நான்காவது ஸ்கந்தம் – முப்பதாவது அத்தியாயம்
(ப்ரசேதஸர் தக்ஷரை ராஜ்யத்தை ஒப்படைத்து வனத்திற்குப் போதல்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த ப்ரசேதஸர்கள் அனேகமாயிரமாண்டுகள் ராஜ்யபாரம் செய்து அப்பால் விரைவில் விவேகம் உண்டாகப்பெற்றுப் பகவானுடைய வார்த்தையை நினைத்து தங்களுடைய மனைவி மாரிஷாவை மகனான தக்ஷனிடம் ஒப்படைத்துவிட்டு இல்லற வாழ்க்கையைத் துறந்து அரண்மனையிலிருந்து வெளியேறினர். அவர்கள் ஸர்வாந்தர்யாமியான பகவானுடைய ஸ்வரூபத்தை அனுஸந்திக்கையாகிற ஜ்ஞான யஜ்ஞத்தினால் (பகவானுடைய ஸ்வரூபத்தை த்யானம் செய்தல்) அவனை ஆராதிக்க வேண்டுமென்று ஸங்கல்பித்துக்கொண்டு மேற்கு ஸமுத்ரக்கரையில் ஜாஜலி மஹர்ஷி முக்தியடைந்த இடத்திற்குப் போய்ச்சேர்ந்தார்கள். அவர்கள் ஆஸனத்தை ஜயித்து மூலாதாரம் முதல் சிறிதும் கோணாமல் சரீரத்தை நேராக நிறுத்தி உட்கார்ந்து ப்ராணன் (மூச்சுக்காற்று), மனம், வாக்கு (சொல்), கண் இவைகளையும் வென்று பரிசுத்தனான பரமபுருஷனிடத்தில் ஆத்மஸமர்ப்பணம் செய்து அவனையே த்யானித்துக் கொண்டிருக்கையில், தேவதைகளாலும் அஸுரர்களாலும் புகழத்தகுந்த மஹானுபாவராகிய நாரதமுனிவர் அவர்களைக் கண்டார். அந்த ப்ரசேதஸர்கள் நாரதர் வந்ததைக் கண்டு எழுந்து நமஸ்கரித்துக் கோத்ரஸுத்ராதிகளைச் (முன்னோர்களது பரம்பரையைச்) சொல்லி விதியின்படி பூஜித்து ஆஸனம் அளித்து, அதில் அவர் ஸுகமாக உட்கார்ந்திருக்க இங்கனம் மொழிந்தார்கள்.
ப்ரசேதஸர்கள் கேட்கிறார்கள்:- “தேவரிஷீ! உமக்கு நல்வரவாகுக! இப்பொழுது நீர் எங்களுக்குத் தெய்வாதீனமாய்க் காணப்பட்டீர். ஸுர்யனைப்போல் நீர் உலகங்களின் க்ஷேமத்திற்காக ஆங்காங்கு ஸஞ்சரிக்கின்றீர். வல்லவரே! சிவனும் ஸ்ரீமஹாவிஷ்ணுவும் முன்பு எங்களுக்கு ஆத்மதத்வத்தை உபதேசித்தார்கள். நாங்கள் நெடுநாளாய் இல்லறத்தில் உழன்று கொண்டிருந்தோமாகையால் அது மறந்துபோய்விட்டது. தாண்டமுடியாத ஸம்ஸார ஸாகரத்தை (இந்த பிறப்பு இறப்பு என்ற முடிவில்லாத உலகியல் வாழ்வாகிற கடலை) நாங்கள் அனாயாஸமாகத் தாண்டும்படி, மறந்துபோன தத்வங்களின் உண்மையையும் புருஷார்த்தங்களின் ஸ்வரூபத்தையும் அறிவிக்கிற வேதாந்த சாஸ்த்ரத்தை எங்களுக்கு விளங்க உபதேசிப்பீராக” என்றார்கள்.
மைத்ரேயர் கூறுகிறார்:- உத்தமச்லோகனான பகவானிடத்தில் நிலைநின்ற மனமுடைய நாரதமுனிவர் பகவானை மனனம் செய்யும் தன்மையுள்ள அந்த ராஜகுமாரர்களுக்கு இங்கனம் மொழிந்தார்.
நாரதர் கூறுகிறார்:- “ப்ராணிகளுடைய பிறவி, செயல், வாழ்நாள், மனம், வாக்கு இவை பரமபுருஷனைப் பணிவதற்கு (பூஜிப்பதற்கு) உபயோகப்படுமாயின் அவையே பயன்பெற்றவையாம்.
ஸெளக்லம் (புனிதமான தாய் - தந்தையர் மூலம் நிகழும் நற்குலபிறவியும்), ஸாவித்ரம் (உரிய காலத்தில் முப்புரி அணிவிக்கப்பட்டு, காயத்ரி என்னும் மகாமந்திர ஜபம் செய்யும் தகுதியும்),
யாக்ஞிகம் (வேள்விகள் செய்வதற்காக யாகதீக்ஷைகளால் உண்டாகும் பிறவியும்)
ஆகிய மூன்றும் பகவானைப் பணிவதற்கு உபயோகப்படாவிடின் அவற்றால் ஸாதிக்கவேண்டிய வேறு ப்ரயோஜனம் என்ன இருக்கின்றது? ஜ்யோதிஷ்டோமம் (ஒரு யாக விசேஷம்) முதலிய யஜ்ஞாதி கர்மங்களும், தேவதைகளைப்போல் நெடுநாள் ஜீவித்திருக்கையும், பெரிய நற்குலத்தில் பிறக்கையும், தவமும், பேசும் திறமையும், நினைவுகளும், ஸாமர்த்யமுடைய புத்தியும் (கூர்மையான அறிவு), தேஹ பலமும் (உடல்வலிமை), இந்த்ரிய சக்தியும் (புலன்களின் வலிமையும்), யோகாப்யாஸமும் (யம, நியம, ஆசன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்கிற எட்டு அங்கங்களுடைய யோக பயிற்சியும்) ஆத்மஜ்ஞானமும் (ஜீவாத்ம, பரமாத்ம தத்வங்களைப் பற்றிய ஜ்ஞானமும்), துறவறமும், வேதாப்யாஸமும், மற்றும் பலநன்னெறிகளும், தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தைப் (உலகப்பற்றாகிற விலங்கைப்) போக்கித் தன்னைக் கொடுக்க வல்லவனான பரமபுருஷனுடைய ஆராதனத்திற்கு உபயோகப்படாவிடில், அவற்றால் என்ன ப்ரயோஜனம்? வாஸ்தவத்தை ஆராய்ந்தால் பரமாத்மாவான பரமபுருஷனே ஸமஸ்த (எல்லா) நன்மைகளுக்கும் கடைசி எல்லை. அவனே ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அன்பிற்கிடமானவன்; அவர்களுக்கு அந்தராத்மாவாயிருப்பவன்; அவன் விரும்பினவர்க்குத் தன்னையும் கொடுப்பான் என்றால் மற்ற நன்மைகளை அவன் கொடுப்பது ஓர் அற்புதமோ? வ்ருக்ஷத்தின் (மரத்தின்) வேரில் ஜலம் கொட்டினால், அதனால் அதன் அடிப்பாகமும் பெருங்கிளைகளும் சிறுகிளைகளும் அவற்றிலுள்ள இளஞ்சிறு கிளைகளும் தளிர், இலை, பூ, காய்களும் திருப்தி அடைவதுபோலவும், ப்ராணாஹுதியால் (போஜனத்தினால்) ஸமஸ்த இந்த்ரியங்களும் த்ருப்தி அடைவதுபோலவும், பகவானுடைய ஆராதனத்தினால் ஸமஸ்த தேவதைகளும் ஆராதிக்கப் பெற்றவராவார்கள்.
மழை காலத்தில் ஸுர்யனிடத்தினின்று ஜலம் உண்டாகின்றது. வெயிற்காலத்தில் மீளவும் அவனிடத்திலேயே போய்ச்சேருகின்றது. அசையும்பொருளும் அசையாப் பொருளுமாகிய ஸமஸ்த பூதங்களும் பூமியிலேயே உண்டாகின்றன. அதிலேயே மறைகின்றன. அங்கனமே ப்ரபஞ்சமெல்லாம் (உலகமெல்லாம்) பகவானிடத்தினின்றே உண்டாகின்றது; அவனிடத்திலேயே மறைகின்றது. அந்த ப்ரபஞ்சமெல்லாம் பரமாத்மாவுக்கு வாஸஸ்தானமாயிருக்கும் (இருப்பிடமாய் இருக்கும்). ஸூர்யனுடைய கிரணங்கள் அவனை விட்டுப் பிரியாதிருப்பது போல இதுவும் அவனை விட்டுப் பிரியாதிருக்கும். இந்த ப்ரபஞ்சம் ஸ்ருஷ்டி தசையில் (படைப்பு நிலையில்) ஸ்தூலாகாரமாய்த் (பெயர், உருவங்களுடன்) தோன்றுகிறது. ஸம்ஹார தசையில் (அழிவு நிலையில்) ஸூக்ஷ்ம தசையை (பெயர், உருவங்கள் இல்லாத நிலையை) அடைந்திருக்கும். இவ்வளவேயன்றி இந்த ப்ரபஞ்சம் எப்பொழுதும் உள்ளதுதான். ஸ்தூல தசையிலும் ஸூக்ஷ்ம தசையிலும் பரமாத்மா இந்த ப்ரபஞ்சத்தை விடாமல் இதை சரீரமாகக் கொண்டிருப்பான். நாம் விழித்துக் கொண்டிருக்கும்பொழுது நமது இந்திரியங்கள் தத்தஞ்செயலில் முயற்சிகொள்கின்றன. உறங்கும்பொழுது அவை செயலற்றிருக்கின்றன. அங்கனமே இந்த ப்ரபஞ்சமும் ஸ்ருஷ்டி தசையில் தோன்றி ஸம்ஹார தசையில் தோற்றாதிருக்கும். ஆகாயத்தில் மேகம், இருள், வெளிச்சம் இவை ஒருகால் தோன்றி ஒருகால் மறைகின்றன. அங்கனமே ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் என்கிற இச்சக்திகளென்னும் ப்ரவாஹம் (ப்ரபஞ்சமென்னும் ப்ரவாஹம்) பரமபுருஷனிடத்தில் ஒருகால் தோற்றி ஒருகால் மறைகின்றது. அது எப்பொழுதும் அவனுக்கு சரீரமாயிருக்கும். ஆகையால் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அவனொருவனே அந்தராத்மாவாய் இருப்பவன். காலமும் ஜீவனும் ப்ரக்ருதியும் அவனுக்கு சரீரமாயிருக்கும். அவன் தன் ஜ்ஞான ப்ரகாசத்தினால் ஸம்ஸாரம் தீண்டப்பெறாதவன்; உலகத்தில் மேன்மையுள்ள ப்ரஹ்மாதிகளுக்கும் ஈச்வரனாயிருப்பவன். அப்பரமபுருஷனை “இவனொருவனே ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மா” என்கிற எண்ணத்துடன் நேரே ஆராதிப்பீர்களாக. அவன் மனத்தின் மூலமாய் விளையும் புத்தி (அறிவு), ஸுகம் (இன்பம்), துக்கம் (துன்பம்), இச்சை (ஆசை), த்வேஷம் (வெறுப்பு) முதலிய விகற்பங்கள் (மாற்றங்கள்) தீண்டப்பெறாதவன்; தன்னைப்போன்ற வஸ்து மற்றொன்றுமில்லாதவன்; தேஹமே ஆத்மாவென்னும் ப்ரமம் (தவறான எண்ணம், மயக்கம்) தொலைந்தால் தோன்றும் தன்மையன்; ஜ்ஞானமே வடிவாயிருக்கப்பெற்றவன்; நித்யாநந்தஸ்வரூபன் (எப்பொழுதும் ஆனந்தமே வடிவானவன்); அத்தகைய ஆநந்தத்தையே குணமாகவுடையவன்; ஆதி (முதல்) நடு, அந்தம் (முடிவு) இல்லாதவன். அத்தகையனான பரமபுருஷனை இப்பாவனையுடன் பஜிப்பீர்களாக.
ஸமஸ்த பூதங்களிடத்திலும் தயையும், தெய்வாதீனமாய்க் கிடைக்கும் அன்னாதிகளைக்கொண்டு ஸந்தோஷமுற்றிருக்கையும், ஸமஸ்த இந்திரியங்களையும் அடக்கி ஆள்கையுமாகிய இவற்றால் பரமபுருஷன் சீக்ரத்தில் ஸந்தோஷம் அடைவான். இந்நிலையில் நின்று விருப்பங்களெல்லாம் தொலைந்து சுத்தமனத்தரான பெரியோர்கள் எப்பொழுதும் பகவானிடத்தில் பக்தி வளரப்பெற்று அவனையே த்யானித்துக்கொண்டிருப்பார்கள். அழியாத பெருந்தவமாகிய அப்பரமபுருஷனும் அவருடைய பக்தியால் அழைக்கப்பெற்று அவரது மனத்தில் நிலைநின்று “தான் பக்தபராதீனன்” (தன்னுடைய பக்தர்களுக்கு அடிமை) என்பதை வெளியிட்டுக்கொண்டு அம்மனத்தின் தர்மம்போன்று அங்கேயே அமைந்திருப்பானன்றி அதினின்று சிறிதும் பெயரமாட்டான். மற்றொன்றையும் பொருள் செய்யாமல் பகவானையே பெரும்பொருளாக நினைக்கும் தன்மையுடைய ஸத்புருஷர்கள் அவனுக்கு மிகவும் அன்பிற்கு இடமாயிருப்பார்கள். அவன் அவர்களோடு கலந்து பரிமாறுகையால் விளையும் ஆனந்தத்தின் ரஸம் அறிந்தவன். கல்வி செல்வ செயல் இவைகளால் பெரிய மதங்கொண்டு விவேகங்கெட்டு (நன்மை தீமைகளை பிரித்து அறியும் தன்மை இன்றி), ஈச்வரனையே எல்லா உறவுமுறையுமாகப் பற்றித் தமக்கென்று ஒருகைம்முதலுமில்லாத (எந்த சக்தியோ, செல்வமோ இல்லாத) ஸத்புருஷர்களை அவமதிக்கும் தன்மையுள்ள கெடுமதியர் (கெட்ட புத்தியுள்ளவர்) செய்யும் பூஜையை அவன் அங்கீகரிக்கமாட்டான். தன் பக்தர்களுக்கு விதேயனாகிய (அடங்கியவனாகிய) அப்பரமபுருஷன் தன்னையே அனுஸரித்திருக்கும் தன்மையளான ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் அவளைப் பணிந்து அவளருளை விரும்புகின்ற ராஜாதிராஜரான மானிடவர்களையும் அத்தகைய தேவதைகளையும் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டான். அவன் ஸ்வயமாகவே நிறைவாளனாயிருப்பவன். இங்கனம் பக்தவத்ஸலனான ஸர்வேச்வரனை ருசியறிந்தவன் எவன் தான் பணியமாட்டான்? நீங்கள் அவனையே பணிவீர்களாக” என்றார்.
மைத்ரேயர் கூறுகிறார்:- விதுரனே! ப்ரஹ்மாவின் புதல்வராகிய நாரதமுனிவர் இவையும் மற்றும் பலவகையுமான பகவத் கதைகளை ப்ரசேதஸர்களுக்குச் சொல்லி ப்ரஹ்மலோகம் சென்றார். அப்பால் அவர்களும் உலகங்களின் பாபங்களையெல்லாம் போக்கும் திறமையுடையதான பகவானுடைய புகழை நாரதமுனிவர் மூலமாய்க்கேட்டு அவனுடைய பாதாரவிந்தங்களையே த்யானித்துக்கொண்டிருந்து, கடைசியில் அவனுடைய லோகத்தை அடைந்தார்கள். விதுரனே! நாரதருக்கும் ப்ரசேதஸர்களுக்கும் நடந்த பகவத்குண சம்பந்தமான ஸம்பாஷணையை உனக்கு மொழிந்தேன். ப்ரசேதஸர்களைப் பற்றியல்லவோ நீ என்னை வினவினாய். அதையெல்லாம் இதில் உள்ளடக்கிச் சொன்னேன்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனே! ஸ்வாயம்புவமனுவின் புதல்வனாகிய உத்தானபாதனுடைய வம்சத்தை இங்கனம் உனக்கு மொழிந்தேன். இனி அந்த உத்தானபாதனுடைய தம்பியாகிய ப்ரியவ்ரதனது வம்சத்தைச் சொல்லுகிறேன் கேள். இவ்வம்சம் அரசர்களால் மிகவும் புகழப்பெற்றிருக்கும். இந்த ப்ரியவ்ரத மன்னவன் முதலில் ஸம்ஸாரத்தில் விரக்தியால் காட்டிற்குச்சென்று அங்கு நாரதரிடம் ஆத்மவித்யோபதேசம் பெற்று மீளவும் ராஜ்யத்திற்கு வந்து பூமியைப் பாதுகாத்துக் கொண்டிருந்து கடைசியில் புதல்வர்களுக்கு ராஜ்யத்தைப் பங்கிட்டுக்கொடுத்துப் பகவானுடைய லோகத்தை அடைந்தான். பகவானுடைய குணங்களும் பாகவதர்களின் கதைகளும் நிறைந்து ரமணீயமான இந்த வ்ருத்தாந்தத்தையும் மைத்ரேயர் சொல்லக்கேட்டு விதுரர் மிக்க மனோபாவத்துடன் கண்ணீர் பெருக்கி மனங்கலங்கி மைத்ரேய முனிவரது பாதாரவிந்தங்களைச் சிரத்தினால் தரித்து வணங்கி ஸ்ரீஹரியின் பாதாரவிந்தங்களை மனத்தில் த்யானித்துக் கொண்டிருந்தார்.
விதுரர் கூறுகிறார்:- “அவ்விதூர் மைத்ரேய முனிவரைப் பார்த்து “அப்பனே! யோகிகளில் சிறந்த மைத்ரேய மஹர்ஷீ! நீர் கருணைகூர்ந்து ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தினின்றும் ஆத்மாக்களை ஏழைகளுக்கு எளியனான பரமபுருஷன் விளங்கும் தேசமாகிய அக்கரையில் ஏற்றுவிக்கவல்ல அருமையான உபாயத்தை இங்கனம் எளிதில் எடுத்துக்காட்டினீர்” என்று மொழிந்தார்.
ஸ்ரீசுகர் கூறுகிறார்:- இவ்வாறு தன் நன்றியறிதலை வெளிப்படுத்திய விதுரர், அம்முனிவரை நமஸ்கரித்து விடைபெற்றுக்கொண்டு மனமகிழ்ச்சியோடு உறவினர்களைப் பார்க்க விரும்பி ஹஸ்தினாபுரத்திற்குப் போனார். ராஜனே! பகவானிடத்தில் நிலைகின்ற மனமுடைய மஹானுபாவரான ஸ்வாயம்புவமனு முதலிய அரசர்களைப்பற்றின இந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்கிறவன், ஆயுள், பணம், புகழ், ஐச்வர்யம், மோக்ஷம் இவைகளையெல்லாம் பெறுவான்.
முப்பதாவது அத்தியாயம் முற்றிற்று.
நான்காம் ஸ்கந்தம் முற்றுப்பெற்றது.