ஶ்ரீமத் பாகவதம் - 151

ஆறாவது ஸ்கந்தம் - பதினேழாவது அத்தியாயம்

(சித்ரகேது மன்னவன் ருத்ரனைப் பரிஹஸித்து, பார்வதியின் சாபத்தினால் வ்ருத்ராஸுரனாகப் பிறத்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வித்யாதரர் (தேவர்களில் ஒரு பிரிவினர்) தன்மையைப் பெற்ற சித்ரகேது மன்னவன், அந்த ஸங்கர்ஷண பகவான் எந்த திக்கில் மறைந்தானோ, அந்த திக்குக்கு நமஸ்காரம் செய்து, வித்யாதரர்களுடன் (தேவர்களில் ஒரு பிரிவினர்) ஆகாயத்தில் திரிந்து கொண்டிருந்தான். அச்சித்ரகேது மன்னவன் பலமும், இந்த்ரியங்களும் இம்மியும் தடைபடாதிருக்கப்பெற்று லக்ஷம் – லக்ஷ வர்ஷங்கள் வரையில் முனிவர்களாலும், ஸித்தர்களாலும் துதி செய்யப்பெற்று, நினைத்தபடி விளைகின்ற பலவகையான போக்ய (அனுபவிக்கப்படக்கூடிய பொருள்கள்), போகோபகரண (அனுபவிப்பதற்கு உதவியாக இருப்பவை) ஸித்திகளையுடைய (மேற்கூறிய இரண்டையும் எளிதில் அடையக்கூடிய) மேரு முதலிய குலபர்வதங்களில் சாரல்களில் (தாழ்வரைகளில்) வித்யாதர ஸ்த்ரீகளைக்கொண்டு ஸ்ரீபகவானுடைய புகழைப் பாடுவித்துக்கொண்டு, மனக்களிப்புற்றிருந்தான். அச்சித்ரகேது மன்னவன், தான் நினைத்தபடி பகவானால் கொடுக்கப்பட்டதும், ஜ்வலித்துக் கொண்டிருப்பதுமாகிய விமானத்தில் ஏறிக்கொண்டு, ஒருகால் ஆங்காங்கு ஸஞ்சரித்துக் கொண்டிருக்கையில், ஸித்தர்களாலும், யோகிகளாலும் சூழப்பட்டிருக்கிற ருத்ரனைக் கண்டான். அவன் மடியில் பார்வதியை உட்காரவைத்து, புஜத்தினால் அணைத்துக்கொண்டு, முனிவர்களின் ஸபையில் இருந்தான். அம்மன்னவன், அந்த ருத்ரனைக் கண்டு, பார்வதி கேட்டுக் கொண்டிருக்கையில், அருகாமையில் உரக்கச் சிரித்து இங்கனம் மொழிந்தான். 

“இந்த ருத்ரன் உலகங்களுக்கெல்லாம் நேரே ஹிதோபதேசம் செய்பவன். ப்ராணிகளுக்கு தர்மத்தை உரைப்பவன்; அவர்களில் ப்ரதானன். இத்தகைய இவன், ஸபையில் பார்யையுடன் (மனைவியுடன்)  இணைந்திருக்கிறான். மற்றும், இவன் ஜடைகளைத் தரித்திருக்கிறான். கொடுந்தவமுடையவன்; ப்ரஹ்மஜ்ஞானோபதேசம் செய்பவன். ஸபைக்கு ப்ரபு. இத்தகையனாயினும், ஒன்றுமறியாத மூடன் போல், வெட்கமின்றி மடியில் மடந்தையை (பெண்ணை) உட்காரவைத்துக் கொண்டிருக்கிறான். மற்றும், உலகத்திலுள்ள ஒன்றுமறியாத மூடர்களும், ஏகாந்தத்திலேயே (தனிமையிலேயே) மடந்தையர்களை (பெண்களை) மடியில் உட்கார வைத்துக் கொள்கிறார்கள். இவன் பெரிய வ்ரதங்களை அனுஷ்டிப்பவனாயினும், ஸபையில் மடந்தையை (பெண்ணை) மடியில் உட்கார வைத்துக் கொண்டிருக்கிறான். இது பெரிய விபரீதமாயிருக்கின்றதே” என்றான். 

பிறகு பகவானாகிய ருத்ரன் சித்ரகேதுவின் வசனத்தைக் கேட்டும், ஆழ்ந்த மதி (புத்தி) உடையவனாகையால் சிரித்து, ஒன்றும் பேசாமல், வெறுமனேயிருந்தான். அவனுடன் ஸபையில் இருந்தவர்களும் பேசாமலே இருந்தார்கள். சித்ரகேது மன்னவன், அந்த ருத்ரனுடைய மஹிமையை அறியாமல் ப்ரஹ்ம ஸ்வரூபனாகிய அச்சிவபெருமானைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில், அம்பிகாதேவி, ஜிதேந்த்ரியனென்று (இந்த்ரியங்களை வென்றவன் என்று) தன்னை அபிமானித்துக் (நினைத்துக்) கொண்டிருப்பவனும், துஷ்டஸ்வபாவனுமாகிய (கெட்ட குணம் உடைய) அச்சித்ரகேதுவின்மேல் கோபமுற்று இவ்வாறு மொழிந்தாள். “இவன் இப்பொழுது உலகத்தில் விவேகமற்று, வெட்கங்கெட்ட எங்களைப் போன்ற துஷ்டர்களுக்கு நன்மை, தீமைகளை அறிவிக்க ஏற்பட்டிருக்கிறான் என்ன? கட்டளையைக் கடந்தால் (மீறினால்) தண்டிப்பவன் போலும் தண்டிக்க வல்லவனாயிருக்கிறான். ப்ரஹ்மதேவனுக்கும், அவனது புதல்வர்களான ப்ருகு, நாரதர் முதலியவர்களுக்கும் ஸனத்குமாரர், கபிலமுனி இவர்களுக்கும் தர்மம் தெரியாது போலும். தெரியுமாயின், தர்ம மர்யாதையைக் கடக்கின்ற இந்த ருத்ரனைத் தடுக்கமாட்டார்களாம். இச்சிவபெருமான், அந்த ப்ரஹ்மாதிகளுக்கும் த்யானிக்கத் தகுந்த பாதார விந்தங்களையுடையவன். உலகங்களுக்கு ஹிதோபதேசம் செய்பவன்; மங்களங்களுக்கும் மங்களன் இத்தகைய சிவபெருமானையும் ஞானிகளான ரிஷிகளையும் அவமதித்து அவர்களைச் சிக்ஷிக்கத் (கற்பிக்கத்) தொடங்குகிறான். ஆகையால், துர்ப்புத்தியாகிய (கெட்ட புத்தி கொண்ட) இந்த க்ஷத்ரியாதமன் (க்ஷத்ரியர்களில் கீழானவன்) தண்டிக்கத் தகுந்தவனே. ஸாதுக்களால் பணியப்பெற்ற பகவானுடைய பாதமூலத்தை அணுகுவதற்கு இவன் உரியனல்லன். இவன் தன்னைத் தானே மேன்மைக்கிடமாக அபிமானித்துக் (நினைத்துக்) கொண்டிருப்பவன். செருக்குற்றவன்” என்று மொழிந்து அவனைக் குறித்து “துஷ்ட புத்தியுடையவனே (கெட்ட புத்தி உடையவனே)! நீ பகவானைப் பணிதற்கு உரியவனல்லை. பிள்ளாய்! மீளவும் இவ்வாறு பெரியோர்களிடத்தில் அபராதப்படாதிருக்கும்படி பாபிஷ்டமான அஸுரஜன்மத்தைப் பெறுவாயாக” என்று சபித்தாள். 

பாரதனே! இங்கனம் சபிக்கப்பெற்ற அச்சித்ரகேது மன்னவன், விமானத்தினின்று இறங்கித் தலை வணங்கி பார்வதியை அருள்புரியும்படி வேண்டினான். “அம்பிகே! நீ கொடுத்த சாபத்தை நான் கைகுவித்துப் பெற்றுக் கொள்கிறேன். நீ கொடுத்த சாபம் எனக்கு அனுக்ரஹமேயன்றி (பரிவுடன் கூடிய ஆசி) நிக்ரஹமன்று (தண்டனையன்று). தேவதைகள் சொல்லுவதெல்லாம் ப்ரீதியையே முன்னிட்டுக் கொண்டிருக்கும். அது அவனுடைய ஜன்மாந்தர (மற்ற பிறவிகளில்) கர்மத்தினால் (செய்த கர்ம வினைகளால்) ஏற்பட்டதேயன்றி, வேறன்று. மோக்ஷத்தைத் தடுக்கின்ற ஜன்மாந்தர கர்மங்களால் (மற்ற பிறவிகளில் செய்த கர்ம வினைகளால்) இந்த ஸம்ஸாரத்தில் உழன்று கொண்டிருக்கிற நான், உன் சாபத்தை அனுபவிக்கையால் அக்கர்மங்களெல்லாம் தீரப்பெற்று, சீக்ரத்தில் பகவானைப் பெறுவேனல்லவா? சக்ரம் போல் சுழல்கின்ற கர்ப்ப (தாயின் கருவறை), ஜன்ம (பிறப்பு), ஐரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான இந்த ஸம்ஸாரத்தில் ஜீவன் அனாதியான புண்ய, பாப, ரூப கர்மத்தினால் மதிமயங்கித் (புத்தி கலங்கி) தேஹத்தையே ஆத்மாவாக அபிமானித்து, திரிந்து கொண்டு ஜன்மாந்தர வாஸனையால் (மற்ற பிறவிகளில் செய்த கர்ம வினைகளின் ஆழ்ந்த மனப் பதிவுகளால்) தூண்டப்பெற்று, மேன்மேல் ஸுகதுக்கங்களை விளைக்கும்படியான கர்மங்களைச் செய்து கொண்டே பூர்வகர்மங்களின் பலனான ஸுகதுக்கங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். ஸம்ஸாரத்தினின்று நீங்காதிருக்கும் வரையில் இந்த விஷயம், நான் - நீ - மற்றவர் ஆகிய அனைவர்க்கும் துல்யமே (ஸமமே). ஸுகதுக்கங்களை விளைக்கிறவன் தானுமல்லன்; பிறனுமல்லன். அவற்றிற்கு அவரவர்களுடைய கர்மமே காரணம். புண்ய, பாபங்களின் உண்மையை அறிந்தவன், பரமாத்மாவையே அவற்றிற்குக் காரணமாக நினைக்கின்றான். புண்ய பாபங்களாவன பரமாத்மாவின் நிக்ரஹ (தண்டனை) அனுக்ரஹங்களே (பரிவுடன் கூடிய ஆசி). ச்ருதி, ஸ்ம்ருதி முதலிய சாஸ்த்ரங்களில் சொன்னபடி அனுஷ்டிக்கிறவனிடத்தில், பரமபுருஷனுக்கு அனுக்ரஹம் (பரிவுடன் கூடிய ஆசி) உண்டாகின்றது. அதுவே புண்யம். அதைக் கடந்து நடக்கிறவனிடத்தில் அவனுடைய நிக்ரஹம் (தண்டனை) உண்டாகின்றது. அதுவே பாபம். இப்புண்ய பாபங்களே கர்மமென்று கூறப்படுகின்றன. ஸுகதுக்கங்கள் இவற்றின் பலனே. ஆகையால் ஜீவனுடைய ஸுகதுக்கங்களுக்குக் கர்மமே காரணமென்பதில் விரோதமில்லை. நிக்ரஹ (தண்டனை) அனுக்ரஹங்களைச் (பரிவுடன் கூடிய ஆசி) செய்கிறவன் பரமபுருஷனேயாகையால், அவனே ஸுக, துக்கங்களுக்குக் காரணமென்று அறிஞர் நினைக்கிறார்கள். இதுவரையில் ஸம்ஸார ஸுகங்களைப் புருஷார்த்தமாகவும் (மனிதர்களால் அடையப்பட வேண்டியவையாகவும்), ஸம்ஸார துக்கங்களை அபுருஷார்த்தங்களாகவும் (மனிதர்களால் விலக்கப்படவேண்டியவையாகவும்), ஒப்புக்கொண்டு மொழிந்தேன். உண்மையை ஆராய்ந்தால், அது பொருளல்ல. ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் பரிணாம ரூபமான இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் சாபமாவதென்ன? அனுக்ரஹமாவதென்ன? அவற்றின் ஸ்வரூபத்தைத் தனித்தனியே விவரித்துச் செல்ல முடியாது. இரண்டும் துல்யமே (ஸமமே). “அனுக்ரஹம் (பரிவுடன் கூடிய ஆசி) ஸ்வர்க்கத்திற்குக் காரணம், நிக்ரஹம் (தண்டனை) நரகத்திற்குக் காரணம்” என்று அவற்றின் ஸ்வரூபத்தை விவரித்துச் சொல்லலாமேயென்னில், ஸ்வர்க்கமாவதென்? நரகமாவதென்? அவற்றையும் விவரித்துச் சொல்ல முடியாது. “ஸ்வர்க்கமாவது, ஸுகம்; நரகமாவது, துக்கம்” என்று விவரிக்கலாமேயென்னில், ஸுகமாவதென்? துக்கமாவதென்? அவற்றை நிரூபிக்க முடியாது. ஸம்ஸாரத்தில் விளையும் ஸுக, துக்கங்களிரண்டும் துல்யமாகவேயிருக்கும். ஸ்வர்க்கம் ஸுக ரூபமாயிருக்குமாயின், அது துக்கத்தை உட்கொண்டிருக்கலாகாது; நரகம் துக்க ரூபமாயின், அது ஸுகத்தை உட்கொண்டிருக்கலாகாது. ஸ்வர்க்கமும், கடைசியில் துக்கத்திற்கிடமாகின்றது. நரகமும், கடைசியில் சிறிது சுகத்திற்கிடமாகின்றது. இங்கனம் ஸுக, துக்கங்களிரண்டும் துக்க, ஸுகங்களை உட்கொண்டிருக்கின்றனவாகையால், அவற்றின் ஸ்வரூபத்தை நிர்ணயிக்க முடியாது. சாப நரக துக்கங்கள் எங்கனம் புருஷார்த்தமாக மாட்டாவோ, அங்கனமே அனுக்ரஹம் (பரிவுடன் கூடிய ஆசி), ஸ்வர்க்கம், ஸுகம் இவைகள் புருஷார்த்தமாக மாட்டாது. 

தோஷங்கள் தீண்டப்பெறாதவனும், ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன் தானொருவனே தன் மாயையால் ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி, புழு வரையிலுமுள்ள ஸமஸ்த பூதங்களையும் படைக்கின்றான். அவன் கர்மத்தினால் விளையும் சரீரமற்றவன். அவனே அப்பூதங்களின் கர்மங்களுக்குத் தகுந்தடி பந்தம் (ஸம்ஸாரமாகிய கட்டு), மோக்ஷம், ஸுகம், துக்கம் இவைகளைப் படைக்கின்றான். அவன் பக்ஷபாதத்தினால் (ஓரவஞ்சனையால்) ஒருவனுக்கு ஸுகத்தையும், ஒருவனுக்குத் துக்கத்தையும் விளைக்கிறதில்லை. வாஸ்தவத்தில் ஜீவாத்மாக்களில் ஒருவனுக்கு மற்றொருவன் இஷ்டனுமல்லன்; த்வேஷியுமல்லன் (எதிரியுமல்லன்); ஜ்ஞாதியுமல்லன் (பங்காளியுமல்லன்); பந்துவுமல்லன் (சுற்றமும் அல்லன்); பிறனுமல்லன்; தன்னுடையவனுமல்லன். அவ்வாத்மாக்கள், தேவ, மனுஷ்யாதி சரீரங்கள் எல்லாவற்றிலும் ஜ்ஞானாநந்த ஸ்வரூபர்களாகி ஒருவாறாகவே இருக்கின்றனர். ஒருவரோடொருவர்க்குத் தாரதம்யம் (ஏற்றத்தாழ்வு) உண்டாகிலன்றோ இஷ்டன் (வேண்டியவன்), அனிஷ்டன் (வேண்டாதவன்) என்னும் பிரிவு நேரிடும். அந்தப் பிரிவு, அவர்களுக்கு ஸ்வரூபத்தைப் பற்றினதன்று தேஹங்களால் பலவாறாகத் தோற்றினும், அப்பேதங்களெல்லாம் (வேறுபாடுகளெல்லாம்) கேவல தேஹங்களைப் பற்றினவைகளேயன்றி ஆத்மாக்களைச் சேர்ந்தவையன்று. ஜ்ஞானாநந்த ஸ்வருபர்களாகையால் அவர்களுக்குச் சப்தாதி விஷயங்களால் விளையும் ஸுகத்தில் விருப்பம் கிடையாது. ஆகையால் அந்த ஸுகத்தைப் பெறுதற்குத் தடை செய்பவரிடத்தில் கோபம் உண்டாவதற்கு ப்ரஸக்தியே (வாய்ப்பே) இல்லை. ஆயினும், அந்த ஜீவாத்மாக்களுக்கு, அனாதி (ஆரம்பமே இல்லாத அதாவது தொன்றுதொட்டு வருகிற) வாஸனையால் (முன் பிறவிகளில் செய்த வினைகளின் ஆழ்ந்த மனப்பதிவுகளால்) மேன்மேல் விளையும் கர்மமே ஸுகம், துக்கம், நன்மை, தீமை சரீர ஸம்பந்த ரூபமான ஜனனம் (பிறப்பு), மரணம் இவை அடங்கின ஸம்ஸாரத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாகின்றது. ப்ரளயகாலத்தில், ஜீவாத்மாக்கள் ஈச்வரனிடத்தில் மறையும் பொழுதும், அவர்களுக்குக் கர்ம வாஸனை (முன் பிறவிகளில் செய்த வினைகளின் ஆழ்ந்த மனப்பதிவுகள்) மாத்ரம் மாறுகிறதில்லை. மீளவும், கல்ப ஆரம்பத்தில் மனஇரக்கமுடைய ஸர்வேச்வரன், “இவர்கள் நம்மை ஆராதித்துக் கரையேறட்டும்” என்று அவ்வாத்மாக்களுக்குக் கரண (இந்த்ரியங்களையும்) களேபரங்களையும் (சரீரங்களையும்) நன்மை, தீமைகளை அறிவிக்கும்படியான சாஸ்த்ரத்தையும் கொடுக்கிறான். அவர்கள், பூர்வ வாஸனையால் சப்தாதி விஷயங்களையே விரும்பி அவற்றைப் பெறுதற்குரிய கர்மங்களைச் செய்து அவற்றின் பலன்களை அனுபவித்துக்கொண்டு மேன்மேலும் ஸம்ஸாரத்தையே வளர்த்திக்கொள்கிறார்கள். இப்படியிருக்கிகையில், திடீரென்று யாத்ருச்சிகம் (எதிர்பாராமல் நிகழ்வது), ப்ராஸங்கிகம் (ஒரு முக்கிய செயலைச் செய்யும்போது அதனுடன் தொடர்பு உடையதாய் ஏற்படுவது) முதலிய புண்யகர்மத்தினால் மோக்ஷமார்க்கத்தில் இறங்குவார்கள். மடந்தையர்மணீ! உண்மை இதுவாகையால், சாபத்தை மாற்றிக்கொள்ளும் பொருட்டு நான் உன்னை வேண்டவில்லை. நான் சொன்னது தவறென்று நினைக்கின்றாயே, அதைப் பொறுக்க வேண்டும்  என்று உன்னை நான் வேண்டிக்கொள்கிறேன்” என்றான். 

ஓ பரீக்ஷித்து மன்னவனே! இங்கனம் அச்சித்ரகேது, பார்வதியை அருள்புரிவித்துக் கொண்டு, பார்வதி பரமேச்வரன் இருவரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில், விமானத்தின் மேல் ஏறி நடந்தான். பிறகு மஹானுபாவனாகிய ருத்ரன் தேவர்ஷிகளும், தைத்யர்களும், ஸித்தர்களும் தன் பரிவாரங்களும் கேட்டுக் கொண்டிருக்கையில் பார்வதியைப் பார்த்து இங்கனம் மொழிந்தான்.

“அழகிய நிதம்பங்கள் (முதுகுக்கும் இடுப்புக்கும் கிழ் உள்ள உடலின் பகுதி) உடையவளே! பார்வதி! பரமபுருஷன் ஸ்ரீஹரி ஆச்சர்யமான செயலுடையவன். அவனுடைய பக்தர்கள், சப்தாதி விஷய ஸுகங்களை விரும்பமாட்டார்கள். தமக்கு அபகாரம் (கெடுதி, தீங்கு) செய்பவர்களுக்கும், உபகாரத்தையே (தொண்டு, உதவி செய்தலையே) தேடுந்தன்மையர்; ஸுகம், துக்கம் இவையிரண்டையும் துல்யமாகவே (ஸமமாகவே) நினைப்பார்கள். அத்தகைய ஹரிபக்தர்களின் மஹிமையை நீ நேரில் கண்டு  அனுபவித்தாயல்லவா? ஸ்ரீமந்நாராயணனையே பரதத்வமாக நம்பியிருக்கும் நல்லோர்கள் அனைவரும் இங்கனமே எதற்கும் பயப்படமாட்டார்கள். அவர்கள் ஸ்வர்க்கம், நரகம், மோக்ஷம் இவையெல்லாவற்றையும் துல்யமாகவே (ஸமமாகவே) நினைப்பார்கள். ஜீவாத்மாக்களுக்கு, ஈச்வரனுடைய லீலா ரூபமான ஜகத் ஸ்ருஷ்டியாலேற்பட்ட தேஹஸம்பந்தமே ஸுக - துக்கங்களுக்கும், ஜன்ம - மரணங்களுக்கும் சாப - அனுக்ரஹங்களுக்கும் காரணம். ஆத்மாக்கள் அனைவரும் ஜ்ஞானத்தை வடிவாகவுடையவர்கள். அவர்களுக்குத் தேவமனுஷ்யாதி பேதம் (வேறுபாடு) கிடையாது. அஜ்ஞானத்தினால் அவர்களிடத்தில் அந்தப் பேதத்தை (வேறுபாட்டை) ஏறிடுகிறார்களேயன்றி, அது உண்மையன்று. அங்கனமே  “ஸுகம் (இன்பம்), ஜன்மம் (பிறப்பு), அனுக்ரஹம் (பரிவுடன் கூடிய ஆசி) இவை குணங்கள். துக்கம் (துன்பம்), மரணம் (இறப்பு), சாபம் (தண்டனை) இவை தோஷங்கள்” என்னும் பிரிவும் ஸ்வப்னத்திலுள்ள (கனவிலுள்ள) பேதம் (வேறுபாடு) போல் அஜ்ஞானத்தினால் கற்பிக்கப்பட்டதே. சாஸ்த்ராப்யாஸத்தினால் (வேதம் முதலிய சாஸ்த்ரங்களைக் கற்று அறிந்ததால்) ப்ரக்ருதி (அசேதனம்), புருஷ (ஜீவர்கள்), ஈச்வரன் இவர்களின் உண்மையை அறிந்து, சப்தாதி விஷயங்களில் விருப்பமின்றி, மஹானந்த ஸ்வரூபனான பகவானிடத்தில் பக்திசெய்யும் தன்மையுடைய மனிதர்களுக்கு எவ்விதத்திலும் பேதபுத்தி (வேறு வேறாகப் பார்க்கும் புத்தி) உண்டாகாது. இனி அவர்களுக்கு அவற்றைப் பற்றின பயம் எப்படி உண்டாகும்? ருத்ரனென்று ப்ரஸித்தி பெற்ற நான், ப்ரஹ்மதேவன் ஸனத்குமாரர், நாரதர், ப்ரஹ்மாவின் புத்ரர்களான மரீசி முதலிய முனிவர்கள், இந்திரன் முதலிய தேவ ச்ரேஷ்டர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய செயலையாவது, ஸ்வரூபத்தையாவது அறியவல்லரல்லோம். நாங்களெல்லோரும் அவனால் கொடுக்கப்பட்ட ஜ்ஞான சக்திகளையுடையவர்கள். அந்த ஜ்ஞான சக்திகளும் ஸூர்யனுக்கு  எதிரில் மின்மினிப் பூச்சி போலவே. அவ்வளவைக் கொண்டே நாங்கள், ஸ்வதந்த்ர (தன்னிச்சையாக செயல்படக் கூடிய) ப்ரபுக்களென்று (தலைவர்கள், எஜமானர்கள் என்று) அபிமானித்துக்கொண்டு (நினைத்துக்கொண்டு) இருக்கிறோம். ஆகையால், நீ என்னை ஈச்வரனாக ப்ரமிக்க வேண்டாம். அந்த ஸர்வேச்வரனுக்கு, மிகுந்த அன்பனாவது த்வேஷியாவது (எதிரியாவது) எவனுமே கிடையாது. அவன் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாகையால், அனைவர்க்கும் அன்பனே. அவன் தன்னைப் பற்றினவர்களுடைய வருத்தங்களைப்போக்கி, இஷ்டங்களைக் (விருப்பங்களைக்) கொடுக்குந்தன்மையன். எவர்கள், தமக்கும் - பரமாத்மாவாகிய அந்தப் பகவானுக்குமுள்ள சரீராத்ம பாவ ஸம்பந்தத்தை (பரமாத்மா, அசேதனம் மற்றும் ஜீவர்களுக்கு ஆத்மா; அசேதனம் மற்றும் ஜீவர்கள் பரமாத்மாவிற்கு சரீரம் என்கிற பிரிக்கமுடியாத உறவை) அறிந்து, அவனைத் தொடர்கின்றார்களோ, அவர்களிடத்தில் அவனுக்கு அனுக்ரஹம் உண்டு. மற்றவர்களிடத்தில் அது கிடையாது. இவ்வளவு மாத்ரத்தினால் அவனுக்குப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) உண்டென்று சொல்லலாகாது. இந்தச் சித்ரகேது மன்னவன் நல்ல விவேகி; எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையன்; ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களற்றவன்; அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய பக்தன்; அவனுக்கு மிகுந்த அன்பன். இவனைப்போலவே நானும் அவனிடத்தில் பக்தியுடையவன்; அவனுக்கு நண்பன். இவ்வளவேயன்றி நான் ப்ரபுவல்லேன். ஆகையால், ப்ரக்ருதி (அசேதனம்), புருஷ (ஜீவர்கள்), ஈச்வரன் இவர்களின் உண்மையை அறிந்தவர்களும் ஸமதர்சிகளும் (அனைத்தையும் ஸமமாக பார்ப்பவர்களும்), சாந்தர்களுமான அந்த மஹாபுருஷனுடைய பக்தர்களிடத்தில் நம்முடைய மேன்மையைக் காண்பிக்கலாகாது. நாம், அவர்கள் விஷயத்தில் கர்வப்படுவதும் யுக்தமன்று (ஸரியன்று)” என்றான். 

பார்வதியும் இங்கனம் மொழிந்த சிவபெருமானுடைய வார்த்தையைக் கேட்டு, கர்வமின்றி மதி (புத்தி) தெளியப்பெற்றாள். பகவத் பக்தனாகிய சித்ரகேது, பார்வதிக்கு ப்ரதி சாபம் கொடுக்க வல்லவனாயினும் அவளுடைய சாபத்தைச் சிரத்தினால் அங்கீகரித்தான். அபகாரம் (கெடுதி, தீங்கு) செய்பவர்களுக்கும் உபகாரம் (தொண்டு, உதவி) செய்கையாகிற இவ்வளவே ஸாதுக்களின் லக்ஷணம். இச்சித்ரகேது மன்னவனே, த்வஷ்டாவின் ஸங்கல்பத்தினால் தக்ஷிணாக்னியில் (ஹோமத்தில் தென்புறத்தில் உள்ள அக்னியில்) பிறந்தான். அவனே அஸுரர்களின் இயற்கையைப் பெற்று, வ்ருத்ரனென்று பேர் பூண்டு ப்ரஸித்தனாயிருந்தான். அவன் முன்ஜன்மத்தில் பகவத் பக்தனாயிருந்தானாகையால், இந்த ஜன்மத்தில் அவன் ஜ்ஞானமும், விஜ்ஞானமும் அமைந்திருந்தான். அஸுர ஜாதியான வ்ருத்ராஸுரனுக்கு, பகவத்பக்தி உண்டானதின் காரணத்தைப்பற்றி வினவினாயல்லவா? அதன் காரணத்தையெல்லாம் இங்கனம் உனக்கு விரிவாகக் கூறினேன். மஹானுபாவனாகிய சித்ரகேது பற்றின இந்த இதிஹாஸம் புண்யமானது. இதில் விஷ்ணு பக்தர்களின் மஹிமை அமைந்திருக்கின்றது. இதைக் கேட்பவன் ஸம்ஸாரபந்தத்தினின்று விடுபடுவான். விடியற்காலத்தில் எழுந்து, ஒருவரோடும் பேசாமல், ச்ரத்தையுடன் பகவானை நினைத்துக்கொண்டு இந்த இதிஹாஸத்தைப் படிப்பானாயின், மேலான கதியைப் பெறுவான். 

பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை