வெள்ளி, 10 ஏப்ரல், 2020

இராமபிரானுக்கு உதவிய கருடாழ்வார் - எஸ்.சுபாஷிணி சுகுமாரன், மன்னார்குடி

தமிழகத்தில் ஈடு இணையில்லாத நூல் கம்பர் எழுதிய இராமாயண நூல் இன்றும் பல்லோராலும் படித்துப் பாராட்டப்படுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் இராமாவதாரத்தின் சிறப்பை விளக்கும் இராமாயண நூலை வால்மீகி முனிவரின் வடமொழி நூலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கேற்ப ஒரு சில மாறுதலைக் கொண்டு கம்பர் எழுதியுள்ளார்.

இலங்கையை ஆட்சி செய்த இராவணன் சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான். சீதையை விடுவிக்கும்படி இராமபிரானுக்கும், இலங்கை அரசன் இராவணனுக்கும் பதினெட்டு மாதங்கள் கடும் போர் நடந்தது. இராமபிரான் அங்கதன், அனுமன் முதலானவர்களை இராவணனிடம் தூதாக அனுப்பியும் சீதையை விடுவிக்க இராவணன் மறுத்து விட்டான். இராமபிரான் படைகளுக்கும், இராவணனது படைகளுக்கும் கடும் போர் நடந்தபோது இராவணனது மகன்களில் ஒருவனான இந்திரசித்து இராமபிரானது படைகளின் மேல் கொடிய நாகபாசம் என்னும் ஆயுதத்தினை எய்தான்.

அதனால் இலக்குவணனும், பல படை வீரர்களும் மூர்ச்சித்து விழுந்தனர். அப்போது அங்கு கருடாழ்வார் தோன்றி, இலக்குவணனையும், படை வீரர்களையும் அந்நாகபாச ஆயுதத்தை விலகச் செய்து இராமபிரானுக்குதவினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த கருடாழ்வாரின் உதவியை இனிக் காண்போம்.

நாகபாசத்தின் சக்தி :

இந்திரசித்து கொடிய ஆயுதமான நாக பாசத்தை இராமபிரானின் படையின் மேல் எய்தவுடன் அந்த அம்பானது பத்துத் திசைகள் எங்கும் இருள் மயமாகப் பரவி விரைந்து சென்று மலை போன்ற தோள்களையுடைய இலக்குவணனைத் தாக்கியது. உலகமே தன்னோடு எதிர்த்து வந்த காலத்தும் கலங்காத இலக்குவணன் தோள்களை இறுக்கமாக நாகபாசம் கட்டியதால் மூர்ச்சித்து விழுந்தான். இலக்குவணனுக்குதவச் சென்ற ஆற்றல்மிகுந்த அனுமானையும் நாகபாசம் கட்டியதால் இராமபிரான் செய்வதறியாது மனம் களங்கினார்.

கருடாழ்வார் தோன்றுதல் :

போர்க்களத்தில் இலக்குவணனும், அனுமானும் மற்றும் படை வீரர்களும் மூர்ச்சித்திருந்த போது கருடாழ்வார் அங்கு தோன்றினார்.

கருடாழ்வாரின் சிறப்பையும், அவர் தோன்றிய போது போர்க்களத்தில் நிகழ்ந்த மாற்றத்தையும் கம்பர் தன் இராமாயண நூலில் மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார், அப்பாடலானது :

‘அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா 
வில்லைச் செலுத்தி நிலவைத் திரட்டி விரிகின்ற சோதி மிளிர 
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி இடைநின்ற மேரு எனும் 
அத்தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மைசுடர'

எங்கும் பரவிய இருட்டையடக்கி, சூரியனுடைய ஒளியைப் பரவச் செய்து, அகன்ற திக்குகள் எங்கும் ஒளியைச் செலுத்தி, சந்திரனது ஒளியைத் திரளும்படி செய்து ஒளிவிடும் பேரொளியானது எங்கும் பிரகாசிக்க மின்னும் மணிகளைப் பதித்த கருடாழ்வாரின் முடியானது மேருமலையின் உச்சியில் தோன்றும் சூரியனின் ஒளியைக் காட்டிலும் மும்மடங்கு பொலிவுடன் விளங்க கருடாழ்வார் போர்க்களத்திற்கு வந்தார் என்பது கருடாழ்வாரின் சிறப்பைக் கூறும் கம்பரின் பாடற்கருத்தாகும். 

கருடாழ்வார் ஸ்ரீராமரைத் துதித்தல் :

தேவர்களுக்கெல்லாம் சிறந்த தேவனே! உலகில் உள்ள மக்கள் பலரும் திருநாமத்தை ஓதி வழிபட அவர்களுக்கு அருள் வழங்குபவரே! பதினான்கு உலகங்களையும் அழியாமல் காத்து அரசாட்சி புரியும் மேன்மையான முதல்வரே! யாவரும் அடைய முடியாத பேரின்பமாகிய வீட்டுலகம் என்னும் பரமபதத்தை அடியார்களுக்கு வழங்கும் அழகிய முடியையுடையவனே!

ஐயோ! மாயையில் கட்டுப்படாதவனாகிய நீ அதில் கட்டுண்டவர்களைப் போல வருந்துகிறாயே! அளவற்ற மாயையின் வலிமையை எவரால் அறிய முடியும். கம்பர் பாடலாவது :

தேவாதி தேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்! 
மூவாது எந்நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா! 
மேவாத இன்பம் அவை மேவிமேவ நெடுவீடு காட்டு அம்முடியாய்! 
ஆஆவருந்தி அழிவாய் கொல் ஆர்இவ் அதிரேக மாயை அறிவார்.

இவ்வாறு மேலும் கருடாழ்வார் இராமபிரானை நோக்கி உன்னை சரணடைந்தவர்களுக்கு பிறவியின்றி பரமபதம் அருளும் பெரியோனே! உலகையெல்லாம் துறந்த துறவியைப் போல காணப்படுகிறாய். இல்லறத்தோடு வாழ்பவனாகவும் காணப்படுகிறாய். உலகில் பிறந்தவர்களைப் போலவும். பிறவாதவர்களை போலவும் காணப்படுகின்றாய்.

உலகில் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு அரிய செயலாகக் கொண்டு மனித வடிவில் தோன்றிய உன் மாயையின் தன்மையை யார் அறிவார்? இந்த ஈரேழு உலகங்களையும் தன் இரு சிறகுகளால் கவித்து மூடவல்ல கருடாழ்வார் இராமபிரானைத் துதித்து வணங்கியபின் உடலில் எங்கும் பேரொளி பரவி பொன்மயமாக இவ்வுலகம் தோன்ற இராமபிரான் முன் கருடாழ்வார் தோன்றினார். 

கருடாழ்வார் வரவினால் நாகபாசம் அழிதல் :

பாதகனாகிய இந்திரசித்து செலுத்தியநாக பாசத்தினால் அனுமன், “இலக்குவன் மற்றுமுள்ள படைவீரர்கள் அனைவரும் மயக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்தனர். அந்நாக பாசமானது நூல் பிய்ந்து கட்டுவிடுவதைப்போல பொடிப்பொடியாகிப் போனதாக கம்பர் தன் பாடலொன்றில் உலமித்துக் கூறியுள்ளார். பின் இராமபிரான் கருடாழ்வாரைப் பார்த்து ஐயனே! நீயார்? நாங்கள் செய்த அருந்தவ பயனாய் இங்கு நல்ல நேரத்தில் வந்து உதவி புரிந்தாய். எங்களுக்கு உயிரையும் வாழ்வையும் கொடுத்தாய்.

எங்களைப் போன்றோர்க்கு உதவிய உமக்கு கைமாறு நாங்கள் கொடுக்கும் தகுதிக்கு மேம்பட்டவனாக காணப்படுகின்றாய். ஆகவே நீ செய்த பேருதவிக்கு கைமாறு எதுவுமில்லை என்று கூறினார். மேலும் இதற்கு முன்பு எங்களைக் கண்டறிந்தவனும் இல்லை. ஒரு கடனையும் எங்கள் இடமிருந்து ஏற்றுக் கொண்டதுமில்லை. பிறருக்கு கொடுப்பதே தவிரப் பிறரிடம் ஒன்று கொண்டு நிரப்பும் தன்மையும் உடையவனாகக் காணப்படுகிறாய் என்று இராம பிரான் கருடாழ்வாரைச் சிறப்பித்தார். 

கருடாழ்வார் விடைபெறல் :

மாயமான பிறவிக்கு பகைவனாக விளங்கும் பரம்பொருளே! நான் பறவைகட்கு அரசன் உமக்கு புதியவன் அல்லன் உமக்கும், எனக்கும் உள்ள பழைய உறவை தெரிவித்துக் கொள்ள வல்லவனோ நான் இராவணனோடு போர்த் தொழில் முடிந்தபின் உம்மிடம் வந்து சேர்வேன் எனக்கு விடை தாருங்கள் என்று இராம பிரானிடம் கருடாழ்வார் விடைபெற்றுச் சென்றார். இராமாவாதாரம் முடிந்தபின் கருடாழ்வார் திருமாலுக்கு வாகனமாக விளங்கிவருவது. அனைவரும் அறிந்ததே!

திருமால் திருவடிகளே சரணம்.

நன்றி - சப்தகிரி ஏப்ரல் 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக