சனி, 11 ஏப்ரல், 2020

ராமாயணம் கேட்க வந்த பெருமாள்! - உ.வே.கருணாகரச்சாரியார் ஸ்வாமி

“ராமாயணத்தை கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, திருமலையிலிருந்தே ஸ்ரீநிவாச பெருமாள் வந்தார் தெரியுமா? அதுவும் எப்படி? திருமலை நம்பி ராமானுஜருக்கு ராமாயணத்தைச் சொல்லும்போது, தானும் வந்து கேட்டாராம்” என்றார் உ.வே.கருணாகரச்சாரியார் ஸ்வாமி, தமது உபன் யாசத்தில்.


ராமானுஜருக்கு வால்மீகி ராமாயணத்தை, தம் மாமாவான திருமலை நம்பிகள் வாயால் சொல்லி கேட்க வேண்டும் என்று ஆவல். திருமலை நம்பிகளோ, தினம் திருமலையானுக்கு சேவை செய்து கொண்டிருப்பவர். திருமலையையே திருமாலாக பார்த்த ராமானுஜர், திருமலை மீது கால் கொண்டு ஏற மனம் இல்லாமல், மலை அடிவாரத்திலேயே இருந்துவிட்டாராம். சரியாக 18 நாட்கள் ராமானுஜருக்கு ராமாயணம் சொல்வதற்காக திருமலை நம்பிகள் தினம் திருமலையிலிருந்து இறங்கி வந்து, ராமானுஜருக்கு ராமாயணத்தை சொல்வாராம். அப்படித்தான் ஒருநாள், ஸ்ரீநிவாசரும் வந்து ராமாயணத்தை கேட்பதை பார்த்தாராம் திருமலை நம்பிகள். அப்போது, பகவான், அவரிடம் ‘ராமானுஜருக்கு சொல்கிறீர், எனக்கு சொல்லவில்லையே!’ என்று கேட்டாராம்.


ஆக, பகவானே விரும்பிக் கேட்கும்படியான விசேஷம் கொண்டது ராமாயணம். இன்றளவும் ராமாயணம் ஒலிக்கும் இடங்களிலெல்லாம், அப்படித்தான் ஆஞ்சநேயர் வந்து உட்கார்ந்து கொண்டு கேட்கிறார். அதனால்தான் ராமாயண உபன்யாசம் நடக்கும்போது, நேர் எதிரில் பலரும் உட்கார்ந்து கேட்கமாட்டார்கள். ஏன்னா அந்த ஸீட் ஹனுமனுக்கானது. கோசலத்துல அவதார நோக்கம் முடிஞ்சு, தன்னோட யதாஸ்தானத்துக்கு பகவான் திரும்பும் போது, இருக்குற செடி, கொடிக்கெல்லாம் கூட மோட்சம் கொடுத்து, தன்னோடு வைகுண்டத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். ஆனால் ஹனுமன் அவரோட போகலை. ஏன்? ‘நான் அந்த ஊருக்கு வரல. அங்க, வைகுண்டத்துல ராமாயண உபன்யாசம் உண்டா? இல்லியே. ராமா, உன்கிட்ட எனக்கு அன்பும், பக்தியும் இருக்கு. எனக்கு ராமாயண உபன்யாசம் கேட்டுண்டே இருக்கணும். அதனால, நான் இங்கேயே இருக்கேன்’ என்று சொல்லி, பூலோகத்திலேயே தங்கி விட்டார் ஹனுமன்.

அதுமட்டுமல்ல; கிராமர்னா - இலக்கணம்னா, நம்மள்ல பலருக்கும் அலர்ஜி. ஆனா, கிராமர்ல கெட்டிகாரர்ன்னா அது ஹனுமன்தான். ஒன்பது கிராமர்களை தெரிஞ்சுண்டவா இதிகாசத்துலேயே வேறயாரும் கிடையாது, ஹனுமாரை தவிர. அதனாலதான் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை பண்ணும்போது கூட, ‘நவ வ்யாகரண பண்டிதாய நம:’ என்று ஒரு நாமம் சொல்வார்கள்.


ஆஞ்சநேயரை பார்த்து, ராமரே வியந்து பேசியிருக்கார். குறிப்பா, ஹனுமனோட பேசற திறமை. ராமர், லக்ஷ்மணர்கிட்டசொல்றார்: ‘லக்ஷ்மணா, பேசினா, ஹனுமன் மாதிரி பேசனும். இந்த ஹனுமன் பேசறா மாதிரி பேசினா, கத்தியோடு எதிரே கொல்லனும்னு வர்றவன் கூட அவர் பேச்சுல மதிமயங்கி அப்படியே கத்திய போட்டுட்டு உட்கார்ந்துடுவான்’னு. கம்ப ராமாயணத்துலயும், ராமன் வாக்காய் சொல்றது இப்படித்தான்: ‘ஆர்கொலொ இச்சொல்லின் செல்வன்.’


ஆஞ்சநேயர் பண்றதை எல்லாம் தாமும் பண்ணனும்னு பகவான் ஆசைப்படுவாராம். அவர் ராம தூதராய் இருப்பதை போலவே, தாமும் பாண்டவர்களுக்காக கிருஷ்ண அவதாரத்துல தூது போனார். ஆஞ்சநேயர் போல நன்றாக பேசக்கூடியவர், தமக்கு அப்பாவாக வேண்டும் என்றே வசுதேவரை தேர்வு செய்தாராம் கிருஷ்ணர்.


ராமருக்கும் சுக்ரீவனுக்குமான நட்பு என்பது என்றும் நிலையாக நிற்க வேண்டும் என விருப்பப்பட்டு, கற்களை கொண்டு தீயை ஏற்றி, அந்த அக்னியை ‘நீங்க ரெண்டு பேரும் தம்பதி மாதிரி வலம் வாங்கோ’ என சொன்னவர் ஆஞ்ச நேயர். அதனால்தான் நாமும்,


புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாத்:
அஜாட்யம் வாக்படும் த்வம்ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத்,


என்று ஹனுமனின் பிரபாவத்தைச் சொல்லித் துதிக்கிறோம்.


ராம பக்தனான, ஆஞ்சநேயரை மனத்தில் நிறுத்தி, நாமும் வாக்கு வன்மை தொடங்கி, சாதுர்ய புத்தியை, உண்மையான பக்தியைப் பெற்றிடுவோம்."


தொகுத்தவர் - நளினி சம்பத்குமார்


நன்றி - தீபம் ஜூன் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக