செவ்வாய், 7 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 153

ஆறாவது ஸ்கந்தம் - பத்தொன்பதாவது அத்தியாயம்

(கச்யபர் திதிக்குச் சொன்ன வ்ரதத்தை விவரித்துக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! பும்ஸவனமென்னும் வ்ரதம் மொழிந்தீரே, அதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அந்த வ்ரதத்தினால், பகவான் ஸந்தோஷம் அடைவானல்லவா? ஆகையால், அதை எனக்கு விவரித்து மொழிய வேண்டும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! மார்கழி மாதத்தில், சுக்லபக்ஷத்தில், சுபமான திதியில், பர்த்தாவின் (கணவனின்) அனுமதியினால், மடந்தை (மனைவி) விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றவல்ல பும்ஸவனமென்கிற இந்த வ்ரதத்தை ஆரம்பிக்க வேண்டும். முதலில், மருத்துக்களின் உத்பத்தியைக் கேட்டு, ப்ராஹ்மணர்களால் அனுமதி கொடுக்கப் பெற்று, பற்களை வெளுக்கத் தேய்த்து, ஸ்நானம் செய்து, புதிய வெள்ளை வஸ்த்ரங்களை உடுத்து, காலைப் போஜனத்திற்கு முன்பு, ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் பகவானை ஆராதிக்க வேண்டும். “பகவானே! உனக்கு எல்லாம் நிறைந்திருக்கின்றது. உனக்கு, எதனாலும் ஆகவேண்டிய கார்யமில்லை. நீ அவாப்தஸமஸ்தகாமன் (எல்லா விருப்பங்களையும் அடைந்தவன்). ஆகையால், உனக்கு எதிலும் அபேக்ஷை (விருப்பம், தேவை) இல்லை. இத்தகைய உனக்கு நமஸ்காரம். நீ, நித்யவிபூதியென்கிற பரமபதத்திற்கும், லீலாவிபூதியென்கிற ப்ரஹ்மாண்ட ஸமூஹ ரூபமான ப்ரக்ருதி மண்டலத்திற்கும் ப்ரபு. எல்லா ஸித்திகளும் உனக்குக் கைமேல் இருக்கின்றன. உனக்கு நமஸ்காரம். ஜகதீசா! நீ தயை, ஐச்வர்யம், தேஜஸ்ஸூ, மஹிமை, ஓஜஸ்ஸூ – ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தி, தவம் முதலிய குணங்களெல்லாம் நிறைந்தவனாகையால் பகவானென்றும், ப்ரபுவென்றும் கூறப்படுகின்றாய்., என்று பகவானைத் துதித்து, ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பத்னியே! மிகவும் ஆச்சர்யமான பல சக்திகளுடையவளே! பரமபுருஷனுக்கு அஸாதாரணமான அடையாளமாயிருப்பவளே! அம்மஹாபுருஷனுடைய அன்பிற்கிடமானவளே! ஸம்பத்துக்களுக்கெல்லாம் இருப்பிடமே! உலகங்களுக்கெல்லாம் தாயே! உனக்கு நமஸ்காரம்” என்று ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் துதிக்க வேண்டும். 

பிறகு “ஓம், ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), புருஷஸூக்தத்தில் ஓதப்படும் மஹாபுருஷனும், மஹானுபாவனும், ஸ்ரீமஹாலக்ஷமிக்குப் பதியும், பரிவாரங்களால் சூழப்பெற்றவனுமாகிய உனக்கு அர்க்யம் முதலியவற்றை ஸமர்ப்பிக்கிறேன்” என்ற மந்திரத்தைச் சொல்லித் தினந்தோறும் ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு ஆவாஹனம், ஆஸனம், அர்க்யம், பாத்யம், ஆசமனம், ஸ்நானம், வஸ்த்ரம், யஜ்ஞோபவீதம், ஆபரணம், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், உபஹாரம் முதலிய உபசாரங்களை மனவூக்கத்துடன் ஸமர்ப்பிக்க வேண்டும். பகவானுக்கு நிவேதனம் செய்த ஹவிஸ்ஸினால் “ஓம் மஹாபுருஷனும் மஹாவிபூதியுடையவனுமாகிய பகவானுக்கு நமஸ்காரம்” என்ற இம்மந்திரத்தைச் சொல்லி அக்னியில் பன்னிரண்டு ஆஹுதிகள் ஹோமம் செய்ய வேண்டும். எல்லா ஸம்பத்துக்களையும் விரும்புவார்களாயின், விருப்பங்களையெல்லாம் கொடுக்க வல்லவர்களும், ஜகத்திற்கு மாதா, பிதாக்களுமாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மி, ஸ்ரீமஹாவிஷ்ணு இவ்விருவர்களையும் பக்தியுடன் தினந்தோறும் பூஜிக்க வேண்டும். பக்தியினால் வணக்கமுற்ற மனத்துடன், பூமியில் தண்டம் போல் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும். அம்மந்திரத்தைப் பத்துத் தடவைகள் ஜபிக்க வேண்டும். பிறகு, இந்த ஸ்தோத்ரத்தைப் படிக்க வேண்டும். 

“நீங்கள் ஜகத்திற்கெல்லாம் ப்ரபுக்கள். நீங்களே ஜகத்திற்கு மேலான காரணம். பரமபுருஷனே! ப்ரக்ருதி காரண தசையில் ஸூக்ஷ்மமாயிருக்கும். அதன் ஸ்வரூபத்தை ஒருவராலும் அறிய முடியாது. அது ஆச்சர்யமாயிருக்கும். அது உன்னுடைய சக்தியே. உன்னைச் சரணம் அடையாதவர்களால் அதைக் கடக்க முடியாது. அத்தகைய ப்ரக்ருதி இந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியே. புருஷோத்தமனே! அந்த ப்ரக்ருதிக்கு, நேரே ப்ரபு நீயொருவனே. யஜ்ஞங்களெல்லாம் நீ. அதன் அங்கங்களான இஜ்யை, க்ரியைகளெல்லாம் இந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி. ச்ருதிகளில் விதித்த செயல்களெல்லாம் இவள். அவற்றை அனுஷ்டிக்கும் புருஷர்களெல்லாரும் நீ. வஸ்துக்களிலுள்ள குணங்களின் தோற்றங்களெல்லாம் இவள். குணங்களையுடைய வஸ்துக்களெல்லாம் நீ. ஸமஸ்த ப்ராணிகளுடைய ஆத்மாக்களும் நீ. அந்த ப்ராணிகளுடைய புத்திகளெல்லாம் இவள். நாமரூபங்களெல்லாம் இவள். அவற்றிற்கு ஆதாரமும், அவற்றை நிர்வஹிக்கிறவனும் நீ. நீங்கள் வரங்களைக் கொடுக்க வல்லவர்களாயிருப்பதும் பரமபதத்தில் மேன்மையுடன் வீற்றிருப்பதும், உண்மையாயிருப்பதுபோல, உத்தம ஸ்லோகனே! என் ப்ரார்த்தனைகளும் உண்மையாகப் பலிக்க வேண்டும்” என்ற இந்த ஸ்தோத்ரத்தினால் ஸ்ரீமஹாலக்ஷ்மியையும், வரதனாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவையும் துதித்து, மிகுந்த பூஜா த்ரவ்யங்களையெல்லாம் அப்புறத்தில் போட்டு, பகவானுக்கு ஆசமனீயம் ஸமர்ப்பித்து, மீளவும் நன்றாக ஆராதிக்க வேண்டும். பிறகு, மீளவும் ஸ்தோத்ரத்தினால் பரமபுருஷனைத் துதித்துக் கொண்டே பக்தியால் வணக்கமுற்ற மனத்துடன் பகவானுக்கு நிவேதனம் செய்து, மிகுந்த ஹவிஸ்ஸை மோந்து, மீளவும் பகவானை ஆராதிக்க வேண்டும். பிறகு, மஹாபுருஷனான பகவானேயென்னும் புத்தியுடன் மிகுந்த பக்தியுடையவளாகி, ப்ரியமான பலவகை வஸ்துக்களால் பர்த்தாவை (கணவனை) ஆராதிக்க வேண்டும். பர்த்தாவும் (கணவனும்), பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) ப்ரேமமுடையவனாகி, அவளுடைய கார்யங்களுக்கு உதவி செய்ய வேண்டும். இங்கனம், ஒருவரோடொருவர் மன ஒற்றுமையுள்ள தம்பதிகளில் ஒருவர், ஒரு நல்ல கர்மத்தைச் செய்யினும், அது இருவர்க்கும் துல்யமாகவே பலனைக் கொடுக்கும். ஆகையால், பார்யை அசுத்தையாயிருக்கும் (தூய்மை அற்று இருக்கும்) பொழுதும், உரிமை தப்பியிருக்கும் (பூஜை செய்யத் தகுதி அற்று இருக்கும்) பொழுதும், பர்த்தாவே (கணவனே) அந்த வ்ரதத்தை மனவூக்கத்துடன் நடத்தவேண்டும். இந்த விஷ்ணுவ்ரதத்தைத் தொடங்கின பின்பு, இடையில் எந்தக் காரணத்தைப் பற்றியும் கைவிடலாகாது. இந்த வ்ரதத்தை அனுஷ்டிக்கும் புருஷன், ப்ராஹ்மணர்களையும், ஸுமங்கலிகளையும், பூமாலை, சந்தனம், உபஹாரம், ஆபரணம், முதலியவற்றால் தினந்தோறும் இங்கனம் பூஜிக்க வேண்டும். பிறகு, பகவானை யதாஸ்தானத்தில் ஸுகமாக எழுந்தருளப் பண்ணி, அவனுக்கு நிவேதனம் செய்த ஹவிஸ்ஸை ஆத்ம சுத்திக்காகவும், தன் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகவும், முதலில் புசிக்க (உண்ண) வேண்டும். இங்கனம் சொன்ன பூஜாவிதியின்படி பன்னிரண்டு மாதங்கள் அடங்கின ஒரு ஸம்வத்ஸரம் நடத்தி, கார்த்திகை மாதத்தின் கடைசி தினத்தினின்று, வ்ரதத்தை அனுஷ்டிக்கும் பதிவ்ரதை, வ்ரதத்தின் முடிவுக்கு அங்கமாக, பகவானுக்கு விசேஷ உபசாரங்கள் செய்யவேண்டும். மற்றை நாள், காலையில் ஸ்நானம் செய்து, முன்போலவே பகவானை ஆராதித்து, பாலில் பக்வம் செய்த சருவுடன் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) நெய்யைக் கலந்து, பன்னிரண்டு ஆஹுதிகள் பர்த்தாவைக் (கணவனைக்) கொண்டு ஹோமம் செய்விக்க வேண்டும். ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை அறிந்து நல்ல அன்னங்களால் பன்னிரண்டு ப்ராஹ்மணர்களைப் பகவானாகவே நினைத்துப் புசிப்பிக்க வேண்டும். அந்த ப்ராஹ்மணர்களுக்கு, ஜலம் நிறைந்த பாத்ரங்களையும், வெல்லம், எள்ளு, பொரி இவைகளையும் கொடுத்து, மனக்களிப்புற்ற அந்த ப்ராஹ்மணர்கள் மொழியும் ஆசீர்வாதங்களைச் சிரத்தினால் அங்கீகரித்து, பக்தியுடன் அவர்களை நமஸ்கரித்து அவர்களுடைய அனுமதியின் மேல் புசிக்கவேண்டும். பிறகு, அம்மடந்தையின் கணவன் பந்துக்களுடன் ஆசார்யனை முன்னே உட்காரவைத்துக்கொண்டு, மௌனத்துடன், நற்புதல்வனையும், ஸௌபாக்யத்தையும், கொடுக்கவல்ல சருவின் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) மிகுதியைத் தன் பார்யையைப் (மனைவியைப்) புசிக்கச் செய்யவேண்டும். இங்கனம், பரமாத்மாவின் ஆராதன ரூபமான இந்த விரதத்தை விதியின்படி அனுஷ்டிக்கும் புருஷன், இவ்வுலகத்தில் விருப்பங்களையெல்லாம் பெறுவான். இதை அனுஷ்டிக்கும் மாது, ஸௌபாக்யம், ஸம்பத்து, ஸந்ததி, நெடுநாள் ஸுமங்கலியாயிருத்தல், புகழ், வீடு, முதலிய பலன்களையெல்லாம் பெறுவாள். தனக்குரிய கணவன் நேரப்பெறாத கன்னிகை, இந்த வ்ரதத்தை அனுஷ்டிப்பாளாயின், அழகிய பல லக்ஷணங்கள் அமைந்த கணவனைப் பெறுவாள். விதவை அனுஷ்டிப்பாளாயின், பாபங்களெல்லாம் தீர்ந்து, ஸத்கதியைப் பெறுவாள். பிள்ளை மரணம் அடைந்து வருந்தும் மடந்தை இதை அனுஷ்டிப்பாளாயின், நீண்ட வாழ்நாளுடைய பிள்ளையைப் பெறுவாள். ஸௌபாக்யமில்லாதவள் ஸௌபாக்யத்தையும், அழகில்லாதவள் சிறந்த அழகையும் இதனால் பெறுவார்கள். ரோகமுடையவன் இந்த விரதத்தை அனுஷ்டித்து, பலவகை ரோகங்களினின்று விடுபட்டு, திடமான இந்த்ரியங்கள் அமைந்த மேலான தேஹத்தைப் பெறுவான். இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் ப்ரகாரத்தை அறிவிக்கிற இவ்வத்யாயத்தை, அப்யுதயகர்மத்தில் (உத்ஸவம், ச்ராத்தம்) படிப்பானாயின், அவனுடைய பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் பெருந்திருப்தி உண்டாகும். அவர்கள், அவனுக்கு எல்லா விருப்பங்களையும் கொடுப்பார்கள். பித்ரு ஹோமத்தின் முடிவிலும் தேவ ஹோமத்தின் முடிவிலும் பகவானும், ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஹோமம் செய்த ஹவிஸ்ஸைப் புசித்து அருள்புரிவார்கள். மன்னவனே! மருத்துக்களின் புண்யமான ஜன்மத்தையும், திதி அநுஷ்டித்த மஹத்தான வ்ரதத்தையும், உனக்கு மொழிந்தேன். 

பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று. 


ஷஷ்ட ஸ்கந்தம் (ஆறாவது ஸ்கந்தம்) முற்றுப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக