இறைவனின் சொரூபம்! - பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா


"விஸ்வத்துக்கு மூலமாக, சாட்சியாக, சக்தியாக இருந்து நடத்துவிக்கும் இறைவனின் சைதன்யத்தைப் பலவிதமாக தரிசித்து, கண்டடைந்த அற்புதங்களைத் தியான சுலோகங்களாகவும் ஸ்தோத்திரங்களாகவும் மகரிஷிகள் நமக்களித்துள்ளனர். அதிலிருந்து ஒரு தியான சுலோகத்தை ஆராய்ந்து பார்த்து, அதில் உள்ள தெய்வீக விஞ்ஞானத்தை அறிந்துகொள்வோம்'' என்றார் தம் சொற்பொழிவில், பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.

இது, விஷ்ணு சஹஸ்ரநாமத்திலுள்ள தியான சுலோகம்:

'சாந்தாகாரம் புஜக சயனம், பத்மநாபம், சுரேசம். 
விஸ்வாதாரம், ககன சத்ருசம், மேக வர்ணம், சுபாங்கம் 
லக்ஷ்மீ காந்தம், கமல நயனம், யோகி ஹ்ருத்யான கம்யம், 
வந்தே விஷ்ணும், பவ பய ஹரம், சர்வ லோகைக நாதம்' 

சிருஷ்டியின் முறையையும் அதனை இயக்கும் இறைவனின் சொரூபத்தையும் ஒரு அழகிய கிரம வரிசைப்படி இந்த சுலோகத்தில் பொதித்துள்ளார் மகரிஷி.
சாந்தாகாரம்: படைப்புக்கு முன்பு ஜகமனைத்தும் சாந்த நிலையில் இருந்தது. சாந்தம், அசைவற்ற அமைதி. அதாவது, அனைத்தும் லயத்தில் இருக்கும் நிலை. பலவாக இருக்கும் விருட்சம் விதையில் லீனமாக இருப்பது போல் சர்வ ஜகத்தும் பரமாத்மாவிடம் லீனமாக உள்ள ஸ்திதி. இதுவே சாந்தம். எந்த மாற்றமும் அற்ற பரிபூரணத்தையும் கூட இந்தச் சொல் தெரிவிக்கிறது.

புஜக சயனம்: சாந்தமும், அமைதியுமே தன் சொரூபமாகக் கொண்ட பரமாத்மா 'புஜக சயனன்.' அனந்தமான கால தத்துவமே அனந்தன். அவனே, ஆதிசேஷன், புஜங்கன். காலத்துக்கு அப்பால், காலத்தின் மேல் அமர்ந்திருக்கும் பரமாத்மாவே புஜக சயனன். காலத்துக்கு அடங்கியிருப்பவை உலகங்கள். காலத்துக்கு அதீதமானவன், காலத்தின் வழியே ஜகத்தினை அடக்கி ஆளுபவன் 'கால புஜக சயனன்.'

பத்மநாபம்: சிருஷ்டி காரியத்துக்குத் தகுந்த காலத்தை நிர்ணயித்த நாராயணனின் சங்கல்பத்தின்படி சிருஷ்டி பீஜங்களின் கூட்டு உருவமான பத்மம், அவருடைய நாபிக்கமலத்திலிருந்து தோன்றியது. சிருஷ்டியாக மலர்ந்த பீஜ சொரூபமே பத்மம். அதற்கான நாபி கேந்திரம் விஷ்ணுவே. அதனால்தான் அவர் 'பத்மநாபம்.'

சுரேசம்: அவ்விதம் உருவான பத்மத்தில் விஷ்ணுவின் சக்தியே படைப்புக் கடவுளான பிரம்மாவாக வெளிப்பட்டது. நான்கு புறமும் பார்வையைச் செலுத்தி ஜகத்தினை இயக்கும் சக்திகளான பலவித தேவதைகளை தன்னிடமிருந்து வெளிப்படச் செய்தார் பிரம்மா. ஜகத்துக்கு மேன்மை செய்பவர்களே 'சுரர்கள்.' சு - என்றால் மேன்மை. ராதி - என்றால் செய்பவர். சும்+ராதி என்றால் மேன்மை செய்பவர் என்று பொருள். இந்த சக்திமயமான தேவதைகளால் உலகமனைத்தும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் தேவதைகளின் சக்திகளுக்கு சுதந்திரம் கிடையாது. அந்த சக்திகளனைத்தும் ஆதிமூலமான, வாசுதேவனின் கிரணங்களே. சுரர்களனைவரையும் அவனே நியமிக்கிறான். அதனால் அவன், 'சுரேசம்.' சுரர்களுக்கு ஈஸ்வரன்.

விச்வாதா(கா)ரம்: நாம் கண்ணால் பார்க்கும் விஸ்வத்தை இயக்கும் சூட்சும சக்திகள் சுரர்கள். அதாவது, தேவர்கள். அவர்களோடு கூட விஸ்வத்துக்கும் சேர்த்து ஆதாரமாக உள்ள சைதன்யம் வாசுதேவன். அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதால் அவனே, 'விச்வாதாரம்.' பார்க்கின்ற ஜகமனைத்தும் அவனுடைய சைதன்யத்தில் நிரம்பியிருப்பதால் அவனே, 'விஸ்வாகாரன்' கூட. அதாவது, விஸ்வத்தையே உடலாகக் கொண்டவன். கடலில் தோன்றும் அலைகளுக்கு ஜலமே ஆதாரம். அலைகள் நீரின் வடிவம். அனைத்தும் நீரே. நீர் அலைகளுக்கு ஆதாரமாகவும், உருவமாகவும் இருப்பது போல் விஸ்வாதாரமாகவும், விஸ்வாகாரமாகவும் பரமாத்மா விளங்குகிறார். ‘ஆகாரம்' என்றால் 'வடிவம்' என்று பொருள்.

ககன சத்ருசம்: ஆகாயத்தில் வெளிப்படும் அனைத்திலும் ஆகாயமே உள்ளது. அனைத்தும் ஆகாயத்திலேயே உள்ளன. அதேபோல் ஆகாயத்தோடுகூட அனைத்து விஸ்வமும் யாரிடம், யாரால் வெளிப்பட்டுள்ளதோ அவனே பரமாத்மா. அதனால்தான் அவன் 'ககன சத்ருசன்.' அதாவது, ஆகாயத்தைப் போன்றவன். இதே கருத்தை 'ஆகாசவத் சர்வகத: சுசூக்ஷ்ம' என்று உபநிஷத்து பிரகடனம் செய்கிறது. இது நிராகாரனான, உருவமற்ற பரமாத்மாவை விவரிக்கிறது.

மேக வர்ணம்: உருவமற்றவனும் எங்கும் நிறைந்திருப்பவனுமான பரமாத்மா தன் லீலா சக்தியால், பக்தர்களை அனுகிரகம் செய்வதற்காக திவ்ய மங்கள விக்கிரகம் தரித்து சாகார ரூபத்தோடு வெளிப்படுகிறான். அந்த உருவம், 'மேக வர்ணம்.' அதாவது, மேகத்தின் நிறம் கொண்டவன். மேகம் நீரால் நிறைந்து தாபத்தைப் போக்குகிறது. அதேபோல் கருணாரசத்தால் நிறைந்த விஷ்ணு மேகம் சம்சாரத்தின் மூன்றுவித தாபங்களைப் போக்கி, ஞான தாகத்தைத் தீர்க்கிறது. எனவே அது, 'நீலமேக ஷ்யாமம்' என்று போற்றப்படுகிறது.

சுபாங்கம்: அந்த ஷ்யாம வர்ண தேகத்தில் ஒவ்வொரு அங்கமும் சுபமயம். உலகியலான உடல்கள் இயற்கை தோஷங்களோடு கூடி இருக்கும். எனவே, அவை அசுபமானவை. ஆனால், பரமாத்மா எடுத்த வடிவத்தின் அவயவங்கள் சுபமயமானவை. தன்னை நினைப்பவர்களுக்கு சுபத்தை விளைவிக்கும் சுபாவத்தோடு திவ்ய மங்கள சொரூபமாக ஒளி வீசுகிறான் பகவான். எனவேதான், அவனுடைய ரூபம் 'சுபாங்கம்.'

லக்ஷ்மீ காந்தம்: பிரபஞ்சத்தை போஷிக்கும் ஐஸ்வர்யங்களனைத்தும் அவனையே சரணடைந்துள்ளன. ஐஸ்வர்யங்களுக்கு அதிதேவதையான லட்சுமி அவனை அடைந்து அவனுடைய சங்கல்பத்துக்கேற்ப நடந்து கொள்கிறாள். எனவே, அந்த சுப சொரூபமே 'லக்ஷ்மீ காந்தம்.' அதாவது, ஐஸ்வர்ய தேவதையான லட்சுமிக்குப் பிரியமானவன்.

கமல நயனம்: தாமரை மலர்களைப் போல் மலர்ந்து, சூரிய, சந்திர ஒளிகளால் ஜகத்தினைக் கவனித்துக் கொண்டிருக்கும் கருணைமயமான பார்வை கொண்டவன் பகவான். எனவே, அவன் 'கமல நயனம்.'

யோகி ஹ்ருத்யான கம்யம்: இப்படிப்பட்ட விஷ்ணு தத்துவத்தையும் சொரூபத்தையும் அனைவராலும் புரிந்துகொள்ள இயலாது. யோகிகள் மட்டுமே ஒன்று பட்ட உள்நோக்குப் பார்வை கொண்டு தியானத்தின் வழியே தம் இதயங்களில் தரிசிக்க முடியும். அதனால்தான் அவன் 'யோகி ஹ்ருத்யான கம்யம்.'

விஷ்ணும்: விஸ்வமனைத்தும் வியாபித்துள்ள பரமாத்மாவான அவன் 'விஷ்ணு.' அவனுக்கு நமஸ்காரம் 'வந்தே! விஷ்ணும்.'

பவ பய ஹரம்: இந்தத் தத்துவத்தை உணர்ந்து, சுபமயமான விஷ்ணுவின் உருவத்தை தியானிப்பவர்களுக்கு, சம்சாரத்தில் பயங்கள் நீங்கி, அஞ்ஞானம் நசிகிறது. எனவே, பகவான் 'பவ பய ஹரம்' என்று துதிக்கப்படுகிறான்.

சர்வ லோகைக நாதம்: சகல உலகங்களுக்கும் பிரதானமான தலைவன் அவனே. எனவே, 'சர்வ லோகைக நாதம்.'

"பதிநான்கு நாமங்களால் விஸ்வத்துக்கும் விஷ்ணுவுக்கும் உள்ள வேறுபாடற்ற தொடர்பை இந்த சுலோகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஒரே சுலோகத்தில் விஸ்வத்துக்கு முன்பிருந்த ஸ்திதியிலிருந்து ஸ்ருஷ்டி, ஸ்திதிகளை நிர்வாகம் செய்யும் பகவானின் தத்துவத்தைத் தெளிவாகக் கூறுவது ரிஷிகளின் பார்வையிலுள்ள மகோன்னத வைபவத்தைக் காட்டுகிறது. இத்தனை தெளிவாக பரமாத்மாவின் உயர்வையும் அவனுடைய உருவமுள்ள, உருவமற்ற (சாகார, நிராகார) தத்துவங்களையும் விளக்குவதோடு, யோகிகளின் தியான சாதனை ரகசியத்தையும் கூட இந்த சுலோகம் நமக்கு அளித்துள்ளது. பொருளறிந்து இதனைப் படிப்பதால் இதிலுள்ள பரிபூரணமான பகவானின் தத்துவத்தை எளிதாக உணர முடியும்."

தொகுப்பு - ராஜி ரகுநாதன்

நன்றி - தீபம் டிசம்பர் 2016
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை