திங்கள், 17 ஜூன், 2024

பக்தி வழியை பற்றுவோம் - கல்யாணபுரம் ஆராவமுதச்சாரியார்

மிகவும் பழைமையான ஒரு கதை சொல்லும் பாணி ஹரிகதை. இயல், இசை, நாடகம் என மூன்றும் கலந்தது இது. மகாராஷ்ட்ராவிலிருந்து வந்ததுதான் இந்த ஹரி கதை. ‘ஹரி கீர்த்தன்’னு மராத்தி மொழியில் பாடுவார்கள். இன்றைய சொற் பொழிவில் பிரகலாதனின் கதையைத்தான் சொல்லப் போகிறேன்" என்றபடியே துவங்கினார் கல்யாணபுரம் ஆராவமுதச்சாரியார் ஸ்வாமிகள்.

“ஹரி என்கிற பெயரைக் கேட்டாலே அவ்வளவு கோபம் வரும் ஹிரண்யகசிபுவுக்கு. அவனது சகோதரனை பகவான் வதம் பண்ணிட்டார்ன்னு அவ்வளவு கோபம். அந்த ஹரி எங்கே இருந்தாலும் அவனை வதம் பண்ணிடணும்னு தன்னோட வேலைக்காரர்களுக்கு எல்லாம் உத்தரவு போட்டான் அவன். தாமரைக்கண் கொண்ட ஹரியை எம லோகத்துக்கு அனுப்பிடணும்னு உக்கிரமான தவம் மேற்கொண்டான். அந்தத் தவத்தின் உக்கிரத்தால் தேவலோகத்தில் இருந்த தேவர்கள் எல்லாரும் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிரம்ம தேவனிடம் சென்று முறையிட, பிரம்ம தேவன், ஹிரண்யகசிபுவிடம் வந்து, 'உன் தவத்தை நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள். தருகிறேன்' என்றார்.


தனக்கு எந்த விதத்திலும் மரணம் நேரக் கூடாது என்ற ஒரே குறிக்கோளை மனதில் கொண்டு, ரொம்ப சாமர்த்தியமாக வரங்களை கேட்டுப் பெற்றுக் கொண்டான் ஹிரண்யகசிபு. அவன் கேட்ட வரங்களில் எல்லாம் loop holes கண்டுபிடிச்சார் பகவான். நாம்தான் எல்லாம் செய்யறோம், நம்மகிட்டதான் எல்லாம் இருக்கும், அப்படீன்னு தப்பா நாம நினைச்சுண்டு இருக்கோம். நமக்கு மீறிய சக்தி ஒண்ணு இருக்குன்னு புரிய வைக்கத்தான் இந்த ஹரி கதையே.


இப்படி மரணம் கூடாது, இந்த நேரத்தில் மரணம் கூடாது, இந்த இடத்தில் கூடாது... இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு வரங்களை வாங்கிக் கொண்டான் ஹிரண்யகசிபு. அவன் அட்டகாசம் தாங்க முடியாமல் தேவர்கள் எல்லாம் பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த நாராயணனிடம் சென்று முறையிட, 'கவலைப்படாதீர்கள், அவனது பிள்ளையாகப் பிறக்கப் போகிறவன் என்மீது பக்தி கொண்டவனாக இருப்பான்' என்று சொல்லி அனுப்பினார் பகவான். சொன்னாமாதிரியே பிரகலாதன் பிறந்தான்.


பாகவதத்தில், கிருஷ்ணன் என்கிற கிரஹத்தால் பீடிக்கப்பட்டவன்னு அந்தக் குழந்தையைப் பற்றி வரும். அம்மாவின் கருவில் இருக்கும்போதே இறைவனின் அருளுக்குப் பாத்திரம் ஆனவன் அவன். கர்ப்ப ஸ்ரீமான். நாரதர், நாராயணரின் புகழைப் பற்றி சொல்வதைத் தன் தாயின் கர்ப்பத்தில் தான் இருக்கும் போதே கேட்டுக்கொண்டவன் அவன்.


அவனுக்கு ஐந்து வயது ஆனதுமே அவனைக் கொண்டு போய் குருகுல வாசத்தில் விடுகிறான் அவனது தந்தை. அசுரர்களுக்கெல்லாம் குருவான சுக்ராச்சாரியார் நடத்திய பெரிய பள்ளி அது. அங்கே அப்போதிருந்த syllabus என்ன தெரியுமா? யார் எத சொன்னாலும்சரி, பாடினாலும்சரி அது ஹிரண்ய கசிபுவை பற்றித்தான் இருக்கணும். வாத்தியார், 'ஹிரண்யாய நம:'னு பாடம் நடத்தினார். எல்லாக் குழந்தைகளும் அதையே சொல்ல, பிரகலாதன் மட்டும் 'ஓம் நமோ நாராயணாய' என்றான். 

வாத்தியார் எவ்வளவு சொன்னாலும் இந்தக் குழந்தை மட்டும் திரும்பத் திரும்ப அதையே சொல்லிண்டு இருந்தது. அரசரின் குழந்தை என்பதால் அதைக் கோபிக்க முடியாமல், குரலை மாற்றிக் கொண்டு, 'கண்ணே பிரகலாதா, நீதான் நான் சொல்லிக் கொடுத்ததை மாற்றி சொன்னாயா?

அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுப்பா' எனக் கனிவாகச் சொன்ன பின்பும் நாராயண நாமத்தை தன் நாவில் ஏந்தியபடியே இருந்தான் குழந்தை பிரகலாதன்.


கம்பன் இதைப்பற்றி சொல்லும்போது, 'ஞான நாயகன்' என்ற டைட்டிலை பிரகலாதனுக்குக் கொடுத்து விட்டார். 'நம்ம குழந்தையை குருகுல வாசத்துக்கு அனுப்பி ஆறு மாசம் ஆச்சே, அவன் அங்கே என்ன கத்துண்டான்ணு பார்க்கணுமே'ன்னு, குழந்தையோட progress report தெரிஞ்சுக்கணும்னு ஒரு concerned அப்பாவாகப் பிரகலாதனைக் கூப்பிட்டு அனுப்பினான் ஹிரண்யகசிபு. குழந்தை எதைக் கேட்டாலும் 'நாராயணா... நாராயணா'னு சொல்லிண்டு இருக்கு. எந்த இறைவன் நாமத்தை நம்ம அரசாங்கத்துலேயே சொல்லக் கூடாதுன்னு சொல்றோமோ அதைப்போய் இந்தப் பையன் சொல்றானேன்னு ஹிரண்யகசிபுவுக்கு ஏக கோபம். உடனே, சொல்லிக் கொடுத்த வாத்தியாரைப் போட்டு திட்டி அனுப்பி வெச்சுட்டு, திரும்பவும் ஒரு ஆறு மாசம் கழிச்சு கேட்டபோதும் அதே நாமம்தான் பிரகலாதன் வாயிலிருந்து வந்தது. இதுல என்ன விசேஷம்னா, இம்முறை அதிகமாக ஹரி நாமத்தைச் சொல்லி கொண்டிருந்தது அந்தக் குழந்தை.


இறைவனின் மேல் இருந்த துவேஷம் ஹிரண்யகசிபுவுக்கு கோபமா மாறி தன் பிள்ளையை கொல்லணும்ன்னு வெறியா மாறிடுத்து. இங்க நாம எல்லாருமே ஒரு விஷயத்தை மனசுல நல்லா ஏத்திக்கணும். இறைவனின் திருநாமம் தன்னை எப்படியும் நிச்சயம் காக்கும் அப்படீன்னு ஐந்து வயது குழந்தை பிரகலாதன் காட்டிய அந்த confidence நம்ம எல்லாருக்கும் வரணும்.


அவன் தந்தை செய்த கொடுமையிலிருந்து எல்லாம் பிரகலாதன் பத்திரமாக வெளியில் வந்தான்.

தன் பக்தன் எந்த வயது உடையவனாக இருந்தாலும் சரி, அவனை நிச்சயம் நான்

கைவிடவே மாட்டேன்; காப்பாற்றியே தீருவேன்னு உலகத்தாருக்கு க் காட்ட பகவான் நரசிம்ம மூர்த்தியாகத் தூணைப் பிளந்து கொண்டு வந்து ஹிரண்யகசிபுவை தன் மடியின் மீது கிடத்தி வதம் செய்தார்.


குழந்தை பிரகலாதன் கேட்டு கொண்டதற்கேற்ப தன் கோபம் தணிந்து அவனுக்கு மோட்சத்தையும் தந்தருளினார் பகவான்.


இந்தக் கதை சொல்லும் பாடம் என்ன? பகவான் நம்மை எப்படியும் காப்பாற்றுவார் என்கிற அதீத நம்பிக்கை நம்ம எல்லாருக்குள்ளேயும் கட்டாயம் இருக்கணும். இறைவன் மீது நாம் வைக்கும் இத்தகைய நம்பிக்கை, ஒரு நாளும் பொய்த்துப் போகாது."


தொகுத்து அளித்தவர் நளினி சம்பத்குமார்

நன்றி - தீபம் செப்டம்பர் 05, 2014



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக