வெள்ளி, 10 ஏப்ரல், 2020

ஆராவமுதனின் அருளமுதம் பெற்ற திருமழிசைப்பிரான் - வி.இராகவன், ஈரோடு

சாதாரணமாக திருமழிசையாழ்வார் கச்சியம் பதியிலுள்ள வெஃகா என்கிற திவ்விய தேசத்தில் வீற்றிருக்கும் சொன்னவண்ணம் செய்த பெருமாளென்றும், யதோத்காரி எனவும் போற்றி சேவிக்கும் பரந்தாமனிடமே அதிக பக்திப் பிரேமையுடன் இருந்தார். அவர் கிட்டத்தட்ட சுமார் பதினாறு திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். தவிரவும் அவர் திருக்குடந்தை ஆராவமுதனிடம் மிகவும் பரி பூர்ண கடாக்ஷம் பெற்று இருந்தார் என்பதே இந்த ஆழ்வாருடைய வரலாறு நமக்குக் கூறுகின்றது.


ஆராவமுதனிடம் மாறாத அன்புடன் அவரிடம் உரையாடியதாகவும் கூறுவர். பல திவ்ய தேசங்களுடைய பெருமான்களைப் பாடினாலும், இவருடைய பாசுரங்களில் பெருமானுடைய ஐந்து நிலைகளாகிய பரம், விபவம், வியூகம், அந்தர்யாமி, அர்ச்சை போன்ற எம்பெருமானுடைய திவ்ய லீலா விபூதியில் அவதார மகிமைகளையே பாசுரத்தில் கூறியுள்ளார். ராமன், கண்ணன், வாமனன், ந்ருஸிம்மன் போன்ற பெருமான்களை அதிகம் புகழ்ந்து பாடிய இவர், ஆராவமுதனைத் தன் மேனி முழுவதும் அவனுக்கே விட்டிருந்த அவருடைய பக்தியில் பக்திசாரர் எனப் புகழப்பட்டார்.


இவர், பிரபந்தங்கள் மொத்தமே இரண்டாகும், (120) நூற்றிருபது பாசுரங்கொண்ட திருச்சந்த விருத்தம், (96) தொன்னூற்று ஆறு பாசுரங்கள் கொண்ட நான்முகன் திருவந்தாதி, இவ்விரு பிரபந்தங்கள் இவருடையது. அவையே “அர்த்த பஞ்சகம்”

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்தது மட்டுமல்ல, பிற மதங்களை விட ஸ்ரீவைஷ்ணவமே ஆதிமூலம் என சான்றுகளுடன் விளக்கினார். மக்கள் அவரைப் பார்க்கவும், அவருடைய தேனமுத சொல்லாடலைக் கேட்கவும் திரள் திராளாகத் திரண்டனர். இவர் அவதாரஸ்தலம் திருமழிசையாயிருந்தும், இவருடைய பிரதான வாசஸ்தலம் கச்சியம்பதியே. வெஃகாவில் மனமுருகி பல மணி நேரம் உணவு, உறக்கம் மறந்து நிற்பாராம். யதோத்காரி பெருமான் அவருக்குக் குடந்தை ஆராவமுத சாரங்கபாணியாகவே காட்சித் தருவாராம். அப்போது காஞ்சியில் சைவமே மேலோங்கியிருந்த சமயம்.

இவர் அதை உணர சமண, சாக்கிய, பௌத்த, சைவ நூல்களைப் படித்து அறிய முயன்றார். அதன் பலன் சைவமே சிறப்பு என சில நாட்கள், பரந்தாமனை மறந்து, பரமன் திருவடியேத் தொழுது நின்றார். சில நாட்கள் மயிலையில் ஒரு சைவப் பெரியார் இருப்பதாகவும், அவரிடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள ஆழ்வாரும், திருமயிலையை அடைந்துபோது, அப்பெரியார் சிவனடி சேர்ந்து விட்டதாய் சிலர் சொல்லக் கேட்டு வருந்தியிருந்தார். இவரைப் பற்றி நன்கு அறிந்துள்ள பேயாழ்வார் இவரைக் காண வந்தார். திருமழிசையாழ்வார் ஆதி கேசவப் பெருமாள் கோவில் குளக்கரையில் வருத்தமுடன் அமர்ந்திருந்ததைக் கண்ட பேயாழ்வார், “ஸ்வாமியின் விசனத்துக்குக் காரணம் யாதோ?” எனக் கேட்கவும், தன் வருத்தத்தைக் கூறிய திருமழிசையை பார்த்த பேயாழ்வார், “ஆத்மா நிலையானதா? சடலம் நிலையானதா? ப்ரும்மத்தின் தத்துவம் என்னவோ? அந்தாத்மாவாக உள்ளவர் யார்?” எனக் கேட்க திருமழிசையாழ்வார் விடை கூற தயங்கிய நிலையில், மீண்டும் பேயாழ்வார் சில கேள்விகளைக் கேட்டார். “பரத்வம்" என்பது என்ன? அஃது யாரால் எவரால் ஆத்மாவிற்கு அளிக்கப்படுகிறது. நம் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவின் நிலை என்ன? எங்கே போய் சரணடைகிறது? என்றும், ப்ரும்மம் ஏகம் என்றால், தாய் யார்? தந்தை யார்? மகளோ மகனோ யார்?


திருமழிசையாழ்வார் பல கேள்விக்கு விடை பகராமல் இருந்தார். பேயாழ்வார், ஸ்ரீமந்நாராயணனின் பரத்வத்தையும், மோக்ஷ சாம்ராஜ்ய நிலையையும் இன்னும் பலவித உண்மை தத்துவங்களைக் கூறியும், ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த ஸம்பிரதாயம், அந்த பரந்தாமனுடைய லீலா விபூதிகளையும் கூறி அவருடைய சைவ தோற்றத்தை மாற்றியும், ஸ்ரீவைஷ்ணவராக்கி தங்கள் மூவர் திருவந்தாதி பட்டோலைப் படுத்தியுள்ளதைத் தந்து, ஆதிகேசவ பெருமாளையும், மாதவப் பெருமாளையும் ஸேவிக்கச் செய்து, தீர்த்த, துளசி, சடகோபம் முதலிய பிரஸாதங்களை அவருக்கு அருளிச் செய்ய வைத்து, அவருடைய மன இருளை நீக்கி, தெளிய வைத்து நாராயணனே அனைத்துக்கும் காரணமாவான் என்றும், அவன் பெருமைகளை கிட்டத்தட்ட பன்னிரண்டு நாட்கள் உபதேசம் செய்து பெரியது, சிறியது, அணு, பிரம்மாண்டம் அவனே அவதார புரஷன், புருஷோத்தமன் எனத் தெரிய வைத்து அவருக்கு உண்மைத் தத்துவத்தை உணர்த்தினார். இதன் பிறகே அவர் பிரபந்தம், அர்த்த பஞ்சகமாக பகவானுடைய ஐந்து நிலைகளின் தத்துவம் பற்றியும் மக்களுக்குத் தெரிய வைத்தார். மூல காரணகர்த்தா பெருமானே என உணர்ந்த ஆழ்வார், “ஸ்வாமி நாதமுனிக்குக் காட்டிய ஆராவமுதான ஆராவமுதனைக் கண்டதும் பரவசப்பட்டு, கண்களில் நீர் வழிய மெய்மறந்து நின்றார்”. ஆராவமுதனும் இவரை ஆட்கொண்டான்.


திருக்குடந்தை அக்ரஹாரத்தில் ஒரு ஹோமம் நடந்துக் கொண்டிருந்த சமயம். இவர் அந்த இடத்து வாயிலில் போகவும், இவரை பற்றி நன்கு உணர்ந்த அந்தணர்கள், இவர் பிரம்பு தொழிலாளி திருவாளன் மகன், நான்காவது வருணத்தவன் இவனை உள்ளே விடக் கூடாது என இவரைத் தடுத்ததும் மட்டுமின்றி, குறைபட்ச சொற்களைக் கூறி இவரை இகழவும், ஆழ்வார் மனம் நொந்து, “ஆராவமுதா இவ்வடியேன் செய்த குற்றமென்ன? உன்னிடத்தில் உன் கருணையில் அனைவரும் ஒன்று தானே? இவர்கள் என்னை இகழவில்லை. உன்னை, உன்னால் படைக்கப்பட்ட இந்த ஆத்மாவை குறை கூற நீ பார்த்துக் கொண்டு இருக்கலாமா?” என வேண்டி பிரார்த்திக்க வேதியர்கள் ஹோமத்தின் மந்திரம் மறந்து போய் பிரமித்து நிற்க, ஆழ்வார் திருமேனி பிரகாசமாய் எங்கும் ஆராவமுதன் சேவை ஸாதிக்க, அனைவரும் ஆழ்வாருடைய பாதத்தில் விழுந்து, “அடியோங்களை மன்னித்தருள்வீர் பெருமானே" எனக்கூற ஆழ்வாரும் அவர்களுக்கு விட்டுப்போன அந்த ஹோம மந்திரத்தை எடுத்துச் சொல்லி ஹோமத்தை முடித்துவைத்தார். ஆழ்வாருக்கு சைத்யோபசாரங்கள் செய்து தளியாராதணை செய்தும் அவரை பல பட புகழ்ந்து அடிபணிந்து வழியனுப்பி வைத்தனர்.


பேயாழ்வாரால் தான் முறையாக வழிப்படுத்தப் பட்டதை நன்றியோடு அவரை நினைத்து திருவடி பணிந்து, திவ்ய தேச எம்பெருமான்களை ஸ்வாமி நம்மாழ்வார் தனது புளிய மரத்தினடியிலேயே சேவித்தது போல் இவரும் தம் பாசுரம் மூலம் (16) பதினாறு எம்பெருமான்களை சேவித்து மகிழ்ந்தார். இவரால் பாடப்பட்ட திவ்ய தேசங்கள் மொத்தம் பதினாறு ஆகும். அவைகள்,
1) திருவரங்கம், 2) அன்பில், 3) திருப்பேர்நகர் (கோயிலடி), 4) திருக்குடந்தை (கும்பகோணம்), 5) கவித்தலம், 6) திருக்கோட்டியூர், 7) திருக்கூடல் மாநகர் (மதுரை), 8) திருக்குறுங்குடி, 9) திருப்பாடகம், 10) திருவூரகம், 11) திருவெஃகா, 12) திருவெவ்வுள் (திருவள்ளூர்), 13) திருவேங்கடம், 14) திருப்பாற்கடல், 15) திருத்துவாரகை, 16) பரமபதம்.


இந்த திவ்ய தேச எம்பெருமான்களைப் பாசுரங்களால் பாடிக் குளிர வைத்த ஆழ்வாரை தங்கள் திவ்ய சேவா தரிசனத்தைத் தந்து ஆழ்வாரைக் குளிர வைத்தனர். ஆழ்வாரும் தனக்கு இத்தனை தகுதியைக் கொடுத்த பேயாழ்வாரை தன் ஆசார்யனாகவே எண்ணி அவர் பாதத்தை நெஞ்சில் நிறுத்தி மனதார அவருக்கு நன்றியையும் விச்வாசத்தையும் கொண்டு பணிந்து அவரைத் துதித்தார்.


தான் தவறான பாதையில் போனதும், பேயாழ்வார் தம்மை நல்வழிப்படுத்திய அம்மாபெரும் உத்தமரை மனதார போற்றினார் திருமழிசைப் பிரான். ''ஏதோதர்ம: புரம் ச்ரேய க்ஷணமகா சாந்திருத்தமா வித்யை காபரமத்ருப்தி: அஹிம்சைகா ஸகா வஹா" இதை விதுரர் யுதிஷ்டரிடம் (விதுரநீதி) கூறினார். எங்கே அமைதி, சாந்தி, அஹிம்சை, தர்மம், நீதி உள்ளதோ அங்கே பரமாத்மா நிச்சயம் இருப்பான் எனவும், திருதராஷ்டிரரிடமோ, துரியோதனனிடமோ இவைகள் மருந்துக்குக் கூட இல்லை . தருமா நீ தருமத்தைக் கைக்கொள். வெற்றி பெறுவாய். நீடூழி வாழ்வாய் என்றார். இதை இங்கு அடியேன் குறிப்பிட்டதற்குக் காரணம், பேயாழ்வார் திருமழிசையாழ்வாரிடம் இதுபோன்ற பகவத் கீதாஸாரம் போன்றவைகள் வேறு எதிலும் இல்லை என அவரை உணர வைக்கவேயாகும். நீயாருக்கும் தொல்லைத் தராதே. உனக்கும் யாராலும் கெடுதல் வராது என்ற உண்மையான தத்துவ ஆசார்ய பொன்மொழியையே மழிசைபிரான், கும்பகோணத்தில் நிதர்ஸனமாக கண்கூடாகக் கண்டு மனம் உருகினார்.


துரோணர் தனுர் வித்தைக் கற்றவர், அதனால் தான் அர்ஜுனன் மூலம் துருபதனை சவாலில் ஜெயிக்க முடிந்தது. மேலும், அவருடையவாயால் “ஸ்திரீ, ஸ, ராஜஸ, ஸர்பேஸு, ஸ்வாத்யாய ப்ரபுசத்ருஸ போகேஷ் வாயுஷி விச்வாசம்க: ப்ரஜ்ஞ: கர்து மர்ஹதி'' “(ஸ்தீரி) பெண், ராஜா (அரசன்), பகைவன், செல்வந்தன், பாம்பு, மெத்த படித்த வித்வான், இவர்கள் எப்போது? எப்படி? எவ்வாறு? எங்கு? விச்வாசம் மாறி நன்றி மறந்து, மரியாதையின்றி மாறி நமக்கு எதிராவார்கள் என்று எண்ண முடியாது என்றெல்லாம் தனக்கு ஆசார்யனாக இருந்து பல உண்மைகளை உணர்த்திய பேயாழ்வாரை தனது விழிகளில் நீர் வழிய மனமுருகினார் திருமழிசையாழ்வார்.


தவிர, புராண இதிகாசம் பற்றியவிவரம், ரிஷிகளின் பிறப்பும், பரந்தாமனுடைய அவதார லீலா விபூதிகளையும், பரந்தாமனே பிரம்மனைப்படைத்து வேதந்தந்து படைக்கும் தொழிலைத் தந்தான். அவன் இல்லாத இடமே இல்லை. ப்ரஹ்லாதனின் வரலாறும், ந்ருஸிம்மனின் கிருபையையும், துருவன் சரித்திரம் போன்றவையே ஸ்வாமிக்கு உபதேசித்த பேயாழ்வாருடைய ஆசியும், அனுகிரஹமும் தான் இவரை இரண்டு பிரபந்தங்களைப் பாடவைத்தது என்றே கூறலாம். பொய்கையாழ்வார் பிறந்த திருவெஃகாவை (யதோத்காரி) பெருமான் வெகுவாக புகழ்ந்து அவன் சரணாகதியைத் தேடிப்போ உனக்கு ஸகலமும் நலமாகும் என்று விடை தந்த ஆசார்யனை நினைத்து பெருமிதமடைந்தார்.


நன்றி - சப்தகிரி பிப்ரவரி 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக