சனி, 4 மார்ச், 2023

அருணகிரி ராமாயணம் - 1 - சித்ரா மூர்த்தி

‘திருப்புகழ்’ என்றாலே, ‘முருகன் புகழ்’ என்றுதான் பொதுவாக அறியப்படுகிறது. ஆனால், முருகன் புகழிலும் ராமாயண கதாபாத்திரங்களை, சம்பவங்களை இணைத்திருக்கும், ஒப்பீடு செய்திருக்கும் அருணகிரிநாதரின் நயம் வியந்து போற்றத்தக்கது. ‘‘திருமுல்லைவாயிலாய்! திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களைவாய்’’ என்று சுந்தரரும், ‘‘தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி’’ என்று குலசேகராழ்வாரும் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளனர். அவர்கள், ‘திருப்புகழ்’ என்ற சொல்லுக்கு  ‘இறைவனைப் புகழ்ந்து பாடுதல்’ என்ற பொருளையே அளித்தனர். 

ஆனால், திருவண்ணாமலைக் கோயில் கோபுரத்திலிருந்து கீழே விரக்தியுடன் குதிக்க முனைந்த அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்டு, ‘என் புகழ்  பாடுக’ என்று ஆணையிட்டு, கூடவே ‘முத்து’ என்றும் முதல் பதத்தை முருகப்பெருமான் அடி எடுத்துக் கொடுத்தானே, அன்று முதல் அருணகிரியார்  பாடிய முத்து முத்தான பாக்கள் மட்டுமே இன்று ‘திருப்புகழ்’ என்ற பெயரால் அறியப்படுகின்றன. எனவே, ‘திருப்புகழில் ராமாயணமா?’ என்ற வியப்பு  எழுவது இயல்பே! ஆதிசங்கரரின், காணாபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம் எனும் அறுசமய வழிபாட்டு மார்க்கங்களையும் தேனூறும் திருப்புகழ்ப் பாக்கள் மூலம் நமக்கு விளக்கிக் காட்டியவர் அருணகிரிநாதர். 

இவற்றுள் சைவ-வைணவ ஒற்றுமையை நிலைநாட்ட அவர் எடுத்துக்கொண்டுள்ள மையக்கருத்து, திருமால் மகிமை. அவர் பாடிய ‘முத்தைத்தரு’ எனத் துவங்கும் முதல் பாடலில் விநாயகரைப் பற்றியோ, உமையைப் பற்றியோ குறிப்பு எதுவும் காணப்படவில்லை. ஆனால், ஐந்து வரிகளில் முருகனது மாமனும், மாமனாரும் ஆகிய திருமாலின் பெருமை பாடப்பட்டுள்ளது. அதிலும் முதல் வரியே ‘பத்துத்தலை தத்தக் கணைதொடு’ என்ற ராமாவதாரக் குறிப்புடன் திகழ்கிறது. நமக்குக் கிடைத்துள்ள 1340 திருப்புகழ்ப் பாக்களில் சுமார் 160 குறிப்புகளில் ராமாயணம் பேசப்படுகிறது என்றால், அருணகிரியார் பாடியதாகக் கருதப்படும் 16,000 பாடல்களும் நமக்குக் கிடைத்திருந்தால் எத்தனை எத்தனை குறிப்புகள் தெரிய வந்திருக்கும்! 

அருணகிரியார் காட்டும் பக்தி மார்க்கத்தில், அன்பு, அவிரோதம், ‘எவரும் யாதும் யானாகும்’ இதய உணர்வு, சரணாகதி போன்ற எண்ணற்ற உபதேசங்கள் விரவிக் கிடக்கின்றன. அவர் ராமாயணக் காவியத்தை எவ்வாறு ரசிக்கிறார், அவரது சந்தப் பாக்களின் சொல்லழகு எத்தகையது, அக்கதாபாத்திரங்களின் மூலம் அவர் நமக்கு அளிக்கும் உபதேசங்கள் என்னென்ன என்பனவற்றை உணர்ந்துதான் அனுபவிக்க வேண்டும். திருமால் வானோர்களைப் பார்த்துக் கூறுகிறார்: ‘‘எனது அடுத்த அவதாரத்தில் தசரதன் மகனாகப் பிறந்து, சங்கு-சக்கரம்-ஆதிசேஷன் இவர்களைத்  தம்பியராகக் கொண்டு தசக்ரீவனை வதம் செய்ய உள்ளேன். நீங்கள் அனைவரும் பூமியில் வந்து பிறந்திருங்கள்.’’ யாரெல்லாம் வந்து பூமியில் பிறந்தார்கள் என்பதை அருணகிரியாரின் வாக்கிலேயே பார்க்கலாம்:

‘‘இரவி இந்திரன் வெற்றிக் குரங்கின்

அரசரென்றும் ஒப்பற்ற உந்தி

இறைவன் எண்கினக் கர்த்தனென்றும் 

நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற் சிறந்த

அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ

அரிய தன் படைக் கர்த்தரென்று

அசுரர் தங்கிளைக் கட்டை வென்ற

அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் 

மருகோனே!’’

(கருவடைந்து திருப்புகழ்)

சூரிய அம்சமாக சுக்ரீவனும் இந்திரன் அம்சமாக வாலியும் குரங்குகளின் அரசர்களாக விளங்குகின்றனர். (ஒரு பாடலில் சுக்ரீவனைப் ‘பருதி மகன்’  (சூரியன் மகன்) என்றே கூறுகிறார்) திருமாலின் உந்தியிலிருந்து தோன்றிய பிரம்மன் கரடிக் கூட்டத்தின் (எண்கு - கரடி) தலைவனாகத் தோன்றுகிறார். அக்னியின் அம்சமாக நீலனும் ருத்ரனின் அம்சமாக அனுமனும் பிறக்கிறார்கள். ‘ருத்ரற் சிறந்த அனுமன்’ என்பதை ‘சிவனைவிடச் சிறந்தவன் அனுமன்’ என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. சிவபிரானுக்கு பிறப்பு, இறப்பு இரண்டும் கிடையாது. மகாபாரதத்தில் வில்லிபுத்தூராரே சிவனை ‘பிறப்பிலி, இறப்பிலி’ என்று குறிப்பிடுகிறார்! சிவ சாரூபம் பெற்ற ருத்ரர்கள் பதினோரு கோடி உள்ளனர். எனவே, அவர்களுள் சிறந்தவராக, ருத்ராம்சம் உடையவராக அனுமன் தோன்றினார் என்று கொள்வதே சரி.

இவ்வாறாக ஒப்பற்ற தேவர்கள் அனைவரும் வானர வர்க்கத்தில், மலைப்பகுதிகளில் பிறக்க, அவர்களைத் தம் படைத்தலைவர்களாகக் கொண்டு,  ‘அசுரர் தம் கிளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மருதோனே’ என்று பாடுகிறார். ‘முருகா! உன் மாமன் ஒரு பாணத்தால் அசுரர் கூட்டத்தை வென்றார். எனக்குள்ளும் காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்சரியம் எனும் அசுரர்கள் கிளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வசுவரர்களை உன் வேலாயுதத்தால் அழித்து விடு’ என்று நாமும் இறைஞ்ச வேண்டும் என்பதே இப்பாடலின் உட்கருத்து.


பாலகாண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்திர காண்டம் என ஏழு பகுதிகளில் ராமனின் புண்ணிய கதையை ராமாயணம் கூறுகிறது. ஆனால், ராமாயண சம்பவங்களைக் கூறும் அருணகிரியாரின் பாடல்களை இந்த அடிப்படையில் பிரிப்பது கடினம். சில பாடல்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட காண்டங்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன; சில பாடல்களில் ராமாயண சாரமே பிழிந்து தரப்பட்டுள்ளது. தமக்கு எப்போதெல்லாம் ராமனின் நினைவு வருகிறதோ அப்போதெல்லாம் ராமாயண சம்பவங்களைப் பாடியிருக்கிறார் அருணகிரியார். இருப்பினும் அவரது பாடல்களை ராமாயணக் காவியம் போன்றே காண்டம் வாரியாகப் பிரித்துப் பார்த்து அனுபவிக்கலாம். 

பாலகாண்டம் பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் நம்மை எப்போதும் வசீகரித்து வந்திருக்கின்றன. ஆறு மலர்களில் மலர்ந்த ஆறுமுகன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணபிரான், எழுந்து சென்று குமர குருபரருக்கு முத்துமாலை அணிவித்த மீனாட்சி அம்மை என்று பல பிள்ளைத் தமிழ்  இலக்கியங்களை நாம் ரசித்துள்ளோம். அருணகிரியார் பிள்ளைத்தமிழ் என்று தனியாகப் பாடாவிட்டாலும் முருகனது குழந்தைப் பருவத்தைப்  பல  இடங்களில் பாடியுள்ளார். ‘தொந்தி சரிய’ எனத் துவங்கும் செந்தூர்ப் பாடலொன்றில் நாம் பிள்ளைத்தமிழை ரசிக்கலாம். ஆனால், அதிசயம் என்னவென்றால், கம்பனும் கூடப் பாடியிராத ராமபிரானின் பிள்ளைப் பருவத்தைப் பற்றிய பாடல் அது!

‘‘எந்தை வருக ரகுநாயக வருக

மைந்த வருக, மகனே இனி வருக

என்கண் வருக எனதாருயிர் வருக அபிராம

இங்கு வருக அரசே வருக முலை

உண்க வருக மலர் சூடிட வருக

என்று பரிவினொடு கோசலை புகல 

வருமாயன்’’

இப்பாடலின் உட்கருத்தை ஆராய்வதே தனி சுகம்தான். ராமனைக் கோசலை பத்து முறை வருக வருக என்று விளிக்கிறாள். ஆண் குழந்தை வளர்ச்சியில் பத்துப் பருவங்கள் உண்டு. காப்பு, தாலம், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர் என்பன அவை. ஒரு பருவத்திற்கு ஒருமுறை என பத்துப் பருவங்களைக் குறிக்க பத்து முறை விளித்ததாகக் கொள்ளலாம். அல்லது ‘‘குழந்தாய்! பால் குடித்து நீ பலசாலியாக வளர்ந்தால்தானே பத்துத் தலை ராவணனை  அழிக்க நீ எடுத்துள்ள அவதார நோக்கம் பூர்ணமாகும்’’ என்ற உட்பொருளில்கூட பத்து முறை கூப்பிட்டிருக்கலாம்!

‘அபிராம!’ என்று விளிக்கிறாள் கோசலை. ‘ராம’ என்றாலே அழகு. அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் ‘அபிராம’ என்று யாருமே ராமனைக் கூப்பிடவில்லை. அதுவும் ‘பரிவினோடு கோசலை புகல’ என்கிறார் அருணகிரியார். ‘முலை உண்க வருக’ என்று அன்புடன் அழைக்கிறாள் தாய். குழந்தைக்கு முலைப்பால் கொடுப்பதன் அவசியத்தை அரசு விளம்பரங்களும் தொலைக்காட்சிகளும் எடுத்துக் கூறவேண்டிய துர்ப்பாக்கிய கால கட்டம் இது. முலைப்பால் கொடுக்கும்போது தாய் தன் நற்குணங்களையும் பரிவையும் சேர்த்து புகட்டுகிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்லித் தருகிறது இப்பாடல்.

‘தொந்தி சரிய, மயிரே வெளிற, நிரை தந்தம் அசைய’ என முற்பகுதியில் முதுமைப் பருவத்தைப் பாடும் அருணகிரிநாதர், பிற்பகுதியில் நேர்மாறான  குழந்தைப் பருவ அழகைப் பாடியிருப்பது தனிச்சிறப்பு. பாலகாண்ட சம்பவங்களடங்கிய ஒரு அழகான திருப்புகழ்ப் பாடல் இதோ: 

‘‘மேலை வானொர் உரைத் தசரற்கொரு பாலனாகி உதித்து

ஓர் முநிக்கு ஓர் வேள்வி காவல் நடத்தி,

அகற்கு உரு அடியாலே மேவியே

மிதிலைச் சிலை செற்று மின்மாது தோள் தழுவிப் பதிபுக்கிட’’(ஆலகால)

-என்று திருச்செங்கோட்டுத் திருப்புகழில் பாடுகிறார்.

மேலை வானொர் உரை தசரற்கு - (சந்தம் கருதி தசரதற்கு என்பது தசரற்கு என்றாயிற்று) விண்ணோர்கள் தசரதரை மிகவும் போற்றுகிறார்கள்.  காரணம் முன்னொரு காலத்தில் சம்பராசுரனுடனான போரில் இந்திரனை வெற்றி பெறச் செய்து, தேவலோகத்தை மீட்டுக் கொடுத்தார் தசரத சக்ரவர்த்தி. ஒரு பாலனாகி உதித்து - சூரிய வம்சத்தில் பிறந்த ஸ்ரீராமனை, பாலனாகி, ‘உதித்து’ என்று கூறுவது மிகப் பொருத்தம். (முருகப் பெருமான் சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து கனலாகத் தோன்றிய காரணத்தினால், கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், ‘‘ஒரு திருமுருகனாய் வந்து ஆங்கு உதித்து’’ என்று பாடுவதை இங்கே ஒப்பிடலாம்.) ஓர் முநிக்கு ஓர் வேள்வி காவல் நடத்தி - இக்குறிப்பு தாடகை வதத்தைக் குறிக்கிறது. தாடகையைப் பற்றிக் கூறும்போது, ‘ஓலமிகு தாடகை’ என்றும்  ‘வெடுத்த (சுடு சொல் பேசுபவள்) தாடகை’ என்றும் கூறுகிறார். கீழ்வரும் பாடலில் ‘காதத் தாடகை’ என்கிறார். காதகம் - கொடுமை என்பது காத  என்று குறுகி வந்தது.

‘‘காலைக்கே முழுகிக் குணதிக்கினில்

ஆதித்யா எனப்பகர் தர்ப்பண

காயத்ரி ஜெபம் அர்ச்சனை செயு முனிவோர்கள்

கானத்தாசிரமத்தினில் உத்தம 

வேள்விச்சாலை அளித்தல் பொருட்டு எதிர்

காதத் தாடகையைக் கொல் கிருபைக்கடல்’’ (வேலைப்போல்)

- என்பது அப்பாடல்.

ஒரு பெண்ணைக் கொல்பவரை ‘கிருபைக்கடல்!’ என்று எப்படி அழைக்கலாம்? இப்பாடலில் ‘உத்தம வேள்விச் சாலை’ என்ற கருத்தை ஆராயவேண்டும். பகைவரை அழிப்பதற்காகச் செய்யப்படும் அபிசார வேள்வி போன்றவை கீழ்த்தரமானவை; தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே செய்யப்படும்  வேள்வி நடுத்தரம்; ஆனால், உலக நலன்களை மட்டும் கருதி செய்யப்படுபவை உத்தமம். விஸ்வாமித்திரர் உலக நலனுக்காக வேள்விகள் நடத்தி  வந்தமையால் ‘உத்தம வேள்விச்சாலை’ என்கிறார் அருணகிரியார். உத்தம வேள்விக்கு இடையூறு செய்த தாடகையை வதம் செய்யும் ராமனை அருணகிரியார் ‘க்ருபைக் கடல்’ என்பதில் மிகையேதுமில்லை.  

‘‘தாடகை என்னும் அரக்கியை உன் மாமன் அழித்தது போல நீயும் எனக்குள்ளிருக்கும் அரக்க குணங்களை உன் வேலால் அழித்து விடுவாயாக’’ என்று நாமும் முருகனை வேண்டிக் கொள்வோம். அகற்கு உரு அடியாலே மேவியெ - இது அகலிகை சாபம் நீங்கப் பெற்ற சம்பவக் குறிப்பு. ராமபிரானது திருவடி, காட்டில் நடக்கும் போது ஒரு கல்லின் மேல் பட்டதும் அது அழகிய பெண்ணாக மாறியது. அகலிகை, இந்திரனால் வஞ்சிக்கப்பட்டவள். எனவே, அவள் மீது சுமத்தப்பட்ட பழி தீர ராமன் அவளுக்குச் சாபவிமோசனம் அளிக்கிறான்.

‘‘கலின் வடிவமான 

அகலிகை பெணான 

கமல பத மாயன் மருகோனே’’ (குலையமயி)

-என்று பாடுகிறார் 

அருணகிரிநாதர். மற்றொரு பாடலில், 

‘‘கல்லிலே பொற்றாள் 

படவே அது

நல்ல ரூபத்தே வர 

கானிடை

கௌவை தீரப் போகும்

ராகவன்’’  

(கொள்ளையாசை)

-என்று கூறுகிறார். கௌவை என்றால் பழிச்சொல் என்று பொருள். இப்பாடல் வரிகளில் ஒரு நயம் பொதிந்துள்ளது. ஒரு வைரக் கல்லைப் பார்த்ததும் ‘ஆஹா என்ன அழகு’ என்று கூறுகிறோம். உடனே நம் மனம் குரங்குபோல் தாவுகிறது. இதை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாமா,  காதில் அணிந்து கொள்ளலாமா, மூக்குத்தியாகச் செய்தால் மிளிருமே என்றெல்லாம் நம் எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கின்றன. அந்தக் கல் தங்கத்தில் பதிக்கப்பட்டு ஆபரணமாகச் செய்யப்படும்போது அதன் மதிப்பு பன்மடங்கு கூடுகிறது. இங்கு ‘கல்லிலே பொற்றாள் படவே’ என்கிறார். அதாவது, ராமனது பாதம் பொற்பாதம், அகலிகையோ கல்!

மிதிலைச் சிலை செற்று - மிதிலை நோக்கிச் செல்கின்றனர் விஸ்வாமித்திரரும் ராம லட்சுமணரும். யாராலும் வளைக்க முடியாத சிவதனுசை ராமன் கையில் எடுக்கிறான். இந்நிகழ்ச்சியை காளிதாஸன், ‘‘மன்மதன் மிக லேசான கரும்பினால் செய்யப்பட்ட வில்லை மிகச் சுலபமாக வளைப்பதுபோல் ராமன் சிவதனுசை எடுத்து வளைத்தான்’’ என்கிறான். ‘அலக லல்லலாட’ எனத் துவங்கும் தன் கீர்த்தனையில் ‘‘முனிவரின் வெறும் கண் அசைவை அறிந்து நீ சிவதனுசை  வளைக்கையில் உனது சுருள்முடிக் கற்றைகள் ஒரு வீரனுக்கே உரிய வேகத்துடன் புரள, உன் அந்த அழகையும் புஜபலத்தையும்  கண்ட ராஜரிஷியான விஸ்வாமித்திரன் எத்தனை மகிழ்ந்தானோ ராமா!’’ என்று நெகிழ்கிறார், தியாகராஜர்.

கம்பன் கூற்று மிகப் பிரசித்தம் - ‘‘எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.’’ ஆனால் ‘ஓசை முனிவர்’ என்றழைக்கப்படும் அருணகிரியார் இச்சம்பவத்தை எப்படிப் பாடுகிறார்? ‘‘சிலை மொளுக்கென முறிபட மிதிலையில் ஜனகமனருள் திருவினைப்புணர் அரி’’ என்று! ராமன் வில்லை எடுத்ததைச் சபையோர் உணருமுன் ‘சிலை மொளுக்’கென முறிபட்ட ஓசையைக் கேட்டு விட்டார் அருணை முனிவர்! காட்சியை விளக்குவதெல்லாம் புலவோர் கற்பனையா? அல்லது ராமன் அவர்களுக்கு அவ்வாறு காட்சி அளித்தானா? வால்மீகியால் ராமாயணம் உணரப்பட்டது போல, தியாகராஜருக்கு தரிசனப்பட்டது போல அருணகிரியாருக்கும் மனக்கண் முன் ராமன் தென்பட்டிருக்க வேண்டும்! இல்லாவிடில், ராமன் வில்லை ஒடிக்கும் ஒலி இவ்வளவு தெளிவாகக் கேட்டிருக்குமா! 

அருணகிரியாரின் பாடல்கள் அனைத்திலும் இதுபோன்ற ஒலிப்பதிவுகளை நிறைய… மின் மாது தோள் தழுவிப் பதி புக்கிட - சீதைக்கு மட்டும் ஏராளமான பெயர்கள் சூட்டப்படுகின்றன. இங்கு ‘மின் மாது’ என்பவர் ‘ஜனகமன் அருள் திரு’ என்று பாடுகிறார். வேறொரிடத்தில்  சீதை பெற்ற பெருமைகளுள் தலையாயது அவள் ஜனகரது புதல்வி என்பதுதான் என்கிறார். ஜனகர் பரம ஞானி. அரசாண்டு கொண்டே பற்றற்றவராக  விளங்கியவர். சுகருக்கே உபதேசம் புரிந்தவர். காஞ்சி திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் ‘ஜனகன் அன்புற்றுப் பெற்ற மடப்பெண்’ என்கிறார் அருணகிரியார்.  

சிதம்பரப் பாடலில் ‘ஜனனி மணவாளன் மருகன் என வேதசதமகிழ் குமாரப் பெருமாள் காண்’ என்று பாடுகிறார். திருத்தணிப் பாடலொன்றில், சீதையை வேதவடிவான ஸ்ரீதேவி என்று பொருள்படும்படி, ‘‘வேத லட்சுமியைச் சிறை வீட்டருள் வீர அச்சுதன்’’ என்று புகழ்கிறார். ராமனிடம், ‘‘நீ இதை வளைக்க வேண்டாம், ராவணனை வதம் செய்யப் பரசுராமரது வில் கிடைக்கும். எனவே, இதை நீ ஒடித்து விடலாம்’’ என்று விஸ்வாமித்திரர் கூறியதன்படி வலிமைமிக்க சிவதனுசை ஒடித்து, பின் வேத லட்சுமியாம் சீதையை மணக்கிறான் ராமன். இருவரும் அயோத்திக்குச் செல்கின்றனர்.

‘‘மேலை வானொர் உரைத் தசரற்கு ஒரு பாலனாகி உதித்து,

ஓர் முநிக்கு ஓர்வேள்வி சாவல் நடத்தி, 

அகற்கு உரு அடியாலே மேவியெ

மிதிலைச் சிலை செற்று மின்மாது தோள் தழுவிப் 

பதி புக்கிட’’ 

எனப் பாடும் திருப்புகழ், ராமாயணத்தின் பாலகாண்டத்தைச் சிறப்பிக்கிறது என்று சொல்லலாம்தானே!

நன்றி - தினகரன் ஆன்மிகம் 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக