சனி, 4 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 150

ஆறாவது ஸ்கந்தம் - பதினாறாவது அத்தியாயம்

(நாரதமுனிவர் மரணம் அடைந்த பிள்ளையின் வார்த்தைகளால் அம்மன்னவனைத் தெளிவித்து அவனுக்கு வித்யோபதேசம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! தேவரிஷியாகிய அந்நாரதர், மரணம் அடைந்த ராஜகுமாரனை, அவனைப் பற்றிச் சோகிக்கிற அவனது பந்துக்களுக்குக் காட்டி இங்கனம் மொழிந்தார்.

நாரதர் சொல்லுகிறார்:- “ஓ ஜீவாத்மனே! உனக்கு க்ஷேமம் உண்டாகுக! சரீரத்தில் புகுந்திருக்கிற உனக்கு இச்சரீரத்தைப் பற்றி ஏற்பட்ட தாய், தந்தை, நண்பர், பந்துக்கள் அனைவரும் உன்னைப்பற்றி வருந்துகிறார்கள்; காண்பாயாக. மிகுந்த வாழ்நாளும் நீ இச்சரீரத்தில் புகுந்து நண்பர்களால் சூழப்பட்டு, ராஜ ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்து, உன் தந்தை கொடுத்த போகங்களை அனுபவிப்பாயாக.

ஜீவன் சொல்லுகிறான்:- நான் என் கர்மங்களுக்குரியபடி தேவர், திர்யக் (விலங்கு), மனுஷ்யர் முதலிய பல யோனிகளில் மாறி மாறிப் பிறந்து சுழன்று கொண்டிருக்கிறேன். அவற்றுள் எந்த ஜன்மத்தில் இவர்கள் எனக்குத் தந்தையும், தாயுமாக வேண்டும்? ஜீவாத்மாக்கள் அனைவரும் பற்பல ஜன்மங்களைப் பெறுகின்றார்களாகையால், அவற்றில் ஒருவர்க்கொருவர் பந்துக்களும் ஜ்ஞாதிகளும், சத்ருக்களும், மத்யஸ்தரும், நண்பர்களும், உதாஸீனர்களும், த்வேஷிகளுமாகின்றார்கள். பொன், வெள்ளி முதலியவற்றால் செய்யப்பட்ட வளை, மோதிரம் முதலிய வஸ்துக்கள் மனுஷ்யர்களிடத்தில் மாறிமாறி வருவது போல, ஜீவாத்மாக்கள் தேவ, மனுஷ்யாதி சரீரங்களில் மாறி மாறித் திரிகின்றார்கள். பசு முதலிய வஸ்துக்களை ஒருவன் விலைக்கு வாங்கினானாயின், அதை அவனிடத்திலிருக்கும் வரையில் இன்னானுடையதென்று சொல்லுகிறோம். அவனிடத்தினின்று அதை மற்றொருவன் விலைக்கு வாங்கிவிட்டால், அதற்கு அவனுடைய ஸம்பந்தம் மாறி மற்றொருவனுடைய ஸம்பந்தம் உண்டாகின்றது. எந்த வஸ்துவோடு எவனுக்கு எதுவரையில் க்ரயாதி (விலை கொடுத்த) ஸம்பந்தம் உள்ளதோ, அதுவரையிலுமே அதை அவனுடையதென்று உலகத்தில் வழங்கி வருகிறார்கள். அதுவும் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே அப்பசு முதலியவை மரணம் அடையுமாயின், அவற்றிற்கு எவரோடும் ஸம்பந்தமில்லை. ஜீவன் இயற்கையில் தேஹாத்மாபிமானமற்றவன் (தேஹமே ஆத்மா என்ற தவறான எண்ணம் இல்லாதவன்); நித்யன்; அவன் கர்மத்தினால் தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் ப்ரவேசித்து அவற்றை எதுவரையில் விடாதிருக்கிறானோ அதுவரையிலுமே அவனுக்கு அத்தேஹங்களோடு ஸம்பந்தமும் அத்தேஹங்களைத் தொடர்ந்த தந்தை முதலியவர்களோடு ஸம்பந்தமும் உள்ளது. அத்தேஹங்களை விடுவானாயின், அவற்றோடு ஸம்பந்தமே இல்லாதிருக்க அவற்றைத் தொடர்ந்த மற்றவரொடு ஸம்பந்தம் எங்கனம் உண்டாகப்போகிறது? 

இந்த ஜீவன் ஆதி, அந்தமற்றவன்; அழிவில்லாதவன்; மிகவும் ஸூக்ஷ்மன் (நுண்ணியவன் - அணு); ஜ்ஞானத்தையே முக்யமான ஆதாரமாகவுடையவன்; புத்தி, இந்தரியம், மனம், ப்ராணன் முதலிய அனைத்திற்கும் ஆதாரமாயிருப்பவன்; ஸ்வயம்ப்ரகாசன் (வேறு ஒன்றின் உதவியின்றித் தானே தோன்றுபவன்). இத்தகைய ஜீவாத்மாக்களைப் பரமபுருஷன் தன் மாயையின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களால் தேவ மனுஷ்யாதியான இந்த ப்ரபஞ்சரூபமாகப் படைக்கிறான். இந்த பரமபுருஷனுக்கு மிகவும் அன்பிற்கிடமானவன் எவனும் கிடையாது; ப்ரீதிக்கிடமாகாதவனும் கிடையாது; இவனுக்குத் தன்னுடையவனென்றும், பிறனென்றும் பேதம் கிடையாது. எல்லோரையும் இவன் ஸமமாகப் பார்க்கும் தன்மையன். புண்ய பாபங்களைச் செய்கின்ற ஜீவாத்மாக்களுடைய மனோவ்ருத்திகளை (எண்ணங்களை) எல்லாம் தானொருவனே ஸாக்ஷாத்கரிக்கிறான். ஆகையால், அவர்களுடைய புண்ய, பாபங்களுக்குத் தகுந்தபடி மேன்மையும், தாழ்மையுமான பலவகைச் சரீரங்களையும் ஸுகதுக்கங்களையும் அவரவர்க்குக் கொடுக்கின்றானன்றிப் பக்ஷபாதத்தினாலன்று (ஓரவஞ்சனையால் அன்று). பரமபுருஷன் புண்ய பாபங்களைத் தன்மேல் ஏற்றுக்கொள்கிறதில்லை. அவற்றின் பலன்களான ஸுக, துக்கங்களையும் ஏற்றுக்கொள்கிறதில்லை. ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாயினும் அவன் உதாஸீனன் (எதையும் பொருட்படுத்தாதவன்) போலிருக்கிறான். “ஜீவனுக்கும் புண்ய பாபங்களைச் செய்யுந்தன்மை இயற்கையில் கிடையாது. அவன் செயலற்றவன். தேஹத்திற்கே அத்தன்மை உள்ளது. அத்தேஹத்தை நியமிக்கையே ஜீவனுக்கு உள்ளது. அந்த ஜீவனை ஈச்வரன் நியமித்துக் கொண்டிருக்கிறான். ஆகையால், ஜீவாத்மா, பரமாத்மாக்களிருவர்க்கும் புண்ய பாபங்களில் நேரே முயற்சி கிடையாது. அப்படியிருக்க, ஜீவன் மாத்ரம் அப்புண்ய பாபங்களின் பலனை அனுபவிப்பதும் ஈச்வரன் அதை அனுபவியாததும் எங்கனம் பொருந்தும்?” என்றால், ஈச்வரன் ஜீவனையும் தேஹாதிகளையும் (சரீரங்களையும்) நியமித்துக்கொண்டு, ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணமான (வேறான) தன் ஸ்வரூபத்தையும், தனக்கு உட்பட்ட ஜீவனுடைய ஸ்வரூபத்தையும் ப்ரக்ருதி ஸ்வரூபத்தையும் உள்ளபடி அறிகிறான். ஜீவனோவென்றால், கர்மத்தினால் தன் ஸ்வபாவம் மறையப்பெற்று தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து, அதன் தன்மையைத் தன்னிடத்தில் ஏற்றுக்கொள்கிறான். ஆகையால், அவன் புண்ய, பாபங்களின் பலனை அனுபவிக்கிறான். ஈச்வரனுக்கு அத்தன்மை இல்லாமையால் அவன் அதனால் தீண்டப்படுகிறதில்லை.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஜீவன் இங்கனம் மொழிந்து அச்சரீரத்தினின்று புறப்பட்டுப் போனான். அப்பால், அங்குள்ள அவனுடைய பந்துக்கள் அனைவரும் வியப்புற்று, தமக்கு அவனிடத்திலுள்ள ஸ்நேஹமாகிற (பாசமாகிற) சங்கிலியை அறுத்துக்கொண்டு சோகத்தைத் துறந்தார்கள். பிறகு, பந்துக்கள் அப்புதல்வனுடைய தேஹத்தைக் கொண்டு போய்ச் சிதையில் இட்டு அக்னி ஸமஸ்காரம் செய்து மற்றும் செய்யவேண்டிய கடன்களையெல்லாம் முடித்துத் துறக்க முடியாததும், சோகம், மோஹம், பயம், பீடை இவற்றைக் கொடுப்பதுமாகிய ஸ்நேஹத்தைத் (பாசத்தைத்) துறந்தார்கள். 

மஹாராஜனே! விஷங்கொடுத்து அப்பாலனைக் கொன்றவர்கள் அனைவரும் பாலனைக் கொன்ற பாபத்தினால் ஒளி மழுங்கப் பெற்று அங்கிரஸ முனிவர் சொன்ன வார்த்தையை நினைத்து வெட்கித்து, அப்பாபத்தைப் போக்கும் பொருட்டு ப்ராஹ்மணர்களால் நிரூபிக்கப்பட்ட வ்ரதத்தை யமுனைக் கரையில் அனுஷ்டித்தார்கள். அப்பால், அச்சித்ரகேது மன்னவன் அங்கிரஸ முனிவருடைய சொற்களாலும், ஜீவனைக்கொண்டு சொல்வித்த நாரதருடைய சொற்களாலும் விவேகம் உண்டாகப் பெற்று, குளத்தின் சேற்றினின்று யானை கரையேறுவதுபோல, இல்லறவாழ்க்கையாகிற பாழுங்கிணற்றினின்று கரையேறினான். அவன் யமுனையில் ஸ்னானம் செய்து, அந்நதியின் பரிசுத்தமான ஜலத்தில் தர்ப்பணாதிகளைச் செய்து பரமாத்ம ஸ்வரூபத்தை ஆராய்ந்தறிவதற்காக இந்திரியங்களையெல்லாம் அடக்கி மௌன வ்ரதத்தையும் ஏற்றுக்கொண்டு, ப்ரஹ்மாவின் புதல்வராகிய ஸ்ரீநாரதமுனிவரைத் தெண்டனிட்டான். குருவைப் பணியவேண்டும். விதிப்படி பணிந்து, குருபக்தியும், சொன்னதைக் கேட்டு தரிக்கும்படியான (கேட்டதை மனதில் நிலைநிறுத்தும்படியான) மனத்தூய்மையும் அமைந்திருக்கிற அம்மன்னவனைக் கண்டு, நாரதமுனிவர் ஸந்தோஷம் அடைந்து அவனுக்கு ரஹஸ்யமான இம்மந்திர வித்யையை உபதேசித்தார்.

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- பகவானே! வாஸுதேவன், ப்ரத்யும்னன், அநிருத்தன், ஸங்கர்ஷணன் என்று நான்கு வ்யூஹ ஸ்வரூபியான உனக்கு நமஸ்காரம். இப்படிப்பட்ட உன்னை த்யானிப்போமாக. நீ ஜ்ஞானாநந்த ஸ்வரூபன்; அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை அனுபவிக்கையால் என்றும் ஸந்தோஷமுற்றிருப்பவன்; ராகம் (விருப்பு, வெறுப்பு) முதலிய தோஷங்களற்றவன். தேவன், மனுஷ்யன் முதலிய ஜாதியும் சிறுமை, பெருமை முதலிய பேதங்களும் தீண்டப் பெறாதவன். ஆனந்த ஸ்வரூபனான தன்னைத் தான் அனுபவிக்கையால் பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் தொலையப் பெற்றவன். இத்தகைய உனக்கு நமஸ்காரம். இந்த்ரியங்களுக்கும், அவற்றில் அபிமானி தேவதைகளுக்கும் நீ நியாமகன் (நியமிப்பவன்). ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவற்றவன். உன் சக்திகள் ஆச்சர்யமானவை. மற்றும் எல்லையில்லாதவை. உனக்கு நமஸ்காரம். மனமும், வாக்கும் உன் குணத்தை அளவிடப் புகுந்து முடியாமல் திரும்பிவிட்டன. நீ ஜ்ஞானத்தையே வடிவாகவுடையவன். இணை எதிரில்லாதவன். கர்மத்தினால் வரும் நாம ரூபங்களற்றவன். சேதன, அசேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணமானவன் (வேறானவன்). இத்தகைய பரமபுருஷன் நம்மைப் பாதுகாப்பானாக. 

இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழித்தல் ஆகியவற்றிற்குக்) காரணமான பரப்ரஹ்மம் நீயே. மண்ணால் இயற்றப்பட்ட குடம் முதலியவற்றில் மண் ஜாதி விட்டுப் பிரியாதிருப்பதுபோல் இந்த ப்ரபஞ்சமெல்லாம் உன்னிடத்தில் பிரியாதிருக்கின்றது. உனக்கு நமஸ்காரம். நீ  இந்த ப்ரபஞ்சத்தில் உள்ளும், புறமும் வியாபித்திருப்பவன். அத்தகைய அந்த ப்ரபஞ்சத்தை சரீரமாகவுடையவன். உன்னைக் கர்மேந்திரியங்களும், ப்ராணன்களும் தொடவல்லவையல்ல. மனமும், புத்தியும், ஜ்ஞானேந்திரியங்களும் உன்னை அறியவல்லவையல்ல. அத்தகைய உன்னை வணங்கினேன். நெருப்பில் காய்ச்சின இரும்பு மற்றொன்றை தஹிப்பது (எரிப்பது) போல் தேஹம், இந்திரியங்கள், ப்ராணன்கள், மனம், புத்தி இவையெல்லாம் உன்னுடைய ஜ்ஞானம், க்ரியை முதலிய சக்தி லேசத்தினால் (சிறு துளியால்) தொடரப்பெற்றுத் தத்தமது செயல்களில் முயல்கின்றன. இல்லாத பக்ஷத்தில், அவற்றிற்கு அச்சக்தியே உண்டாகாது. ஜீவனுக்கும் உன்னுடைய ஸங்கல்பத்தினால் தான் ஜ்ஞான விகாஸம் (மலர்ச்சி) உண்டாகின்றது. நீ ஷாட்குண்யபூர்ணன். புருஷஸூக்தத்தில் சொல்லப்பட்ட மஹாபுருஷன் நீயே. நீ மஹானுபாவன். நித்யவிபூதியென்றும், லீலாவிபூதியென்றும் மஹத்தான இரண்டு விபூதிகளுடையவன் (சொத்து). மேன்மையுடைய  பாகவதர்கள் அனைவரும் தாமரை மலர் போன்ற தமது கரங்களால் உன் பாதாரவிந்தங்களைப் பிடிக்கின்றார்கள். பரமனே! உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! நாரதமுனிவர் பக்தியுடன் தன்னைச் சரணம் அடைந்த சித்ரகேதுவுக்கு இங்கனம் இம்மந்திர வித்யையை உபதேசித்து அங்கிரஸ முனிவருடன் ஸத்யலோகம் போய்ச் சேர்ந்தார். சித்ரகேது மன்னவன், நாரதர் உபதேசித்த வித்யையை விதிப்படி மனவூக்கத்துடன், ஜலத்தையே ஆஹாரமாகக் கொண்டு, ஏழுநாள் வரையில் ஜபித்தான். அம்மன்னவன், ஏழுநாள் கழிந்த பின்பு, அம்மந்த்ர வித்யையின் மஹிமையால், வித்யாதரர்களுக்கு ப்ரபுக்களாயிருக்கும் தன்மையைப் பெற்றான். பிறகு, சில நாட்களில் அவித்யையின் ப்ரபாவத்தினால் நினைத்தபடி செல்லும் திறமை வளரப்பெற்றுப் பாதாளத்தின் அடியிலிருக்கிற தேவதேவனாகிய ஸங்கர்ஷண பகவானுடைய பாதார விந்தங்களின் அருகுக்குச் சென்றான். அங்குத் தாமரைத் தண்டின் நூல்போல் வெளுத்துக் கறுத்த வஸ்த்ரம் தரித்துக் கிரீடம், தோள்வளை, அரைநாண், கைவளை இவை அணிந்து தெளிந்த முகமும் சிவந்த கண்களும் அமைந்து ஸித்தேச்வரர்களின் கூட்டங்களால் சூழப்பட்டிருக்கும் ப்ரபுவாகிய ஸங்கர்ஷண தேவனை அம்மன்னவன் கண்டான். அவன், அவரைக் கண்ட மாத்திரத்தில், பாபங்களெல்லாம் தொலைந்து, தூயமனத்தனாகி மிகுந்த பக்தியும் வளர்ந்து, கண்களில் ஆனந்த பாஷ்பமும் பெருகி, உடம்பில் மயிர்க்கூச்சலும் உண்டாகப் பெற்று, புராண புருஷனாகிய அவரை அடிக்கடி ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்தான். அப்பால், அச்சித்ரகேது புண்யச்லோகனான அந்த ஸங்கர்ஷண பகவானுடைய பாதபீடத்தை ஆனந்த நீர்த்துளிகளால் அடிக்கடி நனைத்து, ஸந்தோஷத்தின் மிகுதியால் எழுத்துக்களை உச்சரிக்க முடியாமல் தடுக்கப்பெற்று, அந்தப் பகவானை ஸ்தோத்ரம் பண்ண வேண்டுமென்று விரும்பியும் நெடுநேரம் வரையில் முடியாமலேயிருந்தான். பிறகு, அம்மன்னவன் அம்ருதம் போன்ற வார்த்தைகள் நேரப் பெற்று, இந்திரியங்களையெல்லாம் வேறு விஷயங்களில் போகவொட்டாமல் தடுத்து, பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களால் நிரூபிக்கப்பட்ட திவ்யமங்கள விக்ரஹத்தையுடைய ஜகத்குருவான அப்பகவானை இங்கனம் துதித்தான்.

சித்ரகேது சொல்லுகிறான்:- பகவானே! நீ பிறரால் வெல்ல முடியாதவனாயினும், மனத்தை வென்று ஜகத்தெல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமே என்று பாவிக்கும் தன்மையுடைய ஸாதுக்களால் வெல்லப்பட்டிருப்பவன். வேறு ப்ரயோஜனங்களை எதிர்பாராமல் உன்னைப் பணியும் பெரியோர்களுக்கு நீ உன்னையும் கொடுக்குந்தன்மையன். அந்த ஸாதுக்களும் உன்னுடைய வாத்ஸல்ய (தாய் குழந்தையிடம் காட்டும் பரிவு) குணத்திற்குத் தோற்று உனக்கு வசப்பட்டிருக்கின்றனர். 

ஷாட்குண்ய பூர்ணனே! ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரதிகள் (அழித்தல்) உன்னுடைய ஐச்வர்யம். உனக்கு மேற்பட்டவன் எவனுமே இல்லை. ப்ரஹ்மதேவன் முதலியவர் உன்னுடைய அம்சங்களே. ஆயினும், அவர்கள் அஜ்ஞானத்தினால் தாம் ஸ்வதந்த்ர (தன்னிச்சையாக செயல்படக் கூடிய) ப்ரபுக்களென்று (தலைவர்கள், எஜமானர்கள் என்று) வீணாகவே கர்வப்படுகிறார்களன்றி அது உண்மையன்று. மிகவும் ஸூக்ஷ்மமான வஸ்துவுக்கும், மிகவும் பெரிய வஸ்துவுக்கும் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரம் (அழித்தல்) ஆகிய மூன்று தசைகளிலும் நீ அந்தர்யாமியாயிருக்கின்றாய். உனக்கு, ஆதி, நடு, அந்தம் என்னும் இவை மூன்றும் கிடையாது. கார்ய வஸ்துக்களின் ஆதியிலும், அந்தத்திலும் எது நிலைநின்றிருக்கின்றதோ அதைச் சேர்ந்தது தான் அவ்வஸ்துக்களின் நடு நிலைமையும். நீ, இந்த ப்ரபஞ்சத்தின் ஆதியிலும், அந்தத்திலும் நிலை நின்றிருப்பவனாகையால், அதன் நடுநிலைமையும் உன்னைச் சேர்ந்ததேயன்றி அந்த ப்ரபஞ்சத்தின் இடையிலுண்டான ப்ரஹ்மதேவன் முதலியவர்களைச் சேர்ந்ததன்று. இதோ புலப்படுகின்ற அண்டகோசம் ஒன்றைவிட ஒன்று பத்து மடங்கு அதிகமான ஏழு ஆவரணங்களால் சூழப்பட்டிருக்கின்றது. இதைப் போன்ற அண்டகோசங்கள் கோடி கோடியாக இதனுடன் இருக்கின்றன. இவையெல்லாம் உன்னிடத்தில் அணுபோல் சுழல்கின்றன. ஆகையால், நீ அனந்தனென்று பேர் பெற்றாய். 

ஈசனே! சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்றுப் பசுக்களைப் (விலங்குகளைப்) போன்ற சில மூடர்கள் உனது விபூதிகளான இந்த்ரன் முதலிய தேவதைகளை உபாஸிக்கிறார்கள். அனைவர்க்கும் மேலான உன்னை உபாஸிக்கிறதில்லை. அவர்கள், அவ்விந்தராதி தேவதைகளிடத்தினின்று பெறுகிற ஸ்வர்க்கம் முதலிய புருஷார்த்தங்களெல்லாம் அவ்விந்த்ராதி தேவதைகளோடு கூடவே அழிந்து போகின்றன. ராஜகுலத்தில் ஊழியம் செய்பவர்களின் பெருமையெல்லாம் அந்த ராஜகுலம் அழியும் போது அழிந்துபோமல்லவா? பரமனே! உன்னையே ப்ரயோஜனமாகக் கொண்டு உன்னிடத்தில் செய்யும் உபாஸனங்களெல்லாம் (த்யானங்கள் எல்லாம்) ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி துக்கங்களுக்கிடமான ஸம்ஸாரத்தை விளைக்கமாட்டாது. வறுத்த விதைகள் மீளவும் முளைக்கமாட்டாவல்லவா? ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற ப்ரக்ருதியின் குணங்களால் விளையும் விகாரங்கள் (மாறுபாடுகள்) உன்னைத் தீண்டவல்லவையன்று. நீ அபரிச்சின்ன (அளவற்ற) ஜ்ஞான ஸ்வரூபன். மற்ற தேவதைகள் அத்தன்மையரல்லர். ஆகையால், அவர்களைப் பற்றின உபாஸனங்கள் அழிந்து போகின்றன. ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி, புழு வரையிலுமுள்ள ஸமஸ்த ஜீவாத்மாக்களும் ப்ரக்ருதியின் குணங்களால் உண்டாகும் ஸுகதுக்கங்களை அனுபவிப்பவர்களே. ஆகையால், மனிதர்கள் புத்தியின்றித் தம்மைப்போல் கர்மவச்யர்களான தேவதைகளைப் பணிவார்களாயின், எங்கனம் அனிஷ்டங்கள் (துன்பங்கள்) கழியப்பெற்று இஷ்டங்களைப் பெறுவார்கள்? 

பரமனே! நீ, எல்லாவற்றையும் உனக்கு உட்படுத்திக்கொண்டு அவற்றைக் காட்டிலும் மேற்பட்டிருக்கின்றனையாகையால், அஜிதனென்று பேர் பெற்றாய். பாஞ்சராத்ரம், கீதை முதலியவற்றில் நீ மொழிந்த உனது ஆராதன ரூபமான தர்மமும் உன்னைப்போலவே மேன்மையுடையது. எவ்வித தோஷத்திற்கும் இடமில்லாதது. வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமல் பரமாத்மாவான உன் குணங்களை அனுபவிக்கும் தன்மையுடைய பெரியோர்கள் நீ மொழிந்த தர்மத்தை மோக்ஷத்தின் பொருட்டு அனுஷ்டிக்கிறார்கள். ப்ராணிகளுக்கு, வேறு விஷயங்களில் நீ - நான் - என்னுடையது - உன்னுடையதென்று விளைகிற விஷமபுத்தி (ஸமமில்லாத, எதிரிடையான புத்தி) நீ மொழிந்த தர்மத்தில் உண்டாகிறதில்லை. அஹங்கார (நான்), மமகார (எனது) ரூபமான விஷம புத்தியுடன் தேவதாந்தரங்களைக் (மற்ற தேவதைகளைக்) குறித்த ஆராதன ரூபமான மற்ற தர்மங்கள், த்வேஷாதிகளை (வெறுப்பு, பகை இவற்றை) உட்கொண்டிருக்குமாகையால் அபரிசுத்தமானவை; சத்ரு மரணாதிரூபமான பலன்களை உட்கொண்டிருக்குமாகையால், அதர்மங்கள் தலையெடுத்திருக்கும். தேவதாந்த்ரங்களை (மற்ற தேவதைகளை) ஆராதிக்கையாகிற தர்மம் மிகவும் தேஹ ச்ரமத்தை (உடல் உழைப்பை) விளைக்கின்றமையாலும், கடைசியில் ஸம்ஸாரமாகிற பெரிய அனர்த்தத்தையே வளர்க்கின்றமையாலும், தன்னை அனுஷ்டிக்கிறவனுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்கிறதென்பதில் ஸந்தேஹமில்லை. சத்ருஹிம்ஸை முதலியவற்றை விரும்பிச் செய்கிறானாகையால், பிறனுக்கும் த்ரோஹம் (கெடுதியைச்) செய்கின்றது. அத்தகைய தர்மத்தினால் தனக்காவது பிறனுக்காவது என்ன க்ஷேமம் உண்டாகும்? சத்ரு ஹிம்ஸையை உத்தேசித்துச் செய்யும் தர்மத்தினால் பிறனுக்கு மரணமே நேருமாகையால், அவனுக்கு க்ஷேமம் இல்லையென்பது நிச்சயம். 

அங்கனமே அதை அனுஷ்டிக்கிறவனுக்கும் க்ஷேமம் உண்டாகாது. ஒருகால் தற்காலத்தில் தனக்கு ஒருவிதமான க்ஷேமம் உண்டாயினும், அது எவ்வளவு புருஷார்த்தம்? அத்யல்பமல்லவா (மிக மிகச் சிறியது அல்லவா)? மற்றும், இவன் தனக்குத் தானே த்ரோஹம் (கெடுதி) செய்கிறானாகையால், பிறனுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்ய அஞ்சமாட்டானென்று நீயும் அவன்மேல் கோபித்துக்கொள்கின்றாய். ஒருகால் உனக்குக் கோபம் உண்டாகாமற் போயினும், பிறனைப் பீடிக்கிறானாகையால் அதர்மம் உண்டாகாமற் போகாது. 

நாதனே! ஸமஸ்த கர்மங்களையும் என்னிடத்தில் அர்ப்பணம் செய்து, மனவூக்கத்துடன் என்னை உபாஸிக்கிறவர்களை (த்யானிப்பவர்களை) நான் சீக்ரத்தில் ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தினின்று கரையேற்றுகிறேனென்ற உன் ஸங்கல்பம் ஒருகாலும் பொய்யாகாது. நீ அந்த ஸங்கல்பத்தினால் உன்னுடைய ஆராதன ரூபமான தர்மத்தைப் பாஞ்சராத்ரம் முதலிய சாஸ்திரங்களின் மூலமாய் மொழிந்தாய். பெரியோர்கள் உன் ஸங்கல்பத்தை அறிந்து ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த ப்ராணி ஸமூஹங்களையும் உன்னுடைய உருவங்களாகவும் உன்னை அவற்றிற்கு அந்தராத்மாவாகவும், அவற்றையெல்லாம் நீயாகவும் பாவித்து நீ மொழிந்த தர்மத்தை அனுஷ்டித்துக்கொண்டு மோக்ஷத்திற்காக உன்னை உபாஸிக்கிறார்கள். 

பகவானே! ப்ராணிகளுக்கு உன்னுடைய தர்சனம் நேருமாயின், அவர்கள் ஸமஸ்த பாபங்களும் நீங்கப் பெறுவார்கள். இது சேராததன்று. யுக்தமே (ஸரியே). ஏனென்றால், சண்டாள - சண்டாளனாயினும் உன்னுடைய நாமத்தை ஒருகால் கேட்பானாயின், ஸம்ஸார பந்தத்தினின்று விடுபடுகிறான். இனி நேரே உன்னுடைய காட்சியின் மஹிமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

பகவானே! இப்பொழுது நான் உன்னுடைய தர்சனத்தினால் மனமலங்களெல்லாம் கழியப்பெற்றேன். உனது அன்பரும், தேவரிஷியுமாகிய நாரதர் எனக்கு உபதேசித்த மந்திரத்தின் மஹிமையால் நான் உன்னைக் காணப்பெற்றேன். ஆசார்யன் அனுக்ரஹம் இல்லையாயின் எனக்கு இது எப்படி நேரும்? ஓ அனந்தனே! இவ்வுலகத்தில் ஜனங்கள் செய்வதெல்லாம் அவர்களுக்கு அந்தராத்மாவாகிய உனக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், என்னைப் போன்றவர் உனக்குச் சொல்லவேண்டியது என்னிருக்கின்றது? ஒளிப்பெருக்கனாகிய ஸூர்யனுக்கு மின் மினிப் பூச்சிகளால் ஆகவேண்டியது உண்டோ? நீ தேச, கால, வஸ்து பரிச்சேதம் (வரையறை) அற்றவன். இவ்வுலகத்திலுள்ள ஜனங்கள் அனைவரும் உன்னால் கொடுக்கப்பட்ட ஜ்ஞான சக்திகளையுடையவர்கள். அத்தகைய நான் உன் குணங்களை எவ்வளவு துதிக்கவல்லனோ, அது உனக்கே தெரியும். சொல்ல வேண்டியதில்லை. நீ ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாதவன்; ஸமஸ்தமான ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களையும் (அழித்தல் ஆகியவற்றையும்) நடத்துகின்றாய். குத்ஸித (இழிவான, அவமதிக்கத்தக்க) யோகிகள் உனக்கு உட்படாத ஸ்வதந்தர (தன்னிச்சையாக செயல்படும்) வஸ்துக்கள் உண்டென்னும் பேத புத்தியுடையவர்களாகையால் உன் ஸ்வரூப ஸ்வபாவங்களை அறியமாட்டார்கள். நீ மிகவும் பரிசுத்த ஸ்வரூபன். இத்தகைய உனக்கு நமஸ்காரம். நீ “நான் பலவாய் விரிய வேண்டும்” என்று ஸங்கல்பித்துக்கொண்டு விரிகையில், ப்ரஹ்மதேவன் முதலிய மற்ற ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் அனைவரும் உன்னைத் தொடர்ந்து ஸத்தைப் பெற்று ஸ்ருஷ்டிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கின்ற உன்னைத் தொடர்ந்து சித்த வ்ருத்திகளெல்லாம் (மனதின் எண்ணங்களெல்லாம்) விஷயங்களைத் தொடுகின்றன. இப்பூமண்டலமெல்லாம் உன் தலையில் கடுகு போல் இருக்கின்றது. ஆயிரம் தலைகளுடையவனும் ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அத்தகைய உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருவம்சாலங்காரனே! இங்கனம் துதி செய்யப்பெற்ற ஸங்கர்ஷண பகவான் மனக்களிப்புற்று (மனம் மகிழ்ந்து), வித்யாதரர்களுக்கு ப்ரபுவாகிய அச்சித்ரகேதுவைக் குறித்து இங்கனம் மொழிந்தான். “நாரத முனிவரும், அங்கிரஸ முனிவரும் உனக்கு ப்ரக்ருதி, புருஷ, ஈச்வரர்களின் ஸ்வரூபத்தை விவரித்து மொழிந்தார்களே, அது என்னுடைய கட்டளையே. அந்தராத்மாவாகிய என்னால் தூண்டப்பட்டே அவர்கள் உனக்கு அங்கனம் உபதேசித்தார்கள். 

மன்னவனே! அந்த நாரதர் உபதேசித்த வித்யையாலும் என்னுடைய தர்சனத்தினாலும் நீ ஸித்திபெற்றாய். உலகத்திலுள்ள ஸமஸ்த பூதங்களுக்கும் நான் அந்தராத்மாவாயிருந்து நியமித்துக் கொண்டு, அவற்றைச் சரீரமாகக் கொண்டிருக்கிறேனாகையால் அவையெல்லாம் நானே. தேவ, மனுஷ்யாதி பூதங்களையெல்லாம் நானே என்னிடத்தினின்று படைக்கிறேன். உலகத்திலுள்ள சப்தங்களும், அவற்றால் அறியப்படும் பொருள்களுமாகிய இரண்டும் என்னுடைய சாச்வதமான சரீரங்கள். தேவ, மனுஷ்யாதி சரீரங்களாய் விரிந்திருக்கிற ப்ரக்ருதியின் பரிணாமமான இந்த ப்ரபஞ்சத்தில், அந்தந்த சரீரங்களில் புகுந்து அவற்றைத் தரித்துக்கொண்டிருக்கிற ஜீவாத்மாக்கள், ஜீவாத்மாக்களால் தரிக்கப்பட்டிருக்கிற ப்ரபஞ்சம் ஆகிய இரண்டிலும் நான் உட்புகுந்து தரித்துக் கொண்டிருக்கிறேன். அவ்விரண்டும் என்னிடத்தில் நிலை நின்றிருக்கின்றன. ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், அந்த ஸ்வப்னாவஸ்தையில் (கனவில்) தன்னொருவனிடத்தில் பல சரீரங்களைக் காண்கிறான். உறங்கியெழுந்த பின்பு, தன்னை ஓரிடத்தில் படுத்திருக்கிற சரீரத்தில் இருப்பதாகவே நினைக்கிறான். அந்த ஸ்வப்னாவஸ்தை (கனவு நிலை), ஜீவனுடைய ஸ்வரூபத்தினால் ஏற்பட்டதன்று. அவனுடைய புண்ய, பாப கர்மங்களுக்குத் தகுந்தபடி ஈச்வரன் அந்தந்த வஸ்துக்களைப் படைத்துக் காட்டுகிறான். அந்த ஸ்வப்னாவஸ்தையைப்போல (கனவு நிலை போல), ஜாக்ரத் அவஸ்தை (விழிப்பு நிலை) முதலிய மற்ற அவஸ்தைகளும் (நிலைகளும்) ஜீவனுடைய கர்மத்தின்படி ஈச்வரனால் தூண்டப்பட்ட ப்ரக்ருதியின் பரிணாமங்களே. அசேதனமான ப்ரக்ருதிக்கு, அந்த ஸ்வப்னாதி (கனவு முதலிய) அவஸ்தைகளைக் (நிலைகளைக்) காணுந்தன்மை இல்லாமையால், ப்ரக்ருதியின் பரிணாமமான சரீரங்களில் ஜீவன் உட்புகுந்து, அவற்றைத் தரித்துக்கொண்டு அந்த அவஸ்தைகளை அனுப்பவிக்கிறானென்றும், ஒரு சரீரத்திலுள்ள ஆத்மாவின் அனுபவம் மற்றொரு சரீரத்திலுள்ள ஆத்மாவுக்கு இல்லையாகையால் சரீரங்கள்தோறும் தனித்தனியே ஜீவாத்மாக்கள் இருக்கிறார்களென்றும், விழித்துக்கொண்டவன் “நான் இங்கனம் ஸ்வப்னங்கண்டேன் (கனவு கண்டேன்)” என்று நினைக்கிறானாகையால் ஸ்வப்னங்கண்டவனும் (கனவு கண்டவனும்) விழித்துக்கொண்டிருக்கிறவனும் ஒருவனேயென்று ஒப்புக்கொள்ள வேண்டும். 

ஸ்வப்னாவஸ்தையைப் (கனவு நிலையைப்) போல, ஜாக்ரதாதி அவஸ்தைகளும் (விழிப்பு முதலிய நிலைகளும்) பரமாத்மாவினுடைய மாயையால் ஏற்பட்டவைகளேயன்றி, ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தைப் பற்றினவைகளன்றென்று விவேகித்து அந்த அவஸ்தைகளுக்கு ஸாக்ஷியும் ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணனுமாகிய (வேறான) ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை இங்கனம் ஸூக்ஷ்ம புத்தியால் ஆராய்ந்தறிய வேண்டும். ஜீவன் எவனிடத்தில் சேர்ந்து, ஸுஷுப்தியையும் (ஆழ்ந்த உறக்கத்தையும்), ஸுகத்தையும் (இன்பத்தையும்) அனுபவிக்கிறானோ, அவன் நானேயென்று என்னை உணர்வாயாக. நான் கெட்ட குணங்கள் தீண்டப்பெறாதவன். என்னையே பரப்ரஹ்மமென்று ச்ருதிகள் சொல்லுகின்றன. உறக்கத்தையும், விழித்தலையும் அனுபவிக்கின்ற ஜீவனுடைய ஜ்ஞானமயமான ஸ்வரூபம் ஒரு அவஸ்தையோடு ஸம்பந்தித்திருக்கும்பொழுது, மற்றொரு அவஸ்தையால் விடுபட்டிருக்கும். ஜீவாத்மாவின் ஸ்வரூபம் ஒன்றே எல்லா அவஸ்தைகளிலும் தொடர்ந்து வருகின்றது. அத்தகைய ஜீவாத்மாவைக் காட்டிலும் நான் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பவன். நான் எல்லா அவஸ்தைகளிலும் அந்த ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாகி, அவர்களை நியமித்துக் கொண்டு தொடர்ந்திருப்பவன். ஆயினும், அந்தந்த அவஸ்தைகளைப் பற்றின ஸுகதுக்கங்கள் என்னைத் தீண்டமாட்டாது. ஜீவாத்ம ஸ்வரூபத்திற்கு எல்லா அவஸ்தைகளிலும் தொடர்ந்திருக்கையும், ஜ்ஞானாநந்தாதி ரூபமாயிருக்கையும், நானென்று தோற்றுகையும் இயற்கையாயிருப்பது போல, பரப்ரஹ்மமாகிய எனக்குச் சரீரமாயிருக்கையும், அதற்கு இயற்கையென்று உணர வேண்டும்.  ஜீவன், எனக்குச் சரீரமாயிருக்கையாகிற தன் ஸ்வரூபத்தை மறந்து, தன்னை ஸ்வதந்த்ரனாக நினைப்பானாயின், ஒரு தேஹத்தை விட்டபின்பு மற்றொரு தேஹம் பெறுகையும், மரணம் அடைந்த பின்பு மீளவும் மரணம் அடைகையுமாகிற ஸம்ஸாரம், இவனுக்கு மாறாமலேயிருக்கும். இவ்வுலகத்தில் இந்த ஜீவன், சாஸ்த்ர அப்யாஸத்தினால் (வேத சாஸ்த்ரத்தை அறிந்ததால்) விளையும் ஜ்ஞானத்திற்கும், விவேகம், வைராக்யம் முதலியவற்றால் உதவி செய்யப்பெற்ற உபாஸனரூப ஜ்ஞானத்திற்கும் விளைநிலமாகிய மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்றும், அத்தகைய ஆத்மஸ்வரூபத்தை அறியானாயின், அவன் மற்ற எந்த ஜன்மத்திலும் க்ஷேமம் பெறமாட்டான். ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை அறிந்த பண்டிதன், சப்தாதி விஷயங்களை விரும்பி அவற்றைப் பெறுதற்காகச் செய்யும் செயலாகிற ப்ரவ்ருத்தி தர்மத்தில் சரீர ஆயாஸம் (உடல் களைப்பு) முதலிய வருத்தம் உண்டாவதையும் வருந்திச் செய்தாலும், தாம் விரும்பினதற்கு விபரீதமான துக்கமே விளைவதையும், சப்தாதி விஷயங்களை விரும்பாமல், (வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமல்) அனன்ய ப்ரயோஜனமாகப் (வேறு எந்தப் பலனையும் விரும்பாது பகவானையே வேண்டி) பகவானை ஆராதிக்கையாகிற ப்ரவ்ருத்தி தர்மத்தில் எவ்விதத்திலும் பயத்திற்கிடமாகாத மோக்ஷம் நேருவதையும் ஆலோசித்து, அந்த ப்ரவ்ருத்தி தர்மத்தினின்று மீள வேண்டும். இல்லற வாழ்க்கையிலிருக்கின்ற ஆண், பெண்களிருவரும் ஸூகம் பெறுதற்காகவும், துக்கம் நீங்குவதற்காகவும் அவற்றிற்குரிய செயல்களைச் செய்கின்றார்கள். ஆயினும், அச்செயல்களால் அவர்களுக்குத் துக்கமும் நீங்குகிறதில்லை, ஸுகமும் உண்டாகிறதில்லை. நினைத்ததற்கு நேர்விபரீதமாகத் தேஹச்ரமம், பணச்சிலவு முதலியவற்றால் வருத்தமே உண்டாகின்றது. “நாம் ப்ரவ்ருத்தி தர்மத்தை அனுஷ்டிப்பதில் வல்லவர்” என்று அபிமானித்திருக்கும் ப்ராணிகளுக்கு இங்கனம் அச்செயல்களால் விபரீத பலமே உண்டாவதை ஆராய்ந்து ஜாகரம் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் மூன்று அவஸ்தைகளைக் (நிலைகளைக்) கடந்திருப்பதும் கேவல, சப்தாதி விஷயங்களில் விருப்பமுடைய மூடர்களால் அறியமுடியாததுமான ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து, இந்த லோகத்திலும், பரலோகத்திலும் (வேறு உலகத்திலும்) உள்ள பலவகையான விஷய ஸுகங்களிலும் விவேக பலத்தினால் விருப்பத்தை அறுத்துக்கொண்டு, சாஸ்தர ஜ்ஞானத்தினால் உதவி செய்யப்பெற்ற பகவத் உபாஸன (த்யான) ரூப ஜ்ஞானத்தினால் ஸந்தோஷமுற்று, எனக்கு மிகவும் அன்பனாவான். பரமாத்ம உபாஸனத்தில் (த்யானத்தில்) தேர்ந்த மதியுடைய (புத்தியுடைய) மனிதர்கள், பரமாத்வாவுக்கும், தமக்கும் உள்ள ஐக்ய ஸம்பந்தத்தை உள்ளபடி ஆராய்ந்தறிவார்களாயின், அவர்கள் ஸர்வப்ரகாரத்தாலும் அறிய வேண்டிய பொருள் இவ்வளவேயன்றி இதற்குமேல் மற்றொன்றும் இல்லை. 

ஓ மன்னவனே! நீ மனவூக்கமுற்று ச்ரத்தையுடன் ஜ்ஞான, விஜ்ஞானங்களின் பெருமையை விளைக்கவல்ல என் வசனத்தை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு ஆத்ம, பரமாத்மாக்களுக்குள்ள நித்யஸம்பந்தத்தை அனுஸந்தித்து, எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வாபமேயென்று பாவித்துக்கொண்டிருப்பாய் ஆயின், சீக்ரத்தில் மோக்ஷ ஸித்தியைப் பெறுவாய்” என்று மொழிந்தான். ஜகத்குருவும் ப்ரபஞ்சத்திற்கெல்லாம் அந்தராத்மாவுமாகிய ஸங்கர்ஷண பகவான், சித்ரகேது மன்னவனை இங்கனம் ஆச்வாஸப்படுத்தி, அவன் பார்த்துக்கொண்டிருக்கையில் அவ்விடத்திலேயே அந்தர்த்தானம் அடைந்தான் (மறைந்தான்). 

பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக