ஞாயிறு, 5 மார்ச், 2023

அருணகிரி ராமாயணம் - 2 - சித்ரா மூர்த்தி

அசோகவனம் என்ற படைவீடு

முருகன் புகழ்பாடும் திருப்புகழில், ராமாயணச் சம்பவங்களை ஆங்காங்கே தெளித்து விட்டிருக்கிறார் அருணகிரியார். அந்தச் சம்பவப் பாடல்களை மட்டும் தொகுத்து அருணகிரி ராமாயணமாகக் காட்டும் முயற்சி இது. சென்ற இதழில் பாலகாண்டம், இந்த இதழ் முதல் ராமாயணத்தின் பிற காண்டங்கள் தொடர்கின்றன. அயோத்யா காண்டம் சீதையும் ராமனும் புதுமணத் தம்பதிகளாக அயோத்தியில் வாழத் தொடங்குகின்றனர். ஆண்டுகள் சில கழிந்த பின் தசரதர் ராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறார். ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றதுமே அயோத்யா நகரம் விழாக்கோலம் பூணுகிறது, வரப்போகும் துயரத்தை அறியாமலே! 

ராமனை அழைத்துச் சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு கம்பனின் கைகேயி கூறுகிறாள், ''இயம்பினன் அரசன்'' என்று. ''தாயே இதற்கு அரசர் கட்டளையிட வேண்டும் என்பதில்லை. தாங்களே கூறினாலும் அதைச் செய்யக் காத்திருக்கிறேன்'' என்று பதிலளிக்கிறான் ராமன். பட்டாபிஷேகம் என்றபோதும் ராமன் ஆனந்தக் கூத்தாடவில்லை; இப்போது காட்டிற்குப் போகும்படிச் சிற்றன்னை கூறியபோதும் துக்கத்தில் ஆழவில்லை. 'அன்றலர்ந்த செந்தாமரையினை ஒத்திருந்தது ராமன் முகம்' என்கிறான் கம்பன்! அருணகிரிநாதர் காட்டும் கைகேயி, இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல்  நேரடியாகவே கூறிவிடுகிறாள். 

''எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவும் நேரோத இசையுமொழி தவறாமலே ஏசி'' என்கிறார் அருணகிரிநாதர்.  'மாதாவின் வசனமோ மறாகேசன்' என்கிறார் மற்றொரு பாடலில். ராமன், ‘தாயார் கூறியதை மறுத்துவிட்டான்’ என்று உலகம் கூறிவிடக்கூடாது என்பதால்! மாதாவின் வசனத்தை மறுத்துப்பேசாத ஹரி அல்லது அவளது உத்தரவை ஏற்று உடனே செயல்படுத்திய ஹரி என்று இருபொருள்பட வருகிறது இப்பாடல். இதே கருத்தை வேறொரு பாடலில், “ஒண் ஜானகி தனங் கலந்தபின் ஊரில் மகுடங் கடந்தொரு தாயார் வசனம் சிறந்தவன்” 

- என்று கூறுகிறார்.

கைகேயியின் சொல்லை மறுக்காமல், சீதையுடன் அயோத்தியை விட்டு ராமன் வெளியேறும் காட்சியை மனம் உருகப் பாடுகிறார் அருணகிரியார்.

''தம்பி வரச் சாதி திருக்கொம்பு வரக் கூடவனச் சந்த மயிற்சாய் விலகிச் சிறைபோக'' -என்று வரும் இப்பாடலில் சீதையைத் 'தங்க நிறத்தாள்' என்று குறிப்பிடுகிறார். என்னிறம் உரைக்கேன்! பொன்னிற் சிறந்த கொம்பு போல மெலிந்த இலக்குமி அனைய சீதை உடன்வர, அவளைக் கண்டு காட்டில் உள்ள அழகிய மயில்களெல்லாம் இவள் நளினத்தின் முன் நமது நளினம் எடுபடுமா என்று மயங்கி ஒதுங்கி விலகி ஒருபுறம் போகின்றவனவாம் - இது அருணகிரியாரின் கற்பனை! 

சீதை வெளியேறிய பொழுது லக்ஷ்மி கடாட்சமே அயோத்தியை விட்டு நீங்கியது என்று பொருள்பட, 'திருவொடு பெயர்ந்து இருண்ட வனமிசை ராமன் நடந்து' என்று அருணகிரியார் நெகிழ்ச்சியுடன் பாடுகிறார். ஆரண்ய காண்டம் ஆரண்ய காண்டத்தின் கதாநாயகியே சூர்ப்பநகை எனுமளவு  ராமகாதையில் அவள் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி விட்டாள். கோதாவரி தீரத்தில் லட்சுமணன் அமைத்த பர்ணசாலையில் சீதையும் ராமனும்  தங்கியிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் அரக்கியாகிய சூர்ப்பநகை, ராமனைக் கண்டு மோகம் கொண்டு 'காமவல்லி' எனும் அழகிய பெண்ணுரு  எடுத்து நேரே ராமனிடம் சென்று ''என்னைத் திருமணம் செய்து கொண்டால் இந்தக் காட்டில் நிம்மதியாக வசிக்கலாம்'' என்கிறாள்.

இவ்வாறு நேரடியாக வந்து தன்னை மணந்துகொள்ளக் கேட்பவள் நிச்சயம் ஒரு குலஸ்திரீயாக இருக்க முடியாது என்று எண்ணுகிறான் ராமன். அண்ணனும், தம்பியும் தன்னைச் சிறிதும் சட்டை செய்யவில்லை என்று கண்ட சூர்ப்பநகை, சீதையை அபகரிக்கப் பார்க்கிறாள். லட்சுமணன் அவளது  மூக்கு, காது, முலைக்காம்பு இவற்றை அரிந்து மூளியாக்கி விடுகிறான். சூர்ப்பநகை எனும் கதாபாத்திரத்தையும், அவள் வரவின் விளைவாக  ராமாயணக் காவியத்தில் விளைந்த முக்கிய திருப்பங்களையும் திருத்தணிப் பாடல் ஒன்றில் மிக விரிவாகப் பாடியிருக்கிறார் அருணகிரியார்.

''மூக்கறை மட்டை மகாபல காரணி

சூர்ப்பநகைப் படுமூளி உதாசனி

மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழுமோடி

மூத்த அரக்கனி ராவணனோடியல் 

பேற்றிவிடக் கமலாலய சீதையை

மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே 

கொடு முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள் படை

வீட்டிலிருத்திய நாளவன் வேரற

மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்''

- என்று வரும் இப்பாடலில் ஆரண்ய, யுத்த காண்ட சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூக்கறை - மூக்கறுப்பட்டவள் மட்டை - மட்டகுணம் படைத்தவள் மகாபலகாரணி - பெரும்பலம் பொருந்தியவள் (அ) பெரும் தீனி உண்பவள் சூர்ப்பநகை - முறம் போன்ற நகம் உடையவள் படுமூளி -  மூக்கறுப்பட்டதால் மூளி உதாசனி - தீ போல் சுடும் கோபமுடையவள் மூர்க்க குலத்தி - மூர்க்க குலமுடைய அசுரர் குலப்பெண் விபீஷணர் சோதரி  - கம்பன் சூர்ப்பநகையை ''ராவணனுடன்  உறை கடிய நோய்'' என்பான். பிரம்மன், நோயை அவனுடலில் வைக்க முடியாமல் உடன் பிறக்க வைத்து  விட்டானாம்!

தீயப் பெண்ணை தீயவனான ராவணனது சோதரி என்று கூறாமல் தூயவரான விபீஷணர் சோதரி என்று ஏன் கூறுகிறார் அருணகிரிநாதர்? இதன் பின்னால் ஒரு கதை உண்டு. சத்திரவிரதன் எனும் அரசனுக்கு சங்கசூடன் என்ற மைந்தன் இருந்தான். கருத்துடன் கல்வி பயின்று வந்த அவனுக்கு,  தனது குருவின் மகளாகிய சுமுகி, தன் மீது காதல் கொண்டிருந்தது தெரியாது. ஒருநாள் அவன் குருவைத் தேடி அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோத வீட்டில் சுமுகி தனித்திருந்தாள். அவள் சங்கசூடனிடம் தன் காதலைத் தெரிவித்தபோது, ''குருவின் மகள் என்பவள் தனக்கு சகோதரி முறையானவள்;  இனிவரும் பிறப்பிலும் கூட நீ எனக்குத் தங்கைதான்'' என்று மறுத்துக் கூறினான் சங்கசூடன். 

கோபமுற்ற சுமுகி, அவன் தன்னைக் கற்பழித்தான் என்று கூறித் தந்தையிடம் பழி மூட்டினாள். குரு இதை நம்பி அரசனிடம் கூற, அவனும் மகனைத்  தீர விசாரிக்காமல், அவனைக் கற்பாறையில் கிடத்தி, கை கால்களை வெட்டும்படி உத்தரவிட்டான். தர்ம தேவதையை நினைத்துப் புலம்பினான்  சங்கசூடன். அச்சமயம் அவன் வெகுவாக மதிக்கும் ஆதிசேஷன் பூமியைப் பிளந்து வெளிவந்து, ''உன்னைப் பற்றித் தவறாகப் பழி மூட்டிய சுமுகியை அடுத்த பிறப்பில் வந்து இடர் செய்வேன்'' என்று சூளுரைத்துச் சென்றான்.

அடுத்த பிறவியில் சங்கசூடன் விபீஷணனாகவும், சுமுகி சூர்ப்பநகையாகவும் பிறந்தனர். ஆதிசேஷனாகிய லட்சுமணன் அவள் அங்கங்களை அரிந்து அவமதித்தான். இந்த உயர்ந்த உட்கருத்தை விளக்கவே, அருணகிரியார் விபீஷணர் சோதரி என்று பாடி உள்ளார் என்பது வாரியார் சுவாமிகள்  வாக்கு. முழு மோடி - பெரும் சண்டை இடுபவள். மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பேற்றிவிட - பஞ்சவடியில் ராமனோடு போரிடச் சென்ற கரதூஷணர்கள் படையில், உயிரிழக்காது தப்பி வந்துவிட்ட அகம்பனன், சீதையின் பேரழகைப் பற்றி விவரித்தபோது ராவணன் மனத்தில் மூண்ட ஆசைத்தீ, மாமன் மாரீசனது அறிவுரை கேட்டு சற்று மயங்கியது; 

ஆனால், தங்கையாகிய மூக்கறுபட்ட சூர்ப்பநகை வந்து சீதையைப் பற்றி கூறியது கேட்டு மனத்தில் காமத்தீ கொழுந்து விட்டெரிய, அவன் புத்தி மழுங்கியது. ‘மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே சொடு முகிலேபோய்’ - அருணகிரியார் ராவணனை, 'மோட்டன்' என்பதோடு, துட்டன், கனமாயக்  கபடன், உலுத்த ராவணன், திருட்டு ராக்கதன், நாலாறு மணிமுடிப்பாவி, குமண்டைக் குத்திர ராவணன் என்றெல்லாமும் குறிப்பிடுகிறார். வாரணம்  பொருத்த மார்பை உடைய ராவணனை, ஆயிரம் வேதங்கள் கற்றறிந்த ராவணனை, அருணகிரியார் மோட்டன் (அறிவிலி) என்று ஏன் அழைக்கிறார்?  காரணம், அவன், ‘கற்ற வண்ணம் நிற்கும் திறனின்றி பிறன் தாரம் நச்சிய பேயன்’ என்கிறார் வாரியார் சுவாமிகள். 

அன்னம் கேட்டுச் சீதையைக் கன்னமிட்ட ராவணன், அவளை வான்வழியே கடத்திச் செல்கிறான். ‘மாக்கன சித்திர கோபுர நீள் படைவீட்டில் இருத்தி’ - சித்திரங்களோடு கூடிய நீண்ட கோபுரங்கள் நிறைந்த இலங்கையில் படைவீடு ஒன்று உளதா என்ன? இங்கு அசோகவனத்தையே அவர் படைவீடு என்று குறிப்பிடுகிறார்.  சீதையை மிகக் கொடூரமான பல அரக்கியருடன் அங்கு கடுங்காவலில் வைத்திருந்தான் ராவணன். அத்துடன் மிக உயர்ந்து  வளர்ந்த பல மரங்கள் அசோகவனத்தில் நிறைந்திருந்தன. 

பின்னால் நடக்கப்போகும் ராம-ராவண யுத்தத்தின்போது ஆயுதம் ஏதும் ஏந்தி அறியாத வானரங்களுக்கு அவையே இயற்கையான ஆயுதங்களாக  பயன்பட இருக்கின்றன என்பதாலும் அருணகிரியார் அசோகவனத்தைப் படைவீடு என்று குறிப்பிடுகிறார் போலும்! நாளவன் வேரற முடித்த  விலாளிகள் நாயகன் - ராமனை 'விலாளிகள் நாயகன்' என்று குறிப்பிடுவதன் காரணம், அவனது கரவேகமும், சரவேகமுமேயாம். கரவேகம் பற்றி ஏற்கனவே பார்த்தோம்: 'சிலை மொளுக்கென முறிபட' என்றார் அருணகிரியார்; ‘எடுத்தது கண்டனம் இற்றது கேட்டார்’ என்பது கம்பன் வாக்கு.

சரவேகம் பற்றி வாலி வதத்தின் போது விரிவாகக் காணலாம். 

ஆனால், இங்கு விலாளிகள் நாயகனைப், பற்றி பேசும்போது, ஏழு மராமரங்களையும் ஒரே பாணத்தால் துளைத்த ராமனது திறமை பற்றிக் குறிப்பிடாமலிருக்க முடியாது. சுக்ரீவன், ரிஷியமுக மலையில் கூறுகிறான்: ''ராமா, வாலியைக் கொல்வது நீ நினைப்பதுபோல சுலபமல்ல. அதோ தெரிகிறதே அவ்வயிரம் பாய்ந்த ஏழு ஆச்சா மரங்களையும் ஒரே அம்பினால் துளைப்பாயானால் உன்னால் வாலியையும் கொல்லமுடியும்'' என்கிறான்.  கோதண்டத்தை வளைத்து ஒரு கூரிய கணையை விடுத்தான் ராமன். அக்கணை ஏழு மரங்களையும் துளைத்து, வேறு இலக்கு இல்லாததால் மீண்டும்  ராமனின் அம்பறாத்தூணியில் வந்தமர்ந்தது. இது கம்பன் வாக்கு. 

அருணகிரியார் ராமனை, 'ராசரந்தொடு புங்கவன்' என்று கோடைநகரில் பாடுகிறார்:

''ஏழு மரங்களும் வன்குரங்கெனும்

வாலியும் அம்பரமும் பரம்பரை

ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவேமுன்

ஈடழியும்படி சந்திரனும் சிவ

சூரியனுஞ் சுரரும் பதம்பெற

ராமசரந்தொடு புங்கவன் மருகோனே!''

-ராமசரம் என்பது ராமநாமம் பொறிக்கப்பட்ட அம்பு, ராமநாமம் ஜெபிக்கப்பட்ட அம்பு. ராமனது கணை என்றுமே குறி தவறாது. எனவேதான்,  ''ஸ்ரீராமஜெயம்'' என்று எழுதும் வழக்கம் வந்தது. முருகன் புகழைப் பாடும் அருணகிரியார், 'ஏவால் மாலே போல்வாய்' என்கிறார். ஏ என்பது கணையைக் குறிக்கும். கணையை எறிவதில் உன் மாமனைப் போன்றவனாய் இருக்கிறார் என்று கூறும் அழகே தனி!

''வடிவுடைய மானும், இகல் கரனும் திகழ்

எழுவகை மராமரமும் நிகரொன்றுமில்

வலிய திறல் வாலி உரமு நெடுங்கடல் 

அவைஏழும்

மற நிருதர் சேனை முழுதுமிலங்கை மன்

வகை இரவி போலு மணியுமலங்க்ருத

மணி மவுலியான ஒருபதும் விஞ்சிருபதுதோளும்

அடைவலமுமாள விடு சர அம்புடை 

தசரத குமார''

-என்ற பாடல் ஒன்றே போதும் ராமனின் சரவேகம் பற்றி நாம் அறிந்துகொள்ள! அழகுடைய மான், மாறுபட்ட கரன், ஏழு மராமரங்கள், ஒப்பற்ற வாலியின் மார்பு, ஏழு கடல்கள், வீரம் நிறைந்த அசுர சேனைகள், ராவணனது சிறந்த சூரியன் போல ஒளிவீசும் ரத்தின மணிகள் பதிக்கப்பட்ட பத்து  முடிகள், இருபது தோள்கள் இவை அனைத்தும் சேர்ந்துள்ள வலிமை முழுதும் அழியுமாறு ஒரு கணை விடுத்த தசரத குமாரன்' என்று ராமனின்  சரவேகத்தைப் புகழும் அழகிய சுவாமிமலைப் பாடல் இது!

ஆரண்ய காண்டத்தில் வரும் மற்றுமொரு முக்கிய சம்பவம் மாரீச வதம். ‘வடிவுடைமான், நிகரில் வஞ்ச மாரீசன்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார் அருணகிரியார். 'திருவைக் கொண்டு ஒரு தண்டக வனமிசைவர அச்சங்கொடு உழையுடல் சிதற' எனும் பாடல் வரிகள் மிகுந்த பொருள் பொதிந்தவை.

சீதையை எப்போதும் லட்சுமியாகவே காணும் அருணகிரியார் இங்கும் அவளைத் 'திரு' என்றே குறிப்பிடுகிறார். பயந்துகொண்டு ('அச்சங்கொடு') வந்தான் மாரீசன் என்று கூறுகிறார். ஏன்? ஒருமுறை, யாகத்திற்கு இடையூறு விளைவித்த மாரீசனைத் தொடர்ந்து 'மானவம்' என்ற பாணம் எய்து அவனைக் கடலில் தள்ளினான் ராமன். 

மற்றொரு முறை வேறு இரு அரக்கருடன் மான் வேடம் பூண்டு, ராமனைத் தன் கொம்புகளால் முட்டிக் கொல்ல எண்ணி நெருங்கியபோது ராமன் எய்த அம்பால் மற்ற அரக்கர் இறக்க, தான் மட்டும் தப்பி ஓடி இலங்கை சேர்ந்தான். இப்போது மூன்றாம் முறையாக, ராவணனது வற்புறுத்தலால் மாயமானாக உருவெடுத்து வந்து, ராமனைக் காட்டிற்குள் வெகுதூரம் ஏமாற்றி அழைத்துச் செல்கிறான். இவ்வாறு, ஏற்கனவே இரண்டு முறை ராமசரத்திலிருந்து தப்பிய மாரீசன், 'இம்முறை மரணம் நிச்சயம்' என்பதால் பயத்தோடு வந்தான் என்ற பொருளில் 'அச்சங்கொடு' என்று கூறுகிறார்.

சீதையைக் கவர்ந்த மாரீச மானை 'உழை' என்று குறிப்பிடுகிறார். உழை என்பது ஆண்மான். 

ஆணாகிய மாரீசன் பெண் மானாக வந்ததால், 'உழை' என்கிறார். 'உடல் சிதற' என்று குறிப்பாக உடலை மட்டும் கூறுவது ஏன்? ராமனின் கணை பட்டு உடல் சிதறிய போதும் மாரீசனது 'நிகர் இல் வஞ்சக' உள்ளம் சிதறவில்லையாம்! எட்டுத் திக்குகளிலும் அதற்கு அப்பாலும் கூடக் கேட்கும்படி, வஞ்சகமாக 'ஹா' சீதே! லட்சுமணா!' என்று ராமர் குரலில் கூப்பிட்டுவிட்டு ஒரு மலைபோல, தன் உண்மையான வடிவத்துடன் கீழே விழுந்தான். அக்குரலைக் கேட்டு லட்சுமணன் சீதையைத் தனியே விட்டுவிட்டு ராமரைத் தேடிவர, ராவணன் சமயம் பார்த்துச் சீதையைக் கடத்திச் சென்றான். 

இவ்வாறாக ராமகாதையில் மாரீசனது செயலும் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. வான் வழியாகக் கடத்திச் செல்லப்பட்ட சீதை தன் ஆபரணங்களைக் கழற்றி சிறுசிறு முடிச்சுகளாக்கி கீழே வீசி எறிந்தாள். தான் கடத்திச் செல்லப்பட்ட வழியை சுலபமாகக் கண்டுகொள்ள ராமனுக்கு  இவை உதவும் என்று எண்ணினாள். ராமாயணத்தில் மனதை உருக்கும் காட்சிகளுள் ஒன்றான இதை அருணகிரியார் அழகாகப் பாடியிருக்கிறார். 

''அரி மைந்தன் புகழ் மாருதி என்றுள

கவியின் சங்கம் இராகவ புங்கவன்

அறிவும் கண்டருள்வாயென அன்பொடு தரவேறுன்

அருளும் கண்ட தராபதி வன்புறு

விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய

அகமும் பைந்தொடி சீதை மறைந்திட 

வழிதோறும்

மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள்

கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி

மணியின் பந்தெறிவாயிது பந்தென முதலான

மலையும் சங்கிலிபோல மருங்கு, விண்

முழுதும் கண்ட நாராயணன்.''

('உரையும் சென்றது' திருப்புகழ்)

நன்றி - தினகரன் ஆன்மிகம் 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக