திங்கள், 6 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 152

ஆறாவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்

(திதியிடத்தினின்று மருத்துக்கள் (ஒரு வகை தேவர்கள்) உண்டான விதம் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸவிதாவின் பத்னியாகிய ப்ருச்னி என்பவள், ஸாவித்ரி, மூன்று வ்யாஹ்ருதிகள் (பூ: புவ: ஸ்வ:), அக்னிஹோத்ரம், பசு, யாகம், ஸோமயாகம், சாதுர்மாஸ்யம், பஞ்ச மஹாயஜ்ஞங்கள் ஆகிய இவற்றின் அபிமானி தேவதைகளைப் பெற்றாள். பகனுடைய பார்யையாகிய ஸித்தியென்பவள், அங்கன், மஹிமன், விபு, ப்ரபு என்னும் நான்கு பிள்ளைகளையும், ஸாச்சிஸ்ஸென்னும் அழகிய ஓர் புதல்வியையும் பெற்றாள். தாதாவின் பத்னிகள் நால்வரில் குஹூ என்பவள் ஸாயனையும், ஸினீஸாலி என்பவள் தர்சனையும், ராகை என்பவள் ப்ராதனையும், அனுமதி என்பவள் பூர்ணமாஸனையும் பெற்றார்கள். விதாதா என்பவன், க்ரியையென்னும் தன் பத்னியிடத்தில், புரீஷ்யர்கள் என்னும் அக்னிகளைப் பெற்றான். வருணனுடைய பத்னி கர்ஷணியென்பவள். முதலில் ப்ரஹ்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்த ப்ருகு, இவளிடத்தில் மீளவும் பிறந்தார். மஹாயோகியான வால்மீகியும், வருணனுக்கு வல்மீகத்தில் (எறும்பு புற்றிலில்) பிறந்தவர். மித்ரன், ரேவதி என்னும் தன் பார்யையிடத்தில், உத்ஸர்க்கன், அரிஷ்டன், பிப்பலன் என்று மூன்று பிள்ளைகளைப் பெற்றான். ஒருகால், இந்த மித்ரன், வருணன் இவர்களிருவரும் ஊர்வசி என்னும் அப்ஸரஸ் ஸ்த்ரீயின் அருகாமையில் திடீரென்று நழுவின ரேதஸ்ஸை (ஆண் விந்துவை) ஒரு குடத்தில் விட்டார்கள். அக்குடத்தில் அகஸ்த்யர், வஸிஷ்டர் இவ்விருவரும் பிறந்தார்கள். ஆகையால், இந்த அகஸ்த்ய, வஸிஷ்டர்களிருவரும் மித்ரா, வருணர்களின் புதல்வர்கள். அப்பனே! ஸமர்த்தனாகிய தேவேந்திரன், புலோமாவின் புத்ரியாகிய சசீதேவியிடத்தில், ஜயந்தன், ருஷபன், மீட்வான் என்று மூன்று பிள்ளைகளைப் பெற்றானென்று எங்களுக்குக் கேள்வி. தன் ஸங்கல்பத்தினால் வாமன ரூபியாய் அவதரித்து மூன்றடிகளால் உலகங்களையெல்லாம் அளந்த பகவானுக்குத் தன் பத்னியாகிய கீர்த்தியென்பவளிடத்தில் ப்ருஹச்ச்லோகனென்னும் பிள்ளை பிறந்தான். அவனுக்கு, ஸௌபகன் முதலியவர்கள் பிறந்தார்கள். கச்யபருக்கு அதிதியிடத்தில் வாமன ரூபியாய்ப் பிறந்த பகவானுடைய செயல்களையும், குணங்களையும், வீர்யங்களையும், அதிதியிடத்தில் அவன் பிறந்த விதத்தையும் மேல் சொல்லப்போகிறேன். 

இப்பொழுது, கச்யபருக்கு திதியிடம் பிறந்த பிள்ளைகளைப் பற்றி உனக்குச் சொல்லுகிறேன் கேட்பாயாக. இந்தத் திதியின் வம்சத்தில் மஹாபாகவதனும் குணங்கள் நிறைந்தவனுமாகிய ப்ரஹ்லாதனும், பலி சக்ரவர்த்தியும் பிறந்தார்கள். திதிக்கு இரண்டே புதல்வர்கள். அவர்களில் ஒருவன் ஹிரண்யகசிபுவென்பவன். மற்றொருவன் ஹிரண்யாக்ஷன். அவ்விருவரும் தைத்யர்களாலும், தானவர்களாலும் பூஜிக்கப்பட்டிருந்தார்கள். ஹிரண்யகசிபுவின் பார்யை தனுவம்சத்தில் பிறந்த ஜம்பனுடைய புதல்வி, கயாது என்பவள். அவள் ப்ரஹ்லாதன், அனுஹ்லாதன், ஸம்ஹ்லாதன், ஹ்லாதன் என்று நான்கு பிள்ளைகளையும், ஸிம்ஹிகையென்ற ஓர் பெண்ணையும் பெற்றாள். அந்த ஸிம்ஹிகை விப்ரசித்தியை மணம் புரிந்து அவனிடத்தினின்று ராஹுவைப் பிள்ளையாகப் பெற்றாள். அந்த ராஹு அம்ருதத்தைப் பருகும் பொழுது, பகவான் சக்ராயுதத்தினால் அவன் தலையை அறுத்தான். ஸம்ஹ்லாதனுடைய பார்யை மதியென்பவள். அவள் பஞ்சஜனனென்னும் பிள்ளையைப் பெற்றாள். ஹலாதனுடைய பார்யை தமனியென்பவள். அவள் வாதாபி, இல்வலன் என்று இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். அவர்களில், இல்வலன் அகஸ்த்யரை விருந்துண்ண அழைத்து மேஷத்தின் உருவங்கொண்ட வாதாபியைச் சமைத்தான். அனுஹ்லாதனுடைய பார்யை ஸூர்ம்யை என்பவள். அவள் பாஸ்கரன், மஹிஷன் என்று இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். ப்ரஹ்லாதனுடைய பார்யை துதியென்பவள். அவனுக்கு அவளிடத்தில் விரோசனன் பிறந்தான். அவனுக்குப் பலி சக்ரவர்த்தி பிறந்தான். அவன், சமனையென்னும் தன் பார்யையிடத்தில், பாணன் முதலிய நூறு பிள்ளைகளைப் பெற்றான். அந்த ப்ரஹ்லாதன், பலி இவர்களின் ப்ரபாவம் மிகவும் புகழத் தகுந்தது. அதை மேல் சொல்லப் போகிறேன். 

பாணன் ருத்ரனை ஆராதித்து அவனுடைய பரிவாரங்களில் தலைமையைப் பெற்றான். மஹானுபாவனாகிய அந்த ருத்ரன், இப்பொழுதும் அவன் பட்டணத்தைப் பாதுகாத்துக்கொண்டு அவன் பக்கத்திலேயே இருக்கின்றான். நாற்பத்தொன்பது மருத்கணங்களும் திதியின் பிள்ளைகளே. அவர்களுக்கு ஸந்ததி கிடையாது. அவர்களெல்லோரும் இந்த்ரனால் தேவத்தன்மையைப் பெற்றார்கள். ஆகையால், மருத்துக்கள் (ஒரு வகை தேவர்கள்) திதியின் பிள்ளையாயினும், அவர்களுக்கும் தேவதைகளுக்கும் விரோதம் கிடையாது.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- அஜ்ஞானமாகிற இருளைப்போக்கும் திறமை அமைந்தவரே! மருத்துக்கள் (ஒரு வகை தேவர்கள்) இந்த்ரனால் தேவத்தன்மையைப் பெற்றார்களென்று மொழிந்தீர். அவர்கள் ஜன்ம ஸித்தமான அஸூரத் தன்மையைத் துறந்து எங்கனம் தேவத்தன்மையைப் பெற்றார்கள்? அவர்கள் இந்த்ரனுக்கு அப்படிப்பட்ட உபகாரம் (உதவி, தொண்டு) என்ன செய்தார்கள்? இந்த விஷயத்தைக் கேட்க வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு மட்டுமே அன்று. இந்த ரிஷிகளுங்கூட இதை அறியவேண்டும் என்னும் ச்ரத்தையுடன் இருக்கிறார்கள். மஹானுபாவரே! ஆகையால் இதை எங்களுக்கு மொழிய வேண்டும். 

ஸுதர் சொல்லுகிறார்:- ஸௌனகரே! ஸ்ரீசுகர் சொல் மிதமாகவும், பொருள் கனமாகவும் மொழிந்த விஷ்ணுராதனுடைய வசனத்தை ஆவலுடன் கேட்டு, மனப்பூர்த்தியாக அம்மன்னவனைப் புகழ்ந்து சொல்லத் தொடங்கினார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! இந்த்ரனைத் தன் பக்ஷத்தில் கொண்டு பாதுகாக்கின்ற ஸ்ரீமஹாவிஷ்ணுவால், ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகிய தன் புதல்வர்களிருவரும் இறக்கப்பெற்ற திதி சோகத்தினால் கோபம் கிளர்ந்து எழப் பெற்றுப் பரிதபித்துச் சிந்தித்தாள். “இந்த்ரன் விஷய ஸூகங்களில் மனம் சென்று, கொடுந்தன்மை பூண்டு, மன இரக்கமற்று, தன் ப்ராதாக்களான என் புதல்வர்களை விஷ்ணுவின் மூலமாய்க் கொல்வித்தான். பாபிஷ்டனாகிய (பாபியான) அவ்விந்த்ரனைக் கொல்வித்து நான் எப்பொழுது ஸுகமாகத் தூங்குவேன்? ஒருவன் தன்னைத் தான் ப்ரபுவாக அபிமானித்திருப்பினும் (நினைத்திருப்பினும்), அவன் மரணம் அடைந்த பின்பு அவனது சரீரத்தைக் கொளுத்தாத பக்ஷத்தில், புழுவென்றும், நாய் முதலியவை பக்ஷிக்குமாயின் (உண்ணுமாயின்) விஷ்டை (மலம்) என்றும், கொளுத்துவார்களாயின் பஸ்மமென்றும், பெயர்கள் விளைகின்றன. அத்தகைய தேஹத்தின் ஸுகத்திற்காக ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்பவன், தன் புருஷார்த்தத்தை அறிவானோ? அறியமாட்டான். அறிவானாயின், அப்படி த்ரோஹம் (தீங்கு) செய்யமாட்டான். அந்த த்ரோஹத்தினால் நரகமேயன்றோ பலிக்கும்? இந்தச் சரீரத்தையே ஆத்மாவாக அபிமானித்துச் (நினைத்து) செருக்குற்றிருக்கிற இந்த்ரனது கொழுப்பை அடக்கும்படியான புதல்வன் எனக்கு எந்த உபாயத்தினால் உண்டாவானோ, அந்த உபாயத்தை நான் அனுஷ்டிக்க வேண்டும்” என்று சிந்தித்தாள். 

மன்னவனே! அந்தத் திதி, இங்கனம் எண்ணங்கொண்டு சுச்ரூஷை (பணிவிடை), ஸ்னேஹம் (அன்பு), இந்த்ரிய நிக்ரஹம் (புலன் அடக்கம்) இவற்றால் தன் பர்த்தாவான (கணவரான) கச்யபர்க்கு ஸர்வகாலமும் ப்ரியத்தை (விருப்பத்தைச்) ஆசரித்து (செய்து) வந்தாள். மனக்கருத்தை அறியும் திறமையுடைய திதி மிகுந்த பக்தியினாலும், இனிய உரைகளாலும், புன்னகையோடு கூடின கடைக்கண்ணோக்கத்தினாலும், கச்யபருடைய மனத்தை வசப்படுத்திக்கொண்டாள். அக்கச்யப ப்ரஜாபதி அறிஞராயினும், புருஷர்களை வஞ்சிக்குந் திறமையமைந்த பெண்மணியாகிய திதியால் மதி மயங்கும்படி வஞ்சிக்கப்பட்டு, மெய்ம்மறந்து, அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக்கொண்டார். மடந்தையர் (பெண்கள்) தாமே மேல் விழுந்து விரும்பும் பொழுது, புருஷன் உட்படுவது ஆச்சர்யமன்றல்லவா? அந்தக் கச்யப ப்ரஜாபதி, முதலில் ஆண், பெண்கள் ஒருவரோடொருவர் ஒரே வஸ்துபோல் கலந்திருப்பதை ஆலோசித்துத் தானும் தன் பத்னியாகிய அத்திதியைத் தன் சரீரத்தில் பாதியாகப் பண்ணிக் கொண்டார். ஸ்த்ரீகளால் புருஷர்களின் புத்தி பறிக்கப்படுகின்றதல்லவா?

அப்பனே! கச்யபர், தன் பத்னியாகிய திதியால், இங்கனம் ஸம்போகங் (சேர்க்கை) கொடுத்து, உபசாரம் செய்யப்பெற்று, மிகுந்த ஸந்தோஷம் அடைந்து, அவளுடைய புணர்ச்சியின் (சேர்க்கையின்) திறமையைக் கொண்டாடிச் சிரித்து அவளை நோக்கி “அழகிய துடைகள் உடையவளே! நிந்தைக்கு (பழிக்கு) இடமில்லாதவளே? உனக்கு இஷ்டமான வரத்தை வேண்டிக் கொள்வாயாக. கணவன் நன்கு ஸந்தோஷமுறுவானாயின், பெண்டிர்களுக்கு எந்த விருப்பந்தான் கைகூடாது போகும்? எல்லாம் கைகூடுமல்லவா? ஸ்த்ரீகளுக்குப் பதியன்றோ மேலான தெய்வம். ஸமஸ்த ப்ராணிகளின் மனத்திற்கு ஸாக்ஷியும், ஸர்வந்தராத்மாவும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய ஸர்வேச்வரன், நாமங்களாலும், உருவங்களாலும் வெவ்வேறாயிருக்கிற அக்னி, இந்த்ரன் முதலிய தேவதைகளாகிற தன் சரீரங்கள் மூலமாய் ஆராதிக்கப்படுவது போல், அந்த ஸர்வேச்வரன் பதியின் உருவங்கொண்டு, ஸ்த்ரீகளால் ஆராதிக்கப்படுகிறான். ஸ்த்ரீகளுக்கு அவரவரது கணவர்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் திறமையற்றவர்களேயாயினும், அவர்களைச் சரீரமாகக் கொண்ட ஸர்வேச்வரன் அவர்கள் செய்யும் பதி சுச்ருஷைகளைத் (கணவனுக்குச் செய்யும் பணிவிடைகளைத்) தானே பெற்று, ஸந்தோஷம் அடைந்து, அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கிறான். அழகிய இடையையுடையவளே! பதிவ்ரதைகளான பெண்கள், நன்மையை விரும்பி மாறாத கருத்துடன் ஸர்வேச்வர ஸ்வரூபியான கணவனையே ஆராதிக்கிறார்கள். மங்கள ஸ்வபாவமுடையவளே! நீ என்னை இத்தகைய கருத்தினால் பக்தியுடன் நன்கு ஆராதித்தாய். ஆகையால், உன்னுடைய விருப்பத்தை நான் ஸித்தமாய் நிறைவேற்றிக்கொடுக்கிறேன். உன்னைப் போன்ற பதிவ்ரதைகளைத் தவிர மற்றவர்களுக்கு இங்கனம் விருப்பங்கள் நிறைவேறமாட்டாது. உனக்கு என்ன விருப்பமோ அதைச் சொல்வாயாக” என்றார். 

திதியும் கச்யபரை நோக்கி “ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! எனக்கு வரங்கொடுக்க விருப்பமிருந்தால், தேவதைகளால் பிள்ளைகள் அடியோடு மாளப்பெற்ற (இறக்கப்பெற்ற) நான் இந்திரனை வதிக்கும்படியான பிள்ளையை வேண்டுகிறேன். இந்த்ரனன்றோ பகவானைக் கொண்டு என் புதல்வர்களைக் கொன்றான்” என்றாள். அவ்வந்தணர் அவளது வசனத்தைக் கேட்டு மிகவும் வருந்தி  “இப்போது எனக்குப் பெரிய அதர்மம் நேர்ந்தது. ஆ! என்ன வருத்தம்! ஆ! நான் இந்த அதர்மத்தினால் நரகத்தில் விழுவேன். இது நிச்சயம். நான் இந்த்ரிய ஸுகங்களில் மனம் தாழ்ந்து, மடந்தையாகிற (பெண்ணாகிற) பகவானுடைய மாயையால் மனம் பறியுண்டு, மனக்களிப்பற்று வருந்துகிறேன். தனக்கு ஏற்பட்ட இயற்கையை அனுஸரித்து நடக்கிற மடந்தைக்கு (பெண்ணிற்கு) எது தான் தோஷம்? எதுவும் தோஷமன்று. தன் ப்ரயோஜனத்தை அறியாத என்னையே நிந்திக்க வேண்டும். ஏனென்றால், நான் இந்த்ரியங்களைப் பாராட்டி, அவற்றின் வழியே நடந்தேனல்லவா? ஆ! ஸ்த்ரீகளின் முகம் சரத்காலத்து சந்தரனோடொத்தது. பேச்சும், செவிகளுக்கு அம்ருதம் போன்றது. மனமோவென்றால், தீட்டின கத்தி போன்றது. ஆகையால், அவர்களுடைய நடத்தையை எவன்தான் அறியவல்லவன்? ஸ்த்ரீகளுக்கு மனப்பூர்த்தியாக ஒருவனும் அன்பனல்லன். அவர்கள், தமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதில் மாத்ரமே மனவூக்கமுடையவர்கள். தங்கள் விருப்பத்திற்காக கணவனையும், பிள்ளையையும், உடன் பிறந்தவனையும் கூடக் கொல்லுவார்கள்! அன்றிக் கொல்விப்பார்கள். கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை (சபதம், வாக்கு) செய்த வார்த்தை பொய்யாகக்கூடாது. ப்ரதிஜ்ஞை (சபதம்,வாக்கு) செய்தபடி கொடுப்பேனாயின், இந்த்ரனைக் கொல்ல வேண்டியதாயிருக்கிறது. இந்த்ரனையும் வதிக்கலாகாது. நான் இத்தகைய ஸங்கடத்தில் (கஷ்டத்தில்) அகப்பட்டுக் கொண்டேன். ஆனால், இவ்விஷயத்தில் இப்படிச் செய்ய வேண்டும்” என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டு, மஹானுபாவராகிய அக்காச்யபர் சிறிது கோபமுற்று, தன்னைத்தானே பழித்துக்கொண்டு அவளை நோக்கி “நல்லியற்கையுடையவளே! உனக்கு நான் ஒரு வ்ரதம் சொல்லுகிறேன். இதை நீ ஓராண்டு நிரம்பும் வரையில் தவறாமல் நன்கு நடத்துவாயாயின், உனக்கு இந்த்ரனை வதிக்கும்படியான புதல்வன் பிறப்பான். இல்லையாயின், அவன் தேவதைகளுக்குப் பந்துவாய் விடுவான்” என்றார். அதைக் கேட்ட திதியும் “அந்தணர் தலைவரே! அப்படியே நீர் சொல்லும் வ்ரதத்தை அனுஷ்டிக்கிறேன். அதற்காக நான் செய்யவேண்டிய கார்யங்களையும், வ்ரதத்திற்கு ப்ரதிகூலங்களையும், அனுகூலங்களையும் எனக்குச் சொல்ல வேண்டும்” என்றாள். கச்யபரும்  “ப்ராணி ஸமூஹங்களை ஹிம்ஸிக்கலாகாது. எப்படிப்பட்ட கஷ்டம் நேரினும் சபிக்கலாகாது. பொய் பேசலாகாது. நகங்களையும் மயிர்களையும் சோதிக்கலாகாது. அமங்கள (அசுப) வஸ்துக்களைத் தொடலாகாது. ஜலத்தில் இறங்கி ஸ்நானம் செய்யலாகாது. எவரிடத்திலும் கோபம் கூடாது. துஷ்டர்களோடு பேசலாகாது. அசுத்தமான வஸ்த்ரத்தை உடுத்தலாகாது. சூடிக்களைந்த பூமாலையை, மீளவும் சூடலாகாது. எச்சிலான அன்னம், பத்ரகாளிக்கு நிவேதனம் செய்த அன்னம், எறும்பு முதலியவை தீண்டின அன்னம், சூத்ரன் கொண்டு வந்த அன்னம், ரஜஸ்வலை (மாத விலக்கில் உள்ள பெண்) பார்த்த அன்னம் இவ்வைந்து அன்னங்களையும் புசிக்கலாகாது. அஞ்சலியால் (கையால்) ஜலம் பருகலாகாது. தீட்டுப்பட்டால் ஸ்நானம் செய்யாதிருக்கலாகாது. காலை, மாலைகளில் தலைமயிர்களை விரித்து அலங்காரம் செய்து கொள்ளாதிருக்கலாகாது. மௌன வ்ரதம் தவறலாகாது. போர்வையின்றி வெளியில் திரியலாகாது. கால்களை அலம்பாமலும், மனவூக்கமில்லாமலும் படுக்கலாகாது. காலீரத்துடனும் படுக்கலாகாது. வடக்கேயாவது, மேற்கேயாவது தலை வைத்துப் படுக்கலாகாது. பிறரோடு படுக்கலாகாது. காலை மாலைகளில் படுக்கலாகாது. சுத்தமான வஸ்த்ரம் தரித்து, எப்பொழுதும் பரிசுத்தையாகி, மஞ்சள் சந்தனம் முதலிய மங்கள த்ரவ்யங்களையெல்லாம் அணிந்து, காலையில் ஆஹாரம் புசிப்பதற்கு முன்னமே ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் ஸ்ரீமஹாவிஷ்ணுவையும் பூஜிக்க வேண்டும். பிள்ளையுடையவர்களும், ஸுமங்கலிகளுமான பெண்டிர்களைப் புஷ்பம், சந்தனம், உபஹாரம், ஆபரணம் முதலியவற்றால் பூஜிக்க வேண்டும். பர்த்தாவையும் (கணவனையும்) பூஜித்து அவனுடைய அருகில் இருக்க வேண்டும். தன் கணவனே தன் வயிற்றில் இருப்பதாக த்யானிக்க வேண்டும். இத்தகைய அங்கங்களோடு கூடின இந்த வ்ரதத்திற்குப் பும்ஸவனமென்று பெயர். ஒரு வர்ஷம் வரையில் இந்த வ்ரதத்தைச் சிறிதும் தவறாமல் அனுஷ்டிப்பாயாயின், உனக்கு இந்த்ரனை வதிக்கும்படியான புதல்வன் உண்டாவான்” என்றார். 

மன்னவனே! இங்கனம் சொல்லப்பட்ட திதி, அப்படியே ஆகட்டுமென்று அங்கீகரித்து, அந்த வ்ரதத்தில் மனம் செல்லப் பெற்று, கச்யபரிடத்தினின்றும் கர்ப்பத்தைத் தரித்து, வ்ரதத்தையும் ஊக்கத்துடன் அனுஷ்டித்து வந்தாள். பிறகு, தேவேந்திரன் அறிஞனாகையால், தன் தாய்க்கு உடன் பிறந்தவளாகிய திதியின் அபிப்பிராயத்தை அறிந்து கச்யபருடைய ஆச்ரமத்தில் வ்ரதத்தை அனுஷ்டித்துக்கொண்டிருக்கிற திதிக்கு, சுச்ரூஷை (பணிவிடை) செய்து வந்தான். அவன், தினந்தோறும் வனத்தினின்று புஷ்பங்களையும், பழங்களையும், வேர்களையும், கிழங்குகளையும், ஸமித்துக்களையும், தர்ப்பங்களையும், இலைகளையும், தளிர்களையும், அறுகம்புல் முளைகளையும், மண்ணையும், ஜலத்தையும் வேண்டிய காலங்களில் கொண்டு வந்து கொடுத்தான். இங்கனம், அந்தத் திதி வ்ரதத்தில் நிலை நின்றிருக்கையில், தேவேந்த்ரன் வ்ரதத்தில் ஏதேனும் கெடுதி நேருமா? இவள் கர்ப்பத்தை நான் ஸமயம் பார்த்து அழித்து விடுவேனா?” என்று ஸமயம் பார்த்துக்கொண்டே, வேடன், மான் தோலை மூடிக்கொண்டு, மான்களைத் தொடர்வது போல் கெட்ட எண்ணத்துடன் அவளுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்து வந்தான். மன்னவனே! அவ்விந்த்ரன், வ்ரதத்தின் சித்ரத்தை (தவற்றை) எதிர்பார்த்துக்கொண்டிருந்தும், அவனுக்கு அது புலப்படவில்லை. அதற்குமேல் அவன் எந்த விதத்தில் எனக்கு க்ஷேமம் உண்டாகும்?” என்று கொடும் சிந்தையுற்றிருந்தான். 

ஒரு சமயம், அந்தத் திதி வ்ரதத்தினால் இளைத்து, அசக்தியினால் ஆசமனம் செய்யாமலும், கால்களை அலம்பிக்கொள்ளாமலும், அசுசியாகி (சுத்தமற்றவளாகி), ஸாயங்கால ஸந்த்யையில் தெய்வாதீனமாய் மதிமயங்கி, படுத்து உறங்கினாள். யோக ஸாமர்த்யமுடைய தேவேந்தரன், அந்த ஸமயம் பார்த்து, உறக்கத்தினால் மதிமயங்கியிருக்கிற திதியின் வயிற்றில் யோகமாயையால் புகுந்தான். அவன் உள்ளே புகுந்து, பொன் நிறமுடைய அவள் கர்ப்பத்தை வஜ்ராயுதத்தினால் ஏழு பாகங்களாகப் பிளந்தான். அழுகின்ற அக்கர்ப்பத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அழ வேண்டாமென்று சொல்லிக்கொண்டே ஏழுபாகங்களாகப் பிளந்தான். அங்கனம் அறுப்புண்ட கர்ப்பத்தின் கண்டங்கள், அவயவங்களெல்லாம் பிரிந்திருக்கப்பெற்று, கைகளைக் குவித்துக்கொண்டு இந்திரனை நோக்கி “ஓ இந்த்ரனே! நாங்கள் உன் ப்ராதாக்கள்; மருத்துக்களென்னும் (ஒரு வகை தேவர்கள்) பேருடையவர்கள். எங்களை ஏன் வதிக்கப் பார்க்கிறாய்” என்றன. அதைக் கேட்ட இந்திரனும், நீங்கள் எனக்கு ப்ராதாக்களாயின், பயப்பட வேண்டாம்” என்றான். அவர்கள், இந்த்ரனுக்குப் பரிவாரங்களானார்கள். அவர்கள், அவ்விந்த்ரனையே ஸ்வாமியாக நினைத்து, அக்கருத்து மாறாதிருந்தார்கள்; மருத்கணங்கள் என்று பேர் பெற்றார்கள். 

மன்னவனே! அச்வத்தாமாவின் அஸ்த்ரத்தினால் கொளுத்தப்பட்ட உன்னைப்போல், திதியின் கர்ப்பம் வஜ்ராயுதத்தினால் பலவாறு சேதிக்கப்பட்டும் (வெட்டப்பட்டும்), பகவானுடைய அனுக்ரஹத்தினால் மரணம் அடையாதிருந்தது. ஒருவன், ஒருகால் ஆதிபுருஷனான பகவானை ஆராதிப்பானாயின், அவனோடு ஸாயுஜ்யத்தை (சேர்த்தியை) அடைகிறான். அவனை  ஒருவன் அடிக்கடி ஆராதித்துக்கொண்டு வருவானாயின், அவன் அவனுக்கு உதவும் விஷயத்தில் சொல்லவேண்டுமோ? திதியினால் சிறிது குறைவாக ஒரு வர்ஷம் வரையில் ஆராதிக்கப்பட்ட பகவான் அவ்விந்த்ரனோடு கூடவேயிருந்து, அவளுடைய கர்ப்பத்தைப் பாதுகாத்தான். அந்தக் கர்ப்பத்தின் கண்டங்கள் நாற்பத்தொன்பதும் மருத் கணங்களாயின. அம்மருத்துக்கள், மாதாவின் ஸம்பந்தத்தினால் நேர்ந்த அஸுரத்தன்மையாகிற தோஷத்தைத் துறந்து, தேவதைகளானார்கள். இந்திரன், அவர்களை யஜ்ஞ பாகத்திற்கு உரியவர்களாகச் செய்தான். பிறகு, திதி உறக்கந்தெளிந்தெழுந்து, இந்த்ரனோடு கூடியிருக்கும் அக்னி போல் ஜவலிக்கின்ற குமாரர்களைக் கண்டாள். வாஸ்தவத்தில் (உண்மையில்) நல்லியற்கையுடையவள் ஆகையால், நிந்தைக்கிடமில்லாத அந்தத் திதி, அவர்களைக் கண்டு மிகவும் ஸந்தோஷம் அடைந்தாள். பிறகு, அவள் தேவேந்த்ரனைப் பார்த்து “தேவேந்த்ர! அதிதியின் புதல்வர்களான உங்களுக்கு பயத்தை விளைக்கும்படியான ஒரு புதல்வனை விரும்பி நான் ஒருவராலும் அனுஷ்டிக்க முடியாத பும்ஸவனமென்கிற இந்த வ்ரதத்தை அனுஷ்டித்தேன். நான் ஒரே புதல்வன் வேண்டுமென்று ஸங்கல்பித்திருந்தேன். நாற்பத்தொன்பது பேர்கள் எப்படிப் பிறந்தார்கள்? இது உனக்குத் தெரியுமாயின், பிள்ளாய்! உண்மையைச் சொல்வாயாக. பொய் சொல்லாதே” என்றாள். இந்திரனும் அதைக் கேட்டு, அம்மா! நான் உன் அபிப்ராயத்தை நிச்சயித்துக் கொண்டே, உன்னருகில் வந்து சுச்ரூஷை (பணிவிடை) செய்து வந்தேன். நான், ஸமயம் நேரப்பெற்று, உன் கர்ப்பத்தைச் சேதித்தேன் (வெட்டினேன்). நான், சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதில் மனம் செல்லப் பெற்றவன்; தர்மத்தை அறிந்தவனல்லேன். ஆகையால், நான் உன் வயிற்றில் புகுந்து உன் கர்ப்பத்தை ஏழு துண்டங்களாகப் பிளந்தேன். அந்த ஏழு துண்டங்களும், ஏழு குமாரர்களானார்கள். மீளவும், நான் ஒவ்வொரு துண்டத்தையும் ஏழு துண்டங்களாகப் பிளந்தேன். அவையும் மரணம் அடையவில்லை. பிறகு, நான் இந்த ஆச்சர்யத்தைக் கண்டு இங்கனம் நிச்சயித்தேன். அது என்னவென்றால், ஒருவன் ஒரு ப்ரயோஜனத்தை உத்தேசித்துப் பரமபுருஷனை ஆராதிப்பானாயின், அந்த ஆராதனம் பரிபூர்ணமாக நிறைவேறாததற்கு முன் அவன் விரும்பின பலன் கூடாது. அது நிறைவேறாவிடின், விபரீத பலனையே கொடுக்கும். அம்மா! ஆகையால் ஒரு பலனையும் விரும்பாமல், பகவானை ஆராதிப்பவர் பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தையும் விரும்பமாட்டார்கள். அவர்களே மேலான புருஷார்த்தத்தை நிறைவேற்றிக் கொள்ள வல்லவர்கள். இங்கனமே பெரியோர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். பலனை விரும்பாமல் பகவானை ஆராதிக்கிறவனுடைய வ்ரதம் நிறைவேறாவிடினும், அவனுக்கு விபரீதம் உண்டாகாது. அவ்வளவில், அவனுக்குப் பகவான் மோக்ஷத்தையுங்கூடக் கொடுப்பான். தாயே! நான் இவ்வாறு நிச்சயித்தேன். 

விரும்பினவர்களுக்குப் பரம புருஷார்த்தமான தன்னையுங்கொடுக்க வல்லவனும், அந்தராத்மாவும், மிகுந்த அன்பனும், ஸர்வேச்வரனுமாகிய பகவானை ஆராதித்து, விவேகமுடையவனாயிருப்பானாயின், எந்தப் புருஷன்தான் நரகத்திலும் ஸம்பவிக்கக் கூடிய சப்தாதி விஷயங்களின் அனுபவத்தை விரும்புவான்? மேன்மையுடையவளே! மூர்க்கனாகிய (மூடனான) நான் செய்த இந்த அபராதத்தைப் பொறுப்பாயாக. இது துர்ஜனங்கள் (கெட்டவர்கள்) செய்யும் வியாபாரம். ஆயினும், நீ எனக்குத் தாயாகையால் உனக்குப் பொறுக்க முடியாத அபராதம் எதுவுமேயில்லை. உன் கர்ப்பம் மரணம் அடைந்தும் தெய்வாதீனமாய்ப் பிழைத்தது” என்றான். திதியும் இந்த்ரன் கபடமில்லாமல் உள்ளதை உள்ளபடியே மொழிந்தமைக்கு ஸந்தோஷமுற்றாள். இந்திரனும் அவளால் அனுமதி செய்யப்பெற்று, அவளை நமஸ்கரித்து, மருத்துக்களுடன் ஸ்வர்க்கம் போய்ச் சேர்ந்தான். நீ மருத்துக்களைப் பற்றி வினவினையே, அதையெல்லாம் உனக்கு விரிவாகச் சொன்னேன். இந்த மருத்துக்களின் ஜன்ம வ்ருத்தாந்தம் மங்களமானது.  உனக்கு இன்னும் ஏதேனும் கேட்க வேண்டுமாயின், அதையும் சொல்லுகிறேன். 

பதினெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக