ஞாயிறு, 1 நவம்பர், 2020

அநுமனும் ஆழ்கடலும் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

மனிதன் தான் செய்த செயல்களைக் கண்டு தானே வியந்து கொள்கிறான். ஆனால் இயற்கை அளிக்கும் அரும்பெரும் அற்புதங்களைக் கண்டு வியக்கத் தவறி விடுகிறான். சாதாரண மனிதனால் காண முடியாத இயற்கையின் அரிய செயல்கள் பரிணாமங்கள் அறிஞர்கள் கண்களில் அருமையாகப் படுகின்றன. அப்படிக்கொத்த இயற்கையின் அரிய சாதனைகளில் ஆழ்கடலும் ஒன்றாகும்.


தத்துவம் பேசும் தாயுமானவரும் தம் அரும்பெரும் பாக்களுள் ஒன்றில் “ஆழாழி கரையின்றி நிற்கவிலையோ” என்று கடல் கரையின்றி நிற்குந்தன்மையை வியந்து பாராட்டுகின்றார். கடலின் ஆற்றலிலே ஆயிரத்தில் ஒரு பங்கு என்று கூட மதிப்பிடத்தகாத ஆறுகள் அவ்வப்போது பருவ காலங்களில் தங்கள் இருக்கரைகளையும் உடைத்து கொண்டு எத்தனையோ ஊர்களையும் உயிர்களையும் அழித்து வரும் செயல்களை நாம் கேட்டறிகிறோம். அவ்வாறிருக்க, இத்துனை பெரிய அலைகடல் கரையின்றி நிற்கும் தன்மையைக் காணும்போது, நன்கு கற்றறிந்த சான்றோர்களின் அடக்கத்திற்கும் சிறிதளவே கற்ற புல்லறிவாளர்க்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நம் கண் முன்னால் தெரிய வைக்கிறது எனக்கூறலாம்.


கல்வியிற் சிறந்த கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இக்கடலின் ஆற்றலையும் அது கரையின்றி நிற்குந் தன்மையையும் அதன் அடக்கத்தையும் கண்டிருக்கிறார். நன்கு கற்றுணர்ந்த புலவர்கள் தாங்கள் அறிந்த அதிசயங்களையோ உண்மைகளையோ உலகத்திற்கு எடுத்துக்காட்டத் தவறுவதில்லை. தக்க சமயங்களில் தக்க முறைகளில் தகுந்த உதாரணங்களோடு உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது தான் அவர்கள் முறை. இராமகாதை பாடிய கவிச்சக்கரவர்த்தியும் தக்க சமயத்தில் பொருத்தமான வகையில் நமக்கு அலைகடலின் ஆற்றலையும், அடக்கத்தையும் எடுத்துக் காட்டிடத் தவறவில்லை. அதை நாம் இங்கு காண்போம்.


சக்கரவர்த்தித் திருமகனின் ஆவி போன்ற சானகியை தேடுவதற்கு தென்னிலங்கையை நோக்கிச் சென்ற அஞ்சனை சிறுவனாகிய அநுமன் அவனுக்கு எதிர்ப்பட்ட எத்தனையோ இன்னல்களையும் தாண்டி இலங்கைக்குள்ளும் புகுந்துவிட்டான். இலங்கையின் வடகோடியிலிருந்து தென்கோடி வரை சானகி எங்கேயிருக்கிறாளென்று தேடிக்கொண்டு செல்கிறான். அட்சகுமாரன் அரண்மனை, கும்பகர்ணனின் குகையில்லம், இந்திரஜித்தின் இன்பமாளிகை, மண்டோதரியின் மயக்குமந்தப்புரம், இத்தனையிலும் புகுந்து புகுந்து பார்த்துவிட்டான், சொல்லின் செல்வன். எங்கேயும் சீதையைக் காணவில்லை.


பாவி இராவணன் சீதையைக் கொன்று தின்று விட்டானோ? இத்தனை நேரம் தேடியும் சீதை கிடைக்கவில்லையே. தன் நாயகனாகிய இராமனிடத்தில் திரும்பிச்சென்று என்ன சொல்வது? திரும்ப வேறு வேண்டுமா? இங்கேயே உயிரை மாய்த்துக் கொள்வதுதான் நலம் என்ற முடிவிற்கும் வருகிறான். அப்போது கனகமயமான இராவணனின் அரண்மனை அவன் கண்களுக்குப் புலனாகிறது. மிதிலைச்செல்வி அங்கேதான் இருக்கவேண்டும் என்றெண்ணி அவ்வரண்மனைக்குள் நுழைகிறான். அங்கே சீதையைக் காணவில்லை. ஆனால் ஈரைந்து தலைகளுடனும் ஐந்நான்கு கரங்களுடனும் நாணமின்றி உறங்கும் அந்த தசமுகனைக் கண்டான். சீதா பிராட்டியார் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தைக் கூட மறந்துவிட்டான் அவளுக்குக் கொடுமை செய்த அந்தத் தீயவனைக் கண்டுபிடித்த உற்சாகம் மேலிடுகிறது. அந்த வஞ்சகனை அவன் உறங்கும் நேரத்திலேயே அடித்துக் கொன்று விட்டு சீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து அவளை எடுத்துச் சென்று இராமனிடத்தில் சேர்ப்பித்து விடலாம். என்ற எண்ணம் தலைதூக்கி நின்றது. ஆனால் அடுத்த கணமே அச்செயல் புரியும் தன்மையை அநுமன் கைவிட்டு விட்டான்


கம்பன் பாடியது இராம காதை. அதாவது நாரணனின் விளையாட்டு. ஆனால் தக்க சமயங்களில் மங்கைபாகனின் மாபெரும் செயல்களை நமக்கு எடுத்துக்காட்டத் தவறியதில்லை. அரன்தான் சிறந்தவன், உலகளந்த அரிதான் சிறந்தவன் என்று வாது செய்பவர்கள் அறிவற்றவர்கள். அவர்களுக்குப் பரகதியும் கிடையாது என்று தன் சமரசக் கொள்கையை தன் காவியத்திலேயே மற்றோரிடத்தில் வெளியிட்டதை இங்கு மறந்து விடுவானா! இங்கும் இந்த சிவபிரானுக்கு ஒரு ஏற்றத்தை அளிக்கிறான்.


தேவர்கள் அமுதம் வேண்டி பரமனின் கருணையினால் பாற்கடலை கடைந்தார்கள். ஆனால் முதலில் என்ன கிடைத்தது தெரியுமா? அகில உலகத்தையும் அழிக்கக் கூடிய ஆலகால விடந்தான் பிறந்தது. அரவணையான் அயர்ந்து நின்றான். அன்னவாகனன் அகன்றே விட்டான். ஆனால் சூலபாணி சற்றே அயர்ந்தானில்லை. உலகம் உய்ய வேண்டும். ஒருத்தன் மட்டும் இருந்தால் போதாது என்ற உயர்ந்த கருத்தினால், அந்தவிடத்தை உட்கொண்டால் தான் மடிவது நிச்சயம் என்று தெரிந்திருந்தும் அந்த ஆலகாலத்தை உட்கொண்டு விட்டானாம். அவனுடைய பேராற்றலை இவ்வாறு நமக்கு அறிமுகப்படுத்துகிறான் கம்பன். அப்படிக்கொத்த பேராற்றல் படைத்தவர்களாயிருப்பினும் நற்றவத்தை உடையப் பெரியோர்கள் காலம் பார்க்காமல் எந்த செயலையும் செய்யமாட்டார்களாம். அதைக்கம்பன், 

“ஆலம் பார்த்துண்டவன்போல ஆற்றல் அமைந்துளரெனினும்,

சீலம் பார்க்குரியோர்கள் என்னாது செய்வரோ”

என்று நமக்கு எடுத்துக் கூறுகின்றான்.


அது விடம் என்று தெரிந்து உண்டானாம். அச்சிவபிரானை ஒத்த பேராற்றல் உடைய அநுமனும் தான் செய்யவிருந்த செயலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டானாம். அவன் அடங்கிப் போனத்தன்மையை கடலுக்கு ஒப்பிடுகிறான் கம்பன் வரும் இரண்டு அடிகளில். 

“மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறைத்தெனினும் 

காலம் பார்த்திறை வேலை கடவாத கடலொத்தான்”


பிரளய காலத்திலே நாம் வசிக்கும் இந்தப்பரந்த பூமி, மரம், செடி, கொடி வகைகள், மிருகபட்சி சாதிகள் யாவற்றையும் தான் பொங்கியெழுந்து தன்னுள்ளே அடக்கிக் கொள்கிறதாம் இந்த ஆழ்கடல். அந்த சமயம் இன்னும் வரவில்லை. அதுவரை பொறுத்திருப்போம். இப்பொழுது அழித்திட வேண்டாமென்றெண்ணி கடலானது அடங்கியிருக்கிறதாம். அந்த அலைகடலின் செயல்போல் தன்னைத்தானே அடக்கிக் கொண்டானாம் அநுமனும். இராவணனைக் கொல்லும் செயலைக் கட்டோடு கை விட்டுவிட்டான் அஞ்சனைக் சிறுவன்.


அலைகடலின் ஆற்றலோடும், அடக்கத்தோடும் ஒப்பிட்டுப்  பேசும் அநுமனின் ஆற்றலையும் நமக்கு எடுத்துக் காட்டும் கம்பனின் பேராற்றலைக் கண்டு நம்மால் அதிசயிக்காமல் இருக்க முடிவதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக