வெள்ளி, 10 ஏப்ரல், 2020

சொல்லின் செல்வன் - முனைவர் மா.சிதம்பரம்


தமிழ்க் காப்பியங்களில் குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெற்றது கம்பராமாயணம். ராமனின் பெருமை கூறுவதாய் அமைந்தது இக்காப்பியம், எனினும் அதனுள் மிகப்பெரும் சிறப்பினைப் பெற்ற பாத்திரம் அனுமன். அனுமன் காப்பியத்துள் அறிமுகமாகும் இடம் கிட்கிந்தா காண்டம் ஆகும். சபரிக்கு அருள் செய்த ராமபிரான் சுக்ரீவனைச் சந்திக்க வரும் இடத்தில் அனுமனைச் சந்திக்கிறார்.

 ராம இலக்குவணர்களை முதன்முதலில் காணும் சுக்ரீவன் தனக்குத் துன்பம் செய்ய வந்த வாலியின் ஆட்கள் என்று எண்ணி அஞ்சுகிறான். அவனின் அச்சத்தைப் பார்த்த அனுமன் தான் அவர்களைக் கண்டு வருவதாய்க் கூறி வந்து பார்க்கிறார். முதற் பார்வையிலே ராம இலக்குவணர்கள் தருமமும் தகவும் என்னும் தகைமை உடையவர்கள், கிடைத்தற்கரிய அருமருந்து போன்ற ஒன்றினைத் தொலைத்து விட்டுத் தேடி வருபவர்கள் போல் உள்ளது என்று உணர்கிறார்.

‘‘தருமமும், தகவும், இவர் தனம் எனும் தகையர்; இவர்,
கருமமும் பிறிது ஒருபொருள் கருதி அன்று; அது கருதின்,
அருமருந்து அனையது, இடை அழிவு வந்து உளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள் ”

மேலும் பிரம்மச்சாரியின் வடிவம் கொண்டு வந்து ராம இலக்குவணர்களைச் சந்திக்கும் அனுமன் இவர்களைக் காணும் பொழுது எனது எலும்பு உருகுகின்றது. இவர்கள்மேல் அளவிலா காதல் தோன்றுகிறது. திருமாலே இங்கு அறம் தலை நிறுத்த வந்தனன் எனவும் உணர்கிறான். அனுமன் ராம இலக்குவணர்களிடம் ‘கவ்வை ( துன்பம் ) இன்று ஆக நுங்கள் வரவு’ என்றே வரவேற்கிறார்.

இதன்வழி தாங்கள் ஏற்கனவே துன்பத்தில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்துவதுடன் உங்கள் வரவானது மேலும் எங்கள் துன்பத்தினை மிகுவிப்பதாய் அமைய வேண்டாம் என்பதனையும் உணர்த்துகிறார். ராமபிரான் அனுமனிடம் எவ்வழி நீங்கினோய்? நீ யார்? என வினவுகின்றார். அதற்கு அனுமன் மேகம் போன்ற மேனியைக் கொண்ட ராம பிரானே! நான் அஞ்சனை வயிற்றில் வந்தவன். என்னுடைய பெயர் அனுமன் என்று குறிப்பிடுகின்றான்.மேலும் இம்மலையில் இருந்து வாழும் சுக்ரீவன் என்பவனின் அமைச்சன் என்றும் கூறுகின்றான்.

“மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்” 

அனுமனின் பேச்சினைக் கேட்ட ராம பிரான் உயர்ந்த கல்வியும் அறிவும் அனுமனிடம் ஒரு சேர அமைந்துள்ளது என்பதனைக் கண்டு இலக்குவனிடம் இதோ நிற்கும் அனுமனாகிய இவன் கல்லாத கலையும் வேதக்கடலும் உலகத்தில் எங்கும் இல்லை. அதனை இவன் சொல்லினால் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புடைய இச்சொல்லின் செல்வன் யார்? என்று புகழ்ந்துரைக்கின்றார். மேலும் நல்லதோர் நிமித்தம் பெற்றோம், நம்பியைப் பெற்றோம்! என்றும் குறிக்கின்றார். இதனை,

“இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக் 
கல்லாத கலையும், வேதக்கடலுமே என்னும் காட்சி 
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில் ஆர் தோள் இளைய! வீர! விரிஞ்சனோ? விடை வலானோ?” 

என்ற பாடல் எடுத்துரைக்கும். வாலி வதம் நிகழவும் சுக்ரீவன் மன்னனாய் முடி சூடவும் முழுமுதற்காரணமாய் அனுமனே அமைகின்றார். அனுமனின் பேச்சிற்குப் பின்பே ராமன் சுக்ரீவனிடம் வானிடை மண்ணில் உனக்கு யார் நண்பர்களோ? அவர்கள் எனக்கும் நண்பர்கள்! உனக்கு யார் பகைவர்களோ அவர்கள் எனக்கும் பகைவர்கள் என்று பேசுகின்றார். வாலியை வென்று தாரத்தோடு தலைமையும் தருவேன் என்றும் கூறுகின்றார். இவ்வாறு வாலி வதம் நிகழவும் சுக்ரீவன் மன்னனாய் முடி சூடவும் முழுமுதற்காரணமாய் அனுமனே அமைகின்றார். 

ராமன் மூலம் அரியணையைப் பெற்ற சுக்ரீவன் கார்காலம் முடிந்ததும் சீதையை மீட்கப் படையோடு வருவதாய்த் தந்த உறுதியை மறந்து மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்த போது ராமன் மிகுந்த சினம் கொள்கிறார். ராமனால் அனுப்பப்பட்ட இலக்குவனும் மிகக் கோபமாகவே கிஷ்கிந்தை வருகிறார். இலக்குவன் வருவதனை அறிந்து தாரையை முன்னிறுத்தி இலக்குவன் சீற்றத்தினைக் குறைத்து சுக்ரீவனைக் காக்கும் பெரும் பணியையும் அனுமனே செய்கின்றார். ராமனுக்காக சீதையைத் தேடி அனுமன் செல்லும் பகுதியாகிய சுந்தர காண்டத்தின் நாயகனாய் விளங்குபவர் அனுமனே ஆவார். 

இந்த காண்டத்தில் கடல்கடந்தவன் யார்? அசோகவனத்தில் சீதையைக் கண்டவன் யார்? அசோகவனத்தை அழித்தவன் யார்? சீதையைக் கண்டு வந்து ராமனிடம் சொன்னவர் யார்? என்றெல்லாம் வினாக்கள் எழுப்பி விடை தேடுவோம் எனில் அது அனுமன் என்றே அமையும். மேலும் சுந்தர காண்டத்தின் முதல் படலம் கடல்தாவு படலம். இறுதிப்படலம் திருவடி தொழுத படலம். எனவே இக்காண்டத்தின் முதலும் முடிவுமாய் நின்றவர் அனுமனே ஆவார். உயிர்கள் பிறவி என்னும் கடலினைத் கடந்தால்தான் இறைவனின் திருவடியைத் தொழ முடியும் என்னும் ஞானத்தினை அனைவருக்கும் உணர்த்தி நின்ற பாத்திரமும் அனுமனே ஆவார். 

வான்மீகி காலத்தில் நடந்ததாய் ஒரு நிகழ்வு சொல்லப்படுவதுண்டு. வான்மீகி, ராமாயணத்தை எழுதும் போது காண்டங்களுக்கு எல்லாம் பெயர் வைத்தாராம், அப்போது அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைக் குறிக்கும் பகுதி அயோத்தியா காண்டம், ஆரண்யத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைக் குறிக்கும் பகுதி ஆரண்யகாண்டம், கிஷ்கிந்தையில் நிகழ்ந்த நிகழ்வுகளைக் குறிக்கும் பகுதி கிஷ்கிந்தா காண்டம் என்றெல்லாம் பெயர் வைத்தவர் சுந்தரகாண்டம் எழுதும் போது என்ன பெயர் வைப்பது? என்று யோசித்தாராம். சுந்தர காண்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் இலங்கையில் நடக்கின்றன. 

எனவே இலங்கா காண்டம் என்றுதான் பெயர் வைக்கவேண்டும். ஆனால் ராவணனின் நாட்டின் பெயரினை வைக்க விரும்பவில்லை வான்மீகி. எனவே சுந்தரகாண்டத்தின் நிகழ்வுகளை எல்லாம் புரிந்தவன் அனுமனே என்பதனால் அனுமன் காண்டம் என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தாராம். எதற்கும் அனுமனிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என்று அழைத்துக் கேட்டாராம். 

அதனைக் கேட்ட அனுமன் இக்காப்பியம் என் தலைவனாகிய ராமபிரானின் பெருமையைச் சொல்வது. அதில் அவரின் பெருமைதான் இருக்க வேண்டுமே தவிர அவரின் தொண்டனாகிய என்னுடைய பெயர் ஒரு காண்டத்தின் பெயராக இடம் பெறக் கூடாது என்று மறுத்துவிட்டாராம். வான்மீகி எவ்வளவோ வேண்டியும் அனுமன் இசையவில்லையாம். மேலும் இந்தக் காண்டத்திற்கு வேறு பெயர் வைத்தால்தான் இவ்விடத்தில் இருந்து செல்வேன் என்று அங்கேயே அமர்ந்து விட்டாராம். வான்மீகியும் வேறு வழியின்றி ’சுந்தரகாண்டம்’ எனப் பெயர் வைத்தபின்தான் எழுந்து சென்றாராம்.

நல்லவேளை நம்முடைய பெயரை வான்மீகி வைக்கவில்லை என்னும் மகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சென்றாராம் அனுமார். வீட்டிற்குள் அவர் நுழைந்தபோது அனுமனின் தாயாகிய அஞ்சனை வா! சுந்தரா! என்று அழைத்தாளாம். அனுமன் ஒன்றும்புரியாது தாயிடம் என்னை ஏன் சுந்தரா என அழைத்தீர்கள்? என்று கேட்ட பொழுது சுந்தரன் என்பதுதான் உன்னுடைய பெயர். நீ சிறுவயதில் சூரியனை பழம் என்று நினைத்துப் பறிக்கச் சென்ற போது இந்திரன் வஜ்ராயுதத்தினால் தாக்க உன்னுடைய கன்னம் சிதைந்து விட்டது. 

அதனால் நீ அனுமன் என்று அழைக்கப்பட்டாய்! அனுமன் என்பது காரணப் பெயரே தவிர இயற்பெயர் அன்று. சுந்தரன் என்பதுதான் உன் இயற்பெயர் என்று உணர்த்தினாளாம். இதன் மூலம் வான்மீகி அவர் கருத்தில் வென்றுவிட்டார் என்று அனுமன் நினைத்தாராம் இந்தச் செய்தி பிறிதோர் உண்மையை நமக்குக் கற்றுத் தருகிறது. இறைவன் முன்னர் யார் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அவர்கள் இறைவனால் தானாகவே உயர்த்தப்படுவார்கள் என்பதுதான் அது. இத்தகைய அரிய செய்தியை நாம் உணரக் காரணமாய் இருந்ததும் அனுமனின் செயலே என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

அனுமன் விஸ்வரூபம் எடுத்து கடல் கடந்து இலங்கையில் அடி எடுத்து வைக்கிறார். அனுமனைக் கண்ட இலங்கினி என்னும் அரக்கி இனி சித்திர நகரமாகிய இலங்கை நகரம் சிதைவது திண்ணம் என்று கூறியது. மேலும் ராம அவதாரத்தின் நோக்கமாகிய அறம் வெல்வதும் பாவம் தோற்பதும் அனுமன் உதவியாலே அமையும் என்பது போல்,

அன்னதே முடிந்தது, ஐய! அறம் வெல்லும் பாவம் தோற்கும்,
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்! உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி! ‘என்று புகழ்ந்தனள், இறைஞ்சிப் போனாள்.

என உரைத்தது. இதனால் ராம  அவதாரத்தின் அடிப்படை நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணை நின்றவன் அனுமனே என்பது பெறப்படும். இலங்கைக்குள் சென்ற அனுமன் சீதையைத் தேடினார். சீதையோ அரக்கியர் நடுவே அல்லல் உற்றவளாய்த் தன் தலைவனாகிய ராமனை எண்ணி உயிர் தரித்திருந்தாள். இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டு எழாதாளாய் இருந்த சீதையை அனுமன் கண்டார். சீதையின் தவக்கோலத்தினைக் கண்டு வியந்த அனுமன் ’மாண நோற்று சீதை இருந்தவாறெல்லாம் காண தவம் செய்தில ராமனின் கமலக்கண்களே’ என்று
பேசுகிறார்.

‘‘பேண நோற்றது மனைப் பிறவி! பெண்மைபோல் 
நாணம் நோற்று உயர்ந்தது! நங்கை தோன்றலால்!
மாண நோற்று ஈண்டு இவள் இருந்த ஆறு எலாம் 
காண நோற்றிலன் அவன் கமலக் கண்களால்!”

மேலும் அசோகவனத்தில் சீதையை ராவணனிடம் இருந்தும் அரக்கியரிடம் இருந்தும்,

“தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது
ஆற்றுவார்?

எனவும் வியந்துரைப்பார். இதன் மூலம் ஒரு பெண்ணிற்கு துன்பம் நேரும் சூழலில் அவளை அவள் முன்னர் செய்த தருமம் காத்து நிற்கும், அல்லது அவளின் பெற்றோர் செய்த நற்கருமம் காத்து நிற்கும், இவை இரண்டும் இல்லாவிடினும் அவளின் கற்பு காத்து நிற்கும் என்பதனை அறியமுடிகிறது. அசோகவனத்தில் ராமனின் வரவினை எண்ணி ஏங்கியிருந்த சீதாப்பிராட்டிக்கு அந்த நம்பிக்கை சிறிது தளர்ந்து போக உயிரைவிடத் துணிகின்றார். 

அத்தகைய சூழலில் அண்டர் நாயகன் அருட்தூதன் நான் எனத் தொழுது தோன்றி சீதையின் உயிரைக் காத்தவரும் அனுமனே ஆவார். அனுமனைக் கண்ட சீதைக்கு இது அரக்கனாகிய ராவணனின் செயலோ என்று ஐயம் தோன்றியதாம். உடனே அரக்கர் ஆனாலும் சரி, அன்றி அமரன் ஆனாலும் சரி, அல்லது குரங்கினத்துள் ஒருவனே ஆனாலும் சரி, என் தலைவனாகிய ராம பிரான் நாமம் சொன்னான். இதன்மேல் உதவி உண்டோ? என நினைத்தாராம். இதனை,

அரக்கனே ஆக : வேறு ஓர் அமரனே ஆக : அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக : கொடுமை ஆக :
இரக்கமே ஆக : வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத், தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ?

என்ற கம்பராமாயணப் பாடல் விளக்கியுரைக்கும். சீதை அனுமனிடம் ராம பிரான் எப்படி இருக்கிறார் என வினவும் பொழுது,

“இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்”

என்று குறிப்பிடுகிறார். இதில் குறிக்கப்படும் இயந்திரப் படிவம் என்பது இன்றைய நவீன விஞ்ஞானம் உரைக்கும் “ரோபாட்” என்பதனையே ஆகும். உணர்ச்சியற்று இயங்கும் இயந்திரப் படிவத்தை உவமையாய்க் குறிக்கும் அனுமனின் அறிவு நுட்பம் எண்ணும் தோறும் இன்பம் பயப்பதாகும். சீதைக்கு ராமபிரான் கொடுத்தனுப்பிய கணையாழியைக் கொடுத்து நம்பிக்கை வளர்த்தெடுத்தவர் அனுமனே ஆவார்.

அதனைக் கண்ட சீதாதேவி ராமனையே கண்டவராய் மகிழ்ந்து ’இம்மையே மறுமை தானும் எனக்கு நல்கினாய்’ என அனுமனைப் புகழ்ந்துரைத்தார். மேலும், தான் கற்புடைய பெண் என்பது உண்மையாகில் எத்தனை யுகங்கள் கடந்தாலும் இன்றுபோல் என்றும் இரு என்றும் வாழ்த்தினார்.

‘பாழிய பணைத்தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய! வள்ளலே! யான மறு இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவு உற்ற ஞான்றும், இன்று என இருத்தி! என்றாள்.

சீதையிடம் சூளாமணியைப் பெற்றுக் கொண்டு கிளம்பிய அனுமன் நேராக ராம பிரானிடம் வராமல் ராவணனைச் சந்திக்க ஒரு வழியைச் செய்கிறார். அசோகவனத்தினை அழிக்கிறார். அதனைக் கண்ட இந்திரசித்து பிரம்மாஸ்திரத்தை ஏவ எதற்கும் கட்டுப்படாத அனுமன் ராவணனைக் காண வேண்டும் என்பதால் அதற்குக் கட்டுப்பட்டு ராவணனின் அரண்மனை செல்கிறார். ராவணன் அனுமனிடம் நீ யார்? என வினவ, ராமபிரான் என்னும் இறைப்பரம்பொருளின் தன்மைகளை எல்லாம் தனது வாக்கினால் உணர்த்தி அவருடைய தூதன் நான் என்பதையும் சீதையை விடுவாய் ஆகில் பிழைப்பாய்! என்பதனையும் அறிவுரையாய்ப் புகட்டுகின்றார்.

அதனால் கோபம் கொண்ட ராவணன் அவரின் வாலிற்குத் தீ வைக்கஆணையிடுகிறான். அனுமனின் வாலில் அரக்கியரின் தாலிக்கயிறைத் தவிர இலங்கையில் இருந்த அனைத்து கயிறுகளையும் கொண்டு வந்து சுற்றினராம். அரக்கியரின் தாலிக்கயிறை இறக்க வேண்டியவர் ராமரே தவிர அனுமன் இல்லை. தலைவனின் வேலையைத் தொண்டன் செய்யக் கூடாது. எனவே தாலிக் கயிற்றைத் தவிர என உணர்த்தினார் கம்பர். அனுமனின் வாலிற்குத் தீ வைக்கப்பட்டதை அறிந்த சீதாதேவி தீக்கடவுளே! சுடாதிருப்பாயாக! என ஆணையிட்டார். 

தீக்கடவுளும் பணிந்தது. அனுமன் தொண்டன் இல்லையா? தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாதவர், அவர் தனக்கு பிறர் என்ன வழங்குகிறார்களோ அதனை அவர்களுக்கே பல மடங்காய்த் திரும்ப வழங்கிவிடுபவர். ராவணன் நெருப்பினை வழங்கினான், அதனை அவனின் இலங்கைக்கே திரும்ப வழங்கினார். 

திரும்ப வந்து ராம பிரானைத் தொழுது ‘கண்டேன் கற்பினுக்கு அணியைக் கண்களால்’ என்றார். மேலும் சீதாப் பிராட்டியார் உன்னுடைய தேவி என்கிற உரிமைக்கும் உன்னைப் பெற்ற தயரதனின் மருமகள் என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னனாகிய சனகனின் மகள் என்னும் தன்மைக்கும் தலைமை உடையவளாய் ஆனார். இத்தகைய சிறப்புகளை உடைய அப்பிராட்டி ‘என்பெருந்தெய்வம்’ என்றும் போற்றினார். இதனை,

“உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன்
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்;
என் பெரும்தெய்வம்; ஐயா! இன்னமும் கேட்டி? என்பான்.

இவ்வாறு சீதையின் பெருமை எல்லாம் சொல்லி ராமனின் துன்பத்தினையும் நீக்கியவர் அனுமனே ஆவார். ராம  ராவண யுத்தம் நடைபெற்ற போது இந்திரசித்துவின் கணைக்கு இலக்குவன் மயங்கி வீழ்ந்தது கண்டு இலக்குவன் இறந்து விட்டான் எனக் கருதும் ராமன் வீடணனிடம் ‘கெடுத்தனை வீடண’ எனக் கூறி தானும் இறக்கத் துணிகின்றார். 

அப்போது சஞ்சீவி மலையைக் கொணர்ந்து இலக்குவனை மீட்டதுடன் வானரப் படைகளையும் மீட்டு அதன் மூலம் ராமபிரான் உயிரையும் மீட்டவர் அனுமன். ராவணனை வெற்றி கொண்டபின் அயோத்தி நோக்கிச் செல்லும் வழியில் ராமபிரான் பரத்துவாசரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது ஆசிரமத்தில் விருந்துண்ண அமர்ந்தமையால் காலம் நீண்டது. ராமன் குறித்த காலத்தில் நந்தி கிராமம் வராமையால் பரதன் தீயில் வீழ்ந்து உயிர் விடத் துணிகின்றான். அப்பொழுது...

“ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன்”

 - என ராமனின் வருகையை பரதனுக்குச் சொல்லி பரதன் உயிரையும் காத்தவர் அனுமனே ஆவார். இவ்வாறு ராமாயணத்தில் சுக்ரீவன் உயிரை, சீதையின் உயிரை, இலக்குவன் உயிரை, ராமன் உயிரை, பரதன் உயிரைக் காத்த தொண்டர் அனுமன். அது மட்டுமன்று சுக்ரீவன் பட்டாபிஷேகம், வீடணன் பட்டாபிஷேகம், ராமன் பட்டாபிஷேகம் போன்றவற்றிற்கும் அறம் வென்று பாவம் தோற்றதிற்கும் பெருந்துணையாய் நின்றவர் அனுமனே ஆவார். அதனால்தான் ராமபிரான் சீதாதேவியுடன் அரியணையில் அமர்ந்தபின் போருக்கு உதவிய பலருக்கும் பரிசுப் பொருட்களை வழங்குகிறார். ஆனால், அனுமனின் செயலுக்கு எதனைக் கொடுத்தும் ஈடுகட்ட முடியாது என்பதால்தான் என்னை வந்து தழுவிக் கொள்! என்கிறார்.

“மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, 
ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த 
பேர் உதவிக்கு யான்செய் செயல் பிறிது இல்லை; பைம்பூண் 
போர் உதவிய திண்தோளால் பொருந்துறப் புல்லுக! என்றான்” 

பொதுவாகத் தழுபுபவர் உயர்ந்தவர் என்பதும் தழுவிக் கொள்ளப்படுபவர் தழுபுபவரினும் சற்று தாழ்ந்தவர் என்பதும் சமூக மரபு ஆகும். அந்த அடிப்படையில் தன் தொண்டனுக்காக ராமபிரான் தன்னையே தாழ்த்திக் கொள்கிறார். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! என்னும் ஔவையின் வாக்கு நிரூபணமாயிற்று அன்றோ! தலைவனால் தழுவிக் கொள்! என்று உரிமை வழங்கப்பட்டபோதும் தழுவிக் கொள்ளாது வணங்கி நின்ற அனுமன் நம் உள்ளத்தில் மேலும் உயர்ந்து நிற்கிறார். ராம தூதனின் நாமம் சொல்லி வாழ்வில் வெற்றி கண்டு மகிழ்வோம்!

“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்”

நன்றி - தினகரன் ஆன்மிகம் டிசம்பர் 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக