திங்கள், 17 ஜூன், 2024

திருமால் முதலில் மனித வடிவமெடுத்த… - எம்.என். ஸ்ரீனிவாசன்

திருமால் எடுத்த மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, பலராம, ராம, கிருஷ்ண அவதாரங்களில் மனித அவதாரமாய் முதன் முதலில் தோன்றிய அவதாரம் வாமன அவதாரமே ஆகும். சிறு பிராமணச் சிறுவனாய்த் தோன்றி, மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, பிறகு "ஓங்கி உலகளந்த உத்தமனாய்' என்றபடி வளர்ந்து, மகாபலி சக்கரவர்த்தியைப் பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம் இது.

இந்த அவதாரம் எடுக்கப்பட்டது மகாபலியின் வள்ளல் தன்மையை எடுத்துக் காட்டவும், அதேசமயம் அவன் மனதில் குடியிருந்த ஆணவப் பேயை அழிக்கவுமேதான். மேலும், தன் குலகுருவான சுக்ராச்சாரியாரின் அறிவுரையைப் புறந்தள்ளி, தான் கொடுத்த வரத்தை மீறாமல் மகாபலி நடந்ததால், அவன் புகழ் எவ்வாறு உயர்ந்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டவும் திருமால் மிகப்பெரும் வடிவெடுத்துக் காட்டினார் என்றும் சொல்லலாம்.


இங்கே ஒன்றை யோசிக்க வேண்டும். யாசிப்பது என்பது தாழ்ந்த செயல். உடல், மனம் குன்றி, வருந்தி யாசிப்பது என்ற நிலைக்கு ஏற்றாற்போல் திருமாலின் வடிவமும் குறுகிவிட்டதாம். பின் ஆசை நிறைவேறியபின் ஏற்பட்ட களிப்பே ஒரு சாண் உடம்பு பல நூறு சாண் வடிவமாயிற்றாம். இதனை கோதைப் பிராட்டி,

"மகாபலியிடம் மூன்றடி கிடைக்கவில்லை என்று வருந்த வேண்டாம்' என்று பெருமாளுக்குக் கூறும்விதமாகத் தன் திருப்பாவையில் மூன்றடிகளைக் கொடுத்தாள். திருப்பாவை மூன்றாவது பாடலில், "ஓங்கி உலகளந்த உத்தமன்' என்கிறாள். பதினேழாம் பாடலில், "அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த' என்றும்; 25-ஆம் பாடலில் "அன்றிவ் வுலகமளந்தாய் அடிபோற்றி' என்றும் போற்றுகிறாள்.


ஆண்டாளின் திருவுள்ளத்தை அறிந்த திருமாலும், அர்ச்சாவதார நிலையில் ஓங்கி உலகளந்த உத்தமனாய் மூன்று திவ்ய தேசங்களிலே காட்சியளிக்கிறான். காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளாகத் தனது வலக்கரத்தால் ஒரு விரலைக் காட்டியபடியும்; வலக்காலை மாவலி தலைமேல் வைத்தபடியும்; இடக்காலை உயரத் தூக்கியும் காட்சியளிக்கிறான்.


நடுநாட்டுத் திவ்ய தேசமான திருக்கோவலூரில் தனது வலக்காலை உயரத் தூக்கியபடியும்; இடது திருவடியை பூமியில் பதித்தும் காட்சியளிக்கிறான். இங்கே வலக்கரத்தில் சங்கும் இடக்கரத்தில் சக்கரமும் கொண்ட ஒரு நிலை.


பெரிய திருவுருவமாய் தோன்றிய திரிவிக்ரம அவதாரத்தின் ஆரம்ப நிலையை அனைவரும் நினைக்க வேண்டும் என்ற காரணத்தாலோ என்னவோ, சோழ நாட்டு காழிச்சீராம விண்ணகரத்தில் (சீர்காழி) சிறிய திருமேனி யாய் இடக்காலைத் தூக்கியபடியும், வரம் தரும் வரத ஹஸ்தத்துடனும் காட்சியளிக்கிறான்.


தவிரவும், சென்னைக்கு அடுத்த திருநீர்மலையில், "நின்றான் - இருந்தான் - கிடந்தான் - நடந்தான்' என நான்கு நிலைகளில் காட்சி தரும் திருமால், நடந்தான் நிலைக்கு உலகளந்த பெருமாளாகவே காட்சி தருகிறான்.


மேலும் திருவரங்கத்தில் சிறிய மூர்த்தியாக (வாமன வடிவில் கையில் குடையுடன்) திருக்குறளப்பனாகவும் ஒரு சந்நிதியில் காட்சியளிக்கிறான்.


வாமன வடிவில் வந்து வானளாவிய உருவெடுத்தவன் ஆண்டாளின் "மூன்று அடி'களில் திருப்தி அடையாமல், திருக்கோவலூரிலே முதலாழ்வார்கள் மூவரையும் மழைக்காலத்தில் இடைக்கழியில் நெருக்கி, முந்நூறு பாசுரங்களையும் பெற்று விட்டான் என்பது அனைவரும் அறிந்த கதை!


ஆவணி சிரவணமே வாமன ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்தில் இத்திருநாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. 


இந்த நன்னாளிலே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி வணங்கினால், அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வர்!


நன்றி - ஓம் சரவணபவா 2010


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக