சனி, 4 மார்ச், 2023

பாகவதம் காட்டும் நரசிம்மம் - கிருஷ்ணா

அந்த பால பாகவதனின் பெயர் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்யகசிபு தன் பிறப்பின் ரகசியம் மறந்திருந்தான். வராஹமாக அவதரித்த பெருமாள் ஹிரன்யாட்சனை வதம் செய்தார். அப்போதே அவனின் அருமை சகோதரரான ஹிரண்யகசிபுவை பகவான் உனக்காக வரவேண்டியிருக்கும் என்பதாக ஒரு பார்வை பார்த்தார். 

ஆனால், அந்தப் பார்வையின் பொருளை இரண்யகசிபுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேவலோகத்தையே பொசுக்க வேண்டும் என தீவிர தவமியற்றினான். பிரம்மா அவனெதிரே தோன்றினார். வரங்களை கேள் என்பதற்கு முன்னரே கேட்டான். பிரம்மா அந்த விசித்திர வரங்களை ஒருமுறை தனக்குள் சொல்லிக் கொண்டார்.

‘இவ்வுலகிலுள்ள எந்த உயிரினாலும் எனக்கு மரணம் நேரக் கூடாது. அரண்மனைக்கு வெளியிலோ, உள்ளிலோ, இரவிலோ, பகலிலோ இறத்தல் கூடாது. ஆயுதத்தாலும் மரணம் வரக் கூடாது. மானிடரும், விலங்குகளும் என்னை கொல்லக் கூடாது. இறுதியாக சகல லோகங்களையும் நானே ஆள வேண்டும்’ என்ற வரங்களை கொடுத்து விட்டு பிரம்ம தேவர் நகர்ந்தார்.

‘‘நானே தேவன்... என்னையே எல்லோரும் தொழ வேண்டும்’’ என்று தொடை தட்டி அமர்ந்தான். ஆனால், அந்த ஹிரண்யகசிபுவின் அருமை மகனான பாகவதன் பிரகலாதன் தந்தைக்கு யார் தேவன், பரமன் என்று ஞாபகப்படுத்த முனைந்தான். முதலில் மனதுக்குள் நாராயண நாமம் உதித்தது. ஊர் முழுவதும் ஹிரண்யகசிபுவின் நாமத்தை உச்சரிக்கும் வேளையில், இவன் வாக்கிலிருந்து ‘நாராயணா... நாராயணா…’ என்று சொல்வதை அவனின் தாய் கேட்டு அதிர்ந்தாள். பிற்காலத்தில் சரியாகிப் போகுமென்று அமைதியானாள். 

‘’நானே உனக்குத் தலைவன்... நீ வழிபட வேண்டியவன் எங்கோ உறங்கிக் கொண்டிருப்பவனல்ல. உன் எதிரே இருக்கும் இந்த ஹிரண்யன்தான் உன் வழிபாட்டிற்குரியவன்’’ என்று பெரிய பல் காட்டி மக்கள் எதிரே கூவுவான். வழிபடாதவர்களை வகிர்ந்தான். வழிபட்டோர்களை தன் அரியணைக்கு எதிரே அமர்த்தினான். பிரம்மாவிற்கு சமமான பதவி கிடைத்தவுடன் யாக, யக்ஞத்தில் முழுப்பலனும் இவனுக்கே வந்தது. அது இன்னும் அவனை வலிமையாக்கியது. ஹோமம் நடத்தியதாலேயே பஞ்சம், பட்டினி எதுவுமில்லாமல் சுபிட்சமாக எல்லோரும் வாழ்ந்தனர். எல்லாரும் என் பெயர் சொல்வதால்தான் நன்றாக இருக்கிறார்கள் எனும் மாயையில் சுற்றித் திரிந்தான்.

ஆனால், எங்கோ பல்லில் சிக்கிய நாராய் தன் மகன் நெருடிக் கொண்டிருந்தான். நாராயணனின் நாமத்தை கண்மூடி அவன் சொல்வதை அவ்வப்போது பார்த்திருக்கிறான். பல்லில் சிக்கிய அந்த நார்போல, அந்த குணத்தை லாவகமாக களைய வேண்டுமே என கவலை கொண்டான். தன் பெருநகம் பிள்ளையின் நாவினையே கிழித்துவிடும் என்று பயந்தான். அதனால், தகுந்த குருவினிடம், ‘‘அவன் வேறெந்த பெயரையோ சொல்லிக் கொண்டிருக்கிறான். கொஞ்சம் வார்த்தையை மாற்றிச் சொல்ல கற்றுக் கொடுங்கள்’’ என்று கட்டளையிட்டான்.

பிரகலாதன் எப்போதும் தன் நிலையிலிருந்து பிறழாது வாழ்ந்தான். எம்பெருமானைத்தவிர வேறு எதையும் அறியாதிருந்தான். அருகே அண்டியோரை அவர் பதம் சேர்த்தான். மெல்ல ஹிரண்யகசிபுவின் செவியிலும் பரந்தாமன் நாமம் எங்கிருந்தோ எதிரொலித்தது. என்னவென்று திரும்பிப் பார்க்க... பிரகலாதன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாராயணனின் நாமத்தை உபதேசித்துக் கொண்டிருந்தான். ஹிரண்யனின் கண்கள் தீக்கங்குகளை குமுறிக் கொண்டிருந்தது. அது குழந்தைதானே என்று மனம் மெல்ல குளுமையாகியது. குழந்தை பெரிய பண்டிதனாய் மாறியிருந்தது. தன் தந்தையின் நினைவை எல்லோர் நெஞ்சிலிருந்தும் அழிக்கத் துவங்கியது. 

‘’என் தந்தை வெறும் கருவி. அதை இயக்குபவன் நாராயணன். அவரைச் சரணடையுங்கள். அவர் பதம் பற்றிடுங்கள். தந்தை பற்றிய பயம் அறுத்திடுங்கள்’’ என்று நிதானமாய், தீர்க்கமாய் பேசியது. “இதை உங்கள் தந்தையிடம் கூற முடியுமா” என்று கேட்டதற்கு மெல்ல சிரித்தது. ‘’கூறுவது என்ன... அவரே பார்ப்பார்’’ என்று மழலையாய் சிரித்தது. அதைக்கேட்ட கூட்டம் மெல்ல மிரண்டது. சற்று பின்னே நகர்ந்து உட்கார்ந்தது.

பிரகலாதனுக்குப் பின்னால் ஒரு அசுர வீரன் கோரப்பல் காட்டிச் சிரித்தான். 

தந்தை அழைத்துவரும்படிச் சொன்னான். ‘நாராயணா’ என்று சொல்லி பிரகலாதன் எழுந்தான். ஹிரண்யனை சட்டென்று ஒரு பயம் சூழ்ந்து கொண்டது. மெல்ல முறுக்கியது. பிரகலாதனைப் பார்த்தவுடன் இன்னும் இருள வைத்தது. அவனை விழுங்கும் பார்வையாய் வெறித்துப் பார்த்தான். காலால் மிதிக்கப் பட்ட பாம்பைப் போல பெருமூச்சு விட்டான். 

‘‘மூவுலகங்களும் என் பெயர் சொன்னால் குலுங்கும் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? என் குலப் பெருமை உன்னால் குன்றினால் உன்னை கொன்று போடவும் தயங்கமாட்டேன். மூடனைப் போல் பேசாதே. இந்த உலகத்திற்கு அதிபதி யார்? இப்போதே சொல்!’’

ஹிரண்யகசிபுவின் வார்த்தைகளை பிரகலாதன் வணக்கமாய் கைகட்டி கேட்டான். தந்தையை தீர்க்கமாகப் பார்த்தான். தர்மத்தை அழகுபட கூறத் தொடங்கினான். 

‘‘தந்தையே... நீர் தந்தை எமக்கு. நாராயணர் தந்தை நமக்கு. உங்கள் குழப்பம் மிக எளிது. பணிவாய் பரந்தாமனிடம் கேட்க சித்தம் தெளிவாகும். அவர் தவிர வேறு எதுவும் எங்கேயும் இல்லை. இது உங்களின் பார்வைப் பிசகு. அது தெளிவானால் பரமபதம் நிச்சயம். அது இங்கேயே இப்பொழுதே உள்ளது. அண்டமும், இந்தப் பிண்டமும், சகஸ்ரகோடி உலகங்களும் எந்தப் புருஷனால் சிருஷ்டிக்கப் பட்டதோ, எவரால் பாலிக்கப்படுகிறதோ அவரே உமக்கும், எமக்கும் அகிலத்துக்கும் தந்தை. அவரே அதிபதி’’ என்று நிதானமாய் சொன்னான்.

 ஹிரண்யன் வெறிபிடித்ததுபோல் அலறினான். அந்தப் பாலகனை அந்தரத்தில் தூக்கினான். அவனை நெறித்தான். தூரமாய் தூக்கி எறிந்தான். 

‘‘சாகும் தருணத்தில் பேசுவதுபோல் பேசுகிறாய். பெரிய பண்டிதன்போல் உபதேசிக்கிறாய். இதோ பார் உன்னை என்ன செய்கிறேன்’’ என்று அசுரர்களைப் பார்த்தான். அவர்கள் பிரகலாதனை கொத்தாய் பிடித்து தூக்கிப் போனார்கள். மதம் கொண்ட யானையை அவிழ்த்து விட்டார்கள். மறைந்து நின்று பிரகலாதனைப் பார்த்தார்கள். மதம் கொண்ட களிறு கட்டுக் கடங்காது பாய்ந்து வந்தது. 

பிரகலாதன் கண்கள் மூடினான். பாற்கடலில் பேரலைகள் எழுந்து எழுந்து அடங்கியது.  அரண்மனையில் ஹிரண்யன் குமுறிக் கொண்டிருந்தான். பிரகலாதனின் தாய் தேம்பிக் கொண்டிருந்தாள். பாய்ந்து வந்தது மெல்ல நின்றது. பின்னோக்கி பதுங்கி நகர்ந்தது. மண்டியிட்டு அமர்ந்தது. தும்பிக்கையை உயரத் தூக்கி தொழுதது. அசுரர்கள் உறைந்தார்கள். ஓடிப் போய் அரக்கத் தலைவனிடம் சொன்னார்கள். அவன் ஆவேசமானான். உரக்க பேரிரைச்சலாய் அலறினான். ‘’எங்கே அந்த நாராயணன். அவனை என் எதிரே வரச் சொல்லுங்கள்!’’ தனக்குத்தானே அந்த பெரிய அரண்மனையில் கூவித் திரிந்தான். அவன் அலறல் அந்த ஊரையே கிடுகிடுக்கச் செய்தது.

பூலோகம் மெல்ல வேறொரு தாளகதியில் இயங்கியது. அரண்மனையை ஒரு பெருஞ் சக்தி மையம் கொண்டிருந்தது. அசுரர்கள் தங்கள் கால் தடுக்கி தாங்களே விழுந்தார்கள். ஹிரண்யன் தலைவிரிகோலமாய் எங்கோ எதையோ வெறித்தபடி கிடந்தான். மெல்ல பிற்பகல் மங்கி அந்தி நெருங்கியது. எங்கோ தொலைதூரத்தில் இடி இடித்தது. மெல்ல அந்த அரண்மனையில் இறங்கியது. 

நகராத அந்தச் சக்தி அசையாத அந்தக் கம்பத்தில் குவிந்தது. பிரகலாதன் கண் விழித்தான். எதிரே இருந்த யானையை ஆதூரமாய் தடவிக்கொடுத்தான். அரண்மனைக்குள் நுழைந்தான். சட்டென்று சிலீர் என்று ஓர் உணர்வு உடல் முழுவதும் பிரவாகமாய் பரவியது. தன் தந்தையின் எதிரே போய் அடக்கமாய் நின்றான். ஹிரண்யன் அகங்காரச் சிகரம் தொட்டு விட்டிருந்தான். கண்களும், முகமும் கனலாய் சிவந்திருந்தது. பிரகலாதன் மென்மையாய் பார்த்தான். ‘‘இந்த ஜகத்திற்கு அதிபதி அந்த நாராயணன் என்று சொன்னாயல்லவா. அவன் எங்குமிருக்கிறானா?’’

‘‘அவர் உங்களுக்குள்ளும் இருக்கிறார்!’’ ஹிரண்யன் வெகுண்டான்.

‘‘அப்படியெனில் இப்போது உன் தலையை வெட்டுகிறேன். உன் நாராயணன் எப்படி வருகிறான் என்று பார்க்கிறேன்’’ என்று மெல்ல நகர்ந்தான். ‘இங்கே உள்ளானா அவன்’ என்றான். பிரகலாதன் ‘ஆமாம்’ என்றான். இன்னும் நகர்ந்து ‘அங்குமுள்ளானா’ என்று அந்த கம்பத்தைக் காண்பித்தான். பிரகலாதன் தலையசைக்க ஹிரண்யன் நகர்ந்து கதையால் அந்த கம்பம் எனும் அசையாத மையச் சக்தியை தன் அகங்காரம் எனும் கதையால் அடிக்க அது வெடிச்சிதறலாய் பேரிடியாய் அந்தக் கம்பத்திலிருந்து வெளிப்பட்டது. 

ஸ்தம்பமாய், ஸ்தாணுவாய் இருந்த அந்த மையச் சக்தி முற்றிலும் வேறொரு ரூபத்தில் கிளர்ந்தெழ ஆரம்பித்தது. பிரபஞ்சத்தின் மையம் அசைந்ததால் மூவுலகமும் அதிர்ந்தது. இதென்ன விசித்திரம் என்று தேவர்களும், பிரம்மாக்களும் பூலோகம் திரும்பினர். அசுரசேனாதிபதிகள் நடுங்கினார்கள். அந்தச் சக்தியின் உருவம் பார்த்து விதிர்த்துப் போனார்கள்.

மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் நர உடலும், சிங்க முகத்தோடும் இருந்தது. உருகிய தங்கம் போன்ற கண்களோடு கூர்மையாய் பார்த்தது. சிங்க முகத்தின் பிடரி சிலிர்த்து அசைந்தது. பிடரி மயிர்கள் மேகத்தை அடித்தது. அவர் கர்ஜிக்கும்போது குகைபோலுள்ள அந்த வாய் திறந்தது. கன்னங்கள் பிளந்து பெருஞ் சிரிப்போடு பெரிய பெருமாளாய் வானுக்கும் பூமிக்குமாய் நிமிர்ந்தார். நரக லோகத்தையே தன் ஆயுதமாகக் கொண்டார். நெற்றிக்கு நடுவே பெருஞ்ஜோதி தகதகத்து எரிந்தது. நான்கு பக்கங்களிலும் பரவிய கைகளை உடையது. சங்கு சக்கரத்தோடு பிரயோகமாய் சுழற்றியது.

பிரகலாதன் நெருப்பென்று நின்ற அந்த நெடுமாலை நிமிர்ந்து பார்த்தான். கண்களில் நீர் வழிய கைதொழுதான். தன் தந்தையை பார்த்தான் அவன் உள்ளுக்குள்ளும் ஏதோ ஒன்று கிளர்ந்தெழுந்தது. தன் தந்தையையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான். சட்டென்று ஒரு ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அவன் உள்ளத்தில் தளும்பி நின்றது. தன் தந்தையின் கடவுள் தேடலிலுள்ள உக்கிரம் அவனை உறைய வைத்தது. இடையறாது எம்பெருமானையே விரோதியாய் நினைத்துக் கொண்டிருக்கும் வினோதம் வியக்க வைத்தது. 

நண்பனைக் கூட மறந்து விடலாம் ஆனால், எதிரியை எப்படி மறக்க முடியும் எனும் தந்தையின் தந்திரம் பிரகலாதனை திணறடித்தது. அவர் கரத்தில் தவழ்ந்து, மடியில் படர்ந்து, லாவணை செய்து தன் கர்வம் கிழிக்கப்பட வேண்டும் எனும் தந்தை வாங்கிய வரங்கள் ஒவ்வொன்றாய் நினைவில் வந்தன. தந்தையின் தானெனும் முனைப்பு மெல்லிய நூலாய் அறுபடும் நிலையில் உள்ளதை அறிந்தான். 

ஹிரண்யகசிபு ராஜசிம்மத்தின் அருகே போனான். ‘‘நீ என்ன மாயாவியா. ஜாலவித்தை காட்டுகிறாயா. உன் வித்தையை என் மகனிடம் வைத்துக் கொள்’’ என்று தன் கதையால் தொடர்ச்சியாய் தாக்கினான். சிம்மம் சிலிர்த்துத் திரும்பியது. காலை, மாலை எனும் இரண்டு வேளையுமல்லாத சந்த்யா வேளை எனும் அந்திப் பொழுதில் ஆயிரம் சூரியனும் ஒன்றாகும் பெருஞ் சிவப்பாய் திகழ்ந்த நரசிம்மர் ஹிரண்யகசிபுவை அள்ளி எடுத்தார். ஞானம், அஞ்ஞானம் என்று இரு வாசலுக்கு நடுவேயுள்ள பெருவீட்டு வாசலில் வைத்து அவனின் நெஞ்சைக் கிழித்தார்.

அவனின் அகங்காரத்தை தன் சக்ராயுதத்தால் இருகூறாக்கினார். பேய்போல் அலறினான். அவனை மாலையாக்கினார். தன் கழுத்தில் தொங்கவிட்டார். நரசிம்மர் அரண்மனையின் சிங்காசனத்தில் கர்ஜிப்போடு அமர்ந்தார். அரண்மனை கொதித்துக் கொண்டிருந்தது. பிரகலாதனின் அகம் குளிர்ந்து கிடந்தது. குளுமையான துதிகளை கோர்த்து அழகான மாலையைப் போட்டான். அவரும் மெல்ல உருகினார். 

‘‘தங்களை துதிப்பதற்கான பிரவாகமான வார்த்தைகள் என்னிடம் இல்லை. அது தேவர்களாலும், பிரம்மாவாலும் மட்டுமே முடியும். அசுர குலத்தில் உதித்த எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்ன? எல்லோரும் தங்களின் உக்கிரமான ரூபத்தை விட்டு விலகி நிற்கிறார்கள். ஆனால், எனக்கு இந்த ரூபத்தில்தான் பிரேமை கூடியுள்ளது. உக்கிரம் இந்த உலகத்திடம்தான் எனக்கு அதிகமாக உள்ளது. கர்ம வாசனைகள் கூடிக் கொண்டே போகிறதே என்று உள்ளம் நடுங்குகிறது. 

எத்தனை மோசமான ஜந்துக்கள் இந்த ஜீவனை கட்டுகின்றன என்று பயந்தபடியே உள்ளேன். உலக விஷயங்களில் மீண்டும் மீண்டும் சுகங்களை தேடும் இவர்களை பார்த்தால் அச்சமும், தவிப்பும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே, தங்களின் திருவடியிலேயே என் மனம் அழுந்தும்படியான பாக்கியத்தை கொடுங்கள். பக்தியைத் தவிர வேறு எதனாலும் அடைய முடியாது என்றுதானே பாகவதர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 

பாமர மனிதர்கள் செய்யும் பூஜையை பகவானான நீங்கள் உங்களுக்காக செய்து கொள்வதில்லை. அபரிமிதமான கருணையால் ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால், கண்ணாடியில் பிரதிபிம்பம் தெரிவதுபோல இறைவனை அழகு செய்தவன் தானே அழகாகும் விந்தையை அதன் மூலம் நிகழ்த்துகிறீர்கள். பல ஜென்மங்கள் ஆகிவிட்டன பகவானே... பல ஜென்மங்களை எடுத்தெடுத்து இளைத்து விட்டேன். வேண்டியது கிடைக்காமலும், வேண்டாதது கிடைத்தபடியும் என்று சுழலில் சிக்கியபடியே இப்போது தப்பி இங்கு வந்திருக்கிறேன். 

இந்த தேகம் நான் என்கிற அபிமானத்தால் சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்தேன். உங்களுடைய தாசனாக இருந்தால் அந்த துக்கம் தீரும் என்றும் தெரிந்து வைத்துள்ளேன். சொர்க்கமே தோற்றுப் போகும் அளவிற்கு என் தந்தையிடம் சகலமும் இருந்தது. கண்களின் அசைவிலேயே மூவுலகிலுள்ள போகப் பொருட்களையும் கணநேரத்தில் கொண்டுவரச் செய்வார்.

ஆனால், இதோ உங்களால் கிழிக்கப்பட்டு அழிந்து கிடக்கிறார். இப்பேற்பட்ட பேரரசனின் அழிவை பார்த்து விட்டேன். சீ... புலன்களில் என்ன சுகம் இருக்கிறது. ஆனால், இந்த பாழுங் கிணற்றில்தான் இந்த மனிதர்கள் சிக்கியுள்ளனர். இவற்றையெல்லாம் நன்கு அறிந்தவர்கள் கூட இந்த பொல்லாத மனதிடம் தோற்று விடுகின்றனர். 

வைகுண்டநாதா... பரந்தாமா... நிறைய கர்ம வாசனைகளால் என் இருதயம் மூடிக் கிடக்கிறது. உலகப் புழுக்கம் தாங்க முடியவில்லை. மனமோ என்ன சொன்னாலும் கேட்காமல் வெளியுலக விஷயங்களை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது. அடங்கு... அடங்கு... என்றால் செவிடன் போல நடிக்கிறது. ஆஹா... இப்படி ஓடுகிறதே எனும் நினைப்பும் கூட அதற்கு எழவில்லை. எப்படியெல்லாம் என்னை ஏமாற்றுகிறது.

நீங்கள் எல்லாவிதமாகவும் இருக்கிறீர்கள். எல்லாவற்றினுள்ளும் இருந்து அசைக்கிறீர்கள். அசைவும் நீங்கள்தான். அசைவற்றவரும் நீங்கள்தான். அனுபவிப்பவரும் நீங்கள்தான். எதையும் அனுபவிக்காது சாட்சி ரூபமாக இருக்கும் ஆத்மாவும் நீங்கள்தான். ஆனால், மனிதர்களோ என் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்ளாவிடில் யார் கவனிப்பார்கள் என்கிறார்கள். நீ குடும்பத்திற்குள் இரு. ஆனால், உனக்குள் குடும்பம் இருக்கிறதே அது மாயை என்றால் நம்ப மறுக்கிறார்கள். செய்ய வேண்டியதை செய். ஆனால், எல்லாவற்றையும் அவன் செய்கிறான் என்றால் தலையாட்டி விட்டு நான் தான் செய்கிறேன். செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள். 

ஆசைகள் நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர, இருப்பது போதும் என்று இருக்க முடியவில்லை. சந்தோஷம், பயம், வருத்தம், புத்திர பாசம், மனைவியின் மீது காதல், பந்துக்களோடு நட்பு என்று மாறிமாறி இதுதான் என் கண்ணிற்கு தெரிகிறது. இந்த நாக்கு விதவிதமான ருசிகளை நோக்கியே இழுக்கிறது. சிற்றின்ப சுகத்திற்காக அழகான பெண்களை நோக்கியே மனம் நாடுகிறது. இப்படி இருக்கும்போது உன்னுடைய கதை எனும் அமுதத்தை எப்படி என்னால் பருக முடியும். அதில் என்ன இருக்கிறது என்றுதான் என் மனம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தாங்கள் என்னை மட்டும் மோட்ச மார்க்கத்தில் அழைத்துச் செல்லாமல் எல்லோரையுமே அழைத்துச் செல்லுங்களேன். ஏனெனில், அப்பேற்பட்ட மகாபுருஷர் நீங்கள் மட்டும்தான் என்பதை நான் நன்கு அறிவேன்.’’

‘‘உன்னுடைய அழகுப் பேச்சு என்னையே கவர்ந்து விட்டது. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’

‘‘இல்லை பகவானே... இல்லை. பக்தனுடைய லட்சணத்தை அறிந்தவர்கள் நீங்கள். மீண்டும் வரத்தை கேள் என்று சொல்லாதீர்கள். எந்த உத்தம பக்தனும் வரத்தை கேட்க மாட்டான். ஏனெனில், அப்படி கேட்கும்போதே அவன் வணிகனாகி விடுகிறான். என்னை தயை கூர்ந்து வணிகனாக பார்க்காதீர்கள். நாமிருவரும் பரஸ்பர வியாபாரிகளல்ல. எப்போதே வேண்டிக் கொண்டதை யாரையோ கருவியாக்கி அனுப்பி எனக்கு உதவச் செய்யாதீர்கள். 

இறைவனே உன் ரூபத்தில் எனக்கு வந்து உதவுகிறார் என்று அவனிடம் என்னை நன்றி கூறச் செய்யாதீர்கள். உங்களுக்கும் எனக்கும் நடுவில் கருவியாக யாரும் வேண்டாம். உங்கள் ரூபத்தில் வேறொருவரிடம் நான் உதவி பெறுவதை விரும்பவில்லை. ஏனெனில், வரங்களை நான் அப்படித்தான் பார்க்கிறேன். நான் எதையுமே விரும்பாத உங்களின் பக்தன். எனக்கு அப்படியே வரம் கொடுக்க தீர்மானித்தால் எந்த ஆசையுமே எழாத வரத்தை கொடுங்கள். ஆச்சரியமான சிம்ம உருவம் கொண்டவரே உங்களை நமஸ்கரித்து கேட்கிறேன்’’ என்று துணிச்சலோடு கேட்டார். 

நரசிம்மர் மெல்ல அள்ளி தன் மடியில் அமர்த்திக் கொண்டார். தாய்ப்பசு கன்றை நக்கிக் கொடுப்பதுபோல நாக்கினால் வருடினார். இதைவிட வேறென்ன வேண்டும் என்று பிரகலாதன் ரிஷிகளைப்போல சமாதியில் ஆழ்ந்தான். தேவலோகமே ஆச்சரியத்தில் ஆனந்தித்தது.

‘‘பிரகலாதா... நீ எப்போதும் என் கதைகளை கேட்டு ஆனந்தமடைவாய். உன்னையும் என்னையும் இந்த என் சரித்திரத்தையும் நினைத்துக் கொண்டும், உன்னால் என் பொருட்டு நீ இப்போது துதித்தாயே இந்த துதிகளை எப்போது ஒரு மனிதன் சொல்லுவானோ அல்லது நினைப்பானோ அவன் அந்தக் கணமே கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவான்.’’ என்று சிம்ம பகவான் சிலிர்த்தார்.  

சுகப் பிரம்மம் இதைச் சொல்ல சொல்ல பரீட்சித்தின் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது.

‘‘பார்த்தாயா... பரீட்சித். எப்படி கேட்டிருக்கிறான் பார். அவன் தனக்காக எதையும் துதிக்கவில்லை. அவன் எப்போதுமே பிரம்மத்திலேயே ஆழ்ந்திருக்கும் பிரகலாதாழ்வான். ஆனால், மானிடர்களின் மீதுள்ள கருணையால் அந்த நாராயணனிடம் என்ன கேட்க வேண்டுமென்று சொல்லிக்கொடுக்கிறான். அவ்வளவுதான்.’’

நரசிம்ம பகவான் அவதரித்த அந்தி வேளையிலேயே இந்தக் கதையை சுகப்பிரம்ம ரிஷி சொல்லி முடித்தார். ஆதவன் மேற்கின் அடியில் சரிந்தான். ஆனால், பரீட்சித் என்கிற மன்னன் பாகவதனாக உயர்ந்தெழுந்தான். கங்கையின் பிரவாகத்தில் நீரோடு உருளும் கூழாங்கற்கள்போல பரீட்சித்துக்குள் நாராயண நாமம் உருண்டபடி இருந்தது. 

நன்றி - தினகரன் ஆன்மிகம் மே 2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக