செவ்வாய், 24 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 103

நான்காவது ஸ்கந்தம் - இருபத்து ஐந்தாவது அத்தியாயம்


(புரஞ்ஜனன் வேட்டையாடப் போதல்)


நாரதர் சொல்லுகிறார்:- மஹாவீரனாகிய அப்புரஞ்ஜனன் ஒருகால் வேட்டையாட விரும்பி ரதத்தின் மேல் ஏறிக்கொண்டு பஞ்சப்ரஸ்தமென்னும் வனத்திற்குப் போனான். அந்த ரதம் மிக்க வேகத்துடன் போகும் தன்மையது. அதற்கு ஐந்து குதிரைகளும், இரண்டு தண்டிகைகளும் (தடிகளும்), இரண்டு சக்கரங்களும், ஓர் அச்சும், மூன்று மூங்கில்களும், ஐந்து கட்டுக்களும், ஒரு கயிறும், ஒரு ஸாரதியும், ரதிகன் (ரதத்தில் செல்பவன்) உட்காரும்படியான ஓரிடமும், இரண்டு ஏர்க்கால்களும், ஐந்து ஆயுதங்களும், ஏழு மூடல்களும், ஐந்து கடைகளும், ஸ்வர்ண மயமான பலவகை அலங்காரங்களும் ஏற்பட்டிருந்தன. அப்புரஞ்ஜனன் ஸ்வர்ணமயமான கவசம் பூண்டு பாணங்கள் அழியாதிருக்கப்பெற்ற அம்பறாத்தூணிகளையும் எடுத்துக்கொண்டு அந்த ரதத்தின்மேல் ஏறி பதினொரு ஸேனைகளுடன் வனத்திற்குப் போனான். கர்வமுள்ள அம்மன்னவன் தனுஸ்ஸையும் (வில்லையும்) பாணத்தையும் கொண்டு தன்னை விட்டுப் பிரிந்திருக்கப்பொறாத பார்யையையும் (மனைவியையும்) துறந்து பெரிய விருப்பத்துடன் வனத்திற்கு (காட்டிற்குச்) சென்று வேட்டையாடினான். அம்மன்னவன் தாமஸ ஸ்வபாவத்தை ஏற்றுக்கொண்டு கொடிய புத்தியுடன் சிறிதும் மன இரக்கமின்றிக் காடு காடாகச் சென்று ஆங்காங்குள்ள மிருகங்களைக் கூரான பாணங்களால் அடித்தான். மன்னவனே! ராஜாக்களுக்கு வேட்டையாடுவது யுக்தமேயாகையால் (சரியாகையால்), அதில் விரோதமென்னென்று நினைக்கவேண்டாம். சாஸ்த்ரங்கள் வேட்டையாட வேண்டுமென்று விதிக்கவில்லை. ஒருவன் விருப்பமுற்று நினைத்தபடி வேட்டையாடுவானாயின், அது கூடாதென்றும், ப்ரஸித்தமான ச்ராத்தம் முதலிய காரணங்களைப் பற்றியே வேட்டையாடலாமென்றும், மன்னவனே வேட்டையாடலாமென்றும், பரிசுத்தமான மிருகங்களையே வதிக்கலாமென்றும் எவ்வளவு உபயோகப்படுமோ அவ்வளவே வதிக்கலாமென்றும் சாஸ்த்ரங்களில் நியதி ஏற்பட்டிருக்கின்றது. அதைக் கடந்து இரக்கமின்றி மனம்போனபடி வேட்டையாடுவானாயின், அது மன்னவனுக்கும் தோஷத்தையே விளைவிப்பதாகும். இங்கனம் சாஸ்த்ரத்தின் கருத்தை அறிந்து அதற்கு விரோதமில்லாமல் நடந்தாலும், அல்லது இதை அவச்யம் செய்தே ஆகவேண்டுமென்று சாஸ்த்ரம் விதிக்காமையால் இது நமக்கு வேண்டியதில்லையென்று அதினின்று மீண்டு நின்றாலும், அவன் அச்செயலின் பாபத்தினாலும் அந்த ஜ்ஞானத்தினாலும் தீண்டப்படமாட்டான். அப்படியின்றி இதைச் செய்தே ஆகவேண்டுமென்ற பிடிவாதத்துடன் மனம்போனபடி கார்யங்களைச் செய்பவன் புண்ய பாபங்களால் கட்டுண்டு மேன்மேலும் ஸம்ஸாரத்தில் ஆழ்ந்து அறிவழிந்து நரகத்தில் விழுவான். (ஆகையால் அம்மன்னவன் கொடுமதியனாகி [கொடுமை செய்யும் எண்ணத்துடன்] மனம் போனபடி வேட்டையாடினது குற்றமே). அவ்வனத்தில், பலவகை இறகுகள் கட்டப்பெற்ற வேகமுடைய அம்மன்னவனது பாணங்களால் தேஹமெல்லாம் (உடம்பெல்லாம்) பிளவுண்டு வருந்துகின்ற மிருகங்களின் அழிவு மன இரக்கம் உடையோர்க்குப் பொறுக்க முடியாதிருந்தது. அம்மன்னவன் முயல்களையும், பன்றிகளையும், கிடாக்களையும், கவய மிருகங்களையும், கறுப்புச் சாயலையுடைய கலைமான்களையும், முள்ளம்பன்றிகளையும், பரிசுத்தங்களும் அல்லாதவைகளுமான மற்றும் பல மிருகங்களையும் அடித்து இளைப்புற்றான். அப்பால் அம்மன்னவன் பசி தாஹங்களால் வருந்தி வேட்டையினின்று திரும்பி வீட்டிற்கு வந்து ஸ்னானம் செய்து வேளைக்குரிய ஆஹாரம் செய்து ச்ரமம் தீர்ந்து உட்கார்ந்தான். பிறகு தூபத்தினாலும் சந்தனம் முதலிய பூச்சுக்களாலும் பூமாலை முதலியவைகளாலும் தன்னை மேன்மைபடுத்திக்கொண்டு ஸமஸ்த அங்கங்களிலும் (உடல் உறுப்புக்களிலும்) ஆபரணங்களை நன்றாக அணிந்து பார்யையிடத்தில் மனம் செல்லப்பெற்றான்.

ஆஹாரத்தினால் (உணவினால்) த்ருப்தி அடைந்து சந்தன புஷ்பாதிகளால் ஸந்தோஷமுற்று மதித்து மன்மதனால் இழுக்கப்பட்ட மனமுடையவனாகிய அம்மன்னவன் தன் பார்யையைக் காணாமல் மனவருத்தமுற்று அந்தப்புரத்திலுள்ள பெண்களை நோக்கி பெண்மணிகளே! நீங்களும் உங்கள் தோழியும் க்ஷேமமேயல்லவா? வீட்டில் ஸம்பத்துக்களெல்லாம் முன்போல் விளங்கவில்லையே. இதற்கென்ன காரணம்? தாயாவது, பதிவ்ரதையான மனைவியாவது இல்லாது போவாளாயின், சக்ரமும் குதிரையுமில்லாத தேர்போன்ற உபயோகமற்ற வீட்டில் அறிவுடையவன் எவன்தான் தீனன் (புகலற்றவன்) போல் வாஸம் செய்வான். அம்மாதரசி எங்கே இருக்கின்றாள்? அவள் மிகுந்த அறிவுடையவளல்லவா? நான் மனவருத்தமாகிற ஸமுத்ரத்தில் மூழ்கி கிடக்கும்பொழுதெல்லாம் எனக்கு நன்மை தீமைகளை எடுத்துரைத்து அடிக்கடி என்னைத் தேற்றிக்கொண்டிருப்பாளல்லவா? அவள் எங்கே? என்று வினவினான். அதைக் கேட்ட பெண்களும் அம்மன்னவனைப் பார்த்து உனது அன்புள்ள நாயகி என்ன நினைத்திருக்கிறாளோ? தெரியாது. சத்ருக்களை அழிப்பவனே! அவள் வெறுந்தரையில் இதோ படுத்திருக்கிறாள் காண் என்றார்கள். 


புரஞ்ஜனனும் வெறுந்தரையில் விழுந்திருக்கின்ற தன் காதலியைக் கண்டு ப்ரீதியினால் மதிகலங்கி (புத்தி கலக்கமுற்று) மிகவும் தழதழப்புற்று மனவருத்தத்துடன் நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்த முயன்று, அவள் தன்மேல் கோபித்துக் கொண்டதற்குக் காரணம் தெரியாதிருந்தான். 


ஸமாதானப்படுத்த வல்லவனாகிய அம்மன்னவன் அவளைத் தெளிவிக்கத்தொடங்கி அவளுடைய பாதங்களை ஸ்பர்சித்து அவளை எடுத்து மடியில் உட்கார வைத்துக்கொண்டு தடவிக்கொடுத்து “மங்கல ஸ்வபாவமுடையவளே! வேலைக்காரர்கள் அபராதம் செய்தும் ப்ரபுக்களால் நம்முடையவரென்று அபிமானித்து தண்டனை விதிக்கப் பெறார்களாயின், அவர்கள் மந்தபாக்யர்களே (அத்ருஷ்டம் குறைந்தவர்களே). ப்ரபுக்கள் வேலைக்காரர்களுக்கு தண்டனை விதிப்பார்களாயின், அதுவே அவர்க்கு அவர் செய்யும் பேரருளாம். நன்மனமுடைய ப்ரபுக்கள் விதிக்கும் தண்டனையை அனுக்ரஹமென்று நினையாமல் அதைப் பொறாது கோபிப்பவன் மூர்க்கனேயாவான். அழகிய பற்களும் ஆழ்ந்த மனமுடையவளே! எனக்கு நீயே ப்ரபு. ப்ரீதியின் பெருக்கும் வெட்கமும் நிறைந்து அழகான புருவங்களும் புன்னகை அமைந்த கண்ணோக்கமும் கறுத்த முன்னெற்றி மயிர்களும் உயர்ந்த மூக்கும் இனிய உரைகளும் உடைய உன் முகத்தை எனக்குக் காட்டுவாயாக. வீரமுடைய என் அருமைக்காதலி! உனக்கு அபராதம் செய்தவனைச் சொல்வாயாக. அவனை நான் தண்டிக்கிறேன். ஆனால் அவன் ப்ராஹ்மண குலத்தில் சேர்ந்திருந்தாலும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தாஸனாயிருந்தாலும் நான் தண்டிக்கமாட்டேன். நான் கோபமுறுவேனாயின், இம்மூன்று லோகங்களிலாவது இவற்றிற்கு வெளியிலாவது பயமின்றி மனக்களிப்புற்றிருப்பவன் எவன்? அப்படிப்பட்டவன் எவனும் எனக்குத் தெரியவில்லை. உன் முகம் திலகமில்லாதிருக்க, நான் ஒருநாளும் கண்டதில்லை. இப்பொழுது அழுக்கடைந்து ஸந்தோஷமின்றிக் கோபத்தினால் கலங்கி விளக்கமற்று அனுராகமும் அழிந்து பார்க்க வழங்காதிருக்கின்றது. அழகான உன் கொங்கைகளும் அங்கனமே சோகக் கண்ணீர்களால் அடிபட்டிருக்கின்றன. கோவைப் பழம்போன்ற உன் அதரமும் (உதடு) குங்குமக் குழம்புபோன்ற தாம்பூல ராகமில்லாதிருக்கின்றது. நான் அபராதம் செய்திருப்பினும் உனது நண்பனாகையால் என்மேல் அருள்புரிவாயாக. நீ என்ன அபராதம் செய்தாயென்னில், சொல்லுகிறேன். கேள். நான் உன்னைக் கேளாமலே வேட்டையாட வனம் போனேன் அல்லவா? இதுவே நான் செய்த அபராதம். வேட்டையிலுள்ள விருப்பம் என்னை மெய்மறக்கச்செய்து இழுத்துக்கொண்டு போய்விட்டது. காம வேகத்தினால் தைர்யமற்றுச் சொன்னபடி செய்கின்ற காதலனை எவள்தான் ப்ரீதியுடன் தொடரமாட்டாள் ? இதுவல்லவா பெண்டிர்களுக்கு அவசியமாய்ச் செய்ய வேண்டிய கார்யம்? ஆகையால் நீ கோபத்தைத் துறந்து என் மீது அருள்புரிவாயாக.

இருபத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக