ஶ்ரீமத் பாகவதம் - 105

நான்காவது ஸ்கந்தம் – இருபத்து ஏழாவது அத்தியாயம்

(புரஞ்ஜனன் காலகன்னிகையால் பிடியுண்டு வருந்துதல்)

நாரதர் சொல்லுகிறார்:- பர்ஹிஷதனே! பயனென்கிற அந்த யவனேச்வரனுடைய ஸைன்யமான யவனர்கள் அனைவரும் அவனது ஆஜ்ஜையின்படி நடப்பவர்களாகையால் ப்ரஜ்வாரனோடும் “காலகன்னிகையோடும் கூடி இப்புவனி (இவ்வுலகம்) முழுவதும் திரிந்தார்கள். மன்னவனே! அவர்கள் ஒருக்கால் கிழப்பாம்பினால் காக்கப்பட்டுப் பூமியிலுள்ள போகங்களெல்லாம் நிறைந்த புரஞ்ஜன பட்டணத்தைத் தகைந்தார்கள் (முற்றுகையிட்டார்கள்). புருஷர்களைத் தீண்டின மாத்ரத்தில் நிஸ்ஸாரமாக்கும் (சக்தியற்றவர்களாக்கும்) திறமையுடைய காலகன்னிகையும் புரஞ்ஜனனுடைய பட்டணத்தைப் பலாத்காரமாகக் கைப்பற்றி அனுபவித்தாள். அப்பொழுது யவனர்கள் அப்பட்டணத்து வாசல்களின் வழியாக அதற்குள் நாற்புறத்திலும் நுழைந்து அந்த பட்டணம் முழுவதையும் பாழ்செய்யத் தொடங்கினார்கள். குடும்பத்தில் மனக்கவலையுற்ற அப்புரஞ்ஜனன் தன்பட்டணம் யவனர்களால் பீடிக்கப்படுவது கண்டு அதில் மிகுந்த அபிமானமுடையவனாகையால் பலவகை வருத்தங்களைப் பெற்றான். காலகன்னிகையால் பிடியுண்டு சப்தாதி விஷயங்களில் மனம்மாறப் பெறாமல் விவேகமற்றுச் சோபை அழிந்து கந்தர்வர்களாலும் யவனர்களாலும் பலாத்காரமாகத் தனது ஐச்வர்யமெல்லாம் பறிக்கப்பெற்று மன இரக்கத்திற்கிடமான அப்புரஞ்ஜனன், தன் பட்டணம் சத்ருக்களால் (எதிரிகளால்) பாழாகி இருப்பதையும், பிள்ளைகளும் பேரன்களும் வேலைக்காரர்களும் மந்திரிகளும் தனக்கு ப்ரதிகூலராயிருப்பதையும், பார்யை (மனைவி) ஸ்நேஹம் மாறியிருப்பதையும், தான் காலகன்னிகையால் பிடியுண்டிருப்பதையும், தன் பாஞ்சால தேசம் முழுவதும் சத்ருக்களால் தூஷிக்கப்பட்டிருப்பதையும் கண்டு முடிவில்லாத சிந்தையில் மூழ்கி அதற்குப் பரிஹாரம் இன்னதென்று தெரியாதிருந்தான். இங்கனம் மனக்களிப்பற்ற அப்புரஞ்ஜனன் காமபோகங்களெல்லாம் காலகன்னிகையின் தீண்டலால் நிஸ்ஸாரமாயிருப்பினும் (ரஸமற்றிருப்பினும்) அவற்றில் விருப்பமுற்று ஆத்ம கதியில் விருப்பின்றிப் பெண்டிர்களையும் புதல்வர்களையும் சீராட்டிக் கொண்டிருந்தான். கந்தர்வர்களும் யவனர்களும் காலகன்னிகையும் சேர்ந்து தன் பட்டணத்தை அடியோடு பாழ்செய்வதைக் கண்டு அம்மன்னவன் மனம் இல்லாதிருப்பினும் வேறு கதியில்லாமையால் அதை விட்டுப்போகத் தொடங்கினான்.

பயனென்னும் யவனேச்வரனுக்கு மூத்தவனாகிய ப்ரஜ்வாரன் தன் ப்ராதாவுக்கு ப்ரியம் செய்யவிரும்பி அவ்விடம் வந்து அப்பட்டணம் முழுவதையும் கொளுத்திவிட்டான். அப்பொழுது புரஞ்ஜன மன்னவன் பட்டணத்து ஜனங்களோடும் மற்ற பரிவாரங்களோடும் பார்யையோடும் (மனைவியோடும்) பிள்ளை பேரன் முதலிய குடும்பத்தோடும் பரிதவித்தான். பட்டணத்தைப் பாதுகாக்கும் ப்ரஜாகரன் பட்டணம் காலகன்னிகையால் கைகொள்ளப்பட்டு, இடங்களெல்லாம் யவனர்களால் பறியுண்டிருக்கையில் தானும் ப்ரஜ்வாரனால் தீண்டப்பட்டு வருந்தினான். அவ்வருத்தத்தினால் நடுக்கமுற்று அங்கு நிலைகொள்ள முடியாமல், நெருப்புப் பற்றி எரிகிற மரத்தின் பொந்தினின்று ஸர்ப்பம் கிளம்பிப் போவதுபோல், அதினின்று வெளிப்பட விரும்பினான். கந்தர்வர்கள் பௌருஷத்தைப் பறித்து, பலமுள்ள யவனர்கள் பட்டணத்தைத் தகைத்து நிற்கையில் அங்கங்களெல்லாம் தளர்ந்து ஒன்றும் செய்யமுடியாமல் ஐயோவென்று கதறினான். குமதியாகிய (கெட்ட அறிவுடையவனாகிய) அம்மன்னவன், தனது பெண் பிள்ளை பேரன் மருகியர் (மருமகள்) மணவாளர் (மாப்பிள்ளை) பரிஜனம் மனைவி இவர்களையும், தனக்கு உபயோகப்படாமல் தன்னுடையதென்ற துரபிமானத்திற்கு (வீணான தற்பெருமைக்கு) மாத்ரமே இடமான வீடு வாசல் கருவூலம் கருவி முதலியவற்றையும் நானென்றும் என்னுடையதென்றும் அங்கீகரித்து இவற்றைத் துறக்க நேர்த்ததேயென்று பெருஞ்சிந்தையில் ஆழ்ந்தான். “நான் லோகாந்தரம் (இவ்வுலகை விட்டு வேறு உலகம்) போகையில், நாதனற்ற இவள் தனியளாகிக் குழந்தைகளைப் பற்றி வருந்தி எங்கனம் இருப்பாள்? இவள் என்னிடத்தில் மிக்க அன்புடையவள். நான் சாப்பிடாவிடின் சாப்பிடமாட்டாள்; நான் ஸ்நானம் செய்யாவிடின் ஸ்நானம் செய்யமாட்டாள். நான் கோபங்கொள்ளில் பயப்படுவாள். நான் விரட்டுகையில் பயந்து மௌனமாயிருப்பாள் நான் அறிவற்று வருந்தும் காலத்தில் புத்திசொல்லித் தேற்றுவாள். நான் தேசாந்தரம் (நகர்வலம்) போகையில் சோகித்து இளைத்திருப்பாள். நான் போனபின்பு வீரர்களைப் பெற்ற இவள் க்ருஹஸ்த தர்மத்தை அனுஸரித்திருப்பாளோ? அல்லது என்னைப் பிரிந்திருக்க முடியாமல் அனுமரணம் (உடன் கட்டை ஏறுதல்) செய்வாளோ? நான் போகையில், என் பிள்ளைகளும் பெண்களும் கதியற்று மன இரக்கத்திற்கிடமாகி, ஸமுத்ரத்தினிடையில் பிளவுண்ட ஓடங்கள் போல் எப்படி இருக்கப்போகின்றனர்?” என்று அவன் தன் குடும்பத்தைப் பற்றி வருந்தினான். இங்கனம் தனக்குத் தகாத வீணான சிந்தையில் ஆழ்ந்திருக்கின்ற அம்மன்னவனை யவனேச்வரன் பிடித்துக் கொண்டு போக நினைக்கையில், அவனது ப்ருத்யர்களான யவனர்கள் பசுவைப்போல் பிடித்து அவனது கர்மங்களுக்குத் தகுந்தபடி அவன் சேரவேண்டிய இடத்திற்குக்கொண்டு போனார்கள். அவனுடைய பந்துக்கள் அனைவரும் சோகத்தினால் மிகவும் வருந்தி அவனையே பின்பற்றினார்கள்.

புரஞ்ஜனன் யவனர்களால் தகையப்பட்டு (சிறை பிடிக்கப்பட்டு) வ்ருக்ஷத்தின் பொந்தினின்று ஸர்ப்பம்போல் புறப்படும்பொழுதே அப்பட்டணம் உருவழிந்தது. பலிஷ்டனான (பலமுடைய) யவனனால் பலாத்காரமாகப் பட்டணத்தினின்று இழுக்கப்பட்ட அப்புரஞ்ஜனன் இருட்டில் நுழைந்து தன்னோடு கூடவேயிருக்கும் நண்பனை நினைக்காமலே சென்றான். அவன்முன்பு மன இரக்கமின்றி யஜ்ஞத்தில் வதித்த பசுக்களெல்லாம் தமக்கு அவன் செய்த ஹிம்ஸையை நினைத்துக் கோபமுற்றுக் கோடாலிகள் போன்ற தமது கொம்புகளால் அவனைக் குத்தி ஹிம்ஸித்தன. ஸ்த்ரீலோலனாகி மதிகெட்ட அம்மன்னவன் கரையில்லாத காடாந்தகாரத்தில் அமிழ்ந்து நினைவற்றுப் பல ஸம்வத்ஸரம் (வருடங்கள்) வரையிலும் துக்கங்களை அனுபவித்து அந்த மனைவியையே மனத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தானாகையால் விதர்ப்ப மஹாராஜன் க்ருஹத்தில் ஓர் பெண்மணியாகப் பிறந்தான். 

சத்ருக்களை அழிக்கும் திறமையுடைய மலயத்வஜனென்ற பாண்டிய தேசத்து அரசன் யுத்தத்தில் ஸமஸ்த ராஜாக்களையும் ஜயித்து வீர்யத்தையே பந்தயமாகவுடைய அவ்விதர்ப்பராஜன் மகளை மணம்புரிந்தான். அவன் அவளிடத்தில் கருங்கண்ணியாகிய ஓர் பெண்ணையும் த்ரமிடதேசத்து அரசர்களான ஏழு பிள்ளைகளையும் பெற்றான். அந்த ஏழு பேர்களில் ஒவ்வொருவனுக்கும் பலப்பல (கோடி கோடி) பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்களுடைய வம்சத்தில் பிறந்தவர்களே இம்மன்வந்தரம் முழுவதும் பூமியை அனுபவிக்கப் போகிறார்கள். நல்லொழுக்கமுடைய அம்மலயத்வஜனது புதல்வியை அகஸ்த்யர் விவாஹம் செய்து கொண்டார். அவருக்கு அம்மனைவியிடத்தில் திருடவ்ரதரென்னும் முனிவர் பிறந்தார். அவருடைய புதல்வர் இத்மவாஹரென்பவர். ராஜரிஷியாகிய மலயத்வஜன் தன் புதல்வர்களுக்குப் பூமியைப் பங்கிட்டுக்கொடுத்து ஸ்ரீக்ருஷ்ணனை ஆராதிக்க விரும்பி மலயமென்னும் (திருவேங்கடமலைக்குப்) போனான். கண்ணழகியான அவனது மனைவி அழகான வீடு வாசல்களையும் ஸுகமான போகங்களையும் துறந்து நிலவு சந்த்ரனைப் பின்பற்றுவதுபோல், அம்மன்னவனையே பின்பற்றினாள். 

மலயபர்வதத்தில் தூநீருடைய சந்திரவஸா, தாமிரபரணி, வடோதகா என்னும் மூன்று நதிகள் பெருகி வருகின்றது. அதைச் சந்த்ரமலையென்றும் வழங்குவார்கள். அம்மன்னவன் அந்நதிகளின் புண்யஜலத்தில் ஸ்நானபானம் செய்து உள்மலம் புறமலங்களைக் கழித்துக் கொண்டிருந்தான். அவன், கிழங்கு வேர் பழம் பூ இலை புல் ஜலம் இவற்றில் ஒவ்வொன்றைச் சில சிலநாள் புசித்துக்கொண்டிருந்து அப்பால் ஆஹாரமேயின்றிச் (உணவின்றி) சரீரம் (உடல்) மெலிந்து தவத்தில் நின்றான். எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையுடைய அம்மன்னவன் குளிர், வெயில், காற்று, மழை, பசி, தாஹம், இஷ்டம், அனிஷ்டம், ஸுகம், துக்கம் ஆகிய இவற்றால் மனத்தில் சிறிதும் விகாரமே உண்டாகப் பெறாதிருந்தான். அவன் கர்மயோக ஜ்ஞானயோகங்களால் மன மலங்களை அழித்து யமநியமங்களால் இந்திரியம் ப்ராணன் மனம் இவற்றை வென்று பரமாத்ம ஸ்வரூபனான ஆத்மாவை அனுஸந்தித்தான். 

ஷாட்குண்ய பூர்ணனான வாஸுதேவனிடத்தில் பரிபூர்ண பக்தியுடைய அம்மன்னவன் வேறொன்றையும் நினையாமல் ஒரே இடத்தில் தேவமானத்தினால் நூறு வர்ஷங்கள் வரையில், மொட்டைமரம்போல் அசையாது நின்றிருந்தான். அம்மன்னவன் ஸர்வஸாக்ஷியான பரமாத்மா ஆத்மாவினிடத்தில் வ்யாபித்து விலக்ஷணனாயிருப்பதை அறிந்து தேஹ வ்ருத்தாந்தமெல்லாம் ஸ்வப்னவ்ருத்தாந்தம்போல் (கனவில் நிகழ்பவை போல்) அநித்யமென்பதை (அழியக்கூடியவை என்பதை) ஆராய்ந்து அதினின்று மீண்டு, ஜகத்குருவான பகவான் மொழிந்ததும் நாற்புறத்திலும் திகழ்வதுமான சுத்த ஜ்ஞானமாகிற விளக்கினால் ஆத்மாவைப் பரமாத்மாவிடத்திலும் பரமாத்மாவை ஆத்மாவிடத்திலும் ஸாக்ஷாத்கரித்துச் சரீரம் (உடலை) விடும்வரையில் அந்த உபாஸனத்தை நடத்திக் கடைசியில் சரீரத்தை (உடலைத்) துறந்தான். 

பர்த்தாவையே (கணவனையே) பரதெய்வமாக நினைத்திருந்த கற்பரசியான வைதர்பி ஸமஸ்த போகங்களையும் துறந்து, தர்ம நுட்பங்களை அறிந்த கணவனாகிய மலயத்வஜனுக்கு ப்ரீதியுடன் அனைத்து பணிவிடைகளையும் செய்து வந்தாள். மரவுரி உடுத்தி, உபவாஸங்களால் இளைத்து ஒரே பின்னலாகப் பிணைத்த குழல்கற்றையையுடைய அப்பெண்மணி, அணைந்த அக்னியின் அருகில் புகையில்லாத ஜ்வாலை போல், பர்த்தாவின் (கணவன்) அருகில் நின்று விளங்கினாள். அவள் தன் கணவன் முக்தியடைந்த பின்பும் அவனது சரீரம் (உடல்) யோகாஸனத்தில் திடமாயிருப்பதைக் கண்டு அதை அறியாமல் அவனருகில் சென்று முன்போலவே பணிவிடை செய்து வந்தாள். அந்த வைதர்பி அம்மன்னவனுடைய பாதங்களைத் தினந்தோறும் பூஜிப்பதுவழக்கம். அன்றைத் தினமும் அங்கனமே பூஜிக்கத் தொடங்குகையில், அவனுடைய பாதங்கள் சூடின்றிக் குளிர்ந்திருப்பதைக் கண்டு தன்னினத்தில் பிரிந்த பெண்மானைப் போல் பந்துவான கணவனை இழந்த தன்னைப்பற்றி வருந்திக் கண்ணீர்களால் கொங்கைகளை நனைத்து ஏகாந்தத்தில் அழகான குரலுடன் “ராஜரிஷி! எழுந்திரு எழுந்திரு. தர்மத்தைக் கடந்து திருடர்போல் நடக்கின்ற குறுநில மன்னர்களால் தாக்கப்பட்டு பயப்படுகின்ற இப்பூமியைப் பாதுகாப்பாயாக” என்று பற்பலவாறு கதறினாள். 

பர்த்தாவைத் (கணவனைத்) தொடர்ந்து நிர்ஜனமான அரண்யத்திற்குச்சென்ற அப்பெண்மணி இங்கனம் புலம்பி பர்த்தாவின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக்கினாள். அவள் கட்டைகளைக் கொண்டு சிதை அடுக்கி அதில் கணவனது சரீரத்தை ஏற்றி அக்னி ப்ரதானம் செய்து புலம்பிக்கொண்டே அனுமானம் செய்ய நினைத்தாள். அப்பொழுது பழைய நண்பனும் ஆத்ம குணங்கள் அமைந்தவனுமாகிய ஒர் அந்தணன் வந்து வருந்துகின்ற அப்பெண்மணியை இனிய நல்வார்த்தையால் சமாதானம் செய்து கூறலானார்.

அந்தணர் கேட்கிறார்:- “பெண்ணே! நீ யார்? யாருடையவள்? இதோ சிதைமேல் படுத்திருப்பவன் யாவன்? இவனைப் பற்றியல்லவா நீ சோகிக்கின்றாய்? ஸ்னேஹிதனாகிய நான் உனக்குத் தெரிகின்றேனா? என்னால்தான் நீ முன்பு தேவமனுஷ்யாதி உருவங்களைப் பெறும்படியான விகாரத்தை அடைந்தனை. என்னை அறியாமை இருக்கட்டும். உன்னையாவது நீ அறிவாயா? உனக்கு அவிஜ்ஞாதனென்ற ஓர் நண்பன் இருந்தானென்பதாவது தெரியுமா? அப்பொழுது நீ என்னைத் துறந்து சப்தாதி விஷயங்களை அனுபவிக்க விரும்பிப் பூமியிலுள்ள பட்டணங்களைத் தேடிக்கொண்டோடினாய். பெரியவனே (இந்த ஆத்மஸ்வரூபத்தைப் பற்றின ஸம்போதனம்) நீயும் நானும் மானஸ ஸரஸ்ஸில் ஓரிடத்தில் அனேகமாயிரம் ஆண்டுகள் நட்புடைய இரண்டு ஹம்ஸபக்ஷிகளாயிருந்தோம். அப்பொழுது நீ உன்பந்துவாகிய என்னை மறந்து உலகியல் இன்பங்களில் நாட்டம்கொண்டு பூமியெல்லாம் திரிந்து, கடைசியில் ஓர் பெண்ணால் நிர்மிக்கப்பட்ட ஓர் ஸ்தானத்தை அடைந்தாய். அவ்விடத்தில் ஐந்து நந்தவனங்களும், ஒன்பது வாசல்களும், ஒரு காவலனும், மூன்று கோட்டைகளும், விரும்பினவற்றைக் கொடுக்கவல்ல ஆறு இடங்களும், ஐந்து கடைத்தெருக்களும், ஐந்து காரணங்களும் உண்டு. அதற்குடையவள் ஒரு பெண்மணி. ஐந்து வகையான சப்தாதி விஷயங்களே ஐந்து நந்தவனங்கள். கண், காது, மூக்கு, வாய், ஆசன துவாரம், ஆண்-பெண் குறி என்கிற பொறிகளின் இடங்களே ஒன்பது வாசல்கள், ஒளி, நீர், பூமி இம்முன்றும் மூன்று கோட்டைகள் (மதில்கள்). ஜ்ஞானேந்திரியங்கள் (வெளி விஷயங்களை அறிய உதவும் கண், காது, மூக்கு, வாய், தோல் என்கிற புலன்கள்) ஐந்தும் மனமும் ஆகிய இவ்வாறும் ஆறு இடங்கள். கை, கால், வாய், மலத்வாரம், ஆண்-பெண் குறி என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும் ஐந்து கடைத்தெருக்கள். பூமி, நீர் முதலிய ஐந்து பூதங்களே ஐந்து காரணங்கள். இத்தகைய சரீரமாகிற ஸ்தானத்தைப் புத்தி சக்தியே ஆள்கின்றது. ஜீவனாகிய நீ அதற்குட்பட்டு இந்தச் சரீரத்திற்குள் புகுந்து உன்னையும் என்னையும் அறியாதிருக்கின்றனை. நீ அச்சரீரத்தில் புத்தியின் வழியில் சென்று சப்தாதி விஷயங்களை அனுபவித்துக்கொண்டு ஆத்ம பரமாத்மாக்களைப் பற்றின நினைவற்று மடந்தையரிடத்தில் (பெண்களிடத்தில்) மனப்பற்று செய்தமையால் பெண்ணாய்ப் பிறக்கும்படியான இப்படிப்பட்ட இழிந்த நிலையை அடைந்தாய். நீ இயற்கையில் எங்கும் நிறைந்த ஜ்ஞானமுடையவன். இச்சரீர ஸம்பந்தத்தினால் இப்படி ஒன்றும் அறியாதிருக்கின்றாய். நீ விதர்ப்பராஜனின் மகளல்ல. இவ்வீரனும் உனக்கு நன்பனல்லன். ஒன்பது வாயில்கள் கொண்ட கோட்டையில் அடைக்கப்பட்டாயோ, அந்த புரஞ்ஜனிக்கு நீ கணவனுமல்ல. நீ முன் ஜன்மத்தில் உன்னைப் புருஷனாகவும், இப்பொழுது சிறந்த மடந்தையாகவும் (பென்ணாகவும்) நினைப்பதற்குக் காரணம் என்னுடைய மாயையே. 

ஆத்மாவுக்கு ஆண்மை பெண்மை இரண்டும் இயற்கையில் கிடையாது. நாமிருவரும் சுத்தஸ்வரூபர்கள். நமது ஸ்வரூபத்தை விவரித்துச் சொல்லுகிறேன். இதை உணர்வாயாக, நான் உனக்கு அந்தராத்மாவாய் உன்னைச் சரீரமாகவுடையவன். ஆகையால் நானே நீ. என்னைக்காட்டிலும் வேறுபட்டவனல்ல. நீயே நான். இதை நன்கு உணர்வாயாக. அறிவுடையோர் நம்மிருவர்க்கும் எப்பொழுதும் சிறிதும் பேதத்தை நினைக்கமாட்டார்கள். ஒருவன் தன்னைக் கண்ணாடியில் ஒருவாறாகவும், பிறனுடைய கண்களில் ஒருவாறாகவும் காண்கின்றான். அங்கனமே நாமிருவரும் ஒருவராய் இருப்பவராயினும் பலவகைச் சரீரங்களில் புகுந்து பலவாறு தோன்றுகின்றோமன்றி, நமக்கு இயற்கையில் அவ்வுருவங்கள் கிடையாது” என்று மொழிந்தான். இங்கனம் அந்த ஜீவன் பரமாத்மாவினால் உபதேசம் செய்யப்பெற்று முன்பு அஜ்ஞானத்தினால் இழந்த நினைவை மீளவும் பெற்றான். பர்ஹிஷத மன்னவனே! ஜகத்காரணனான பரமபுருஷன் மறைத்துச் சொல்லும் விஷயத்தில் ப்ரியமுடையவன் ஆகையால், ஜீவாத்மாவின் நிலைமையை இங்கனம் லோகவ்ருத்தாந்தத்தில் (உலக நடைமுறை மூலம்) மறைத்துச் சொன்னேன்.

இருபத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை