வெள்ளி, 10 ஏப்ரல், 2020

இராமாயணமும் இராமாநுஜரும் - எஸ்.ரகுவீரபட்டாச்சார்யர், மதுராந்தகம்

இராமாநுஜர் என்ற சொல்லுக்கு இராமனின் பின் பிறந்தவன் என்பது பொருள். எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான் எனக் குகன் கூறுவதாகக் கம்பன் கூறுவான். இராமனது பதினாறு குணங்களில் முந்துறமுன்னம் கூறப்படுவது வாத்ஸல்யமெனப்படும் கருணையாகும். காரேய் கருணைக் கடல் என்றே அமுதனாரும் இராமாநுஜரைக் குறிக்கிறார்.


இராமாநுஜர் என்ற தாஸ்ய நாமத்தைப் பெறுகிறார் பெரிய நம்பிகளிடம் மதுராந்தகத்திலே! பெரிய திருமலை நம்பிகள் இளையாழ்வார் என்றே பெயரளித்து மகிழ்கிறார். திருவரங்கப்பெருமாள் அரையரோ இலட்சுமண முனி என்கிறார். இராமானுஜருக்கு இராமாயணத்திலே ஈடுபாடு ஏற்பட்டது வியப்பில்லை.


இராமனை விட்டுப் பிரிய விரும்பாதவர் இராமாநுஜர். நீரை விட்டு மீன் பிரிந்து வாழாதது போல தானும் இராமனை விட்டுப் பிரிய விரும்பாதவர் இலட்சுமணர். இராமாயணமாகவே இராமன் விளங்கியதால் இராமானுஜருக்கு இராமாயணத்தில் மிகவும் ஈடுபாடு உண்டு. துவயத்தை எப்போதும் உச்சரிக்கும் யதிராசர் இராமாயணத்தையும், திருவாய் மொழியையும் இணைத்தே எண்ணி மகிழ்ந்தவர். திருவாதிரையில் பிறந்தவர் திருவாய் மொழியிலே இராமாயணத்தை உணர்ந்தவர் ஆவார்.


திருமலையிலே எழுந்தருளியுள்ள மலையப்பன் தினமும் திருப்பள்ளியெழுச்சியிலே (ஸுப்ரபாதத்திலே) கௌஸல்யா ஸுப்ரஜா ராம என்றே எழுப்பப் படுகிறான். இராமாநுஜருக்கும் திருமலையப்பனின் திருவருள் பெற்ற திருமலை நம்பிகளே இராமாயணத்தை உபதேசம் செய்தருளினார்.


இராமாயணமென்பது ஆனந்தமான காவியம். வைணவத்தைக் காப்பதற்கு யாருடைய உதவியும் வேண்டாம். இராமாயணமும் திருவாய்மொழியும் போதுமென்பர் பெரியோர். உயர்வற உயர்நலம் உடையவன் எவன் என்றே திருவாய்மொழி மலர்கிறது. கோன் வஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே குணவான்..... என்றே இராமாயணம் வினவுகிறது.


இத்தகைய ஈடு இணையற்ற இராமாயண காவியத்தை பல விதங்களில் விவரித்து விளக்கினார் பெரிய திருமலை நம்பிகள்.


இராமாநுஜருக்கும் இராமனுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இராமனுக்கும் ஆசார்யர்கள் எனப்படும் குருமார்கள் பலர்! இராமாநுஜனுக்கும் ஐந்து ஆசார்யர்கள் உண்டு. பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமாநுஜன் என்பார் அமுதனார். குகன் (வேடன்) சுக்ரீவன் (குரங்கு), வீடணன் (அரக்கன்) என பல்வகையினராலும் பணிந்து நின்று போற்றப்பட்டவர் இராமன்.


இராமாநுஜரே ஆதிசேடனின் அவதாரமல்லவா! சென்றால் குடை இருந்தால் சிங்காசனம் நின்றால் மரவடி நீள் கடலுள் மணிவிளக்கு மட்டுமா? பூம்பட்டாகியும் புல்குமணையாகியும் தொண்டு செய்தது போலவே தீர்த்த கைங்கர்யம் முதலாக பிரசாதம் உற்சவம், கோஷ்டி எனத் திவ்ய தேசங்களிலே (கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருமாலிருஞ்சோலை) திருத்தொண்டுகள் செய்து உகந்தவர் நம் ராமாநுஜர்.


இராமனுக்குக் கிடைத்த இராமாநுஜர்கள் போலவே இராமாநுஜருக்கும் முதலியாண்டான், கூரத்தாழ்வான், கோவிந்தர் போன்ற அணுக்கத் தொண்டர்கள் கிடைத்தனர். இவர்களுடன் பரத இலக்குவண சத்துருக்கணர்களை ஒப்பிட்டு மகிழலாம்.

இராமாயணத்தில் இராமனது அநுபவமும் கலியுகத்தில் இராமாநுஜனது அனுபவமும் இணைகின்றன. தாழிருந்த சடைகள் தாங்கிய இராமன் போலவே காஷாயம் திரிதண்டம் தாங்கிய இராமாநுஜனை எண்ணிப் பார்க்கலாம். மனைவியைப் பிரிந்தது, ஆசார்யனின் அபிமானம் பெற வேண்டி வாழ்வு முறையையே மாற்றிக் கொண்டது புற்பாமுதலா புல்லெறும் பாதிகட்கு அருளிய இராமனைப் போலவே ஊமைக்கும் தயிர்க்காரிக்கும் கூட அருளிய அருளாளன் இராமாநுஜனை எண்ணி எண்ணி மகிழலாம். இராமாயணத்தைக் கற்றார். கசடறக் கற்றார். கற்றபின் கற்ற வழியிலே நின்றார். 


இராமாநுஜர் தரிசனம் என்ற தொடரையும் இராமாயணம் என்ற தொடரையும் நிதானமாக ஆய்வு செய்தால் தான் இரண்டிற்கும் உள்ள கனபரிமாணங்கள் விளங்கும். இராமாயணத்தின் சாரமே இராமாநுஜரின் பிரசாரமாகும். சரணாகதியின் சாரமே இராமாநுஜரின் ஆசாரமாக விளங்கியது.

பிரபன்ன காயத்ரி எனப்படும் திருவரங்கத்தமுதனாரின் இராமாநுஜ நூற்றந்தாதியில் முப்பத்தேழாவது பாசுரம் இராமாநுஜருக்கும் இராமாயணத்துக்கும் உள்ள ஈடுபாட்டினை விளக்குகிறது. “படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும்பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமாநுஜன்' என்று மகிழ்ந்து கொண்டாடுகிறார்.


படி என்பது பூமியைக் குறிக்கும். பூமி மட்டுமல்ல மற்றைய உலகங்களுக்கும் அது உபலட்சணமாக உள்ளது என்பர். பிரமனே முதலில் நூறு கோடிப்பிரபந்தமாக விண்ணுலகில் பரப்பினான் எனவும் ஆதிகவியாகிய வால்மீகியே (ருக்ஷர் என்றும் ப்ராசேதஸ் என்றும் பார்கவர் என்றும் பெயர்கள் உண்டு) நாரதர் மூலம் உபதேசம் பெற்று 24000 பாடல்களாக (ச்லோகங்களாக) வெளியிட்டார். படியிலே கீர்த்தி கொண்ட என்ற பொருளும் கொள்ளலாம். மற்றைய இராமாயணங்களை விட ஸ்ரீமத் வால்மீகி ராமாயணமே உயர்ந்து விளங்குகிறது என்று கூறுவதாகவும் கொள்ளலாம்.


இராமாயணம் வெறும் கதையல்ல! புராணமல்ல! காவியமும் அல்ல! அது உயிர்ப்போட்டமுள்ள உணர்வு நூல்! கர்மயோகம் ஞானயோகம் கைவரப் பெற்றவர்களால் கொண்டாடப்படும் ஒரு பக்தி வெள்ளம். இன்றும் நவீன ஊடகங்களில் பல்வேறு வகைகளில் கதையாக, கவிதையாக, நாடகமாக, வில்லுப்பாட்டாக, கூத்தாக, ஆய்வுகளாக எங்ஙனம் சொல்லினும் இன்பமே பயக்கும் பக்தியை ஒன்பது வகையாகக் கூறுவர். சிரவணம் என்பது முதல் வகை! கேட்பது! எனைத்தாலும் நல்லவை கேட்க எண்பான் வள்ளுவன். இராமாயணத்திலேயே இராமனது பெருமைகளைக் கேட்பதிலேயே காலத்தைக்கழித்தவன் அனுமன்! காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க நிற்பானாம் காகுத்தன் புகழ் கேட்டு! காற்றின் மைந்தன்! அதனாலேயே வைகுண்ட வான் போகமும் வேண்டேன் என்றான். கீர்த்தனம் எனப்படும் பாடுவதை வால்மீகி, துளஸிதாசர், கம்பர் போன்றவர்கள் வழியாகக் கொண்டு வாழ்ச்சி பெற்றனர். ஸ்மரணம் எனப்படும் தியானத்தால் வாழ்ச்சி பெற்றவர் அன்று சீதை! இன்றும் தியாகய்யர் போன்றவர்கள். பாதஸேவனத்தில் பரதனும், அர்ச்சனத்தில் சபரியும், வந்தனத்தில் வீடணனும், தாஸ்யம் எனப்படும் அடிமையாவதில் இலட்சுமணனும் சக்யம் எனப்படும் நட்பில் சுக்ரீவனும் தியாகத்தில் ஜடாயுவும் குறிப்பிடப்படுகின்றனர்.


இராமாநுஜரது சரிதத்திலும் ச்ரவணம் முதலான ஒன்பது பக்தி உபாயங்களும் ஸ்தோத்ரரத்னம் கேட்டது முதலானவற்றுடன் ஒப்பிட்டு உணர்ந்து மகிழலாம். ஒருபதச் சோறு! வடுக நம்பி நம்பெருமாள் சேவையையும் மறுத்து எம்பெருமானார் சேவையையே (தொண்டையே) பற்றிய தாஸ்ய பக்தி (தொண்டு) குறிப்பிடத்தக்கது. இராமாநுஜரே ஈரங்கொல்லி ஒருவர் அழைத்த சடகோபா, காரிமாறா, வகுளாபரணா, குருகூரா என்ற குரலைக் கேட்டதாலும் அதுபோல குருகூரானின் திருப்பெயர்களை அழைத்து மகிழும்படி இல்லறத்தானாக இல்லையே என ஏங்கி நிணைத்த வரலாறு எண்ணி இன்புறலாம்.


“பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமாநுஜர்' என்ற தொடர் அமுதனாரின் அமுதமான தொடராகும். ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் என்ற கோதோபநிடதம் போலவே இராமாநுஜ சரிதத்திலே பல வள்ளல் பசுக்கள் உண்டு!
கூரத்தாழ்வானை ஆழ்வானாக்கியதற்கும் இராமாநுஜரின் அருளிச் செயலில் ஆழங்கால்பட்ட ஆர்வ மிகுதியே காரணமாகும். எம்பெருமானாரே வாரும் என இராமானுஜரின் ஆசாரியர் திருக்கோட்டியூர் நம்பிகள் அழைத்ததற்கும் மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பிகள் பிரமமேத சம்ஸ்காரம் செய்ததற்கும் இப்பாசுர உணர்வே அடித்தளமாகும். இவற்றிற்கெல்லாம் அடிப்படை இராமாயணத்தில் இராமன் காட்டிய நன்னெறியாகும்.


இராமாயணம் ஒரு கடல்; சருக்கம் என்ற பிரிவுகளே அலைகள், காண்டங்கள் முதலைகள் பெருமீன்கள்; கருணைக்கடலாம் இராமாநுஜன் இராமாயணக்கடலைக் குடித்ததனாலேயே கருணை மிக்கவராக ஆனார் போலும்! இராமன் மனத்துக்கினியன்! இராமநுஜனும் கருணைக் கடலல்லவா! குணந்திகழ் கொண்டல் இராமாநுஜன் இராமாயணக் கடலினின்றே நீரை முகர்ந்திருக்க வேண்டும்.

அன்பே அகலாகவும் ஆர்வமே நெய்யாகவும் இன்பமான (இராமாயணமே) ஞானச்சுடர் ஒளியே விளக்காகவும் ஒளிர்வது போலே இராமாநுஜரிடத்திலே இராமாயண வெள்ளம் குடி கொண்டது போலும்.


வந்தாய்; மனம் புகுந்தாய் : மன்னி நின்றாய், என்றபடி இராமாயணம் இராமாநுஜரைக் காத்தது. இராமாநுஜரோ இராமாயணத்திற்கே கோயிலாக விளங்கினார். ஸ்ரீவைஷ்ணவ தத்துவங்கள் திருமந்திரத்திலும், துவயம், சரம ஸ்லோகம் முதலான அனைத்துக்கும் விளக்கங்களாக அமைவதால் அவற்றைப் பாதுகாக்கும் சேமவைப்பாக இராமாநுஜர் விளங்கினார் என்பது மிகையல்ல.

கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ (திருவாய் 7-5-1) என்றருளிச் செய்ததைப் பின்பற்றியே நம்மாழ்வாரின் அடியாராகிய நம் ராமாநுஜரும் இராமாயண பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலாக மாறி விட்டார். உப்புக் கடலைக் குடித்த குறுமுனி மீண்டும் அதனைத் தேக்க முடியாமல் உமிழ்ந்தார்.


ய: பிபந்ஸததம் ராமசரிதாம் ருத ஸாகரம் | 
அத்ருப்தஸ்தம் முநிம் வந்தே ப்ராசேதஸ மகல்ம ஷம் || 


பொருள் : எவர் எப்போதும் இராம சரித்திரமாகிய அமுதக்கடலைக் குடித்தும் போதுமெனும் திருப்தியடையாதிருக்கிறாரோ குற்றமற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன்.
இராமாநுஜரும் இராமாயண அமுதத்தில் முப்போதும் மூழ்குபவராகவே விளங்கினார்.
திருநாராயணபுரத்திலே இராமாநுஜர் செல்லப் பிள்ளையை பிரதிஷ்டை செய்ததற்கு அடிப்படையாக அமைவதும் அந்த ராமப்ரியர் சக்கரவர்த்தித் திருமகனாலே ஆராதிக்கப்பட்டதும் காரணமாயிருக்கலாம். இராமாயண உணர்வே இராமாநுஜரை நெறிப்படுத்தியது என்பதற்கு இரு உதாரணங்கள் காண்போம்.


“சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே" (பெருமாள் திரு. 8.6) என்ற பாசுரத்திற்கு விளக்கம் அருள்கிறார் எம்பெருமானார். களிரொழிந்து, தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி என்றல்லவோ பெருமாள் திருமொழியிலேயே (9-2) காண்கிறோம்? சரியான விளக்கம் இதோ!


"அஹம் ஸர்வம் கரிஷ்யாமி" என்று இளைய பெருமாள் எல்லா விதமான அடிமைகளையும் செய்வதால் எல்லா உறவுகளும் கூட இருந்ததாயிற்று இராமனுக்கு என்பதே எம்பருமானாரின் விளக்கமாகும்.


இராமபக்தியில்லாதவன் சத்ருக்னன் என்று கூறப்படும் பெரியோர் வார்த்தைக்கு இராமானுஜர் அளித்த விளக்கம் அற்புதமானது.


இராமபிரானும் பரத நம்பியும் ஒருவர்க் கொருவர் அன்புடையவர்களே என்றாலும் அவ்வன்பு பரதனையிட்டுத்தான் என்று கூறப்பட்டது. தனக்குகந்த பரதனுக்குகந்தவர் இராமபிரான் என்பதால் இராமபிரான் மீது சத்ருக்னனுக்கு பக்தியுண்டு. அதே போல தனக்குகந்த பரதனிடத்தில் பக்தியுடையவன் என்பதால் சத்ருக்னன் மீது இராமனுக்கு அன்பு உண்டு என்பது எம்பெருமானாருடைய விளக்கமாகும்.


மாயமான்மாரீசனை மாய்த்தபின் திரும்பி வரும் போது இராமன் வெப்பம் தாளாது ஆங்காங்கே இலைத்தளிர்களையிட்டு அதன் மேல் கால் வைத்து இளைப்பாறினான் என்ற சரிதத்தைக் கேட்ட இராமாநுஜர் இராமவதார காலத்திலே நான் பிறந்து அந்தத் தளிர்களுக்குப் பதிலாக என் தலையைக் கொடுக்கப் பெற்றிலனே என்று வயிறு பிடித்தாராம்.


உலகளாவிய ஆன்ம நேய வாதியாக இராமாநுஜர் ஒளிர்த்ததற்கு உயிர்ப்பாக விளங்கியது ஸ்ரீராமாயணமே!


நன்றி - சப்தகிரி ஏப்ரல் 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக