வேய் தந்த முத்தம் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

மண்ணகத்தேயுள்ள மக்கள் தம் துயரைப் போக்கவும், அதைக்கண்டு விண்ணகத்தேயுள்ள விரிஞ்சன் முதலானோரும் வியந்து நோக்கவும், பொன்னி வளங்கொழிக்கும் பூம்புனலரங்கம். கங்கையிற் புனிதமாய காவிரியின் நடுவே உதயனும் வானவீதியில், தன் வழிச் செல்ல இயலாதவாறு தடுத்து நிற்கும் நெடிய மதில்கள். அவையென்ன சாதாரணமானவையா? ஆடகச் செம்பொன்னாலானவை அவற்றின் எண்ணிக்கைதான் என்ன? ஒன்றா? இரண்டா? ஏழு நெடும்மதில்கள். அதன் நடுவே ஓர் அரங்கம். அதுதான் திருவரங்க பெரிய கோயில்.


மதில்கள் ஏழுடையது என்று கூறும் போதே அது ஒரு சிறந்த கோட்டை என்பது சொல்லாமலே விளங்குகிறதல்லவா. அதற்குப் பெயர்தான் அரங்க மாளிகை. அந்த மாளிகையின் கதவுகளைப் பற்றிப் பேசவும் வேண்டுமா? ஆணிப் பொற்றகடுரிஞ்சும் மணிகள் பொருந்திய கதவுகள். அவைகளை நிலையாகத் தாங்கும் நீண்ட நெடிய வாயில்கள். இவையெல்லாம் இவ்வாறென்றால் அந்த மாளிகையின் விமான வனப்பைச் சொல்ல வேண்டுமா? மாணிக்க வெயில் பரப்பும் வயிரமணி விமானம் அது. அதன் கீழ், மாளிகைக்குள் பச்சைமாமலை போல் மேனியும், பவழ வாயும், தாமரை நிகர்த்த தடங்கண்களும் பொருந்தி, சீர் பூத்த செழுங்கமலத் திருத்தவிசில் வீற்றிருக்கும் நீர்பூத்த திருமகளும், நிலமகளும் அடிவருடவும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று எப்பொழுதும் அருகிலிருந்து பணிபுரியக் காத்திருக்கும் அஞ்சிறைப்பறவை பணி கேட்கவும் திருத்துழாய்த் தாரார்ந்த மார்பில் ஞாயிற்றைப் பழிக்கும் கௌஸ்துபமணி பிரகாசிக்க நிற்கவும் அதர்மத்தைக் கடிந்து தர்மத்தை நிலை நாட்டத் துடிதுடித்து நிற்கும் ஐம்படையும் புடை சூழ்ந்திருக்க பிணியரங்க வினையகலப் பெருங்காலந்தவம் பேணி, மணி வயிற்றில் வந்துதித்த மலரயனை வழிபட்டு அவனிடம் வேண்டி மனதாரத் தரப்பட்டு பணியரங்கப் பெரும் பாயலில் பள்ளி கொண்டு பலதரப்பட்டோர்க்கும் பரிவு காட்டும் பரமதயாளன் அங்கே தன் வியக்கத்தக்க வலக்கரத்தை சிரசின் கீழ் கொடுத்துக் குணதிசை முடியும், குடதிசை பாதமும் நீட்டி வடதிசை முதுகு காட்டித் தென் திசையிலங்கை நோக்கிக் கண் வளரும் கருங்கடல் வண்ணன் அங்கே கோயில் கொண்டிருக்கிறான்.


அவ்வாறு ஐவாயரவில் அறிதுயில் அமலனை, பச்சை மாமலையை, கோவலனாய்க் குழல் ஊதும் கள்வனைக் கண்டு களித்த கண்கள் வேறொன்றின் பால் நாடுமோ? நாடுவதென்பது அரிதல்லவா. அவன் ஒரு கரிய பெரிய மலையென்றால் அவன் கண்கள் தாமரை. செய்ய கைகள் தாமரை. நெடிதுயர்ந்த தாள்கள் தாமரை. ஒரு நாலு முகத்தவனோடுலகீன்ற அவனுடைய திருநாபியும் தாமரை. அவனுடைய தொண்டையங்கனிவாயும் தாமரை. இவ்வாறு அவனது அவயவங்கள் எல்லாம் தாமரையாக அந்தப் பச்சை மாமலை மேல் ஒரு தாமரைக் காடே பூத்தது போல் காட்சியளிக்கிறானாம் அந்த அரங்கத்தரவணையான்.


வல்லியை நிகர்த்த வனிதை ஒருத்தி, தன் தாய்ச் சென்றபோது, தாயுடன் அவளும் சென்றாள் அரங்க மாளிகைக்கு. அரங்க மாளிகையில் நாம் மேலே உருவகித்த கோமளனைக் கண்டாள். அவன் பால் மையல் கொண்டாள்.


தேவர்க்குந் தேவனாய்த் தெளிந்து கூறப்படும் ஒரு உருவமில்லாதவனாய், மூவர்க்கும் மூலனாய்,  அம்மூவருள்ளும் முதல்வனாய், பணித்தடங்கா திமையவர்க்கும், பங்கயத்தோன் முதலோர்க்கும் பணித்தடங்காப் புகழுடையோனும், யாமே கடவுள் என்று பறைசாற்றிக் கொள்ளும் இவ்வுலகில் உள்ள எல்லாக் கடவுளர்க்கும் முதற்கடவுளாயும், கருதரிய உயிர்கள் யாவற்றிலும், உயிராய்க் கலந்து உறைகின்ற உயரிய குணநலனைக் கொண்ட ஒரு தனி நாயகமாய் விளங்குபவன் அவன் என்பதையறிந்தும் அவன்பால் மட்டில்லா மையல் கொண்டு விட்டாள் அம்மடவன்னம். ஆம். மறக்கொணா மையல்.


பட்டுடுப்பாள். ஆனால் அயர்த்தியிருப்பாள். பாவை பேணாள். அவளுடைய நீண்ட கயல் விழிகளில் எப்போதும் நீர்ப்பனிக்கும். கண்ணுறக்கங் கொள்ளாது. உணவு&உணவா? உண்பதென்பதையே மறந்துவிட்டாள். உன் மத்தம் பிடித்தவள் போல் எப்பொழுதும் எந்நிலையிலும் “அரங்கனே எனக்கிரங்க மாட்டாயா” என்றே அவள் வாய் முணு முணுத்துக் கொண்டிருக்கும். உன்மத்தம் பிடித்த இவளை உற்றார், உறவினரும் உபயோகமில்லை யென்று உறவாட மறுத்துவிட்டனர். உயிர் போன்ற மகள் இவ்வாறு இருப்பதைக் காணும் தாய்க்கு மனநிலை எவ்வாறு இருக்கும்? ஆயினும் அவள்தான் என்ன செய்ய முடியும்?


இவ்வாறு இருவினைப் பகுதியும் இன்ப துன்பமும் ஆகிய அந்த இறைவனையே யெண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த நிலையில் ஒரு மலைவாழ் வெற்பன்  தன்வசம் உள்ள முத்துக்களை விலை கூறிக் கொண்டு வருகின்றான், அவளது வீட்டின் வழியே. பெண்ணென்றால் அணிகலன்களில் ஆசையிருப்பது இயல்புதானே. இவ்வியல்பு அறிந்த அவளது தாயும், தோழிகளும் அந்த வெற்பனைக் கூப்பிட்டு அந்தக் காமவல்லியின் முன் கொண்டு நிறுத்துகிறார்கள்.


வெற்பன் தனது மூட்டையை அவிழ்க்கிறான். அதனுள் முத்துக்கள்  பளபளக்கின்றன. ஆகா! என்ன அழகான முத்துக்கள்! அந்த முத்துக்களைப் பார்த்ததும் அந்த இள நல்லாளுக்கு காமநோய் மேலும் அதிகரிக்கிறது. ஏன், எப்படி? முத்துக்களைக் கண்டதும் இதே போன்ற முத்துக்களை அணிந்திருக்கும் தன் காதலனாகிய அரங்கனின் அகன்ற மார்பகம் அவள் கண்களில் காட்சியளிக்கின்றன. அந்நன் முத்துகள் அனலாய்த் தெறிக்கின்றன அவள் கண்களுக்கு.


அம்மங்கை நல்லாளின் மையல் வேகத்தையறியாத அந்த முத்து வியாபாரி தன் சரக்கைப் பற்றி விரித்துப் புகழ்ந்துரைக்க ஆரம்பித்துவிட்டான். இந்த நன்முத்துக்கள் சாதாரணமானவையல்ல என்று ஆரம்பித்தான். அவனைக் குறுக்கிட்டு அங்குள்ள பெண்கள் இந்த முத்துக்கள் என்ன அப்படி உயர்ந்தவை என்கிறார்கள். அவன் விவரிக்கின்றான்.


 “தாய்மார்களே! முத்துக்கள் பலரகம். அவை யாவற்றையும் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்”


 “ஆமாம். எங்களுக்குத் தெரியாததைப் பிரமாதமாக எடுத்துச் சொல்லப் போகிறாயாக்கும். முத்துக்கள் கடலில் கிடைக்கிறது. நத்தை வயிற்றில் முத்துபிறக்கும்” என்று பழமொழி கூட உண்டே”& இது ஒரு பெண்மணி.


 “முத்துக் குளிக்குந் தொழிலில் முன்னணியில் நிற்பது நம் நாடுதானே. பாண்டிநாட்டு முத்துக்கள் பழம்பெருமை பெற்றவையல்லவா?” - இது வேறொரு பெண்.


 “பாண்டி நாட்டில் கடலில் இறங்கி முத்துக் குளியல் நடத்துகிறார்கள். ஆனால் அந்த முயற்சிக் கூடத் தேவைப்படுவதில்லையாம் பல்லவ நாட்டிலே. மரக்கலங்கள் பல நாடுகளினின்றும் அடிக்கடி வந்து போவதால் அந்த மரக்கலங்கள் வரும் வேகத்தில் கடல்களினின்றும் வாரிக் கொண்டுவரும் மாமணிகள் உடன் வந்து மேலும் அலைகளால் ஈர்த்துக் கொண்டு வரப்பட்டு கரைகளில் ஒதுக்கப்படும் மாமணிக்குவியல்களை உடைய மாமல்லை என்று நம் நாலு கவிப் பெருமானாகிய மங்கை மன்னனும் பாடியிருக்கிறாரே “வங்கத்தால் மாமணி வந்துந்துமுந்நீர் மல்லை என்று”& இது மற்றொருவள்.


பெண்களின் பேச்சுகளுக்கு இடம் கொடுத்துவிட்டால் பின்னர் தன் வியாபாரம் நடந்தாற்போல்தான் என்று கருதிய அந்த முத்து வியாபாரி, “அம்மணிகளே! முத்துக்கள் கடலில் மட்டும் பிறப்பனவல்ல. வேறு பல இடங்களிலும் பிறக்கின்றன.” என்கிறான்.


 “அப்படியா? என்கிறார்கள் அப்பெண்மணிகள்”. ஆம் தாயே முத்து பிறக்குமிடங்களைச் சொல்கிறேன் கேளுங்கள்.


 “தந்தி வராக மருப்பிப்பி பூகந்தனிக்கதலி
 நந்த சலஞ்சல மீன்றலை கொக்கு நளினமின்னார்”
 கந்தரஞ்சாலி கழை கன்னலாவின் பல்கட் செவிகா ரிந்து
 வுடும்புகரா முத்தமீனா இருபதுமே”


“என்ன, என்ன!! முத்துக்கள் விளையும் இடங்கள் இத்தனையா? நாங்கள் எதைக் கண்டோம். முத்துக்கள் என்றால் சரிதான். அவை என்ன வகை? எங்கிருந்து கிடைத்தது என்று எண்ணிப்பார்த்தா நாங்கள் முத்துக்களை வாங்குகிறோம்”


இதற்குள் ஒரு பெண் குறுக்கிடுகிறாள் “ஆமாம் ஐயா! நீங்கள் இப்போது கொண்டு வந்து இருக்கும் முத்து எந்த வகையைச் சேர்ந்தது?”


முத்து வியாபாரிக்கு உற்சாகம் உண்டாகிவிட்டது. தன் முத்துக்கள் இந்தப் பெண்மணிகளிடையே செலாவணியாகிவிடும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டாகிறது. உடனே தன் வசமிருக்கும் முத்துக்களைப்பற்றி புகழ்ந்து பேச ஆரம்பிக்கிறான்.


‘பெண்மணிகளே! இவை சாதாரண முத்துக்களல்ல. முத்துக்களில் சிறந்த வகை மூங்கிலில் பிறக்கின்றன. பெருங்காடுகளில் நீண்டு உயர்ந்து வளர்ந்திருக்கும் பழுத்த மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசி வெடிப்பதனால் அதனின்றும் முத்துக்கள் வெளிவரும். அந்த முத்துக்களை “வேய்முத்தம்”என்று அழைப்போம். இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதும் வேய்தந்த முத்தம்தான் அம்மணி.


அந்த வெற்பன் சொல்லி வாய் மூடவில்லை. இதுகாறும் அந்த வெற்பனையும், அவன் கொணர்ந்திருந்த முத்துக்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டும் அவனும் மற்ற பெண்களும் பேசிக்கொண்டிருந்த உரையாடலையும் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த அந்த விரகவதிக்கு அந்த வெற்பன் தன் முத்துக்கள் வேய் தந்த முத்தங்கள் என்றும் அவைதான் முத்துக்களில் சிறந்தவை யென்றும் கூறக் கேட்டவுடன் ஏனோ திடீரென்று ஆத்திரம் வருகிறது. கோபம் கொந்தளிக்க, ‘என்ன சொன்னாய்? வேய் தந்த முத்தமா? அதைப் பற்றி என்னெதிரில் வியந்து கூற என்ன தைரியம் உனக்கு? நீ உடனே இந்த இடத்தை விட்டுப் புறப்படு” என்கிறாள்.


அவளுடைய கூற்று, திடீர்ச் சினம் எதனால் என்று வெற்பனுக்கு மட்டுமல்ல. அங்குள்ள பெண்களுக்கும் விளங்கவில்லை. எல்லோரும் விழிக்கிறார்கள்.


 “ஏன் குழந்தாய் கோபம். முத்துக்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்றுதானே சொன்னேன். உனக்குப் பிரியம் இல்லையென்றால் வேண்டாமென்று சொல்லிவிடு.


எதற்காக வீணில் ஆத்திரப்படவேண்டும். இந்த முத்துக்கள் உன்னை என்ன செய்துவிட்டன, தாயே” என்கிறான் வெற்பன்.


 “வெற்பா! வேய் தந்த முத்துக்கள் என்று வியந்து விவரித்துக் கூறினாயே உன் முத்துக்களை. அதைப்பற்றி எனக்கு நன்கு தெரியும். உன் வேய்தந்த முத்தைப் பற்றி நான் நன்றாக அறிவேன். நீ வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். கேள் சொல்கிறேன்”, என்று ஆரம்பிக்கிறாள். எல்லோரும் ஆவலுடன் கேட்கின்றனர்.


 “நீ குறிப்பிட்ட வேய்தந்த முத்தம் புனற்பள்ளியாகிய பாற்கடலில் ஆலிலையில் பள்ளி கொண்டருளும் எங்கள் நாராயணன் பால் சென்று பயபக்தியுடன், “எந்தாய்! அரங்கா! என்னிடம் இரங்காய்” என்று கூறி பணிந்து நிற்பதை நீயறியாய் போலும். அவன் தலையால் இரந்தது நீ அறியாதது போலும் என்று கூறி தொடர்கிறாள்.


படைப்புக் கடவுளாகிய பிரமனிடம் ஏற்பட்ட பொறாமையினால் அவனது சிரங்களில் ஒன்றைக் கொய்ய அந்த பிரம்ம கபாலம் சிவனுடைய கையில் ஒட்டிக் கொண்டுவிட்டது. பித்தனுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. தன் நிலை மறந்தான். தன் கையில் ஒட்டிக் கொண்ட பிரமனின் தலையுடன் பல இடங்களிலும் சென்று இரந்துண்ண ஆரம்பித்தான். தன் வினை தீர தலைதாழ்த்தி முழுமுதற்கடவுளாகிய முந்நீர் வண்ணனிடம் சென்று இறைஞ்சினான் முக்கண்ணன். அவன் பால் இரக்கம் கொண்ட ஆதிமூர்த்தியாகிய ஆலிலைத் துயின்ற அமலன் கண்டியூர் என்னும் தலத்தில் அரனது சாபத்தைத் தீர்த்தான். அரங்கன்பால் ஆறாக்காதல் கொண்ட அந்த மடநல்லாள் அந்த வெற்பனிடம் இந்த வரலாற்றினைக் கூறிவிட்டு மேலும் தொடர்கிறாள்.


 “வெற்ப! கேள். இவ்வளவோடு போயிற்றா. என்னுடைய உளம் கவர்ந்த அக்கார்முகில் வண்ணன் உகந்து உறங்குவதற்காக உபயோகிக்கிறானே ‘அரவணை’, அதை நீ உயர்த்தியாகச் சொன்ன வேய்முத்தராகிய நீலகண்டன் தன் செஞ்சடையில் ஆபரணமாகச் சூடியிருக்கின்றான். அதிலிருந்து என்ன தெரிகிறது” என் பரமனின் படுக்கையை அவன்பால் உள்ள பயபக்தியால் தன் சிரமேல் தாங்கி மகிழ்கிறான் அந்த மங்கைபாகன் என்பதும் உண்மைதானே; இதனின்றும் தெட்டெனத் தெரிகிறது.


 “மேலும் கேள்! மாவலிபால் மண்ணிரந்த மாமாயன் தன் குறளுரு நீங்கி மாவுருக்கொண்டெழுந்தான். அவ்வமயம் கருதினர் பயன்பெறயென காத்திருக்கும் அவனது கடிமலரிணையடிகளில் ஒன்று மண்ணினையளக்க, மற்றொன்று மேலே மேலே சென்று மாதகர்களையும் மயக்கியது. அவ்வாறு நீண்டு உயர்ந்து தன் உலகிற்கு வந்த அந்தச் செந்தாமரைத் திருவடியைக் கண்ட அயன் ஆடினான். அவன் புகழ்ப் பாடினான். அந்தத் திருவடியைக் கண்களில் புதைத்துக் கொண்டான். தன் தந்தையின் திருவடி&தேவரும் மற்ற யாவரும் தேடியும் காணாத் தூய தாமரைத் திருவடி & தன்னை தேடி வந்ததைத் தன் பாக்கியமென்றே கருதினான். அதற்கேற்ப பூசைகளைச் சரிவரச் செய்தான். தன் கமண்டலத்திலிருந்த நன்னீரால் அந்தத் திருவடியைக் கழுவித் தன் தலைகளில் அந்நீரால் புனிதப்படுத்திக் கொண்டான். அப்போது அந்தத்தூய திருவடியினின்றும் உற்பத்தியானாள் கங்கை. அவள் பிரமனின் கட்டளைப்படி அயனுலகிலேயே இருந்து வந்தாள். பின்னர் சூரியகுலத்தோன்றலாகிய பகீரதனின் வேண்டுகோளுக்கிரங்கி விண்ணினின்று இழிந்து மண்ணுலகிற்கு வந்த விவரமும், அவளது வேகத்தை நிலமகளால் பொறுக்க முடியாது என்ற கருத்தினால் கயிலாசன் அக்கங்கையைத் தன் செஞ்சடையில் தாங்கியதையும் நீ அறியாதவனா! வெற்ப! அவ்வாறு அத்தூய நன்னீராளாகிய கங்கையைத் தன் சடையில் தரித்ததனாலல்லவா நீ கூறிய அந்த வேய்முத்தர் மங்களத்தை யடைந்து “சிவன்” என்று நாமமும் பெற்றார். உன்னால் போற்றிப் புகழப்படும் அந்த  மங்கை பாகன் தன் சடையில் கொண்டிருக்கும் கங்கை யாருடைய பாதத்து நீர் என்பதை இனியாவது உணர்வாயாக!”


 “உன்மத்தனாய் உலவிய உன் உமாபதி தனதுச்சியில் தன் பாட்டனாராகிய தயாபரனின் தாளிடைப் பிறந்த தூய நன்னீரினால் தூய்மை பெற்று பித்தொழிந்து அவன்பால் புராணங்கள் பாட ஆரம்பித்தான். புரிசடையோன் புராணம் செய்தேத்தப் புனலரங்கத்தினிடையே புளினத்துக் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறான் என் அழகிய மணவாளன்.


ஆனந்த நடமிடும் பாதன் என்று உன் போன்ற அன்பர்களால் போற்றப்படும் அந்த அரன் சுடலை நீறணிந்து மாதிரங்கள் யாவும் தன்னுடன் சுழலச் சுழன்றாடும்  அவ்வானந்தக் கூத்தை எதற்காக அவன் ஆடுகின்றான் என்பது நீயறியமாட்டாய் போலும். ஆதி மூர்த்தியின் அருள் நினைந்தல்லவா அவன் அவ்வாறு தன்னையும் மறந்து ஆனந்தக் கூத்தாடுகிறான்!


உண்மை இவ்வாறிருக்க, நாங்கள் பெண்கள்தானே! முத்தின்பால் கொண்ட மோகத்தால் எதைக் கூறினும் நம்பிவிடுவார்கள் என்று நினைத்தல்லவோ நீ கொண்டு வந்திருக்கும் வேய்முத்தத்திற்கு விலையானதில்லை என்று வியந்து கூறுகிறாய். இனியும் அப்படிக் கூறாதே. உன் முத்தத்திற்குரிய தகுதியைத்தான் நான் தெள்ளத் தெளியக் கூறிவிட்டேனே” என்கிறாள் அம்மடநல்லாள்.


 “முருகனுறை குறிஞ்சித்தேன் முல்லை பாய, முல்லை நிலத்தயிர் பானெய் மருதத்தோட, மருதநிலக் கொடும்பாகு நெய்தற்றேங்க, வரிபுனற்காவிரி சூழ்ந்த பொன்னரங்கப் பெருங்கோயிலில் பணிபாயிற் பள்ளி கொள்ளும் பரம மூர்த்தி பால் கொண்ட மையலினால் அவளது நெஞ்சம் அனல் வாய் மெழுகுபோல் உருக, அவ்வாறு நெஞ்சுருகிக் கண்பனித்து நின்று சோரும் அந்தப்பூவைக்கு இந்த வேய்முத்தம் வேம்பாகக் கசக்கிறது.


 “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே” என்று சூளுரைத்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் தூய மரபில் வந்து தோன்றியவள்தானே இந்த மடமங்கையும். அரங்கனைத் தவிர்த்து உலகில் வேறு தெய்வமே இல்லை. ஆதலின் அவனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் என்று அறுதியிட்டுக் கூறியவளல்லவா அந்த அன்னப் பேடை” “கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாட மாட்டேன்” என்று மறுத்த மாபெரும் புலவன் பொய்யாமொழியின் புலமைபெற்றவள் தானே இவளும். தான் அரங்கனின் பால் ஆறாக்காதல் கொண்டு அவனை அடைய ஆவல் கொண்டிருக்கும் பொழுது  அவனுக்கு எவ்விதத்தும் பொருந்தாத அரனை நினைவு கூறும் வகையில் “வேய்முத்தம். இதற்கு விலைமதிப்பே கிடையாது” என்று வெற்பன் கூறவும் அந்த மங்கைக்கு அடங்காக் கோபம் வந்து விடுகிறது. அதன் விளைவு தான் மேற்கூறிய அவளது கூற்றுக்கள். திருநெல்வேலியில் கோயில் கொண்டிருக்கும் சிவபிரானுக்கு “வேய் முத்தர்” என்பதுதான் திருநாமம் என்பதை சைவ உலகமேயன்றி யாவருமேயறிவர். மூங்கிலடியில் அவர் தோன்றினாராம். அதனால் அவர் ”வேய் முத்தர்” என்றழைக்கப்படுகிறார்.


 திவ்ய கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்றும் அழகிய மணவாள தாசர் என்றும் அனைத்துலகத்தாரும் அகமகிழ்ந்து அழைக்கும் பேறுபெற்ற பெரும்புலவராகிய பக்தர் பரவசம் கொண்டு பாடியருளியுள்ள அஷ்டப்பிரபந்தம் என்னும் நூற்றொகுப்பில் திருவரங்கக் கலம்பகம் என்னும் பகுதியின் கண் காணும் ஒருபாடல் தான் இது. இதிலுள்ள சொன் நயத்தையும், பொருணயத்தையும், பாவின்கண் உள்ள தொடையழகையும், நடையழகையும் யாவரும் படித்து இன்புற வேண்டும் என்பதே இச்சிறியோனின் அவா.


பாடல்


விலையான திலையென்று நீ தந்த முத்தம்
வேய் தந்த முத்தாகில் வெற்பாவியப்பால்
இலையாற் புனற்பள்ளி நாராயணன் பா
லெந்தாயரங்கா விரங்கா யெனப்போய்த்
தலையாலிரக்கும் பணிப்பாய் சுமக்குந்
தன்றாதை யவர் தாமரைத்தாள் விளக்கும்
அலையாறு சூடும் புராணங்கள் பாடு
மாடும் பொடிப்பூசி யானந்த மாயே.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை