செவ்வாய், 18 ஜூன், 2024

நேர்கொண்ட பா(ர்)வை ஆண்டாள் - முனைவர் ந. மைதிலி

ஆண்டாள் நாராயணன் மீது பக்தி வைத்ததோடு அல்லாமல், தம்மைச் சேர்ந்தார்க்கும் அப்பக்திப் பாதையைக் காட்டும் விதத்தில் ஞானாசிரியனாகத் திகழ்கின்றாள். கோவிந்தனின் புகழை நா மணக்கப் பாடி இறையருளைப் பெற்று வீடுபேற்றை அளிக்கவல்ல ஞானத்தைப் போதிப்பவள். 

ஆண்டாளின் இல்லம் வில்லிபுத்தூரெனினும் அவளைப் பொறுத்தமட்டில் அஃது ஆயர்பாடியே. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் கற்பனை ஆயர்பாடியில் அவள் கண்டது உண்மையான திவ்ய தரிசனம் அளிக்கும் கண்ணனுடன் இரண்டென்றில்லாமல் ஒருவராய் வாழ்ந்தது. இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவளின் நேர்கொண்ட பார்வை.


தூய தமிழ்ச் சொல்லாகிய இந்த 'நேர்' என்ற சொல் பல பொருள்களைத் தன்னுள் கொண்டது. அந்தப் பல பொருள்களினூடே இப்பாவையாம் ஆண்டாளின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


நேர் என்பது என்னவென்றால் கோணலின்றி அதாவது வளைவு இல்லாமல் இருப்பது என்பது நேரிடையான பொருள். ஆண்டாளின் முதல் நேரிடையான பார்வை நேர்கொண்ட பார்வை. எப்படியெனில், எம்பெருமானாம் இறையை மணாளனாக அடைய வேண்டும் / அடைந்தே தீரவேண்டும் என்பதில் குறிக்கோளை அடைய வேண்டி பாடுபட்டாளே அல்லாமல் தன் குறிக் கோளைவிட்டு வாழ ஒருபொழுதும் வளைவின்றி நேர்வழியில் நின்றவள்.


"மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழ்கிலேன்” எனும் கூற்றால் மேற்சொன்ன உறுதிப்பாடு வலுப்பெறும்.


மேலும், திருத்தமான தன்மை, வரிசை, உடன்பாடு, கொடை, நுண்மை, நிலைப்பு, உவமை முதலானவை 'நேர்' என்ற சொல்லுக்குரிய பொருள்களாகும். இவையனைத்தும் ஆண்டாளுக்குப் பொருந்தும். பாவையின் பாசுரங்கள் வழி இவற்றை நாம் நிறுவ முடியும்.


“தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்” (திருப்பாவை, பாடல் 8) - இத்தொடரில் ஆண்டாளின் நேரிய பார்வை எப்படியிருக்கிறதென்றால், திருத்தமான தன்மை உடையளாய், எம்பெருமானிடத்து உடன்பாடு கொண்டு நிலைப்புடன் விளங்குகின்றாள். திருத்தமான/ஆதாரமான செய்தி தேவாதி தேவன் கண்ணன் என்பது, சேவித்தால் உடன்பாடு கொண்டால், நிச்சயமாக அருள்வான் என்பது நிலைப்பு. இப்படியாக நேர்கொண்ட பார்வை ஆகிறாள்.


அடுத்து நேர் என்பது வரிசை எனப்படும். “அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி” என்ற பாசுரத்தில் இறைவனின் வீரதீர பராக்ரம செயல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதால், இவ்வகை யிலும் ஆண்டாள் நேர்கொண்ட பார்வை ஆகிறாள்.



“கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்...." என்ற திருப்பாவை ஏழாம் பாடலில் ஆனைச் சாத்தன் என்ற குருவிக்கூட்டம் கலந்து பேசின பேச்சைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பாள். இச்செய்தி மிகவும் அரிய செய்தி மற்றும் நுட்பமான செய்தி. கூர்ந்து கவனித்து உற்றுநோக்கும் தன்மையுடையார்க்கே இவை புலப்படும். இத்தன்மையில் ஆண்டாள் திறம்பெற்றிருப்பதைக் காணுங்கால், அவளின் கூர்ந்த மதிநுட்பம் புலப்படுகின்றது. இத்தன்மை நுண்மை என்று சொல்லப்படும். நேர் என்ற பதத்திற்கு நுண்மை என்ற பொருளுமுண்டு. இச்செய்தியும் ஆண்டாள் நேர்கொண்ட பார்வையாள் என்பதை வலியுறுத்தும்.


இனி, நேர் எனின் கொடை என்றாகும். தமிழுக்குத் தீந்தமிழ்ப் பனுவலாம் திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் அளித்த ஆண்டாளின் செயல் தமிழுக்குக் கொடையாகும் என்பதில் ஐயமுண்டோ?


இறையை முப்பொழுதும் நெருங்கி நின்றவள் ஆண்டாள். "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று பாடியிருப்பதன் மூலம் பறை பெறுதல் வேண்டி நின்றதுவும், இந்த மானுடபந்தம் வீணானது; இறையோடு கூடிய சுகானுபவமான பந்தமே நிலைத்த பந்தம் என்பதை நிறுவுவதோடு, மானிடத் தொடர்பை அறுத்தல் செய்கின்றாள். அதே சமயத்தில் இறைவன் நம்மைக் காப்பான் என உறுதியும் கொள்கிறான். ஆண்டவனை அண்டி நின்று தன் வேட்கையைத் தெரிவிக்கிறாள். “நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்”

என்றுரைத்துத் தன் நெருக்கத்தைப் புலப்படத்து கின்றான். எம்பெருமானே! உன் பஞ்சணைக்கு அருகே வந்து காத்துள்ளோம் என்ற செய்தி ஆண்டாளின் நேர்கொண்ட பார்வையை உறுதிப் படுத்துகின்றது.


அடுத்து, பாவையின் பார்வை எப்படியுள்ளது? பார்வை என்பது கண்ணுக்குப் புலப்படும் காட்சி. தோற்றம் என்றும் குறிப்பிடலாம். ஆண்டாள் திருமாலை, வைகுண்டத்தில் உறைபவனாகவும், திருப்பாற்கடலில் துயில் கொள்பவனாகவும், யசோதையின் இல்லத்தில் இருப்பவனாகவும் காண்கிறாள்.


"மாமாயன் மாதவன் வைகுந்தன்" - வைகுண்டத்தில் எழுந்தருளிய தன்மை.

“பையத் துயின்ற பரமனடி பாடி" - பாற்கடலில் துயிலும் தன்மை.

“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” ஆயர்பாடியில் யசோதை இல்லத்தில் உறைபவன்.


இப்படியாகப் பரமனின் உறைவிடத்தைப் பாவை பார்க்கின்றாள். எனவே, வளைவில்லாத திருத்தமான தன்மையுடன் நேர்மை, நல்லொழுக்கம் முதலான பண்புகளை உடையவளாய், இறைவனின் புகழ் பாடுவதில் உறுதி கொண்டவளாய், எதையும் நுணுகி ஆராயும் ஆய்வு நோக்கமுடையவளாய் ஆண்டாளைக் காணும்போது அவளின் நேர் கொண்ட தன்மை விளங்குகின்றது. 


மேலும், ஆண்டாளின் பார்வை இறைவன் மீதேயிருந்தது; காணுகின்ற காட்சியெல்லாம் நாராயணனையே கண்டது; நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று பாவை நோன்பிற்குரிய விதிமுறைகளைக் கடை பிடிப்பதில் உறுதிகொண்டவளாய் காண முடிகின்றது.


"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உமக்கே நாமாட் செய்வோம்"

என்ற தொடர் மேற்கருத்தான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தமை சிறப்பு. 


இவ்விதமாக ஆண்டாள் நேர்கொண்ட பார்வை உடையாள் என்பது விளங்கலாயிற்று.


ஆடியில் உதித்த அற்புதம் - மாலை

சூடியும் சூட்டியும் மகிழ்ந்த பெருமையள் 

நேர்கொண்ட பார்வையள்

சீர்பெற்ற சீலமவள்

திருப்பாவை செப்புவோம்

அருவினை களைவோம்.


நன்றி - திருக்கோயில் 2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக