சனி, 4 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 7 - திருப்பூர் கிருஷ்ணன்

சித்திரத்தில் சிக்காத கடவுள்

விஷ்ணு பக்தரான நாரதர் துவாரகைக்கு வந்தார் கண்ணனை தரிசிக்க. கண்ணனைக் கண்டு மகிழ்ந்த பிறகு, அவன் கருணையில் திளைத்த பிறகு, துவாரகை முழுவதும் உற்சாகமாக வலம் வந்தார். அவர் மனம் ஆனந்தத்தில் நிறைந்தது. துவாரகை மக்கள் ஒவ்வொருவரும் அவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள். பொய்யில்லை, பொறாமையில்லை. தெய்வம் ஆட்சிசெய்யும் இடத்தில் குடியிருக்கும் மக்கள் நல்லவர்களாக இருப்பது இயல்பு தானே என்று அவர் மனம் காரணம் கற்பித்துக் கொண்டு மகிழ்ந்த வேளையில், எல்லோரும் அப்படியல்ல, துவாரகையிலும் பல்வேறு வகையான மனப்போக்குள்ளவர்கள் உண்டு என்பதை அவர் புரிந்துகொள்ள விரைவிலேயே ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. 

அன்று அல்லி மலர்கள் பூத்திருந்த பொய்கைக் கரை ஒன்றில் சூரிய பகவானுக்கு நீர்க்கடன் செலுத்தி மாலை வழிபாடு செய்யலானார் நாரதர். "நாராயண நாராயண" என்றவாறே வழிபாட்டை முடித்துக் கொண்டு பொய்கையின் படிக்கட்டுகள் வழியாக அவர் மேலேறி வந்தபோது யாரோ ஒருவன் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். 

அவர் தன்னைப் பார்த்தவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பின், "ஏனப்பா என்னையே உற்றுப் பார்க்கிறாய்? யார் நீ?'' என்று வினவினார். 

"நான் யார் என்றா கேட்கிறீர்கள்? என்னைத் தெரியாதவர்களும் உண்டா என்ன? விந்தை தான். துவாரகையின் புகழ்பெற்ற ஓவியன் நான். உங்கள் தோற்றம் வித்தியாசமாக இருக்கவே தொழில் முறையில் அதை உற்றுப் பார்த்து மனத்தில் வாங்கிக் கொண்டேன். நாளை இதே இடத்திற்கு வாருங்கள். உங்களைப் போலவே ஓர் ஓவியத்தை இன்றிரவுக்குள் வரைந்து உங்களுக்குத் தருகிறேன். என் ஓவிய ஆற்றலுக்கு இணையான ஆற்றல் படைத்த ஓவியர்கள் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் கிடையாது!''

நாரதர் அந்த ஓவியனைப் பார்த்து மனத்திற்குள் சிரித்துக் கொண்டார். 

நான் திரிலோக சஞ்சாரி. எல்லா உலகங்களையும் சுற்றி வருபவன். ஆனால் இவன்? துவாரகையை விட்டு எங்கே சென்றிருப்பான்? ஈரேழு பதினான்கு உலகங்களைப் பற்றி என்ன தெரியும் இவனுக்கு? எத்தனை உலகை இவன் பார்த்திருக்கிறான்? என்ன அகங்காரம் பேச்சில்! 

"அகங்காரம் தவறப்பா. ஓவியக் கலையில் உன்னை விஞ்சுபவர்களும் இருக்கலாம். உன்னால் வரைய முடியாத உருவங்களும் இருக்கலாம். அடக்கம் தேவை''- அறிவுறுத்தினார் நாரதர். 

அவன் கடகடவென்று சிரித்தான். 

"ஓவியக் கலையில் என்னை விஞ்சும் ஆற்றல் உள்ளவர்களா? அப்படி யாரும் இருக்க வாய்ப்பே இல்லை சுவாமி. என்னால் வரைய முடியாத உருவமா? அப்படி எந்த உருவமும் இருக்க இயலாது. நீங்கள் என் திறமையை அறியாததால் குறைத்து மதிப்பிட்டுப் பேசுகிறீர்கள். நாளை நான் வரைந்து தரும் உங்கள் ஓவியத்தைப் பாருங்கள். அதன் பிறகு என் ஆற்றலை நீங்களே புகழ்வீர்கள்!''

சொல்லியவாறே பொய்கையில் நீராடுவதற்காக அவன் படிக்கட்டுகளில் இறங்கினான்.

"அகங்காரம் கொண்டவர்கள் படிப்படியாகக் கீழே இறங்குவார்கள். பார். நீ கீழே இறங்கிக் கொண்டிருக்கிறாய்!'' சொன்னவாறே நாரதர் குளக்கரையின் மேலேறிச் சென்றார். அவர் மனம், "கண்ணன் வாழும் துவாரகையில் இப்படியோர் அகங்காரம் பிடித்தவனா" என்று துயரம் கொண்டது. அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நாரதரிடம் மேலோங்கியது. 

மறுநாள்.... அதே நேரம். அதே அல்லிக்குளம். அதே படிக்கட்டு. நாரதர் மாலை வழிபாடு முடித்துவிட்டு வரும்போது படிக்கட்டின் மேலே காத்திருந்தான் அந்த ஓவியன். அவன் கையில் ஓவியச் சுருள். 

நாரதர் வந்ததும் கர்வம் மிளிரும் சிரிப்புடன் ஓவியத்தைச் சரேலென விரித்துக் காட்டினான். உண்மையிலேயே நாரதர் அசந்துதான் போனார். அந்த ஓவியம் ஓர் உதறு உதறினால் எழுந்து நடக்கும் என்று தோன்றியது. அத்தனை தத்ரூபம்!

"என்னை மிகச் சரியாக வரைந்திருக்கிறாய். ஆனால் எல்லோரையும் உன்னால் வரைய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இவ்வளவு ஏன்? உங்கள் துவாரகையின் மகாராஜா கிருஷ்ணரை உன்னால் ஓவியத்தில் எழுத முடியுமா?''

"ஏன் முடியாது? அவரை நேரில் அருகே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரது முக அளவுகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு அவரையும் கட்டாயம் வரைந்துவிடுவேன்!''

"அப்படியானால் வா!''

நாரதர் ஓவியனை அழைத்துக் கொண்டு நேரே ஸ்ரீகிருஷ்ணரின் மாளிகை நோக்கிச் சென்றார். 

"வா நாரதா!'' என்று அன்போடு வரவேற்ற கிருஷ்ணர், எல்லாம் அறிந்துகொண்டும், ஏதும் அறியாததுபோல் "யார் இந்த மனிதர்?'' என ஓவியனைக் குறித்து விசாரித்தார். 

நாரதர் சொன்ன விஷயங்களைக் கேட்ட கிருஷ்ணர், ஓவியனிடம், "சரி. உனக்கேற்றவாறு குறிப்புகள் எடுத்துக் கொள்!'' என்று சொல்லி அவன் ஓவிய ஆற்றலுக்குக் கட்டுப்பட்டு ஓர் இடத்தில் சற்று நேரம் அசைவில்லாமல் அமைதியாக அமர்ந்தார். 

ருக்மிணி, சத்யபாமா இருவரும், "அப்பாடி, இப்போதாவது ஓர் இடத்தில் ஓடாமல் அமர்ந்தாரே,'' என்று சொல்லி நகைத்தார்கள். 

"யசோதை உரலில் கட்டியபோதும் இப்படி இப்போது அமர்ந்ததுபோல் அமர்ந்திருக்கலாம். உரலை இழுத்துக் கொண்டுபோய் இரண்டு மரங்களை உடைத்தார் உங்கள் கணவர்!'' என்று சொல்லி சிரித்தார் நாரதர். 

"என்ன செய்வேன்? சென்ற ராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டுகள் மரங்கள் நிறைந்த கானகத்தில் கால்வலிக்க நடந்த சலிப்பு. அந்த நினைவால் இந்த அவதாரத்தில் குழந்தையாக இருந்தபோதே மரங்களைப் பார்த்தால் உடைக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது!'' என்று சொல்லி நகைத்தார் கிருஷ்ணர்! 

அவர் சொன்னதைக் கேட்டு ருக்மிணி, சத்யபாமா, நாரதர் எல்லோரும் சிரித்தார்கள். 

ஓவியன் கவனமாக கண்ணன் திருமுகத்தைப் பார்த்துக் குறிப்புகளை எடுத்துக் கொண்டான். மறுநாள் கண்ணனைப் போன்ற உருவத்தைக் கண்ணனிடம் காண்பிப்பதாகக் கூறி செருக்கோடு விடைபெற்றான்.

"வாக்கு தவறமாட்டாயே?'' என்று கேட்டார் கிருஷ்ணர்.

"தவறமாட்டேன்'' என்று ஓவியன் உறுதியளித்தான். 

ஆனால், தன் வாக்குறுதியை நிறைவேற்ற அவன் தவணை கேட்கும்படி தான் ஆயிற்று. 

மறுநாள் ஓவியத்தோடு வந்தான். சித்திரத்தை மறைத்த திரைச்சீலையை அவிழ்த்து ஓவியத்தைக் காட்டினான். கிருஷ்ணனோடு சேர்ந்து ருக்மிணியும் சத்யபாமாவும் ஏன் நாரதரும் கூட கலகலவென்று சிரித்தார்கள். ஏனென்றால் ஓவியத்தில் உள்ள கிருஷ்ணருக்கும், இன்றைய கிருஷ்ணருக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது! ஓவியம் கிருஷ்ணரைப் போல் இல்லை. 

முகத்தில் வழியும் வேர்வையைத் துடைத்துக் கொண்ட ஓவியன் மறுபடியும் குறிப்புகள் எடுத்துக் கொண்டு சென்றான். மறுநாள் மறுபடி ஓவியத்தோடு வந்தான். 

மறுநாளும் அதே கதைதான். ஓவியம் நேற்றைய குறிப்புகளின் படிச்சரியாகத்தான் வரையப்பட்டிருந்தது. ஆனால் இன்று கண்ணன் தோற்றம் மாறியிருந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் நடக்கவே ஓவியன் பெரும் திகைப்படைந்தான். அவன் அகங்காரம் அழிந்தது. 

நாரதரைத் தனியே சந்தித்த ஓவியன் அவரை வணங்கிப் பணிந்து கேட்டான்:

"சுவாமி! என் அகங்காரம் அழிந்தே போய்விட்டது. என் ஆற்றல் எல்லாம் கண்ணன் அருளால் கிடைத்தது என்பதைப் புரிந்துகொண்டுவிட்டேன். என் கர்வத்தை முற்றிலுமாக விட்டுவிட்டேன். ஆனால் கிருஷ்ணரிடம் அவரைப் போல் ஓர் உருவத்தை வரைந்து தருவதாக வாக்குக் கொடுத்துவிட்டேன். என் வாக்குறுதியைக் காப்பாற்ற நீங்கள் தான் வழிசொல்லி உதவ வேண்டும்!''

நாரதர் அவனைப் பார்த்துக் கனிவோடு சிரித்தார். 

"எப்போது அகங்காரம் தவறு என்று உணர்ந்தாயோ அப்போதே சொர்க்கத்தின் வாசலைத் திறந்துவிட்டாய். உன் வாழ்க்கையில் இனி சந்தோஷம் தான் இருக்கும். ஆணவம் கொண்டவர்கள் வாழ்வின் அரிய சந்தோஷத் தருணங்களை இழக்கிறார்கள். அன்பனே! அருகில் வா. நான் சொல்லும் முறைப்படிச் செய். உன் வாக்குறுதி காப்பாற்றப்பட்டு விடும்''.

நாரதர் ஓவியனின் காதோடு ஒரு ரகசியத்தைச் சொல்லி அதன்படி நடக்கச் சொன்னார். அப்படியே செய்வதாக அவன் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டான். 

மறுநாள் அந்த ஓவியன் ஸ்ரீகிருஷ்ணர் அரண்மனைக்குச் சென்றபோது அங்கே கிருஷ்ணர், ருக்மிணி, சத்யபாமா, நாரதர் எல்லோரும் இருந்தார்கள். 

"ஓவியனே! என்போன்ற உருவத்தை எனக்குக் காட்டுவதாக வாக்குறுதி தந்தாயே? எங்கே அது?''- ஆவலுடன் கேட்டார் கிருஷ்ணர். 

"இதோ!'' ஓவியன் சரேலென திரைச்சீலையைப் பிரித்துக் காட்டினான். அன்று அது அப்படியே கிருஷ்ணர் போலவே இருந்தது. எந்தக் குறையும் சொல்ல இயலாது. நாரதர் நகைத்துக் கொண்டார். 

ருக்மிணியும் சத்யபாமாவும் கூட ஓடிவந்து அதில் தெரியும் கிருஷ்ணர் பிம்பத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள். ஓவியனின் சாதுரியத்தை மனமாரப் பாராட்டினார்கள். 

ஏனென்றால் ஓவியனின் திரைச்சீலைக்குள் இருந்தது ஓவியமல்ல. ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி!

"அகங்காரம் இல்லாத மனம் தான் அப்பா கண்ணாடி. அதில்தான் இறைவனின் திருவுருவம் பிரதிபலிக்கும்!'' என்று நாரதர் அறிவுறுத்தியபோது ஓவியனின் விழிகள் பக்திக் கண்ணீரால் தளும்பின.

நன்றி - தினமலர் ஜூன் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக