வெற்றி எனக்குத்தான்!
பீஷ்மரின் முகத்தில் கடும் கோபம் தென்பட்டது. அந்த நள்ளிரவில், போர்க்களத்தில் உள்ள பாசறையில், அகல்விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில், தன்னைத் தேடி வந்த துரியோதனனையே அவர் விழிகள் கூர்மையாகப் பார்த்தவாறிருந்தன.
ஆனால், அவர்கள் இருவரையும் வேறு இரு விழிகள் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருந்ததை இருவருமே அறியவில்லை.
பீஷ்மர் துரியோதனனைப் பற்றிச் சலிப்படைந்தார். "என்ன மனிதன் இவன்! ஒன்று தன்னை நம்பவேண்டும். இல்லாவிட்டால் தன்னை நம்பாமல் விட்டுவிட வேண்டும். பாரதப் போர் உக்கிரமடைந்து வரும் இத்தருணத்தில் மனத்தில் ஊசலாட்டத்தோடு இவன் பேசும் பேச்சு, எத்தனை முட்டாள்தனமானது! இவனுக்குத் தன் நிலையை எப்படிப் புரிய வைப்பது?"
துரியோதனன் மீண்டும் சொன்னான்:
"பீஷ்ம பிதாமகரே! யுத்தத்தில் ஒரே கணத்தில் எதிரிகள் அனைவரையும் கொன்றழிக்க உங்கள் ஒரே ஒருவரால் முடியும். நீங்கள் எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு ஆயிரம் யானை பலம். ஆனால்...''
"என்ன ஆனால்?''
"நீங்கள் எங்கள் அணியில் தான் இருக்கிறீர்களா என்பதுதான் என் சந்தேகம். போர் ஒவ்வொரு நாளாக வளர்கிறது."
"பஞ்சபாண்டவரில் இன்னும் ஒருவரைக் கூட நீங்கள் கொல்லவில்லை. அன்பு உங்கள் அம்பைத் தடுக்கிறதோ என்று தோன்றுகிறது. பாண்டவர்கள் மீது நீங்கள் செலுத்தும் பாசத்தால் உங்கள் அம்புகள் வழுக்கி அவர்கள் வரை பாய்ந்து செல்லாமல் இடையிலேயே விழுந்து விடுகின்றன போலும்! நீங்கள் தெய்வமாகப் போற்றும் கண்ணன் வேறு அவர்கள் அணியில் இருக்கிறான்''.
இதைக் கேட்ட பீஷ்மர் சீறினார்:
"தர்மநெறி தவறாத என்னையா சந்தேகப்படுகிறாய்? துரியோதனா! சிம்மாசனத்தில் யார் அமர்ந்திருந்தாலும் அமர்ந்த ஆளைப் பார்க்காமல் சிம்மாசனத்தைப் பார்ப்பவன் நான். சிம்மாசனத்திற்குச் சேவகம் செய்வது என்று முடிவு செய்துதான், நீ அதர்ம வழியில் நடந்தாலும் உன் அணியில் இருக்கிறேன். என்ன செய்தால் உன் சந்தேகம் தீரும்!''
"பாண்டவரில் ஒருவரையாவது நாளை கொன்றால் உங்களைப் பற்றிய என் சந்தேகம் தீர்ந்துவிடும்!''
"அவ்வளவு தானே? என் அம்பறாத் தூணியிலிருந்து ஐந்து அம்புகளை எடுத்து என் முன்னால் வை!''
துரியோதனன் திகைப்போடு அவர் கட்டளைக்குப் பணிந்தான். அவரது அம்பறாத் தூணியில் இருந்த மூங்கிலால் செய்யப்பட்ட ஐந்து அம்புகளை அவர் முன் எடுத்து வைத்தான்.
"என்ன நடக்கிறது என்று பார். இடையில் குறுக்கிடாதே!''
பீஷ்மர் கைகூப்பி இறைவனைப் பிரார்த்தித்தார். பின் அந்த ஐந்து அம்புகளையும் தன் இரு தீட்சண்யமான விழிகளால் கூர்மையாகப் பார்க்கலானார்.
துரியோதனன் திக்பிரமித்து அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பீஷ்மரின் ஜொலிக்கும் கண்களிலிருந்து ஒளிக்கற்றை புறப்பட்டு ஐந்து அம்புகளிலும் சற்றுநேரம் பாய்ந்தது.
ஒரு பெருமூச்சு விட்டுத் தன்னை சமனப்படுத்திக் கொண்ட பீஷ்மர், "இப்போது அந்த அம்புகளை எடுத்துப் பார்!'' என்றார்.
துரியோதனன் ஆச்சரியத்தோடு அந்த ஐந்து மூங்கில் அம்புகளையும் பரிசோதித்தான். அவை தங்க அம்புகளாக உருமாறி ஜொலித்துக் கொண்டிருந்தன!
"துரியோதனா! இதுவரை நான் மனம், வாக்கு, உடல் ஆகியவற்றால் அனுசரித்த பல்லாண்டு கால பிரம்மச்சரிய விரதத்தின் ஒப்பற்ற சக்தி முழுவதையும் இந்த அம்புகளுக்கு மாற்றிவிட்டேன். அதனால்தான் இவை தங்க ஒளி பெற்று தகதகக்கின்றன. இந்த அம்புகளைப் பிரயோகித்தால் நடக்காதது என்று எதுவுமில்லை. நாளை ஒருவரையல்ல, ஐந்து பாண்டவர்களையும் இந்த அம்புகள் வதம் செய்யும். உன் சந்தேகம் தீர்ந்ததல்லவா? போய்வா!''
ஆனால், துரியோதனன் பிரமிப்போடும் யோசனையோடும் அங்கேயே நின்றான். பின் மெல்லச் சொன்னான்:
"சுவாமி! நாளை சூரியோதயத்திற்குப் பிறகுதான் யுத்தம் மறுபடி தொடங்கும் இல்லையா? அதுவரை இந்த ஐந்து தங்க அம்புகளும் என் பாதுகாப்பில் இருக்கட்டுமே? நாளை காலை இந்த அம்புகளை பத்திரமாக உங்களிடம் தந்துவிடுகிறேன்!''
அவன் உள்ளத்தில் ஓடும் எண்ணத்தைப் புரிந்துகொண்ட பீஷ்மர் கடகடவென்று நகைத்தார்:
"ஏன்.. இன்று இரவே பாண்டவர்களிடம் நான் இந்த அம்புகளைக் கொடுத்து விடுவேன் என்று அஞ்சுகிறாயா? இந்த அம்புகளின் விதி பாண்டவர்களிடம் போய்ச்சேர வேண்டும் என்றிருந்தால் அதை உன்னாலோ என்னாலோ தடுக்க இயலாது. துரியோதனா! நான் எவ்வளவு சொல்லியும் என் மேல் நீ இன்னும் முழு நம்பிக்கை கொள்ளவில்லை. அதன் விளைவை நீ அனுபவிப்பாய்! நல்லது. உன் விருப்பம் போல் செய்யலாம்!''
துரியோதனன் தங்க அம்புகளை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு தன் பாசறை நோக்கி இருளில் நடந்தான். தன் தலையணையின் கீழ் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு உறங்க முயன்றான்.
அந்த நிகழ்ச்சி முழுவதையும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மாயக்கண்ணன் புன்முறுவலோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். கண்ணனின் தாமரைப் பூம்பாதங்கள் பரிவோடு பாண்டவர்களும் பாஞ்சாலியும் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தன.
"வா கண்ணா!'' என்று பாஞ்சாலி அவனைப் பாசத்தோடு வரவேற்றாள். பாண்டவர்கள் அளித்த ஆசனத்தில் அமர்ந்துகொண்ட கண்ணன் அர்ஜுனனிடம் நடந்தது அனைத்தையும் விவரித்தான்.
"அப்படியானால்?-''
பாஞ்சாலி வினவினாள்.
"நாளை பஞ்ச பாண்டவர்களின் கதை முடியும். பாரதப் போரும் முடிந்துவிடும்!''
பாஞ்சாலி கலகலவென நகைத்தாள். கண்ணனை இருகரம் கூப்பிக் கும்பிட்டுவிட்டுச் சொன்னாள்:
"நீ எங்களுக்குத் துணையிருக்கும் வரை பஞ்ச பாண்டவர்களின் கதை முடியாது கண்ணா! எங்களைக் காப்பாற்ற உன் திட்டமென்ன என்பதைச் சொல்!''
பாஞ்சாலி தன்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை கண்ணனுக்குப் பிடித்திருந்தது.
அவன் அர்ஜுனனிடம் சொன்னான்:
"அர்ஜுனா! முன்னொரு காலத்தில் கந்தர்வர்களின் பிடியில் சிக்குண்டு துரியோதனன் உயிரே போகுமளவு சங்கடத்தில் ஆழ்ந்தபோது, நீ அவனைக் காப்பாற்றினாய். அப்போது அவனது உயிரைக் காப்பாற்றியதற்கு வெகுமதியாக உனக்கு ஏதேனும் வேண்டுமா எனக்கேட்டான். அந்த சந்தர்ப்பத்தில் நீ என்ன சொன்னாய் என்பது ஞாபகமிருக்கிறதா?''
அர்ஜுனன் பதில் சொன்னான்:
"நன்றாக ஞாபகமிருக்கிறது கிருஷ்ணா! இப்போது எதுவும் வேண்டாம். ஆனால், தேவைப்படும்போது கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அதற்கு துரியோதனனும் உடன்பட்டான்''.
"அர்ஜுனா! உடனடியாக இந்த இரவிலேயே துரியோதனனிடம் போ. அந்தத் தங்க அம்புகள் ஐந்தையும், கந்தர்வர்களிடமிருந்து துரியோதனன் உயிரைக் காப்பாற்றியதன் வெகுமதியாகக் கேட்டு வாங்கு. துரியோதனன் சூழ்ச்சிக்காரன் தான். ஆனால் க்ஷத்ரியன். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்!''
கண்ணன் கட்டளைக்கு மறுபேச்சு ஏது!
துரியோதனன் பாசறை நோக்கி விரைந்தன அர்ஜுனனின் கால்கள்.
இரவு நேரத்தில் தன்னைத் தேடி வந்த எதிரி அர்ஜுனனை வியப்போடு பார்த்தான் துரியோதனன். முன்னொரு காலத்தில் கந்தர்வர்களிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றியதற்கு வெகுமதியாக இப்போது ஐந்து தங்க அம்புகளை அர்ஜுனன் கேட்டதும், அவன் வியப்பு பன்மடங்காகியது. தங்க அம்புகளைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கொடுத்துவிட்டுக் கேட்டான்:
"இந்தத் தங்க அம்புகள் என்னிடமிருப்பது உனக்கு எப்படித் தெரியும் அர்ஜுனா! இது எனக்குக் கிடைத்தே சிறிதுநேரம் தானே ஆகிறது!"
"எல்லாம் தெரிந்தவன் மூலம் இதையும் தெரிந்துகொண்டேன். கண்ணன் ஒருவன் தான் எங்கள் நிரந்தரத் துணை!"
அர்ஜுனன் சிரித்தவாறே தங்க அம்புகளுடன் விடைபெற்றான்.
மறுகணம் இருளில் ஓடோடி பீஷ்மரின் பாசறைக்குச் சென்றான் துரியோதனன். நடந்தது அனைத்தையும் சொல்லிவிட்டு, உருக்கத்துடன் வேண்டுகோள் வைத்தான்:
"சுவாமி! மறுபடியும் ஐந்து அம்புகளை உங்கள் அம்பறாத் தூணியிலிருந்து எடுத்து வைக்கிறேன். தயவுசெய்து அவற்றையும் உடனடியாகத் தங்க அம்புகளாக உங்கள் பார்வை மூலம் மாற்றுங்கள்!''
பீஷ்மர் விரக்தியுடன் நகைத்தார்.
"துரியோதனா! என் பிரம்மச்சரிய ஆற்றல் முழுவதையும் அந்த அம்புகளுக்கு மாற்றிவிட்டேன். இனி வழங்குவதற்கு என்னிடம் ஆற்றல் எதுவும் கிடையாது. புதிதாக எந்த அம்பையும் என்னால் மறுபடி தங்க அம்பாக மாற்ற இயலாது. தங்க அம்புகள் என்னிடமே இருந்திருக்கலாம். நீ என்னை சந்தேகப்பட்டாய். அதனால் தானே அவற்றை உன்னுடன் எடுத்துச் சென்றாய்! சந்தேகத்தின் பலனை இப்போது அனுபவிக்கிறாய். நான் உன் அணியில் இருக்கிறேன். என் ஆற்றல் உனக்குப் பயன்படும். ஆனால், எனக்கு எதிராக என் தங்க அம்புகளின் சக்தியை எதிரிகள் பயன்படுத்துவார்கள். ஆக, உன் அணி வென்றால் நான் வென்றேன் என்று பொருள். எதிரிகளின் அணி வென்றால், தங்க அம்புகளில் பொதிந்துள்ள என் ஆற்றல் வென்றது என்று பொருள். எந்த அணி வென்றாலும் வெற்றி எனக்குத்தான்! நியாயமானவர்களிடம் சந்தேகம் கொண்டால் என்னென்ன விபரீதங்கள் நேரும் என்று உலகோர் இந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்கட்டும்'' என்று விரக்தியுடன் பேசினார் பீஷ்மர்.
அதைக் கேட்ட துரியோதனனின் தலை தானாகக் குனிந்தது. பாஞ்சாலியும் கண்ணனும் கலகலவென்று மலர்ச்சியுடன் சிரிக்கும் சப்தம் தொலைவில் இருந்த பஞ்சபாண்டவர் பாசறையிலிருந்து மெலிதாய்க் கேட்டது.
நன்றி - தினமலர் ஜூலை 2012