ஞாயிறு, 22 மார்ச், 2020

அனுமனுக்கு சிந்தூரம் ஏன்? - அமரர் ரா.கணபதி


ஆஞ்சநேய ஸ்வாமி ஸிந்தூரப் பூச்சு பெற்றதற்கு உள்ள வரலாறோ ரஸம் சொட்டும் ஒன்று. கர்ண பரம்பரையாக வழங்கும் கர்ணாம்ருதமான வரலாறு. அசோகவனத்திலிருந்த அதிசோக காலத்தில் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அடியோடு நாட்டமற்று வாட்டமுற்றிருந்தவள் கற்பரசியான பிராட்டி. அவளிடமும் ஓர் அலங்காரத்தைக் கண்டு ஆஞ்சநேயன் ஆச்சரியம் அடைந்தான்.

அவளது நெற்றி உச்சியில் தீற்றியிருந்த சிந்தூரம்தான் அது. வானரிகளில் சுமங்கலிகள் சிந்தூரம் இட்டுக் கொள்ளும் வழக்கமில்லை போலிருக்கிறது. எனவே ஆச்சரியப்பட்டான். அவளிடமே கேட்டான், “தாயே, தப்பாக எண்ணாதே! அணி பணி யாவும் நீக்கிய உன் பவித்திரமான மதி முகத்தை சோக மேகம் மூடி மங்கச் செய்திருப்பதால் பாவி ராவணனுக்கு உண்டாகக் கூடிய தகாத உணர்ச்சி இந்த மட்டுமாவது கட்டுப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்க நீ செக்கச்செவேலென்றிருக்கும் இந்த ஏதோ ஒரு பூஷணத்தைத் தரித்துக்கொண்டு அதன் வசீகரத்தை ஏன் விருத்தி செய்து கொள்கிறாய்?” ஆராத்துயரிலும் அதைக் கேட்டு அன்னையால் புன்னகைக்காதிருக்க இயலவில்லை. அன்பாக மறுமொழி சொன்னாள். 

‘‘மகனே! இது என் அழகை விருத்தி செய்து கொள்ளும் அலங்காரம் அல்ல. என் நாதனின் - நம் பிரபுவின் - ஆயுர் - ஆரோக்யங்களை விருத்தி செய்து கொள்ளும் ரக்ஷையே இது. மணமான ஒரு மங்கையின் மாங்கல்யத்தைக் காத்துத் தரும் பரமமங்கள ரக்ஷை. அலங்காரமாகவும் இதை இரு இமைகளுக்கிடையில் இட்டுக் கொள்ளலாம். 

ஆனால், அவ்வாறு கார் நிறக் கஸ்தூரி, மை, சாந்து முதலியவற்றையும் திலகமாகத் தரிப்பதுண்டு. பதியின் க்ஷேமத்திற்காகவோ குங்குமம் எனப்படும் மங்களச் சின்னமான இச்சிந்தூரத்தைத்தான் மகாலட்சுமியின் வாச ஸ்தானமான நெற்றி உச்சியில் வகிட்டில்தான் இட்டுக் கொள்ள வேண்டும். என் துரதிருஷ்டத்திலும் ஓர் அதிருஷ்டமாக இந்த லங்காபுரி அமைந்துள்ள திரிகூட பர்வதத்தின் இப்பகுதியில் சிந்தூர தாதுப் பாறைகள் இருக்கின்றன. எனவே, தினமும் அதைக் குழைத்து ஆரிய புத்ரரின் ஆயுராரோக்ய வளர்ச்சிக்காகத் தீற்றிக் கொள்கிறேன்.”

இதைக் கேட்டானோ இல்லையோ மாருதிக்கு மின்னலாகச் சிந்தனை படர்ந்தது. பரம பக்தியின் பெருமையும் குழந்தைப்பிள்ளைத்தனத்தின் எளிமையும் ஒன்று கலந்த சிந்தனை! ‘சிந்தூரம் இட்டுக் கொண்டால் நம் பிரபுவுக்கு நன்மை எனில் இந்த அம்மாள் மாத்திரம் ஏன் அந்நன்மையைப் புரியவேண்டும்? நானும்தான் புரிகிறேனே! அவள் வகிட்டில் மட்டும் இட்டுக் கொண்டுவிட்டால் அப்படியே செய்து விட்டுப் போகட்டும். எனக்கு அது போதாது! தலையோடு கால் ஸர்வாங்கமும் பூசிக் கொண்டாலே எனக்குத் திருப்தி ஏற்படும்’ என எண்ணினான்.

எண்ணியவாறே அதன்படி செய்தும் விட்டான்! அதன் தொடர்ச்சியாகவே பிற்பாடு அவனது வடிவங்களுக்குச் சிந்தூரம் பூசும் வழக்கு ஏற்பட்டது. ‘ஸர்வாருணா’ என்று ஸர்வாங்கமும் கருணையால் அருண நிறமான அம்பிகையைச் சொல்வதுபோல நம் கருணா ஸிந்துவும் ஸிந்தூர மாருதியானான்.

‘தலையிலிருந்து கால்’ சிந்தூரம் பூசியதாகச் சொன்னோம். ஆனால் நரருக்குத்தான் ‘சிரசே பிரதானம்’. வா(ல்)நரருக்கு வால்தான் பிரதானம். ஆதலால் அவன் முதலில் தன் வாலின் அடியிலிருந்து நுனி வரை பூசி, அப்புறமே தலையோடு கால் பூசிக்கொண்டானாம்!

இயற்கையிலுண்டாகும் சிந்தூரப் பொடியைக் குங்குமமாகத் தீற்றிக் கொள்வதே மாதர் குலத்தின் பூர்வகால வழக்காக இருந்துள்ளது. மஞ்சள் முதலானவற்றை இடித்துக் குங்குமம் செய்வது பிற்காலத்தில் ஏற்பட்டதே. கர்ண பரம்பரைக் கதைக்கு ஆதரவாக, ஆதாரமாக வால்மீகி ராமாயணத்திலுமே ரமணீயமான, ‘ராமனீய’மான ஒரு நிகழ்ச்சி உண்டு. அதைப் பிராட்டியே அனுமந்தனிடம் உளம் விட்டுக் கூறுகிறாள். 

அனுமன் உண்மையன்றி எதுவும் கூறான் என ஐயனுக்கு உறுதி உண்டாயினும் உலக நீதிப்படியே எதையும் ஏற்கும் ஐயன் தன்னை அனுமன் சிந்தித்ததன் உண்மையை உலகநீதிப்படி ஒப்பவேண்டுமெனில் தானும் அவனுமே அறிந்த அந்தரங்க நிகழ்ச்சிகளையும் அனுமனிடம் கூறி அனுப்ப வேண்டும் எனக் கருதி வைதேகி மனம் திறந்து வாயு குமாரனிடம் கூறும் சிருங்கார நிகழ்ச்சிகளில் ஒன்று இது. சுருட்டி வைத்த பட்டுப் பாயாக ஒரே ஸ்லோகத்தில் வால்மீகி கூறுவதை நாம் விரித்துப் பார்ப்போம்.

வனவாச காலத்தில் ஒருநாள் தேவி கடும் வெயிலாலும் அலுவலாலும் வியர்த்து விறுவிறுத்துப் போனாள். அதில் அவளது திருமுகத்தின் ஸௌந்தர்யத்தையும் ஸௌமங்கல்யத்தையும் ஒருங்கே சுடர் விட்டொளிரச் செய்யும் ஸிந்தூர லேபனம் கரைந்தோடிப் போயிற்று.

அவளைப் பார்த்தான் பிரிய நாயகன். அயோத்தியில் அரண்மனை போகத்தில் வாழவேண்டியவள் உழைத்துக் களைத்தாளே என்ற பரிவு பொங்கியது. அதனுடனேயே கை கோத்துக்கொண்டு பிரேமையும் பொங்கியது. 

பிரேமை வந்தவுடன் விளையாட்டு விநோதவுணர்வும் பொங்கி வந்தது. அழகே உருவான சீதைக்கு எந்த அழகு சாதனமும் தேவையில்லைதான். திருமணத்தின்போது அவளுக்குச் சேடியர் அலங்காரம் செய்ததைக் கூறும் கம்பன் அமுதுக்குப் புதிதாகச் சுவைகூட்டப் புகும் அறியாமைச் செயலாகவே அவர்கள் ‘அழகினுக்கு அழகு செய்தார்’ என்று கூறுவானே!

ஆயின் அழகு இருக்கட்டும்; அறநூல் மரவு என்னாவது? ராமச்சந்திர மூர்த்திக்கு அதனைப் பின்பற்றுவதேயல்லவா வாழ்நாள் விரதம்? அதன்படி ஸுமங்கலி உச்சிச் சிந்தூரம் இல்லாது இருக்கலாமா? அதோடு நெற்றித் திலகமும் ஆன்றோரின் நெடுநாள் வழக்காகியிருப்பதால் அதுவும் சாஸ்திரம் போலவே பிரமாணம் கொண்டதல்லவா? - இவ்வாறு ராமபிரான் எண்ணினான்.

பக்கத்தே இருந்தது ஒரு செம்பாறை. ‘மனசிலை’ எனும் பாதரசமும் கந்தகமும் கலந்த இயற்கை தாதுக்களான பாறை அது. அதன் பொடிதான் சிந்தூரம். பாறையை வருடிக் கொண்டு சென்றது ஒரு சிற்றாறு. ஐயன் மகிழ்ந்தான். தண்ணீர் தெறித்து பாறையைக் குழைத்தான். செந்துகள் சிந்தூராஞ்ஜனமாகத் திரண்டது. எதையும் சாஸ்திராக்தமாகச் செய்யும் தன் வழக்கப்படியே அதில் சிறிதை மோதிர விரலால் எடுத்தான்.

 அரச குமாரனுக்குரிய அத்தனை வஸ்திர - பூஷணங்களையும் களைந்துவிட்டே அவன் வனவாசியான போதிலும் அவனது மோதிர விரல் மட்டும் மோதிரம் தரித்த விரலாகவேதான் அப்போதும் இருந்தது. அதை ஏன் அவன் கழற்றவில்லை எனில் - பரமஞானியான ஜனக மகாராஜன் யாக்ஞவல்கிய மகாமுனிவரிடம் ஞானோபதேசம் பெற்றவன். உபதேசம் பூர்த்தியானதுடன் முனிவருக்கு ராஜன் ஏராளமாக தக்ஷிணை சமர்ப்பித்தான். அப்போது முனிவரும் அவனுக்கு ஒரு திவ்விய ஆபரணத்தைப் பரிசாக அளித்தார். 

சிறப்பாகத் தேர்வு பெறும் மாணாக்கனுக்கு ஆசிரியர் பரிசளிப்பதுபோல! யாக்ஞவல்கியர் ஸூர்ய பகவானிடம் உபதேசம் பெற்றவர். தாம் பெற்ற அந்த உபதேசத்தையே அவர் சுக்ல யஜுர் வேதமாக உலகுக்கு ஈந்தார். (இங்கு அவருக்கும் அனுமனுக்கும் ஒற்றுமை! அனுமனும் ஆதவனிடமே வித்யை கற்றவன்தான்!) உபதேசம் முடிந்த ஆதித்தியன் முனிவருக்கு ஒரு மோதிரமும் பரிசாக அளித்தான். அதிலே ‘மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திர’மும், ‘தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பத’மும், ‘இம்மையே எழுமை நோய்க்கு மருந்து’ மான ராம என்ற ‘செம்மை சேர் நாமம்’ பொறித்திருந்தது. - ராமாவதாரம் நிகழ்வதற்கு வெகுகாலம் முன்பே!

கதிரவன் சிஷ்ய முனிவரனிடம் சொன்னான். ‘‘பிற்காலத்தில் நீ விதேக நாட்டரசனான ஜனகனுக்கு நான் உபதேசித்த ஞான தனத்தை வழங்குவாய். இப்போது நான் உபதேசப் பூர்த்தியின் பரிசாக அளிக்கும் இந்த அங்குளீயத்தை நீயும் அவனுக்கு உபதேசித்து முடிக்கும்போது அளிப்பாயாக! என் குலத்தின் ஒப்பற்ற ஒளி விளக்காகப் பரமபதநாதன் புவியில் அவதரிப்பான். அவனை மருமகனாகவும் திருமகளின் அவதாரத்தை மகளாகவும் பெறும் பாக்கியம் ஜனகனுக்கே வாய்க்கும். 

விவாக காலத்தில் மருமகனுக்கு மாமன் வழங்கும் வரிசைகளில், ஜனகனின் மரபுப்படி மணமகளே அங்குளீயத்தை பதியின் விரலில் அணிவிப்பது வழக்கம். அவ்வங்குளீயத்தில் மணமகன் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும் வழக்கம். 

நான் சொன்ன அந்த என் வம்சத்தின் வழித் தோன்றலாகிய அவதாரன் ராமன் என்ற தாரக நாமத்தைப் பெற்றிருப்பான். யாவரையும் இன்புறுத்துபவன் என்பதால் - ‘ரமயதீதி’ - அவன் ‘ராமன்’ எனப்படுவான். அப்பெயர் பொறித்த இம்மோதிரத்தை லோக மாதா மகாலட்சுமியே ஜனக நந்தினியான ஸீதையாகி அவளது ரமணனான மணமகன் ராமனின் திருவிரலில் தன் திருக்கரத்தால் அணிவிப்பாள். பின்னர் ஒருகால், உன் போலவே என் சிஷ்யனாக மொழியிலக்கணம் உள்பட சகல வித்யைகளும் பயிலப்போகும் ஹனுமான் என்ற வானர சிரேஷ்டனின் மூலம் இம் மோதிரம்தான் அந்த தேவியின் இன்னுயிரைக் காத்து இன்ப நம்பிக்கையூட்டும்.”

அவ்வாறே ஜனகனின் அன்புப் பரிசாக ஜானகியின் அமுத ஸ்பரிசத்தோடு ராமனின் திருவிரலில் அம்மோதிரம் விவாஹ சுப முஹூர்த்தத்தின்போது ஏறிற்று. கணை பொழியும் அவதாரமாக வந்த ஆழிக் கையன் விரலில் தேவி தனக்கு அவனிடமிருந்த ஆழியளவான பிரேமையின் கணைவீச்சாகவே அக்கணையாழியை அணிவித்தது எத்துணை மதுரமான நிகழ்ச்சி? அதோடு அவ்வங்குளீயம் குல முதல்வனான கதிரவன், ஒரு முழு வேதத்தையே வையகத்திற்குக் கண்டு கொடுத்த மாமுனி யாக்ஞவல்கியர் ஆகியோரின் அருட்பிரசாதமுமாகும். அதனால்தான் அணிபணி யாவும் துறந்தபோதும் ஐயன் அதை மாத்திரம் அகற்றவில்லை.

சிந்தூரப் பொடியைக் குழைத்த, ஸ்வாமி, ஆகா, எத்தனை மங்களமான காட்சி!.... அதில் சிறிதை மோதிரவிரலால் எடுத்து மங்கள நாயகியின் வகிட்டிலே இட்டான். மேலும் ஒரு முறை எடுத்து நெற்றித் திலகமாகவும் தீற்றினான். அதோடும் நின்றானில்லை. சிருங்கார அன்பில் விளையாட்டு விநோதமும் வந்துவிட்டதே! அதனால் பின்னரும் ஒருமுறை சிந்தூரப் பசையை எடுத்து ‘ப்யூடி ஸ்பாட்’டாக அவளது இடது பக்கக் கண் கோடிக்குச் சற்றுத் தாழ்வாக இட்டான்.

அதோடாவது நின்றானா? ஊ...ஹும்! குழைத்திருந்த சிந்தூரத்தின் மீதம் முழுதையும் எல்லா விரல்களிலுமே வழித்தெடுத்து அன்பு நாயகியின் கன்ன கதுப்பு முழுதிலும் தடவினான் - ஹோலித் திருவிழாவாக!

வன்மீகத்தில் “கண்ட பார்ச்வே” என்று அப்படிக் கன்னப் பிரதேசத்தில் ஐயன் பூசியதை மட்டுந்தான் அன்னை சொல்கிறாள். அதுதானே விசேஷமான விநோத அம்சம்?

அரச மாளிகை விட்டு அரணியம் புகுந்ததால் மனம் நொய்யாமல் தொய்யாமல் இப்படி ஆனந்த கேளியாக அந்த அப்பனும் அம்மையும் ப்ரேமை பொழிந்து வாழ்ந்ததில்தான் எத்தகைய உயர்வைக் காண்கிறோம்? அன்னை கன்னம் முழுதும் ஸ்வாமியே சிந்தூரம் பூசினான் எனும்போது அவனது ப்ரேமையில் அவளுக்குப் போட்டியாளான அனுமன் ஸர்வாங்கமும் அந்தப் பூச்சைச் செய்து கொள்வது பொருத்தந்தானே?

இந்த அழகான கதை உள்ளுறை சிருங்கார ரஸத்தோடு இன்னமும் மெருகிட்டுக் கொண்டு உருவான இன்னொரு கதையும் உண்டு. வட நாட்டில் வழங்கும் கதைகளிலொன்றாக அது உள்ளது. அடக்க உருவ மாருதி அன்பின் ஸ்வாதீனத்தில் ஸ்வாமியிடம் அடங்காமல் ‘உர் உர்’ செய்யும் விசித்ர சித்ரம் காட்டும் கதை!

ராம பட்டாபிஷேகத்திற்குப் பிற்காலம். வைபவம் முடிந்தபின் அரக்கர், குரக்கர் யாவரும் லங்கைக்கும் கிஷ்கிந்தைக்கும் புறப்பட்டனர். அனுமானுக்கு மட்டும் பெருமானை விட்டுப் புறப்பட மனஸு வரவில்லை. தனக்கான தர்மம் என்று தன் ஸ்வாமி எடுத்துக் கூறியதை அனுமன் எப்படி ஏற்காதிருப்பான்? தாய்ப் பசுவை விட்டுப் பிரியும் கன்றாகக் கிஷ்கிந்தைக்கு விடை கொண்டான்.

‘புத்திமதாம் வரிஷ்ட’னான அவன் சிறிது காலத்திலேயே புதிய அரசாட்சிக்கான வழிமுறையை வகுத்து விட்டான். சுக்கிரீவனும் சிறப்பான தகுதிகள் பெற்றவனாதலாலும், அனுமனை ஐயன் பணிக்கு அனுப்புவதில் ஆர்வமுள்ளவனாதலாலும் விரைவிலேயே அதை ஸ்வீகரித்து, திறம்பட ஆட்சி புரியத் தேர்ச்சி பெற்றான்.

கிஷ்கிந்தையில் ஸூர்யபுத்ரனுக்கு மதியமைச்சாக மகிமைப்பதவி வகிப்பதைவிட அயோத்தியில் ஸூர்ய குல மணித் தீபமாக விளங்கும் ஆரிய புத்திரனுக்கு ஸமீபத்திலேயே ஸதா கால ஸேவகனாக இருப்பதே பெருமை எனத் தேர்ந்த அனுமன் ஆர்வ ஆர்வமாக அயோத்தி புகுந்தான். ராமனின் பணியில் அன்று அனுமனுக்கு முதல் நாள். ஸேவா பாக்கியமும் கிடைத்து மிகவும் ஆனந்திக்கத்தான் செய்தானென்றாலும்....? ‘ஸமீபத்திலேயே ஸதாகால’ ஸேவை என்பதுதான் நடக்கவில்லை!

இரவு வேளை வந்தது. மற்ற எல்லா ஸேவகர்களும் அவரவர் இல்லங்களுக்குச் சென்றனர். இராக் காவல் பணியாளர், அந்தப்புரப் பணியாளர் ஆகியோர் ‘நைட்ஷிஃப்டு’க்கு வந்தனர். பகலெல்லாம் தனக்கு அருமையாகப் பணிபுரிந்த அனுமன்தனை ஐயன் பரிவொழுகும் பார்வையாலேயே வருடிக்கொடுத்து இதமொழுகும் மது வசனமாக, “பிரிய, நீயும் பகல் நேரப் பணியாளருடன் போய் உனக்காக நான் ஒதுக்கியிருக்கும் மாளிகை சென்று உறங்கி ஓய்வு கொள்வாய்! நாளை காலை திரும்ப வரலாம்!” என்றான்.

இதமொழுகும் மது சுடர் தெறிக்கும் நெருப்பாக அனுமனைத் தகித்தது! பிரானின் நெஞ்சு நெகிழ்ந்தது! “சரி அப்பனே! சயனக் கிருகத்திலும் நீ சற்று நேரமிருக்கலாம்” என்று கூறினான். அடம் பிடிக்கும் குழந்தையாக, அன்புப் பிச்சேறிய பைத்தியம்போல ஆனான் ஆஞ்சநேயன். பூட்டிய கடைக் கதவை நொடியில் அலாக்காகப் பெயர்த்துத் திறந்து உள்ளே புகுந்தான்.

ஒரே இருள் மயம்! ஸிந்தூரப் பெட்டகங்கள் எங்கேயுள்ளன என்று தெரியவில்லை. வழக்கமாக இது போன்ற எந்தத் தடுமாற்றத்திலும் நொடியில் அதன் நிவாரணத்திற்கு உபாயம் கண்டுவிடும் புத்தி தீக்ஷண்யம் பெற்றவனவன். ஆனால் இன்று அப்புத்தி தடுமாறிப் போயிருக்கிறதே! நெடுநேரம் குழம்பிக் கொண்டு பயன் தராத ஏதோ அசட்டு முயற்சிகள் செய்தான். அப்புறம் ஒருவாறு ஸிந்தூரத்தைத் தேடிக் கண்டு பிடித்துவிட்டான்.

அதில் சிறிது எடுத்து பெண்களுக்கு வகிடு பிரியும் இடத்தில் இட்டுக் கொள்ளப் போனான். ஆயின் அது தன் சிரஸில் எந்த இடமாக இருக்கும் என்று அவனுக்குப் புரிபடவில்லை. புரிய வைக்கக் கண்ணாடி இருக்கிறதா என்றும் அந்த இருட்டில் தெரியவில்லை.

சட்டென்று ஏதோ தோன்றிக் குஷியில் வாலைத் தூக்கிக்கொண்டு ஒரு குதி குதித்தான், குரங்குக் குட்டியாகவே ஆகிவிட்டிருந்த அனுமான். இப்போது ஓர் அம்சத்தில் மனித ஸாமர்த்தியத்தையும் விஞ்சி மனிதனையே ஏமாற்றக்கூடிய குரங்கின் அதி ஸாமர்த்திய புத்தி அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. அதுதான் அப்படிக் குதி போட வைத்தது.

அப்படி என்ன நினைத்தான்? ‘எங்கே ஸ்திரீகளின் வகிடு பிரியும் இடம் என ஏன் தேடவேண்டும்? ஸீதம்மாவின் வகிட்டில் உள்ள ஸிந்தூர விசேஷந்தான் அவளை எக்காலமும் தன்னுடன் இருத்துவது என ஸ்வாமி சொன்னான். அவன் சொன்னால் அது ஸத்தியந்தான். அவனுக்கு அருமையான நம்மைத் தள்ளி அவளையே அவன் உடன் கொண்டதிலிருந்தே தெரிகிறதே! 

ஆயினும் மற்றொரு புறம் அந்த ஸீதையும் ஸ்வாமியைப் பிரிந்து பத்து மாதங்கள் பரிதவிக்க வேண்டித்தானே இருந்தது? அதன்பின் அவனைச் சேர அவள் வந்தபோதோ ஸ்வாமியே அன்னியனின் ஆதீனத்திற்கு ஆளாகியிருந்த அவள் தன்னோடு சேருவதற்கில்லை எனத் தயா தாக்ஷிண்யமின்றிக் கூறி, “நீ வேறே எங்கே வேண்டுமாயினும் போயிரு” என்று அவளைத் தள்ளினானே! இம்மாதிரி யெல்லாம் நேர்ந்ததற்குக் காரணம் அவள் அந்த வகிட்டுப் பகுதியில் மாத்திரம் சிந்தூரம் பூசியதாகத்தானிருக்க வேண்டும்.

நாம் அப்படிச் செய்யவேண்டாம். வகிட்டைத் தேடிக் கொண்டிராமல் ஸர்வாங்கங்களிலும் பூசிக் கொள்வோம். அப்போது ஸர்வ காலமும் பிரிவே இல்லாமல் ஸ்வாமியுடனேயே சேர்ந்திருக்கலாம். அதிர்ஷ்டவசமாக இந்தக் கடையில் எவருமில்லை.

நாம் யதேஷ்டமாக சிந்தூரத்தை தஸ்கரம் செய்து வாலாதி - பாதாதிகேசம் பூசிக்கொள்ளலாம்’ என நினைத்தான். அந்த எண்ணம் பளிச்சிட்ட ஆனந்தத்தில்தான் வாலைத் தூக்கிக் கொண்டு அவன் குதித்தது. அவ்வாலின் அடியிலிருந்து நுனிவரை முதலில் சிந்தூரம் பூசிக்கொண்டான். அப்புறம் எண்சாண் உடம்பு முழுவதிலும்! குக்ஷியுடன் குதிநடை போட்டுக்கொண்டு  ராமச் சந்திரனின் சயன அறைக்கு விரைந்தான்.

இவன் அங்கு போய் நிற்கவும் வானமா தேவி சிந்தூரம் பூசிக்கொண்டு வைகறை வேளையை விரிக்கவும் சரியாயிருந்தது. எனவே வையம் வந்த வைகுந்தனும் ப்ராதகால அனுஷ்டானத்திற்காக அதே போதில் சயன கிருகத்திலிருந்து வெளியே வந்தான்.

ஸர்வாங்க ஸிந்தூர ஸுந்தரனாக நின்ற மாருதியைக் கண்டதும் ஐயன் விநோதக் களி கொண்டான். அவனது அந்தக் கோலத்திற்கு என்ன காரணம் என்பதையும் உணர்ந்தான். ஆனந்த பாஷ்பம் தாரை தாரையாய்க் கொட்ட அனுமந்தன் அவன் அடியில் விழுந்தானெனில் அவனைத் தூக்கி அணைத்தெடுத்த ஐயனது கண்களிலும் அவனது அன்புப்பித்தன் ஆழத்தைப் பற்றிய மகிழ்ச்சி நெகிழ்ச்சி நீர் முத்துக்களைச் சூட்டியிருந்தது.

இத்தனை நேரம் முரண்டு பக்தி செய்தானெனினும், இப்போது அந்த பாவத்திலேயே தன்னை ஐயன்தான் உள் நினைவில் அவனை பிரியாது எந்நாளும் இருக்க வேண்டுமேயன்றி தன்னால் அது ஆகாது என சரணாகதி செய்து சரண கமலத்தில் விழுந்தான். “செய்தேன்!” என்று ஸத்திய சீலன் ராமன் அக்கணமே அவ்வருளைப் பொழிந்து, அவனுடனேயே கணமும் நீங்காது நித்யவாஸம் செய்யும் பேரானந்த உள்ளுணர்வை அனுமனுக்கு அளித்துவிட்டான்.

அது இதயாநுபவமே! ஆயின் பொது மக்கட் சமூகம் வெளிப்படை விஷயங்களாலேயே ஏதொன்றையும் கிரகித்துக் கொள்கிறது. எனவே ஆஞ்சநேயனுக்குச் சிந்தூரம் பூசுவதை ஓர் ஆராதனையம்சமாக ஸ்ரீ ராமபிரான் வகுத்துக் கொடுத்தார். 

நன்றி - ஜெய ஹனுமான் நூலிலிருந்து…

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக