செவ்வாய், 31 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 107


நான்காவது ஸ்கந்தம் – இருபத்து ஒன்பதாவது அத்தியாயம்

(ப்ரசேதஸர்கள் திரும்பிவந்து ராஜ்யமாளுதல்)

ஸ்ரீவிதுரர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மர்ஷியான மைத்ரேயரே! ப்ராசீனபர்ஹியின் புதல்வர்களான ப்ரசேதஸர்கள் தவம்செய்யப் போனார்களென்றும், அவர்களுக்கு ருத்ரன் ஒரு ஸ்தோத்ரத்தை உபதேசித்தானென்றும் உரைத்தீர். அவர்கள் அந்த ஸ்தோத்ரத்தினால் பரமபுருஷனைக் களிப்பித்து (மகிழ்வித்து) எந்த ஸித்தியைப் பெற்றார்கள்? மோக்ஷங் கொடுக்கவல்ல பரமபுருஷனுக்கு அன்பனாகிய ருத்ரன் திடீரென்று தோன்றி அனுக்ரஹம் செய்யப் பெற்ற அவர்கள் மோக்ஷகதியைப் பெற்றிருப்பார்களென்பதில் ஸந்தேஹமில்லை. அதற்கு முன்பு இந்த லோகத்திலாவது பரலோகத்திலாவது அவர்கள் பெற்ற நன்மையை எனக்குச் சொல்வீராக. ப்ருஹஸ்பதியின் சிஷ்யராகிய உமக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- "தந்தையின் கட்டளைப்படி நடப்பவரான ப்ரசேதஸர்கள் ஸமுத்ர ஜலத்தினிடையில் ஜப யஜ்ஞத்தினாலும் தியானத்தினாலும் அனைத்து ஜீவராசிகளையும் படைத்த பரமபுருஷனை ஆராதித்தார்கள். ஆதிமூலமாகிய அப்பரமபுருஷன் பதினாயிரமாண்டுகள் கழிந்த பின்பு தன் தேஹகாந்தியால் அவர்களுடைய வருத்தத்தைப் போக்கிக்கொண்டு சுத்த ஸத்வமயமான திருமேனியுடன் அவர்களுக்கு ப்ரதயக்ஷமானான். அவன் கருத்மானுடைய தோளின்மேல் ஏறிக்கொண்டு மேரு பர்வதத்தின் சிகரத்தில் படிந்த நீலமேகம் போன்று பொன் விஜமுடைய பட்டு வஸ்த்ரம் தரித்துக் கழுத்தில் கௌஸ்துபமணி அணிந்து தன் தேஜஸ்ஸினால் திசைகளையெல்லாம் இருளறச் செய்துகொண்டு விளங்கினான். அவனுடைய முகம் பேரொளியுடைய தங்கநகைகள் பூண்டிருந்ததால், அவரது அழகிய கன்னங்களும் திருமுக மண்டலமும் மிகமிக அழகாய் விளங்கின. அவனுடைய கிரீடம் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. சங்கு சக்கரம் முதலிய எட்டு ஆயுதங்களைத் தரித்த கணநாயகர்களும் ஸனக ஸனந்தனாதி முனிவர்களும் ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகளும் அவனைத் தொடர்ந்து வந்தார்கள். கருடர்களும் கின்னரர்களும் அவனுடைய புகழைப் பாடிக்கொண்டிருந்தார்கள். திரண்டு (பருத்து) உருண்டு நீண்ட எட்டு திருக்கரங்களுக்கிடையே வீற்றிருக்கின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் சோபையில் (அழகில்) பொருகின்ற (பொருந்துகின்ற) வனமாலையால் அவன் திகழ்வுற்றிருந்தான். இத்தகைய அந்த ஆதிபுருஷன் கருணை நிறைந்த கண்ணோக்கத்துடன் தன் பக்தர்களான ப்ரசேதஸர்களை நோக்கி மேக கர்ஜனைபோல் கம்பீரமான ஒலியுடன் மொழிந்தான். 

பகவான் கூறுகிறார்:- “ராஜகுமாரர்களே! என்னிடத்தில் வரம் வேண்டிக் கொள்வீர்களாக. உங்களுக்கு க்ஷேமம் உண்டாகுக. நீங்களெல்லோரும் ஸ்னேஹத்துடன் ஒரே தர்மத்தை அவலம்பித்து நடத்தினீர்கள். உங்களுடைய ஸ்னேஹத்தினால் நான் ஸந்தோஷம் அடைந்தேன். காலை மாலைகளில் படுக்கையில் உங்களை நினைப்பவன் ப்ராதாக்களிடத்தில் மிகுந்த ப்ரீதியும் ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸ்னேஹமும் உண்டாகப் பெறுவான். காலை மாலைகளில் மன ஏக்கத்துடன் இந்த ருத்ர கீதத்தினால் என்னை ஸ்தோத்ரம் செய்பவர்க்கு அவர் விரும்பும் வரங்களையும் சிறந்த மெய்ஞானத்தையும் கொடுப்பேன். நீங்கள் தந்தையின் கட்டளையை மனக்களிப்புடன் அங்கீகரித்தீர்களாகையால் உங்கள் கீர்த்தி ரமணீயமாய் மூன்று லோகங்களிலும் நிரம்பப்போகின்றது. நான் ஒன்று சொல்லுகிறேன் கேளுங்கள். 

விச்ருதரென்பவர் ஒருவர் இருக்கிறார். அவருக்குக் கண்டுவென்று ஓர் புதல்வர் உண்டு. அவர் குணங்களில் தந்தைக்குக் குறையாதவர்; பெரும்புகழர். அவர் தனது ஸந்ததியால் மூன்று லோகங்களையும் நிறைக்கப்போகிறார். அவரிடத்தில் ப்ரம்லோசனை என்பவளை அனுப்பினார்கள். அவளிடம் மதிமயங்கிய கண்டு மகரிஷி, அவள் மூலம் கமலலோசனை என்கிற பெண்ணைப் பெற்றார். வெகுகாலம் கண்டு மகரிஷியோடு இன்புற்றிருந்த ப்ரம்லோசனை, அவரை விடுத்துச் சுவர்க்கம் செல்லும்போது, தான் பெற்ற பெண்ணான கமலலோசனையை இங்கேயே விட்டுச் சென்றாள். அந்தப் பெண்ணை வனதேவதைகள் எடுத்து வளர்த்தனர். அக்குழந்தை பசியினால் வருந்தி அழுகையில் மூலிகைகளின் ராஜனாகிய சந்த்ரன் அம்ருதப் பெருக்குடைய தனது ஆள்காட்டி விரலை அதன் வாயில் வைத்து மன இரக்கத்தினால் அம்ருதபானம் செய்வித்தான். என் பக்தனாகிய உங்கள் தகப்பன் உங்களுக்கு ப்ரஜைகளைப் படைக்கும்படி கட்டளையிட்டானாகையால் அதை நிறைவேற்ற முயன்ற நீங்கள் கணவனை விரும்புகின்ற அப்பெண்மணியை மணம் புரிவீர்களாக. தாமதம் செய்யவேண்டாம். நீங்களெல்லோரும் சிறிதும் மாறாத நடத்தையும் சீலமும் குணமும் உடையவராகி ஒருவர்க்கொருவர் ஸ்னேஹத்துடனிருக்கின்றீர்கள். அழகிய இடையுடைய அப்பெண்மணியும் உங்கள் தர்மசீலங்களுக்கு கட்டுப்பட்டு உங்களெல்லோரிடத்திலும் ஒரேவிதமான மனக்கருத்துடையவளாய் இருப்பாள். நீங்கள் எனது அனுக்ரஹத்தினால் தேவமானத்தினால் அநேகமாயிரம் ஆண்டுகள் வரையில் சிறிதும் மாறாத இந்த்ரிய சக்தியுடன் பூமியிலுள்ள போகங்களையும் தேவலோகத்துப் போகங்களையும் அனுபவிக்கப் போகிறீர்கள். பிறகு என்னிடத்தில் மாறாத பக்தி உண்டாகப்பெற்று அதன் மஹிமையால் காமம் (ஆசை) க்ரோதம் (கோபம்) முதலிய மலங்களெல்லாம் கழிந்து சுத்தமனத்தராகி நரகம் போன்ற இந்த ஸம்ஸாரத்தில் வெறுப்புற்று என்னுடைய லோகத்தை அடையப்போகிறீர்கள். என்பக்தர்கள் குஹஸ்தாச்ரமத்தில் புகுந்து காம ஸுகங்களை அனுபவித்துக்கொண்டிருப்பினும், ஒரு பலனையும் விரும்பாமல் கர்மங்களை அனுஷ்டிப்பதும் என்னுடைய கதையைக் கேட்பதும் சொல்லுவதுமாயிருந்து காலத்தைக் கழிக்கும் தன்மையுள்ள அவர்களுக்கு வீடு வாசல் முதலியன மேன்மேலும் பந்தத்தை விளைப்பவையாக மாட்டாது. வேதங்களை உணர்ந்து என் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி அறிந்து என் கதைகளைச் சொல்லும் திறமையுடைய பெரியோரிடம் சென்று என் கதைகளைக் கேட்பவருடைய நெஞ்சில் ஸர்வஜ்ஞனும் ஸர்வேச்வரனுமாகிய நான் க்ஷணந்தோறும் (ஒவ்வொரு வினாடியும்) புதிதுபுதிதாய்த் தோற்றிக் கொண்டிருப்பேன். பரப்ரஹ்மமென்று கூறப்படுகிறவன் நானே. என்னை அடைந்தவர்கள் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமிக்கையும் பிள்ளை பெண்டிர் வீடு வாசல் முதலியவற்றை என்னுடையதென்று ப்ரமிக்கையுமாகிற மதிமயக்கம் உண்டாகப் பெறமாட்டார்கள். பிள்ளை பெண்டிர் முதலிய பந்துக்கள் மரணம் அடையினும் சோகிக்கமாட்டார்கள். ஸாம்ஸாரிக ஸுகங்களைப்பெற்று அதற்காக ஸந்தோஷத்தையும் அடையமாட்டார்கள்'' என்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- தர்ம அர்த்தகாம மோக்ஷங்களென்கிற புருஷார்த்தங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையுள்ள மிகுந்த நண்பனாகிய பகவான் இங்கனம் சொல்லக்கேட்ட ப்ரசேதஸர்கள் அம்மஹானுபாவனுடைய காட்சியால் ரஜஸ் தமோ குணங்களின் கார்யமான காமம் க்ரோதம் முதலிய மனமலங்களெல்லாம் தொலையப்பெற்று கைகூப்பிக்கொண்டு தழதழத்த உரையுடன் அவனைப் பார்த்து இங்கனம் மொழிந்தார்கள்.

ப்ரசேதஸர்கள் கூறுகிறார்கள்:- “மஹானுபாவனே! நீ உன்னுடைய பக்தர்களின் துன்பங்களை எல்லாம் போக்கும் தன்மையன்: வேதங்களும், அதையறிந்த ப்ரஹ்ம ஞானிகளும் தங்களது உதாரகுணங்களையும் திருநாமங்களையும் பறைசாற்றுகின்றன. தங்களது (செயல்களின்) வேகமோ மனோவேகம், சொல்வேகம் இரண்டையும் மீறியது. உன் வழி ஸமஸ்த இந்த்ரியங்களுடைய மார்க்கங்களுக்கும் விஷயமாகாதது. உனக்கு நமஸ்காரம். நீ புண்யபாப கர்மங்கள் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருக்கிறாய்; நீ உன் ஸ்வரூபத்தையே அனுபவித்துப் பசி தாஹம் முதலிய ஊர்மிகள் எவையும் தீண்டப்பெறாதவனாய் இருக்கிறாய். உன்னைப் பணிகிறவர்கள் ஆத்மஸ்வரூபத்தை அறியாதிருப்பினும் நீ அவர்கள் மனத்தில் நின்று ஆத்மஸ்வரூபத்தையும் தேஹஸ்வரூபத்தையும் உள்ளபடி அறிவித்து அவர்கட்கு மிகவும் அன்பனாயிருக்கிறாய். நீ ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (இருப்பு, காத்தல்), ப்ரளயங்களை (அழிவு) நடத்த விரும்பி உன் ஸங்கல்பத்தினால் ரஜோ குணம் தலையெடுக்கப்பெற்ற ப்ரஹ்மாவைப் படைத்து அவனுக்கு அந்தர்யாமியாய் இருந்து ஸ்ருஷ்டியையும் (படைப்பையும்) தமோகுணம் தலையெடுத்த ருத்ரனைப் படைத்து அவனுக்கு அந்தர்யாமியாயிருந்து ப்ரளயத்தையும் (அழிவையும்) உன் ஸங்கல்பத்தினால் அப்ராக்ருதமான திவ்யமங்கள விக்ரஹங்களைக்கொண்டு ஸ்திதியையும் (இருப்பு, காத்தல்) நடத்துகிறாய். உனக்கு நமஸ்காரம்.

ஜகத்ரக்ஷணத்திற்காகக் கொள்கிற உன்னுடைய உருவங்களெல்லாம் சுத்த ஸத்வமயமாயிருக்கும். நீ உன்னைப்பற்றினாருடைய ஸம்ஸாரபந்தத்தைப் போக்கும் தன்மையன். நீ பாபமற்ற மனத்திற்கே விஷயமாவாய். நீ வாஸுதேவனென்னும் பேர் பூண்டவன். நீ பூமண்டலத்திற்கு க்ஷேமம் செய்பவன் ; உன் பக்தர்களுக்கு அனிஷ்டத்தைப்போக்கி இஷ்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பவன். உனக்கு நமஸ்காரம். நீ தாமரையுந்தியன்; தங்களுடைய  திருவுந்திக் கமலத்திலிருந்துதானே இந்தப் பிரம்மாண்டம் தோன்றியது. தங்கள் திருக்கழுத்திலே தாமரை மாலை அழகாக விளங்குகிறது. தங்கள் திருவடிகளோ தாமரைமலர் போன்று மென்மையானது; அழகானது. தங்களுக்கு நமஸ்காரம். தாமரை மலரின் மகரந்தம் போன்ற மஞ்சள் பட்டாடை அரையில்; அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரே புகலிடம்; அனைத்திற்கும் சாட்சியானவர். அப்படிப்பட்ட தங்களுக்கு நமஸ்காரம். வருத்தங்களையெல்லாம் போக்கவல்ல இந்த உன்னுருவத்தை வருந்தின எங்களுக்குக் காண்பித்தாய். நீ செய்யவேண்டிய அனுக்ரஹம் வேறு என்னிருக்கின்றது ? அமங்களத்தைப் போக்குந்தன்மையனே! வாத்ஸல்யமுடைய பெரியோர்கள் மன இரக்கத்திற்கிடமான தம்மடியார்களை நம்முடையவரென்று தகுந்த காலத்தில் தம் புத்தியில் நினைப்பார்களாயின், அவர்கள் அவரிடத்தில் செய்யவேண்டியது அவ்வளவே. நீ அங்கனம் நினைப்பாயாயின் க்ஷுத்ரஜந்துக்களும் (தாழ்ந்த பிராணிகளும்) தம்முடைய பாபங்களெல்லாம் தீரப்பெறுவார்கள். “அது வேண்டும். இது வேண்டும்” என்று பற்பலவற்றையும் விரும்புகிற எங்கள் மனத்தில் அந்தராத்மாவாயிருக்கிற உனக்கு எங்கள் மனவிருப்பம் ஏன் தெரியாது? ஆகையால் எங்கள் விருப்பத்தை நாங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆயினும் சொல்லுகிறோம் கேள். 

ஜகந்நாத! நீ அருள்புரிய வேண்டுமென்பதுவே நாங்கள் விரும்பின வரம். நீ மோக்ஷமார்க்கத்தை உபதேசிப்பவன். அந்த மோக்ஷமார்க்கமும் நீயே. அப்படிப்பட்ட நீ அருள்புரிவாயாயின் அதைவிட வேறென்ன வேண்டும்? ஆயினும், சேதன அசேதன விலக்ஷணனான உன்னிடத்தினின்று ஒரு வரம் வேண்டுகிறோம். உன் விபூதிகளுக்கு முடிவே இல்லை. ஆகையால் உன்னை அனந்தனென்று பாடுகிறார்கள். பாரிஜாதவ்ருக்ஷம் அகப்படுமாயின் வண்டு மற்றொன்றையும் பணியாது. அங்கனமே, நாங்கள் உன் பாதாரவிந்தங்களை நேரே பெற்றபின்பு வேறு என்ன வேண்டுவோம்? நாங்கள் உன் மாயையால் தீண்டப் பெற்றுப் புண்யபாப கர்மத்தின்படி இந்த ஸம்ஸாரத்தில் எவ்வளவுகாலம் திரிகின்றோமோ, அதுவரையில் ஜன்மங்கள் தோறும் உன் ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை அனுஸந்தித்துக் கொண்டு உன்னை மறவாதிருக்கும் பாகவதர்களோடு எங்களுக்கு ஸஹவாஸம் நேருமாக. ஸ்வர்க்க ஸுகத்தையாவது மோக்ஷ ஸுகத்தையாவது பாகவதர்களோடு ஸஹவாஸம் செய்யும் காலத்தில் அடங்கின அரை க்ஷணத்தோடாயினும் ஈடாக நினைக்கமாட்டோம். இனி மரணம் அடையும் தன்மையரான மானிடவர் விரும்பும் ராஜ்யபோகம் முதலிய ஸுகங்களை அதற்கு ஈடாக நினைக்கமாட்டோமென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? பாகவதகோஷ்டியில் செவிக்கினியவைகளான பகவத் கதைகள் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும். அக்கதைகளைக் கேட்பதால் சப்தாதிவிஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம் தீரும். பாகவதர்களோடு ஸஹவாஸம் நேருமாயின் ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் வைரமின்றி (விரோதமின்றி) நட்போடிருக்கும் தன்மை உண்டாகும். எவ்வித பயமும் உண்டாகாது. ஸம்ஸாரத்தில் மனப்பற்றில்லாத ஸத்புருஷர்கள் எப்பொழுதும் பகவானுடைய கதைகளையே பேசி பொழுது போக்கிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கதாப்ரஸங்கங்களில் (கதைகளில்) துறவிகளால் “நமக்கு இவனே கதி” என்று பற்றப்படும் பகவானான ஸ்ரீமந்நாராயணன் ஸர்வகாலமும் ப்ரஸ்தாவம் செய்யப்பெற்றிருப்பான் (சொல்லப்பட்டிருப்பான்). கங்காதி புண்ய தீர்த்தங்களைப் பாவனம் (தூய்மை) செய்வதற்காக ஆங்காங்கு உலாவும் தன்மையரான உன் பக்தர்களுடைய ஸஹவாஸம் ஸம்ஸாரத்தினின்று பயந்த எவனுக்குத்தான் ருசிக்காது? பகவானே! தங்களுக்கு மிக மிக அன்பரான, சாட்சாத் பரமசிவனது நொடி நேர இணக்கம், இன்று தங்களுடைய தரிசன பாக்கியத்தை எங்களுக்கு அளித்தது. எவராலும் தீர்க்கவியலாத பிறப்பு - இறப்பு என்கிற நோயைத் தீர்க்கவல்ல மருத்துவர் தாங்கள் ஒருவரே. ஆகவே, இப்போழுது உன்னைச் சரணம் அடையப்பெற்றோம். நாங்கள் நன்றாக ஓதினதும், குருக்கள், அந்தணர் மற்றுமுள்ள வ்ருத்தர்கள் ஆகிய இவர்களை அருள்புரியும்படி அனுஸரித்திருந்ததும், பெரியோர்களைப் பணிந்ததும், நண்பர்களையும் உடன் பிறந்தவர்களையும் ஸமஸ்த ப்ராணிகளையும் பொறாமையின்றி ஸந்தோஷப்படுத்தினதும், ஆஹாரமில்லாமல் நெடுநாள் ஜலத்தில் தவம் செய்ததும் இவையெல்லாம் உனக்கு ஸந்தோஷத்தை விளைப்பவையாகும்படி வேண்டுகிறோம். ஸ்வாயம்புவ மனுவும் ப்ரஹ்மதேவனும் ருத்ரனும் ஜ்ஞானயோக கர்மயோகங்களால் தூயமனத்தரான மற்றவரும் உன் மஹிமையின் கரை அறியாதவராயினும் தமது புத்திக்குத் தகுந்தபடி ஸ்தோத்ரம் செய்கின்றார்கள். அங்கனமே நாங்களும் எங்கள் புத்திக்குத் தோற்றின அளவு உன்னை ஸ்தோத்ரம் செய்கின்றோம். நீ ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸமமாயிருப்பவன். நீ சுத்தஸ்வரூபன்; பரமபுருஷன்; சுத்தஸத்வமூர்த்தி; வாஸுதேவன்; ஷாட்குண்யபூர்ணன். உனக்கு நமஸ்காரம். 

மைத்ரேயர் கூறுகிறார்:- விதுரரே! ப்ரசேதஸர்களால் துதிசெய்யப்பெற்ற பகவான் ஸந்தோஷம் அடைந்து சரண்யனும் வத்ஸலனுமாகையால் அவர்கள் விரும்பினதையெல்லாம் அங்கீகரித்து அப்படியே ஆகட்டுமென்றான். அவர்கள் தன் தேஹ ஸௌந்தர்யத்தைக் கண்டு திருப்தியடையாமல் தான் போவதையும் அங்கீகரிக்காதிருக்கையில், தன்னுடைய லோகம் போய்ச் சேர்ந்தான். அப்பால் ப்ரசேதஸர்கள் ஸமுத்ர ஜலத்தினின்று கரையேறி, ஸ்வர்க்கத்தைத் தகையவேண்டும் (அடையவேண்டும்) என்னும் எண்ணம் கொண்டவை போல் உயர்ந்திருக்கிற மரங்களால் பூமியெல்லாம் மறைக்கப்பட்டிருப்பது கண்டு அந்த வ்ருக்ஷங்களின் (மரங்களின்மேல்) மேல் கோபம் கொண்டார்கள். அவர்கள் பூமியில் கொடி, செடி முதலியன எவையுமில்லாமல் சீர்திருத்த விரும்பி ப்ரளயகாலத்தில் உண்டாகும் அக்னியையும் வாயுவையும் நிகர்த்த (ஒத்த) அவ்விரண்டையும் தமது முகத்தினின்று கோபத்தினால் வெளியிட்டார்கள். அவற்றால் பூமியிலுள்ள வ்ருக்ஷங்களெல்லாம் பஸ்மமாவதைக் கண்டு ப்ரஹ்மதேவன் வந்து நல்வார்த்தைகளால் அவர்களுடைய கோபத்தை அனைத்தான். அப்பொழுது பஸ்மமானவை போக மிகுந்த வ்ருக்ஷங்கள் (மரங்கள்) பயந்து ப்ரஹ்மதேவனால் மொழியப்பெற்றுத் தாம் பெண்ணாக அபிமானித்து வளர்த்துவந்த அப்பெண்மணியை அந்த ப்ரசேதஸர்களுக்குக் கொடுத்தன. அவர்களும் ப்ரஹ்மாவின் கட்டளையை அங்கீகரித்து மாரிஷையென்னும் பேருடைய அப்பெண்மணியை மணம்புரிந்தார்கள். ப்ரஹ்மதேவன் புதல்வராகிய தக்ஷர் பெருமையுள்ள ருத்ரனை அவமதித்த தோஷத்தினால் இவளுக்குப் பிள்ளையாகப் பிறந்தார். அவர் நடந்த சாக்ஷுஷ மன்வந்தரத்தில் ஜகத்தெல்லாம் காலஸ்வரூபியான பகவானால் ஸம்ஹரிக்கப்பட்டிருக்கையில் ஈச்வரனால் தூண்டப்பெற்று இஷ்டமான ப்ரஜைகளைப் படைத்தார். அவர் பிறக்கும் பொழுதே தன் தேஹ காந்தியால் ஒளியுடைய ஸமஸ்தபூதங்களின் தேஜஸ்ஸையும் பறித்தார். அதனாலும் யஜ்ஞாதி கர்மங்களை அனுஷ்டிப்பதில் திறமையுடையவராகையாலும் ஜனங்கள் அவரைத் தக்ஷரென்றே அழைத்தார்கள். பரத வம்சத்தவர்களில் சிறந்தவனே! ப்ரஹ்மதேவன் அவரை ப்ரஜைகளைப் படைக்கவும் அவற்றைக் காக்கவும் ஏற்படுத்தினான். மரீசி முதலிய மற்ற ப்ரஜாபதிகளை அவரவர் பதவியில் இவரே நியமித்தார். 

இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக