செவ்வாய், 24 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 104

நான்காவது ஸ்கந்தம் – இருபத்து ஆறாவது அத்தியாயம்


(புரஞ்ஜனன் கோபம் தெளிந்த பார்யையுடன் (மனைவியுடன்) கலந்திருத்தல்)


நாரதர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! புரஞ்ஜனி இங்கனம் தன் விலாஸங்களால் (மயக்கும் பார்வைகளால்) புரஞ்ஜனனை மதிமயக்கி (புத்தி மயங்கும்படி செய்து) வசப்படுத்திக்கொண்டு மனக்களிப்புற்றிருந்தாள் (மகிழ்ந்திருந்தாள்). அம்மன்னவன், கோபம் தெளிந்தெழுந்து ஸ்னானம் செய்து அழகிய ஆடை உடுத்தி குங்குமம் முதலிய மங்கல அலங்காரம் செய்து அன்னபானாதிகளால் திருப்தி அடைந்து அருகே வந்த காதலியைப் புகழ்ந்தான். அவன் அப்பெண்மணியால் அணைக்கப்பட்டுத் தானும் அவளைக் கண்டத்தில் அணைத்து ஏகாந்தத்தில் (தனியே) ரஹஸ்யவார்த்தைகளால் மதிமயங்கி அவளுடன் கூடி இரவு பகல் தெரியாமல் காலவேகத்தைச் சிறிதும் அறியாதிருந்தான். யௌவனக்கொழுப்புடைய (இளமையின் கர்வமுடைய) அம்மன்னவன் பெரிய மனக்களிப்புடன் சிறப்புடைய கட்டில் மேல் காதலியின் புஜத்தையே தலையணையாகக் கொண்டு சயனித்துக் காமபோகத்தில் ஆழ்ந்து அஜ்ஞானத்தினால் விவேகமற்று அப்பெண்மணியொருத்தியை மட்டும் நினைத்திருந்தானே அன்றித் தன் ஸ்வரூபத்தையாவது தனக்கு அந்தராத்மாவான பரமாத்மாவின் ஸ்வரூபத்தையாவது நினைக்கவேயில்லை. அவன் அப்பெண்மணியுடன் இங்கனம் காமக்கலவியில் (இன்பச்சேர்த்தியில்) ஆழ்ந்திருக்கையில், அவனுடைய யௌவனப்பருவம் அரைக்ஷணம் போல் கடந்தது. அப்புரஞ்ஜனன் தன்பார்யையான (மனைவியான) புரஞ்சனியிடத்தில் நூற்றுப்பதினொரு பிள்ளைகளைப்பெற்றான். அப்பொழுது அவனுடைய வாழ்நாளில் பாதி கழிந்தது. அம்மன்னவனுக்கு, சீலம் ஒளதார்யம் முதலிய குணங்கள் அமைந்து தாய் தந்தைகளுக்குப் புகழை விளைக்கவல்ல நூற்றுப்பத்துப் பெண்களும் பிறந்தார்கள். பாஞ்சால தேசாதிபதியாகிய அப்புரஞ்ஜனன் தாய்தந்தைகளின் வம்சத்திற்கு மேன்மையை விளைக்கவல்ல பிள்ளைகளை அவர்களுக்குத் தகுந்த மனைவிகளோடும், பெண்களை அவர்க்குத் தகுந்த மணவாளர்களோடும் சேர்த்தான். அவனுடைய பிள்ளைகளில் ஒவ்வொருவனுக்கும் நூறு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களால் அப்பாஞ்சாலதேசம் முழுவதும் புரஞ்ஜன வம்சமாய் நிரம்பிற்று. 

அப்புதல்வர்கள் புரஞ்ஜனனுடைய சொத்தையெல்லாம் பங்கிட்டுக் கொள்கையில், க்ருஹத்திலும் பொக்கிஷத்திலும் ப்ருத்யர்களிடத்திலும் என்னுடையதென்ற பெரிய அபிமானம் (என்னுடையது என்ற எண்ணம்) உடையவனாகையால், மிகவும் மனக்கலக்கமுற்று ஒன்றுமறியாதிருந்தான். அவன் மீளவும் பலவகையான சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்று தீக்ஷித்துக்கொண்டு, பசுக்களின் ஹிம்சைக்கிடமாய் பயங்கரங்களுமான பலவகை யாகங்களால் தேவதைகளையும் பித்ருக்களையும் பைரவன் முதலிய பூதபதிகளையும் உன்னைப்போல் (ப்ரசேதஸர்களுக்குத் தந்தையாகிய ப்ராசீனபர்ஹி) ஆராதித்தான். குடும்பத்தில் மிக்க மனவிருப்பமுடைய அம்மன்னவன் இங்கனம் பெரிய ஆவலுடன் யாகாதி கர்மங்களை நடத்திக் கொண்டிருக்கையில், காதலர்க்கும் காதலிகளுக்கும் இனியதல்லாத மூப்பின் காலம் வந்தது. 


மன்னவனே! சண்டவேகனென்று ஓர் கந்தர்வராஜன் உண்டு. அவனுக்கு ப்ருத்யர்களான (சேவகர்களான) முந்நூற்று அறுபது கந்தர்வர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் மஹா பலசாலிகள். அங்கனவே அவனக்குத் தாசிகளான (வேலைக்காரிகளான) முந்நூற்று அறுபது கந்தர்வ கன்னிகைகளும் உண்டு. அவர்கள் அக்கந்தர்வர்களோடு இணைபிரியாதிருப்பவர்கள். அவர்களில் சிலர் வெளுத்தும் சிலர் கருத்தும் இருப்பார்கள். அவர்கள் பூமியில் சுற்றிக்கொண்டே ஆங்காங்கு ஸமஸ்த காமங்களும் நிறைந்த பட்டணங்களைப் பறித்துக் கொண்டு வருவது வழக்கம். சண்டவேகனுடைய வேலைக்காரரான அக்கந்தர்வர்கள்  வந்து புரஞ்ஜனனுடைய பட்டணத்தைப் பறிக்கத் தொடங்குகையில், அதைக் காத்துக் கொண்டிருந்த பலிஷ்டனான (பலமுடைய) ப்ரஜாகரன் என்பவன் ஒருவனே இருபத்தேழு பாணங்களால் நூறு வருஷங்கள் வரையில் அந்தக் கந்தர்வர்களோடு யுத்தம் செய்தான். தன் பட்டணத்தைப் பாதுகாக்கும் தனியனான ப்ரஜாகரன் பலிஷ்டரும் (பலமுடையவரும்) பலருமான கந்தர்வர்களோடு நெடுநாள் சண்டை செய்தும், அவர்களை வெல்லமுடியாமல் அவர்களால் அடியுண்டு ஓய்கையில், புரஞ்ஜனன் நாடும் நகரமும் தானும் தன் பந்துக்களுமாகப் பெரிய சிந்தனையில் ஆழ்ந்தான். அம்மன்னவன் பெண்வலையில் பிடியுண்டு அந்நகரத்தில் மதுபானம் செய்வதும் தன் ப்ருத்யர்களால் பாஞ்சால தேசத்தினின்று கொண்டுவரப்பட்ட கப்பத்தை வாங்கி புசிப்பதுமாய் இருந்தானே அன்றி அதுவரையில் ஒரு பயத்தையும் அறிந்தவனல்லன். காலனுக்கு ஒரு புதல்வி உண்டு. அவள் தனக்கு மணவாளனை விரும்பி மூன்று லோகங்களும் திரிந்தாள். அவளை ஒருவனும் அபேக்ஷிக்கவில்லை. அவள் அழகுக்கு இடமல்லாத உருவமுடையவள். ஆகையால் உலகமெங்கும் துர்ப்பகை (சாபம் பெற்றவள்) என்று பேர்பெற்றாள். 


அவள் முன்பு பூருவென்னும் ராஜரிஷியால் அங்கீகரிக்கப்பட்டு ஸந்தோஷம் அடைந்து அவனுக்கு வரங்கொடுத்தாள். ஒருகால், ஸத்யலோகத்தினின்று பூலோகத்திற்கு வருகின்ற என்னைப் பார்த்து, நான் நைஷ்டிகனென்பதை (பிரம்மச்சாரி) அறிந்தும் காமவிகாரத்தினால் மதிமயங்கி என்னை வரித்தாள். நான் ஒப்புக் கொள்ளாதிருக்கையில், என்மேல் கோபங்கொண்டு “என் வேண்டுகோளைத் தடுத்தாயாகையால் நீ ஓரிடத்தில் நிற்காமல் எப்பொழுதும் திரிந்துகொண்டே இருப்பாயாக” என்று மிகவும் பொறுக்கமுடியாத பெரிய சாபத்தைக் கொடுத்தாள். அப்பால் தன் விருப்பம் நிறைவேறப்பெறாத அக்காலகன்னிகை “பயனென்னும் பேருடைய யவனேச்வரன் ஒருவன் இருக்கிறான். அவனைப் போய் வரிப்பாயாக” என்று என்னால் மொழியப்பெற்று அவனிடம் சென்று “வீரனே! யவனர்களுக்கு ப்ரபுவாகிய உன்னிடத்தில் அன்புற்று உன்னைக் கணவனாக வரிக்கின்றேன். உன்னிடத்தில் யாராவது எதையாவது விரும்புவார்களாயின், நீ அதை அப்படியே நிறைவேற்றிக் கொடுப்பவனல்லவா? ஆகையால் நீ என் விருப்பத்தை வீணாக்கலாகாது. உலகத்திலும் சாஸ்த்ரத்திலும் கொடுக்கவும் வாங்கவும் உரியதாக ஏற்பட்டிருக்கும் வஸ்துவை வேண்டினவர்க்குக் கொடாதிருக்கலாகாது. ஒருவன் கொடுக்கில் அதை மற்றவனும் வாங்காதிருக்கலாகாது. இப்படியிருக்க, இதைக் கடந்து கொடாதவனும் வாங்காதவனும் வீண்பிடிவாதமுடையவர்களே. மற்றும், இவர்கள் ஒன்றுமறியாத பாலர்களே. இவர்களைப் பற்றிப் பெரியோர்கள் சோகிக்கிறார்கள் (துக்கப்படுகிறார்கள்). 


மங்கலஸ்வபாவமுடையவனே! நான் உன்னை விருப்பத்துடன் பணிகின்றேன். என்னைக் கருணைகூர்ந்து அங்கீகரிப்பாயாக. வருந்தினவர்களை மன இரக்கத்துடன் பாதுகாக்கையே புருஷனாகப் பிறந்தவன் செய்யவேண்டிய தர்மம்” என்று மொழிந்து யவனேச்வரனைக் கணவனாக வரித்தாள். இங்கனம் காலகன்னிகை மொழிந்த வசனத்தைக் கேட்டு அந்த யவனேச்வரன் தேவகுஹ்யத்தை (தேவதைகளால் மறைக்கப்பட்டு வருகிற மரணத்தை) கடத்த விரும்பி அம்மடந்தையைப் (பெண்ணைப்) பார்த்துப் புன்னகை செய்து “நான் மனவூக்கத்துடன் நன்றாக ஆலோசித்து இவ்வுலகத்தையெல்லாம் உனக்குக் கணவனாக நிச்சயித்தேன். நீ அமங்கலஸ்வபாவமும் (சுபம் இல்லாத தன்மையும்) துஷ்டத்தனமும் (பிறர்க்குத் தீங்கு செய்யும் தன்மையும்) அமைந்தவளாகையால் உன்னை இவ்வுலகம் அங்கீகரிக்க மாட்டேனென்கிறது. ஆகையால் உன்கதி ஒருவர்க்கும் தெரியாதபடி மறைந்து வந்து கர்மத்திற்குட்பட்டதாகிய இவ்வுலகத்தையெல்லாம் நீ அனுபவிப்பாயாக. நான் மேல் விழுந்து அனுபவித்தால் அவர்கள் என்னை ஹிம்ஸிக்கில் என் செய்வேனென்று நீ வருந்தவேண்டாம். என்னிடத்திலுள்ள யவனர்களின் ஸைன்யத்தைக் கூட்டிக்கொண்டு போவாயாயின், நீ அந்த ப்ரஜைகளை நாசம் செய்வாய். இவன் ப்ரஜ்வாரனென்பவன்; எனது உடன் பிறந்தவன். நீ எனக்கு உடன் பிறந்தவளாவாயாக. நான் உங்களிருவரோடும் பயங்கரமான யவனஸைன்யங்களோடும் கூடி ஒருவர்க்கும் தெரியாமல் இவ்வுலகத்தில் ஸஞ்சரிக்கின்றேன். 


இருபத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக