ஞாயிறு, 16 ஜூன், 2024

சீதை ஏன் சிறைப்பட்டாள்? - வேளுக்குடி கிருஷ்ணன்

இலங்கையை விட்டுக் கிளம்பும் முன்பு ராமர், சீதைக்கு லங்காபுரியைச் சுற்றிக்காட்டுகிறார். ''சீதா! இந்த இடத்தில்தான் கும்பகர்ணன் அழிந்தான், இங்குதான் ராவணனைக் கொன்றேன், இங்கேதான், இந்திரஜித்தை லட்சுமணன் முடித்தான்..." என்றவர், 


"சரி... ஒருமுறை இந்த இலங்கையை உனது கண்களால் பார்” என்றார். ''அதைத்தானே இத்தனை நாளும் செய்துகொண்டிருந்தேன். இவ்வளவு காலமும் இங்கேதானே இருந்தேன்?" என்றாள் பிராட்டி.


"நீ இங்கே இருந்ததும் உண்மை, பார்த்ததும் உண்மை. ஆனால், அது கோபப்பார்வை. இப்போது கண்குளிரப் பார். ஏனெனில், நம் பிள்ளை விபீஷணன், இனி இந்த தேசத்தை ஆளப்போகிறான். உன் கடாட்சம் இருந்தால்தான் அவனால் சிறப்பாக ராஜ்ஜியம் நடத்த முடியும்" என்றார்.


உடனே பிராட்டி, தனது மனதிலுள்ள மங்கள எண்ணங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, இலங்கையை கண்குளிரக் கடாட்சித்தாள் என்கிறது வால்மீகி ராமாயணம்.


'சுக்ரீவன் விஷயத்தில், கடாட்சித்தது பிராட்டி போலவே தெரியவில்லையே’ என்று சந்தேகப்படுவோர் உண்டு. இந்த சந்தேகம் பிராட்டிக்கே வந்து விட்டதாம். அவள் அனுமனிடம், 'குரங்குகளுக்கும் மனுஷர்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது?' என்று கேட்டாளாம். அதாவது, தனது அனுக்கிரகம் இல்லாமல், ராமபிரானின் அனுக்கிரகத்தை அவர்கள் எப்படிப் பெற்றார்கள்? என்பது அவளது சந்தேகத்துக்கான காரணம்.


அனுமன் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்... "தாயே! தங்கள் அனுக்கிரகம் இல்லாமல், நாங்கள் எப்படிப் பெருமானின் கடாட்சத்தை அடைய முடியும்? தாங்கள், ராவணனால் ஆகாச மார்க்கமாக கடத்தப்பட்டபோது, உங்கள் ஆபரணங்களை மூட்டையாகக் கட்டி கீழே போட்டீர்கள் இல்லையா? நாங்கள் ரிஷ்யசிருங்க மலையில் இருந்தபோது எங்கள் கையில்தானே அவை கிடைத்தன.


அந்த ஆபரணங்கள் வழியாக, தங்கள் கடாட்சம் கிடைத்த பிறகுதானே, ராமபிரானின் அனுக்கிரகம் எங்களுக்குக் கிடைத்தது. தங்கள் சம்பந்தமின்றி அவர் அனுக்கிரகம் எங்களுக்கு எப்படிக் கிடைக்க முடியும்?" என்று பதிலளித்தார்.


சீதா பிராட்டி கடத்தப்பட்டதில் இன்னொரு ஆனந்தமான விஷயம்.


எல்லோரும் ராமனைச் சரணடைந்தார்கள். ஒரு ராட்சதனையும் சரணாகதம் ஆக்கத்தான் ராமனே இலங்கை வந்தார். அதற்காகத்தான் சீதா பிராட்டியும் இலங்கை சென்றதே! பிள்ளை லோகாச் சாரியார் என்ன சாதிக்கிறார் (சொல்கிறார்) தெரியுமா?


'பிராட்டியின் சக்தி என்ன வென்று தெரியாதவர்கள் தான், ராவண பலாத்காரத்தால், சீதா பிராட்டி கடத்தப் பட்டாள் என நினைப்பார்கள். ஆனால், ராட்சதனையும் சரணாகதி அடையச் செய்ய, சீதா பிராட்டி உருவாக்கிக்கொண்ட சந்தர்ப்பமே அது' என்கிறார்.


பிராட்டியின் சக்தி அபரிமிதமானது. சீதா பிராட்டி தான் ராவணனை கட்டித் தூக்கிச் சென்றாளே தவிர, ராவணன் அவளைத் தூக்கிச் செல்லவில்லை. பிராட்டி ஏன் சிறைப்பட்டாள்? தான் உள்ளே போனால்தான் மற்றவர்களுடைய சிறையை அறுத்து விட முடியும் என்பதால்தான்! அவள் சிறைப்பட்டால் தான், தேவஸ்திரீகளின் சிறையை வெட்டி விட முடியும்! அது மட்டுமா! சம்சாரிகள் இந்த ராவணனால் படும் துன்பத்தில் இருந்து தீர்த்து விட முடியும். அதற்காகத்தான் சீதை வலியப் போய் சிறைப்பட்டாள்.


ஒருவன் கிணற்றில் விழுந்து விட்டான். அவனைத் தூக்கிவிட, ஓரளவு ஆழத்துக்கு வேண்டுமானால் கயிறைக் கட்டி தூக்க முயற்சிக்கலாம். ஆழம் அதிகமென்றால், உள்ளே குதித்துதான், கிணற்றுக்குள் கிடப்பவனை மீட்டு வர முடியும். சீதாதேவி அதைத் தான் செய்தாள். அவளைப் பற்றினால்தான் பிறகு அவனைப் பற்ற முடியும்.


- வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் சொற்பொழிவிலிருந்து... வேதவல்லி

நன்றி - தீபம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக