லை. நாங்கள் ப்ராசீன கர்மவாஸனையால் மதிமயங்கி யஜ்ஞம் முதலிய கேவல கர்மங்களில் மனம் செல்லப்பெற்றவர்கள். தேவரீர் சொன்ன விஷயம் பெரிய பண்டிதர்களாலன்றி, மந்தமதிகளான (புத்தி குறைவான) எங்களால் அறியக்கூடியதல்ல. ஆகையால் அதை விவரித்துச் சொல்லவேண்டும்.

நாரதர் சொல்லுகிறார்:- மன்னவனே! புரமென்று சரீரத்திற்குப் பேர். ஜீவன் அதில் புகுந்து மனப்பற்றுடையனாய் இருக்கையால் புரஞ்ஜனனென்று சொல்லப்படுகிறான். அச்சரீரங்களில் சில ஒற்றைக் காலுடையவைகளும், சில இரண்டு காலுடையவைகளும், சில மூன்று காலுடையவைகளும், சில நான்கு காலுடையவைகளும், சில பலகாலுடையவைகளும், சில காலில்லாதவைகளுமாய் இருக்கும். அந்தப் புரஞ்ஜனனுக்கு அவிஜ்ஞாதனென்று ஒரு நண்பன் உண்டென்று மொழிந்தேனல்லவா? அவனே ஸர்வேச்வரன். அவன் இன்ன பேருடையவனென்றும் இன்ன செயலுடையவனென்றும் இன்ன குணமுடையவனென்றும் ஒருவராலும் அறியமுடியாதவனாகையால் அவிஜ்ஞாதனென்று கூறப்படுகிறான். ராம க்ருஷ்ணாதி நாமங்களாலும், ஜகத்ஸ்ருஷ்டி முதலிய செயல்களாலும் ஸத்யஜ்ஞானாதி குணங்களாலும் சாஸ்த்ரங்களில் சொல்லியபடி பெரியோர்களால் அவன் அறியப்படுகிறானாயினும், அவனுடைய நாமங்களும் செயல்களும் குணங்களும் இவ்வளவென்றாவது இத்தகைய பெருமையுடையவை என்றாவது உள்ளபடி அறியமுடியாதவை ஆகையால் அவனை அவிஜ்ஞாதனென்பது சரியே. இந்த ஜீவன் ப்ரக்ருதியின் குணங்களான சப்தாதி விஷயங்களை அனுபவிக்க விரும்பி கண், காது முதலிய ஒன்பது த்வாரங்களும் இரண்டு கை கால்களுமுடைய மனுஷ்ய சரீரத்தைக் கண்டு தான் போகங்களை அனுபவிப்பதற்கு உரிய இடமென்று நினைத்தான், அஹங்கார மமகாரங்களை விளைக்கும் புத்தியை மடந்தையென்று (பெண் என்று) மொழிந்தேன். இந்தப் புத்தியின் தூண்டுதலால் தான் ஜீவன் இச்சரீரத்தில் இருந்து இந்த்ரியங்களால் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கின்றான். 

ஜ்ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஆகிய இந்திரியங்கள் பத்தும் தமது வ்யாபாரங்களில் புத்தியை எதிர்பார்க்கின்றவை. ஆகையால் அவை அப்புத்தியாகிற மடந்தைக்கு (பெண்ணிற்கு) நண்பர்களாகவும் ப்ருத்யர்களாகவும் சொல்லப்பட்டன. அவ்விந்திரியங்களின் வ்யாபாரங்களே தோழிகளாகவும், ஐந்து வகையான ப்ராணன் ஐந்து தலைப்பாம்பாகவும், இருவகை இந்திரியங்களிலும் ப்ரதானமாகி வலிவுள்ள மனது மஹாவீரனாகவும், சப்தாதி விஷயங்கள் ஐந்தும் பாஞ்சால தேசங்களாகவும் கூறப்பட்டன. சரீரமாகிற பட்டணத்திற்கு ஒன்பது வாசல்கள் உண்டென்று சொன்னேனல்லவா? அவையாவன - கண்களிரண்டும் மூக்குகள் இரண்டும் காதுகளிரண்டும் முகமொன்றும் மலமூத்ர த்வாரங்களிரண்டும் ஆகிய இவ்வொன்பதே. கண் காது முதலிய இந்திரியங்களோடு கூடி அந்தந்த த்வாரங்களின் வழியாய் ஜீவன் வெளியிலுள்ள சப்தாதி விஷயங்களை அனுபவிக்கின்றான் என்பதைக் கருதியே புரஞ்ஜனன் நண்பர்களோடு கூடி இந்த த்வாரங்களால் அந்தந்தத் தேசங்களுக்குப் போவானென்று சொன்னேன். கண் த்வாரங்களிரண்டும் மூக்கு த்வாரங்களிரண்டும் வாயொன்றுமாகிய இவ்வைந்தும் கிழக்கு முகமாயுள்ள ஐந்து வாசல்களாகவும், வலக்காது தெற்கு வாசலாகவும், இடக்காது வடக்கு வாசலாகவும், மலமூத்ர த்வாரங்களிரண்டும் மேற்கு முகமாயுள்ள இரண்டு வாசல்களாகவும் சொல்லப்பட்டன. 

கத்யோதையென்றும் ஆவிர்முகியென்றும் இரண்டு வாசல்கள் ஒரே இடத்தில் இருக்கின்றன என்றேன். அவ்விரண்டும் கண்களே. ஜீவன் அக்கண்களின் வழியாய்ச் சென்று சக்ஷுஸ் (கண்) இந்த்ரியத்தினால் வெளுப்பு கறுப்பு முதலிய நிறங்களை அறிகிறானென்பதைப் பற்றியே, புரஞ்ஜனன் இந்த வாசல்களில் த்யுமானென்னும் நண்பனுடன் விப்ராஜித தேசத்திற்குப் போவானென்று சொன்னேன். மூக்கின் த்வாரங்களை நளினி நாளினியென்கிற இரண்டு வாசல்களாகவும், கந்தமென்கிற மணத்தை ஸௌரபமென்னும் தேசமாகவும், க்ராண (நுகரும்) இந்த்ரியத்தை அவதூதனென்னும் நண்பனாகவும், வாயை முக்யையென்னும் வாசலாகவும், வாகிந்த்ரியம் ரஸனேந்திரியம் இவைகளை விபணன் ரஸஜ்ஞன் என்கிற இரண்டு நண்பர்களாகவும், வாக்வ்யவாஹாரத்தை விபணமென்னும் தேசமாகவும், பலவகை அன்னத்தைப் பஹூதனமென்னும் தேசமாகவும், வலக்காதைப் பித்ருஹூவென்னும் வாசலாகவும், இடக்காதைத் தேவஹூவென்னும் வாசலாகவும் சொன்னேன். ஸம்வத்ஸரத்தைச் சண்டவேகனென்னும் கந்தர்வ ராஜனாகவும், அதன் பகல்களைக் கந்தர்வர்களாகவும் ராத்ரிகளைக் கந்தர்விகளாகவும் மொழிந்தேன். இந்நாட்கள் முன்னூற்று அறுபதும் கந்தர்வர்களைப்போல் தெரியாமல் சுழன்று வந்து ப்ராணிகளின் வாழ்நாளைப் பறிக்கின்றன. கிழத்தனத்தைக் (வயது மூப்பை) காலகன்னிகையென்றேன். இதை உலகத்திலுள்ளவர் ஒருவரும் விரும்புகிறதில்லையாகையால், இக்கால கன்னிகையை ஒருவனும் மணம்புரிய விரும்பவில்லை என்றேன். ம்ருத்யு கொடியனாகையால் யவனேச்வரனென்றும் பயங்கரனாகையால் பயனென்றும், அவனுக்கு கிழத்தனம் ஸஹாயமாகையால் காலகன்னிகையை அவன் தனக்கு உடன்பிறந்தவளாக அங்கீகரித்தானென்றும் கூறினேன். மனோ வ்யாதிகளும் சரீர வ்யாதிகளும் ம்ருத்யுவுக்கு உதவி செய்கின்றனவாகையால் அவற்றை அந்த ம்ருத்யுவாகிற யவனேச்வரனுடைய ஸேனையில் சேர்ந்த பொல்லாத யவனர்களாகவும், ஸுகதுக்காதிகளைச் சத்ருக்களாகவும், பலவகை ஜ்வரத்தை (காய்ச்சல்) ப்ரஜ்வாரனென்றும், இது ம்ருத்யுவுக்கு ஸஹாயமாகையால் இதை அவனுக்கு உடன் பிறந்தவனென்றும் மொழிந்தேன். பித்ருக்களை அடையும் வழியை அறிவிக்கிற ப்ரவ்ருத்தி சாஸ்த்ரத்தை தக்ஷிண பாஞ்சாலதேசமென்றும், தேவர்க்கும் தேவனான பகவானை அடையும் வழியை அறிவிக்கிற நிவ்ருத்தி சாஸ்த்ரத்தை உத்தர பாஞ்சாலதேசமென்றும், ச்ரோத்ரேந்தரியத்தை ஸ்ருததரனென்னும் நண்பனாகவும் சொன்னேன். ஜீவன் ச்ரோத்ரேந்தரியத்தினால் ப்ரவ்ருத்தி சாஸ்த்ரத்தையும் நிவ்ருத்தி சாஸ்த்ரத்தையும் கேட்கிறானென்னும் கருத்தை உட்கொண்டு, புரஞ்சனன் ச்ருததரனென்னும் நண்பனோடு தெற்கு வாசலால் தக்ஷிண பாஞ்சாலதேசத்திற்கும், வடக்குவாசலால் உத்தர பாஞ்சாலதேசத்திற்கும் போகிறானென்று மொழிந்தேன். ஆண் குறியை ஆஸுரியென்ற மேற்குவாசலாகவும், மைதுனத்தை (ஆண் பெண் சேர்க்கையை) க்ராம்யகமென்னும் தேசமாகவும், உபஸ்தேந்த்ரியத்தைத் துர்மதனென்னும் நண்பனாகவும், மலத்வாரத்தை திருதியென்னும் த்வாரமாகவும், நரக துக்கத்தை வைசஸமென்னும் தேசமாகவும், பாயுவென்னும் இந்திரியத்தை லுப்தகனென்னும் நண்பனாகவும் சொன்னேன். கண்ணில்லாத (த்வாரமில்லாத) வாசல்கள் இரண்டு உண்டென்று சொன்னேனல்லவா? அவற்றை விவரிக்கின்றேன் கேள். 

கை கால்களே கண்ணில்லாத வாசல்களாம். ஜீவன் பாணியென்கிற இந்திரியத்துடன் கூடி கைகளால் கார்யங்களைச் செய்வான். பாதமென்கிற இந்திரியத்துடன் கூடி கால்களால் போவது வருவதாயிருப்பான். ஹ்ருதயத்தை அந்தப்புரமாகவும், மனத்தை விஷசீனனென்னும் நண்பனாகவும், சொன்னேன். ஜீவன் அந்த ஹ்ருதயத்தில் இருந்துகொண்டு அதன் குணங்களால் கலக்கத்தையும் தெளிவையும் ஸந்தோஷத்தையும் அனுபவிக்கின்றான். புத்தி விகாரத்தை அடையும்படியான ஸ்வப்னாவஸ்தையிலும், அப்புத்தி இந்த்ரியங்களை அவற்றின் வ்யாபாரங்களில் தூண்டும்படியான ஜாக்ரதவஸ்தையிலும் (விழித்துக் கொண்டிருக்கும் காலத்திலும்) ஜீவன் பக்கத்திலிருந்து வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் தன்மையனாயினும் அப்புத்தியின் குணங்களால் தீண்டப்பட்டுக் காட்சி கேள்வி முதலிய இந்த்ரிய வ்யாபாரங்களைத் தன்னிடத்தில் ஏற்றுக்கொள்கின்றான். இதைக் கருதியே, அப்புரஞ்ஜனன் தன் மனைவியாகிய புரஞ்ஜனி எழுந்திருந்தால் எழுந்திருப்பதும் உட்கார்ந்தால் உட்காருவதுமாகி அவள் போன வழியெல்லாம் போய்க்கொண்டிருந்தானென்று மொழிந்தேன். தேஹத்தை ரதமாகவும், இந்திரியங்களைக் குதிரைகளாகவும், ஸம்வத்ஸரத்தின் வேகத்தை அக்குதிரைகளின் விரைந்த நடையாகவும், புண்ய பாபங்களென்கிற இருவகைக் கர்மங்களை இரண்டு சக்கரங்களாகவும், ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களை மூன்று த்வஜங்களாகவும் (கொடிகளாகவும்), ப்ராணன் அபானன் முதலிய ஐந்து வாயுக்களை ஐந்து கட்டுக்களாகவும் (பிரிவுகளாகவும்) மனத்தைக் கடிவாளமாவும் (குதிரையை இழுத்துப்பிடிக்கும் லகான்), புத்தியைத் தேர்ப்பாகனாகவும், ஹ்ருதயத்தைத் தேராளி உட்காருமிடமாகவும், சோக (துக்கம்) மோஹங்களை (மயக்கம்) இரண்டு ஏர்க்காலாகவும் (நிலத்தை உழும் கருவி), சப்தாதி விஷயங்கள் ஐந்தை ஐந்து ஆயுதங்களாகவும், த்வக்கு மாம்ஸம் முதலிய ஏழு தாதுக்களை ஏழு மூடல்களாகவும், கர்மேந்திரியங்களை ஐந்து பராக்ரமங்களாகவும் சொன்னேன். ஜீவன் மனத்தை அடக்காமல் கானல் போல் (கடும் வெயிலில் தார் சாலையில் தொலைவிலிருந்து பார்த்தால் தண்ணீர் இருப்பது போல் தோன்றும்; உண்மையில் அங்கு தண்ணீர் இல்லை. இந்த மாயத்தோற்றத்திற்கு கானல் நீர் என்று பெயர்) புலப்படுகிற சப்தாதி விஷயங்களில் திரிகின்றான். ஜீவன் இந்தப் பதினொரு இந்தரியங்களை உதவியாகக்கொண்டு ஐந்துவகையான ஹிம்ஸைகளை நடத்துகிறான். அவ்விந்த்ரியங்களைப் பதினொரு சேனைகளாகவும், அந்த ஹிம்ஸையை வேட்டையாகவும் மொழிந்தேன். 

இங்கனம் ஜீவன் அவித்யையால் மறைக்கப்பட்டு தேஹ (சரீர, உடல்) ஸம்பந்தம்பெற்று ஆதிதெய்விகம் (மழை, காற்று போன்ற இயற்கை அழிவுகள்) ஆதிபௌதிகம் (மற்றவர்களால் ஏற்படும் துன்பங்கள்) ஆத்யாத்மிகம் (உடலில் உண்டாகும் நோய்) என்று மூன்று வகையான ஸம்ஸார தாபங்களாலும் அவற்றின் பிரிவினைகளான பலவகை துக்கங்களாலும் வருத்தமுற்றவனாகவே நூறு வர்ஷங்கள் வரையிலும் தேஹத்தில் இருக்கின்றான். ப்ராணன் இந்த்ரியம் மனம் இவற்றின் தர்மங்களான பசி தாஹம் பார்வை கேள்வி ஸுகம் துக்கம் முதலியவற்றை ஸத்வாதி குணங்களுக்கிடமல்லாத ஆத்மாவினிடத்தில் ஏறிட்டு அற்பமான காமஸுகங்களை நினைத்து அஹங்கார மமகாரங்களுடன் மீளவும் தேஹாந்தரங்களைப் பெறுதற்கிடமான கர்மங்களைச் செய்துகொண்டு சரீரத்தில் விழுந்து கிடக்கிறான். 

ஜீவன் ஜ்ஞான ஸ்வரூபனான தன்னையும், ப்ரக்ருதி புருஷர்களைக்காட்டிலும் விலக்ஷணனாய் ஹிதோபதேசம் செய்து அஜ்ஞானத்தைப் போக்கும் தன்மை அமைந்து ஷாட்குண்யபூர்ணணான பரமாத்மாவையும் உள்ளபடி அறியாமல், இயற்கையில் தன்னைத்தான் அனுபவிக்கையாகிற மஹாநந்தத்திற்கு (உயர்ந்த இன்பத்திற்கு) உரியவனாயினும் அதை இழந்து ப்ரக்ருதியின் குணங்களான சப்தாதி விஷயங்களில் மிக்க மனப்பற்று கொள்கிறானாகையால் அச்சப்தாதி விஷயங்களையே போக்யமாக அபிமானித்து மெய்மறந்து அவற்றைப் பெறுதற்காக ஸாத்விகம் தாமஸம் ராஜஸமென்ற மூன்று வகையான கர்மங்களைச் செய்து அவற்றிற்குரிய ஜன்மங்களைப் பெறுகின்றான். ஒருகால் ஸாத்விகமான கர்மத்தைச் செய்து ப்ரகாசம் அதிகமான தேஹத்தைப் பெறுகின்றான். ராஜஸ கர்மத்தினால் மேன்மேலும் துக்கத்திற்கிடமான தேஹங்களையும், தாமஸ கர்மத்தினால் அஜ்ஞான சோகங்களுக்கிடமான தேஹங்களையும் பெற்று ம்லேச்சாதி தேசங்களில் பிறப்பான். கர்மங்களால் மதி குலைந்த ஜீவன் அக்கர்மங்களுக்குத் தகுந்தபடி ஒருகால் புருஷனாகவும், ஒருகால் ஸ்த்ரீயாகவும், ஒருகால் நபும்ஸகனாகவும் (அலி), ஒருகால் தேவனாகவும், ஒருகால் மனுஷ்யனாகவும், ஒருகால் திர்யக்காகவும் (விலங்காகவும்) பிறப்பான். நாய் பசியினால் வருந்தி ஆஹாரத்திற்காக வீடுகள் தோறும் நுழைந்து தன் அத்ருஷ்டத்திற்குத் (தலை விதிக்குத்) தகுந்தபடி ஒருகால் அங்குள்ளவர்களால் காணப்பெற்று அடியுண்டு வருந்துவதும் உண்டு; ஒருகால் ஆஹாரத்தைப் பெற்றுப் புசித்து வருவதும் உண்டு; அங்கனமே ஜீவன் காமபோகங்களை விரும்பி அதற்காக நற்செயல்களையும் தீச்செயல்களையும் செய்து ஊர்த்வ (மேல்) லோகங்களிலும், அதோ (கீழ்) லோகங்களிலும், மத்யலோகங்களிலும் திரிந்து தெய்வாதீனமாய் ஏற்பட்ட நன்மை தீமைகளை அனுபவிக்கிறான். “ஒருக்கால் ஸுகத்தை அனுபவிக்கலாம் ஆகையாலும் துக்கத்திற்குப் பரிஹாரமாகச் சில கார்யங்களைச் செய்யலாமாகையாலும் ஸம்ஸாரத்தில் துக்கமேயென்று எப்படி சொல்லலாம்?” என்னில், சொல்லுகிறேன். 

ஆதிதெய்விகம் ஆதிபௌதிகம் ஆத்யாத்மிகமென்று மூன்று வகையான துக்கங்களில் ஏதேனுமொன்று நேரில், அதற்குப் பரிஹாரம் செய்யினும், மற்றொன்று சேரும். இரண்டுக்கும் ஒரே காலத்தில் பரிஹாரம் செய்யமுடியாது. ஆகையால் துக்கமில்லாமல் கேவலம் ஸுகத்தையே ஒருகாலும் அனுபவிக்க நேராது. தலையில் பாரத்தைச் சுமக்கும் புருஷன் தலைவலித்தால் அடிக்கடி அதைக் கழுத்தில் இறக்கிக்கொண்டு தலைவலி சிறிது நீங்கப்பெறினும் தோள் வலிக்கப் பெறுவான். ஆக வலி என்பது தீராததன்றோ! அதுபோலத்தான் இந்த பரிகாரங்களும். குற்றமற்றவனே! ஒரு கர்மா தனிப்பட்ட முறையில் (பரிகார கர்மா, துன்பப்படுத்தும் கர்மாவான) வேறொரு கர்மாவிற்கு முற்றிலுமான உறுதியான பரிகாரமாகாது. ஒருவன் ஒரு கனவு காண்கையில், அதனூடே வேறொரு கனவையும் காண்கிறான்.  இரண்டாவது கனவால் முதல் கனவின் நிலை நீங்கியதா? கர்மாவோ, அதற்கான பரிகாரமோ இரண்டும் அஜ்ஞானத்தின் விளைவுகளே!

கனவு காணும் நிலையில் மனோமயமான (ஆண், பெண் என்கிற) இந்த லிங்க சரீரத்துடன் உலாவரும் ஜீவனுக்கு, கனவில் காணும் பொய்யான பொருள்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன அல்லவா? அது போலவே, நனவிலும் (விழித்துக் கொண்டிருக்கும் போதும்) காணும் உலகியல் பொருள்கள் உண்மையாக இல்லாவிடினும், அதன் தோற்றம் மறைவதில்லை. உலகியலில் காணும் அனைத்தும் கண்ணுக்குத் தெரிவது போலிருந்தாலும், அவை மாயையின் விகாரங்களே தவிர, உண்மையாகாது. அறியாமையான தூக்கம் கலையும் வரையில், அவை இருந்துகொண்டே இருக்கும். அதனால், இந்த ஜீவனுக்கு பிறப்பு - இறப்பு என்கிற ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை கிடைக்காது. ஆகவே, இதற்கு முடிவான ஓர் உபாயம் ஆத்மஞானம் பெறுவதொன்றே! 

அரசே! ஆத்மா என்பவன் பரமார்த்த ஸ்வரூபன்; இன்ப வடிவானவன். அவித்யையினால் அவனுக்குப் பிறப்பிறப்பு என்கிற துன்பமளிக்கும் ஸம்ஸாரம் ஏற்படுகிறது. சாட்சாத் குரு ஸ்வரூபரான பகவானிடம் திடமான பக்தி ஏற்பட்டாலொழிய, அந்தத் துன்பங்கள் நீங்க வழியில்லை. பகவான் வாசுதேவனிடம் ஆழ்ந்த சிந்தனையோடு முறைப்படி நன்கு செய்யப்பட்ட பக்தி ஒன்றே, உண்மையான வைராக்யத்தையும் ஜ்ஞானத்தையும் விளைக்கும். 

நாம் பகவானுக்கு என்றும் அடிமைப்பட்டவரென்னும் புத்தியுடன் அவனுடைய கதைகளைக் கேட்டு அவற்றை ச்ரத்தையுடன் தினந்தோறும் பாராயணம் செய்து வருவோமாயின், விரைவிலேயே அந்தப் பக்தியோகம் உண்டாகும். பகவானுடைய கதைகளைச் சொல்லுவதிலும் கேட்பதிலும் விரைகின்ற தூயமனமுடைய ஸாதுக்களான பாகவதர்கள் வஸிக்குமிடத்தில் ஸத்புருஷர்களால் பாடப்படுகிற பகவானுடைய சரித்ரமாகிற அம்ருதம் நிறைந்த சிறப்புடைய நதிகள் நாற்புறத்திலும் பெருகிக் கொண்டிருக்கும். அங்கனம் நதீப்ரவாஹம் போன்ற பகவானுடைய கதைகளை ஊக்கமுடைய காதுகளால் சிறிதும் த்ருப்தியில்லாமல் பானம் செய்பவர் (பருகுபவர்) பசி தாஹம் பயம் சோகம் மோஹம் இவைகளால் தீண்டப்படமாட்டார்கள். உலகத்திலுள்ளவர் அனைவரும் தேஹஸ்வபாவத்தினால் (சரீரத்தின் இயற்கையான தன்மையால்) விளைபவைகளான இந்த பசி தாஹம் முதலியவைகளால் வருந்துவது பற்றியே பகவானுடைய கதையாகிற அம்ருதஸாகரத்தில் ப்ரீதி உண்டாகப் பெறாதிருக்கின்றார்கள். இதுவே உண்மை, ஆகையால் பாகவதர்களோடு ஸஹவாஸம் செய்து (சேர்ந்து இருந்து) பகவானுடைய கதைகளைக் கேட்டு அந்த ஆநந்தத்தினால் இந்தப் பசி முதலியவற்றை வெல்லவேண்டும். பகவானிடத்தில் பக்தி உண்டாக வேண்டுமென்றால் அவனுடைய அனுக்ரஹத்தினால் தான் உண்டாகவேண்டும். அதில்லாமல் பாகவத ஸஹவாஸம் (பாகவதர்களோடு சேர்ந்து இருத்தல்) முதலியன எவையும் கிடைக்க மாட்டாது. கிடைத்தாலும் பயன்பட மாட்டாது. ஒன்று சொல்லுகிறேன் கேள். 

ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்து ப்ரஜாபதிகளுக்கும் ப்ரபுவான ஸாக்ஷாத் ப்ரஹ்மதேவனும் மஹானுபாவனான ருத்ரனும் ஸ்வாயம்புவமனுவும் தக்ஷர் முதலிய ப்ரஜாபதிகளும் நைஷ்டிகரான ஸனகாதிகளும், மரீசி, அத்ரி, அங்கிரஸ்ஸு, புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்டர் முதலாக என் வரையிலுள்ள ப்ரஹ்மவாதிகளான மஹர்ஷிகளும் ப்ருஹஸ்பதி வ்யாஸர் முதலியவர்களும் தவம் வித்யை ஸமாதி இவைகளால் பரமபுருஷனை உபாஸித்துக் கொண்டிருப்பினும், இவனை இத்தகைய ஸ்வரூப ஸ்வபாவங்களுடையவனென்று அளவிட்டு அறிந்தவரல்லர். சாக உபசாகமாய்ப் (கிளை, உட்கிளை என்று) பிரிந்து அறிதற்கரிய கருத்துடையதான வேதத்தில் மேலெழச்சொன்ன பசு புத்ராதி ஐஹிக (இந்த உலகில் அனுபவிக்கும்) பலன்களையும் ஸ்வர்க்காதி ஆமுஷ்மிக (வேறு உலகில் அனுபவிக்கும்) பலன்களையும் விரும்பி இந்த்ரன் முதலிய தெய்வக் குழாங்களைப் பணிகிற உன்னைப்போன்ற கர்ம ஜடர்கள் அந்த பரமபுருஷனை அறியமாட்டார்கள். அவனை அளவுடையவனாக அறிவது எவர்க்குமே முடியாது. அளவிட முடியாதவன் என்றறிவதற்கும் அவனையே உபாஸிக்க வேண்டுமன்றி இந்தக் கேவல கர்மம் உபயோகப்படாது. பகவான் எப்பொழுது ஆனுஷங்கிகம் (ஒரு முக்யமான பலனுக்காக செய்யும் செயலினால் கிடைக்கும் மற்ற பலன்), ப்ராஸங்கிகம் (ஒரு செயலின் தொடர்ச்சியாக செய்யப்படுவது), யாத்ருச்சிகம் (எதிர்பாராமல் நிகழ்வது) முதலிய அஜ்ஞாத ஸுக்ருதங்களில் (தனக்கே தெரியாமல் செய்யும் நற்கர்மங்கள்) ஏதேனுமொன்றை ஏறிட்டு அதனால் ஸந்தோஷம் அடைந்து எவனை அனுக்ரஹிக்கிறானோ அவன் அப்பொழுதே லோக வ்யாபாரத்திலும் வைதிகமான யஜ்ஞாதி கர்மங்களிலும் நெடுநாளாய் வேரூன்றின புத்தியைத் துறப்பான். 

ப்ராசீனபர்ஹீ! இங்ஙனம் பகவானுடைய அனுக்ரஹமே நன்மைக்குக் காரணமாகையால், அந்தப் பகவானுடைய அனுக்ரஹத்தினால் ஸத்புருஷ ஸஹவாஸம் நேரப்பெற்ற நீ, ஸ்வர்க்காதி பலன்களால் விளக்கமுற்றுச் கேட்பதற்கு மட்டும் மிக்க இனியவை போல் தோற்றிப் பரவஸ்துவான பரமபுருஷனைத் தீண்டமாட்டாத கேவல கர்மங்களில் (பகவானிடத்தில் ப்ரீதி இல்லாமல் செய்யும் கர்மங்களில்) அஜ்ஞானத்தினால் (அறிவின்மையால்) புருஷார்த்த ஸாதனமென்னும் புத்தியைக் கொள்ளவேண்டாம். ரஜஸ் தமஸ்ஸுக்களால் மதிமயங்கி, பூர்வபாகத்தில் (கர்ம காண்டத்தில்) யஜ்ஞாதி கர்மங்களால் ஆராத்யனென்றும் உத்தர பாகத்தில் (ஜ்ஞான காண்டத்தில்) ஜ்ஞானத்தினால் உபாஸ்யனென்றும் பகவானையே எடுத்துரைக்கிற வேதத்திற்குக் கேவல கர்மங்களில் தான் தாத்பர்யமென்று (பொருள் என்று) சொல்லுகிறவர்கள் அவ்வேதத்தின் உட்கருத்தான பரப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை அறியாதவர்களே. அவர்கள் ஆத்மஸ்வரூபத்தையும் அறிந்தவரல்லர். தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்த மூடர்கள். நீயும் கேவல கர்மஜடனாகிக் (யாகம் போன்ற கர்மங்களையே செய்பவனாய்) கிழக்கு நுனியாகப் பரப்பின தர்ப்பங்களால் பூமண்டலத்தையெல்லாம் மறைத்துப் பலயாகங்களைச் செய்து, பல ஜந்துக்களை ஹிம்ஸித்தோமேயென்று (துன்புறுத்தினோமே என்று) வருந்த வேண்டியிருக்க, அஃதின்றி தாம் பெரியபெரிய யாகங்கள் செய்தோமென்று துரபிமானம் (செருக்கு) கொண்டு கர்வம் கொண்டு வேதத்தில் பகவானுடைய ஆராதனமாக விதித்த கர்மங்களின் ஸ்வரூபத்தை அறியாதிருக்கின்றாய். பகவானுக்கு ஸந்தோஷத்தை விளைக்கும் கர்மமே கர்மமாம். ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாய் ஜகத்காரணனுமான பகவானை உள்ளபடி அறிவிக்கும் வித்யையே வித்யையாம். அந்த ஸர்வேச்வரனுடைய பாதமூலமே ரக்ஷகம் (நம்மைக் காக்கக்கூடியது). ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அதினின்றே க்ஷேமம் உண்டாகுமன்றி மற்ற எதனாலும் உண்டாகாது. பரமாத்மாவான அந்த ஸர்வேச்வரன் தன்னைப் பற்றினவர்களுக்கு மிகவும் அன்பனாயிருப்பான். அவர்களுக்கு எவ்வித பயமும் உண்டாகாது. இங்கனம் ஸர்வேச்வரனே பரதத்வமென்றும் அவனே ஹிதனென்றும் (அவனே அவனை அடைய உபாயம் என்றும்) அவனே சிறந்த புருஷார்த்தமென்றும் எவன் அறிகிறானோ, அவனே அறிஞனென்று கூறப்படுவான். அவனே பிறருடைய அஜ்ஞானத்தைப் போக்கும் ஆசார்யன். அவனே ஸர்வேச்வரன். 

நாரதர் சொல்லுகிறார்:- புருஷர்களில் சிறந்த ப்ராசீனபர்ஹீ! நீ ஜ்ஞானத்தைப் பற்றி வினவினையல்லவா? அதற்கு மறுமொழி கூறினேன். உன்னுடைய ஸந்தேஹம் தீர்ந்ததல்லவா? மன்னவனே! பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒரு ரஹஸ்யம் சொல்லுகிறேன், கேள், புஷ்பங்களுக்கிடமான ஆச்ரமத்தில் ஒரு மிருகம் தன் பேடையுடன் (பெண் மிருகத்துடன்) கூடி அதினிடத்தில் மிகுந்த அனுராகங்கொண்டு வண்டினங்கள் பாடும்பாட்டில் ப்ரீதியுடன் காது கொடுத்து எதிரேயிருக்கிற கொடிய செந்நாய்களை எண்ணாமல் போகின்றது. அதைப் பின்பற்றி வேடன் பாணத்தினால் அடிக்கின்றான். அந்த மிருகத்தின் ஸ்வரூபத்தை ஆலோசிப்பாயாக. 

(இதன் பொருள்:- ஜீவன், புஷ்பம் போன்ற பெண்டிர்களோடு இணங்கி வாழ்கைக்கிடமான க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்து, ஜிஹ்வேந்த்ரியம் உபஸ்தேந்த்ரியம் முதலிய இந்த்ரியங்களால் (புலன்களால்) அனுபவிக்கக்கூடிய காமபோகங்களை விரும்புகிறான். அவை புஷ்பத்திலுள்ள தேன் திவலைபோல் அற்பமென்றும் ஜன்மாந்தரத்தில் பலன்களை விரும்பிச் செய்த கர்மங்களுக்குப் பலனாக ஏற்பட்டவையென்றும் நினைக்காமல் இவை மேலான புருஷார்த்தமென்றும் அவற்றையெல்லாம் தானே வருந்தித் தேடவேண்டுமென்றும் அபிமானித்து அதற்காகப் பல யத்னங்களைச் செய்கின்றான். பெண்டிர்களை மணம்புரிந்து அவரிடத்தில் மிகுந்த அனுராகத்தை ஏற்றுக்கொள்கின்றான். வண்டுகளின் ஜங்காரம்போல் மிகவும் மனத்தை இழுப்பதான பெண்டிர்களின் பேச்சுக்களை ப்ரீதியுடன் செவி கொடுத்துக் கேட்கிறான். இரவும் பகலுமான காலம் செந்நாய்போல் தனது வாழ்நாளைப் பறிப்பதை அறியாமல் காமஸுகங்களை அனுபவிக்கிறான். வேடன் பின்னால் நின்று பாணத்தினால் மிருகத்தை அடிப்பதுபோல், அவனை யமன் தூரத்தினின்றே மரணமாகிற பாணத்தினால் அடிக்கிறான்.) 

இங்கனம் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாவை ஆலோசிப்பாயாக. அப்படிப்பட்ட நீ மிருகத்தின் வ்ருத்தாந்தத்தை ஆலோசித்து உன் ஹ்ருதய குஹையில் மனத்தை அடக்குவாயாக, செவிகளில் பட்டு, கேவல கர்மங்களில் ப்ரீதியை விளைக்கின்ற வேதத்தில் நீ கொண்டிருக்கும் கருத்தைத் துறப்பாயாக. பரமபுருஷனை ஆராதிக்க வேண்டுமென்பதே அவ்வேதத்தினுடைய உட்கருத்தென்பதை உணர்வாயாக. காமக் கலவியில் கால்தாழ்ந்து ஆத்மஸ்வரூபத்தை அழிக்கும் தன்மையுள்ள அஸத்துக்களின் பேச்சுக்களையே அடிக்கடி கேட்க இடங்கொடுப்பதும் பெண்டிர்களின் ஸஹவாஸத்திற்கிடமுமான க்ருஹஸ்தாஸ்ரமத்தைத் துறப்பாயாக. பற்றற்றவர்களுக்கு இஷ்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் உபாயமான பரமபுருஷனைச் சரணம் அடைவாயாக. இங்கனம் மெல்ல மெல்ல ஸம்ஸார மார்க்கத்தினின்று மீண்டுவருவாயாக” என்றார். 

மன்னர் ப்ராசீனபர்ஹி கேட்கிறான்:- நாரதமுனிவர் மொழிந்ததைக் கேட்டு ப்ராசீனபர்ஹியென்னும் மன்னவன் “அந்தணர் தலைவரே! ஆத்மஸ்வரூபத்தைப் பற்றி நீர் மொழிந்ததையெல்லாம் கேட்டேன். இவ்விஷயங்களை எங்கள் உபாத்யாயர்கள் (வேள்விகளைச் செய்வித்த புரோகிதர்கள்) அறிந்திலர் போலும். தெரியுமாயின், எனக்கு ஏன் சொல்லாதிருப்பார்கள்? “நமது உபாத்யாயர் சொல்லாத விஷயத்தை இவர் சொல்லுகிறாரே. இது உண்மையோ அல்லவோ” என்று எனக்குப் பெரிய ஸந்தேஹம் உண்டாயிருந்தது. இப்போது அதுவும் தீர்ந்தது. இவ்விஷயம் மிக்க ரஹஸ்யமாகையால் அவர்கள் இதை அறிந்திலர். ஆனால் இவ்விஷயத்தில் எனக்கு ஒரு ஸம்சயம் (ஸந்தேஹம்) உண்டாயிருக்கின்றது. இவ்விஷயம் இந்திரியங்களால் அறியக்கூடியதன்று. ஆகையால் இதில் ரிஷிகளும் மதிமயங்குகிறார்கள். மூடனாகிய எனக்கு ஸம்சயம் உண்டாவது யுக்தமே (சரியே). அந்த ஸம்சயத்தைச் சொல்லுகிறேன். 

ஜீவன் இவ்வுலகத்தில் எந்த தேஹத்தினால் புண்யபாப ரூபமான கர்மங்களைச் செய்கின்றானோ, அத்தேஹத்தை இவ்விடத்திலேயே துறந்து பரலோகம் சென்று தன்னுடைய கர்மத்திற்குரியபடி நேர்ந்த வேறு தேஹத்துடன் ஸுகதுக்கங்களை அடிக்கடி அனுபவிக்கிறான். இங்கனம் வேதங்களை உணர்ந்த உம்மைப் போன்ற பெரியோர்கள் ஆங்காங்குச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஸுகதுக்கங்களுக்குக் காரணமென்று பெரியோர்கள் சொல்லுகிற புண்யபாப கர்மங்களை ஜனங்கள் செய்கின்றார்கள். அவை அடுத்த க்ஷணத்திலேயே கண்ணுக்குத் தெரியாமல் மறைகின்றன. ஆகையால் அவை எப்படி ஸுகதுக்கங்களுக்குக் காரணமாகக்கூடும். இதுவே எனக்குள்ள ஸம்சயம் (ஸந்தேஹம்). இதைப் போக்கவேண்டும், என்றான். 

நாரதர் சொல்லுகிறார்:- ஜீவன் பூர்வ ஜன்மத்தில் எந்த தேஹத்தினால் புண்யபாபங்களைச் செய்கின்றானோ, அந்த தேஹத்தைத் துறந்தே பரலோகம் போகின்றானாகையால் புண்யபாபங்களுக்கு இடமான தேஹம் போனபின்பு அதைப் பற்றின ஸுகதுக்கங்கள் ஜீவனுக்கு எங்கனம் உண்டாகக்கூடும் என்றும், செய்த கர்மம் உடனே நசித்துப் போகிறதாகையால் அது ஸுகதுக்கங்களுக்கு எங்கனம் காரணமாகுமென்றும் ஸந்தேஹிக்கின்றாய். இதற்கு ஸமாதானம் சொல்லுகிறேன் கேள். ஜீவன் புண்யபாப கர்மங்களைச் செய்வதற்குக் காரணம் மனம். அவன் அம்மனத்தோடு கூடவே பரலோகம் சென்று தான் செய்த கர்மங்களுக்குத் தகுந்தபடி ஸுகதுக்கங்களை அனுபவிக்கிறான். ஜீவன் ஸ்வப்னத்தில் படுந்திருக்கின்ற தேஹம் ப்ராணனோடிருக்கும்பொழுதே அதைத் துறந்து மனத்தில் வாஸனாரூபமாய்ப் படிந்திருக்கின்ற கர்மத்தின் பலனான ஸுகதுக்கங்களைத் தன்னுடைய தேஹத்தோடொத்த மனுஷ்ய தேஹத்தினாலாவது வேறு தேஹத்தினாலாவது அனுபவிக்கின்றான். அங்கனமே லோகாந்தரத்திலும் ஜீவன் கர்மபலன்களை அனுபவிக்கத் தடையில்லை. ஒரு க்ஷணத்தில் செய்த கர்மம் மற்றொரு க்ஷணத்தில் புலப்படுகிறதில்லை என்பது வாஸ்தவமே (உண்மையே). ஆயினும் அக்கர்மம் மனத்தில் வாஸனாரூபமாய் இருக்கின்றது. ஜீவன் அம்மனத்தோடு கூடவே போகிறானாகையால் கர்மமும் மனத்திலுள்ள வாஸனாரூபமாய் அவனைப் பின்தொடர்கின்றது. மற்றும், ஸர்வஜ்ஞனான ஈச்வரன் ஜீவனுடைய புண்யபாப கர்மங்களைக் கணக்கிட்டு இன்னின்னவற்றிற்கு இன்னின்ன பலனென்று ஸங்கல்பித்து இருக்கிறானாகையால் அவனுடைய ஸங்கல்பத்திற்கு விஷயமான ஜீவன் பரலோகத்தில் புண்ய பாபங்களின் பலன்களை அனுபவிப்பதில் விரோதமில்லை. மற்றும், ஜீவன் தேஹாத்மாபிமானத்தினால் “நான் ப்ராஹ்மணன்” என்றும் “நான் க்ஷத்ரியன்” என்றும் பலவாறு சொல்லிக்கொண்டு என்னுடையதென்று மனத்தினால் அபிமானித்துச் செய்யுங் கர்மம் அவ்வப்பொழுதே நசித்துப்போயினும், பரமபுருஷனுடைய நிக்ரஹானுக்ரஹ ரூபமான அதன் சக்தி என்றும் மாறாதிருக்கின்றதாகையால் அவ்வழியால் அக்கர்மமும் இருக்கிறதென்று கொள்ள வேண்டும். அக்கர்மத்தின் பலனாக ஈச்வரனுடைய ஸங்கல்பத்தின்படி ஜீவனுக்கு மீளவும் ஜன்மம் உண்டாகின்றது. ஜ்ஞானேந்திரியங்களும் கர்மேந்த்ரியங்களும் தத்தம் செயல்களில் ஒருகால் முயற்சி கொள்வதும் ஒருகால் முயற்சி கொள்ளாதிருப்பதும் நமக்குத் தெரிகின்றதல்லவா? அது மனத்தின் கார்யம். ஜீவனுடைய ஜ்ஞானம் எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும் திறமையுடையது. அதை மனமே தடுக்கின்றது. ஜ்ஞானம் வெளியாகும் த்வாரமே மனமென்று கூறப்படுகின்றது. அம்மனம் எந்த இந்திரியத்துடன் சேருகின்றதோ, அவ்விந்தரியமே தன் கார்யத்தில் முயற்சி கொள்ளும். மனம் இல்லாத பக்ஷத்தில் எல்லா காலங்களிலும் எல்லா இந்திரியங்களும் தத்தம் செயல்களில் முயற்சிகொள்ள வேண்டிவரும். அம்மனம் பல செயல்களிலும் ஸஹஜமாய் முயற்சி கொள்கிறதாகையால், ஜீவன் முன் ஜன்மத்தில் பல செயல்களைச் செய்திருக்க வேண்டுமென்று ஊஹிக்கலாம். ஜீவன் எந்த வஸ்துவை இந்தத் தேஹத்துடன் ஒருகாலும் கண்ணால் கண்டதில்லையோ, காதாலும் கேட்டதில்லையோ, அப்படிப்பட்ட வஸ்துவை அவன் ஸ்வப்னத்திலும் (கனவிலும்) காண்பதரிது. ஆனபின்பு அதை அவன் ஆசைப்படுவதற்கு ப்ரஸக்தியே (வழியே) இல்லை. ஆயினும் அவ்வஸ்துவும் ஜீவனுக்கு ஒருகால் மனத்தில் தோற்றுகிறது. ஆகையால் ஜீவன் முன் தேஹத்தில் பல வஸ்துக்களை அனுபவித்த மனத்தோடு கூடவே தேஹாந்தரத்தைப் பெறுகிறானென்பதை நம்புவாயாக. அனுபவிக்காத வஸ்து ஒருகாலும் மனத்தில் தோன்றாது. மனத்தினுடைய வாஸனையைக் கொண்டே ஜீவனுடைய ஜன்மாந்தர உருவங்களின் ஸ்வரூபத்தையும், மேல்வரக்கூடிய உருவங்களையும் அப்பொழுதுள்ள உருவங்களின் ஸ்வரூபத்தையும் தெளிவாக அறியலாம். மன்னவனே! உனக்கு க்ஷேமம் உண்டாகுக. இதையெல்லாம் நன்குணர்வாயாக. 

ஜீவனுக்கு இந்த ஜன்மத்தில் கண் காதுகளால் அனுபவிக்கப்படாத வஸ்துவும் ஒருகால் மனத்தில் தோற்றுகிறதாகையாலும், “நான் இன்னதேசத்தில் வஸிக்கவேண்டும்” என்றும், “என்னுடைய காலம் இங்கனம் நடக்கவேண்டும்” என்றும், “நான் இன்னின்ன செயல்களைச் செய்ய வேண்டும்” என்றும், தேசகால கர்மங்களை மனத்தில் நினைக்கிறானாகையாலும் அவன் பூர்வஜன்மத்தில் அவ்வப்படி இருந்தானென்று ஊஹிக்கலாம். முன் ஜன்மத்தில் இந்திரியங்களுக்கு விஷயமான வஸ்துக்களெல்லாம் க்ரமமாக மனத்தில் வாஸனாரூபமாய்ப் படித்திருக்கின்றன. அவற்றையே இந்த ஜன்மத்தில் ஜீவன் ஆசைப்படுகின்றான். அவ்வாஸனை மாறுகையில் அவ்வஸ்துக்களின் தோற்றமும் மறைகின்றது ஆகையால் ப்ராணிகள் அனைவரும் மனமுடையவர்கள். மனம் ஸத்வகுணம் தலையெடுத்துப் பகவானைப் பணிவதில் முயற்சிகொள்ளுமாயின், சந்த்ரன் உதிக்கும்பொழுது அவனுடைய கிரணங்களோடு இருளும் கலந்திருப்பதுபோல், முதலில் அஞ்ஜானமும் ஜ்ஞானத்தோடு கலந்து தோற்றும். ஜீவன், புத்தி மனம் இந்திரியம் சப்தாதி விஷயம் ஸத்வாதிகுணம் இவைகளால் மூடப் பெற்றிருக்கும் வரையில் அவனுக்கு அஹங்கார (நான்) மமகாரங்களாகிற (எனது என்கிற) அஜ்ஞானம் (அறிவின்மை) நீங்காது. அது அவனுடைய ஸ்வரூபத்தை அதுவரையில் மறைத்துக்கொண்டேயிருக்கும். ஜீவன் அஜ்ஞானத்தினால் நானென்று நினைக்கும் தேஹம், உறக்கம், மூர்ச்சை, துக்கம், மரணம், ஜ்வரம் முதலிய அவஸ்தைகளில் ஜ்ஞான ஸங்கோசத்தினால் (அறிவு குறைவினால்) அவனுக்குத் தோற்றுகிறதில்லை. அங்கனமே உண்மையான ஆத்மாவும் அஹங்கார மமகாரங்களால் ஜ்ஞான ஸங்கோசத்தை அடைந்த அவனுக்குத் தோற்றுகிறதில்லை. உறக்கம் முதலிய அவஸ்தைகளிலும் இந்த்ரியங்களும் மனமும் இருக்கின்றனவாகையால் தேஹத்தில் நானென்னும் புத்தி ஏன் உண்டாகிறதில்லையென்னில், யௌவனப் (இளமை) பருவமுடையவனுக்கு இந்திரியங்களும் மனமும் வ்யக்தமாயிருப்பதுபோல் (வெளிப்படையாகத் தெரிவதுபோல்), கர்ப்பம், பால்யம், உறக்கம் முதலிய தசைகளில் அவ்விந்த்ரியங்களும் மனமும் வ்யக்தமாயிருக்கிறதில்லை (வெளிப்படையாக இருப்பதில்லை). அமாவாஸ்யையினின்று சந்த்ரகலை புலப்படாதிருப்பதுபோல் அத்தசைகளில் அவை இருந்தும் இல்லாதவைகள்தான். அத்தசைகளில் இந்திரியங்களும் மனமும் நிறைவற்றிருக்கையால் சப்தாதி விஷயங்களின் அனுபவம் இல்லையாயினும், அதுவரையில் அவற்றை அனுபவித்துக் கொண்டிருந்தானாகையால் ஜீவனுக்கு அவற்றின் வாஸனை மாறுகிறதில்லை. அதனால் ஸம்ஸாரம் நீங்குகிறதில்லை. ஸ்வப்னத்தில் கண்ட வஸ்துக்கள் விழித்துக் கொண்டபின்பு புலப்படாமற்போயினும், அவை மங்கலமாயிருப்பின் ஸுகத்தையும், அமங்கலமாயிருப்பின் துக்கத்தையும் விளைப்பதுபோல், முன்பு அனுபவித்த சப்தாதி விஷயங்கள் வாஸனையின் மூலமாய் கர்ப்பம் பால்யம் முதலிய தசைகளிலும் ஸுகதுக்கங்களுக்கிடமான ஸம்ஸாரத்தையே தொடரச் செய்கின்றன. இங்கனம் பஞ்சபூதங்களின் பரிணாமமாய்ப் பதினொரு இந்திரியங்களும் ஐந்து ப்ராணன்களுமாகிய பதினாறு விரிவுகள் அமைந்து ஸத்வ ரஜஸ் தமோகுணங்கள் அடங்கினதுமாகிய இவ்வுருவமே சரீரமென்றும், நானென்கிற அறிவுடன் தோற்றுகிற இப்பொருளே ஜீவனென்றும் கூறப்படும். இந்த தேஹத்தோடு கூடின இந்த ஜீவனே பலதேஹங்களைப் பெறுகின்றான். ஆயுள் முடிவில் அவ்வவற்றைத் துறக்கின்றான். தான் பெற்ற தேஹம் இனிதாயிருக்குமாயின், நம்முடைய தேஹம் அழகாயிருக்கிறதென்கிற ஸந்தோஷத்தையும், அத்தேஹத்தினால் நாம் ஸுகத்தை அனுபவிக்கலாமென்கிற ஸந்தோஷத்தையும், அத்தேஹம் அனிஷ்டமாயிருக்குமாயின் (விருப்பம் இல்லாததாய் இருக்குமாயின்) நம்முடைய தேஹம் நன்றாயில்லையே என்கிற சோகத்தையும், அத்தேஹத்தைத் துறக்கும்பொழுது பயத்தையும் துக்கத்தையும், அடைகிறான். நீர்ப்புழு ஒரு புல்லில் ஒட்டிக்கொண்டு அதைவிட்டுப் போகவிரும்பாமல் அதையே உறுதியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல், ஜீவன் மரணம் அடையும்பொழுதும் அச்சரீரத்தில் அபிமானத்தை விடமாட்டான். மரணம் அடைந்த பின்பும் மற்றொரு சரீர ஸம்பந்தம் சேரும் வரையிலும் முன்சரீரத்திலுண்டான அபிமானம் அவனுக்கு நீங்காது. வேறு சரீரம் பெற்றபின்பு முன் சரீரத்தைப் பற்றின நினைவு கர்மத்தினால் மறைக்கப்படுகின்றது. ஆத்ம ஸ்வரூபத்தை அறியும் வரையில் ஜீவனுக்குச் சரீராபிமானம் மாறாது. அதை அறிவானாயின் அவ்வபிமானம் தானே மாறிப்போம். 

மன்னவனே! ப்ராணிகள் முன்ஜன்மத்தில் இந்திரியங்களால் அனுபவித்த சப்தாதி விஷயங்களை மனத்தினால் சிந்தித்துக்கொண்டு அவற்றைப் பெறுதற்காக அடிக்கடி பற்பல கர்மங்களைச் செய்கின்றார்கள். ஆகையால் மனமே அவர்கள் ஜன்மங்களைப் பெறுதற்குக் காரணமாயிருக்கின்றது. கர்மத்தினால் தேஹத்தையும், தேஹஸம்பந்தத்தினால் அஹங்கார மமகாரங்களையும் மாறாமல் பெறுகின்றார்களாகையால் ஜீவாத்மாக்களுக்குக் கர்மத்தைப் பற்றின ஸம்ஸார பாதம் (பாதிப்பு)  தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்தால்தான் அது நீங்கும். ஆகையால் அவ்வாத்ம ஸ்வரூபத்தை அறியும் பொருட்டு ஜகத்தெல்லாம் பரமபுருஷனேயென்னும் நினைவுடன் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்தும் காரணபுருஷனாகிய ஸர்வேச்வரனையே எல்லா விதத்திலும் சரணம் அடைவாயாக.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- பகவானுடைய பக்தர்களில் சிறந்த நாரதமுனிவர் ப்ராசீனபர்ஹிக்கு ஜீவாத்ம பரமாத்மாக்களின் ஸ்வரூபத்தை அறிவித்து அவனிடம் விடைபெற்றுக் கொண்டு ப்ரஹ்மலோகம் சென்றார். அப்பால் ராஜரிஷியாகிய ப்ராசீனபர்ஹியும் பிள்ளைகளை ப்ரஜைகளைப் படைக்கவும் காக்கவும் ஆஜ்ஞாபித்துத் தவம் செய்யும் பொருட்டுக் கபிலரின் ஆச்ரமத்திற்குப் போனான். அவ்விடத்தில் அம்மன்னவன் இந்திரியங்களை வென்று மன ஆக்கத்துடன் பகவானுடைய பாதாரவிந்தங்களை த்யானித்துக் கொண்டிருந்து பக்தியோகம் கைகூடப்பெற்று அவனோடு ஸாரூப்யத்தை அடைந்தான். தேவரிஷி உபதேசித்த இந்த ஜ்ஞானோபதேசத்தைச் சொல்லுகிறவனும் கேட்கிறவனும் ஸம்ஸாரத்தினின்று விடுபடுவார்கள். இது பகவானுடைய புகழை உட்கொண்டதாகையால் உலகத்தையெல்லாம் புனிதம் செய்யும். இது தேவரிஷியான நாரதருடைய முகத்தினின்று வெளியானது; மன மலங்களையெல்லாம் போக்கி அதைப் பரிசுத்தமாக்கும்; எல்லாவற்றிலும் சிறந்த பலனைக் கொடுக்கும். இதைக் கேட்டவன் அனைத்து பந்தங்களினின்றும் விடுபடுகிறான். திரும்பவும் இந்த உலகியல் சுழற்சியில் சிக்கமாட்டான். ஆத்மஸ்வரூபத்தை மறைத்துச் சொல்லுகிற இந்த உபாக்யானம் (கதை) அற்புதமாயிருக்கும். இதில் ஜீவனுக்கு க்ருஹஸ்தாச்ரம ரூபமான ஸம்ஸாரத்தினால் விளையும் அனர்த்தங்களெல்லாம் (கெடுதிகளெல்லாம்) தெளிவாய் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. மற்றும், ஜீவன் பரலோகத்திற்குச் சென்று கர்மபலன்களை அனுபவிக்கும் விஷயத்தில் வரும் ஸந்தேஹங்களெல்லாம் தீர்க்கப்பட்டன. இத்தகைய உபாக்யானத்தை உனக்கு மொழிந்தேன். 

இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை