வியாழன், 19 செப்டம்பர், 2024

தமிழ் வேதம் - நரசிம்ம அய்யர், ஆற்காடு

 ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடுந்தவம் செய்து உண்மையான வேதங்களை ரிஷிகள் உலகோர் உய்ய தம் சீடர்கள் வாயிலாக வெளிக் கொணர்ந்தார்கள். அவைகளை வேதங்கள் நான்கு எனப் பிரித்து அவைகளின் உட்பொருட்களை பிரம்ம சூத்ரம் என்கிற நூலாக சுருக்கமான வகையில் வேதவியாசர் உலகுக்கு அளித்தார். பகவான் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு அளித்த "பகவத் கீதை”யாலும் ஒருவாறு வேதங்களில் கருத்துக்களை கூறியுள்ள உலகிலுள்ளவர்கள் அறிய ஏதுவாயிற்று. 

ஒன்றுக்கொன்று சில சமயங்களில் விரோதமாயும் வெவ்வேறு தெய்வங்களை வழிபடுவதால் ஒரு நிச்சயமான முடிவுக்கு வர முடியாத நிலைமையாலும், வேதங்களின் உட்பொருள்கள் அவரவருக்குத் தக்கவாறு உணரப்படலாயிற்று. கடைசியில் வேதம் முழுவதுமே மறையக் கூடிய நிலையை அடைந்துவிடவே, பரம தயாநிதியும் வேதபுருஷனுமான பகவான் தம் நித்ய ஸுரிகளை பூமியில் அவதரிக்கச் செய்து அவர்கள் மூலமாய் "உலகுய்ய மண்ணுய்ய, மனிதருய்ய” வழிகாட்டினார்.


அவ்வவதார புருஷர்களே ஆழ்வார்களாவார்கள். அவர்கள் அருளிய பிரபந்தங்கள் நாலாயிரம் பாசுரங்களைக் கொண்டது. அவை எளிய தமிழில் பக்தி மார்க்கத்தை உலகறிய செய்தவையாகும். இவை தமிழ் வேதம் எனப்படுகிறது. இவ்வேதம் குறித்தும் இதன் வாயிலாக ஆழ்வார்கள் நமக்கு கூறிய வழிபாட்டு முறையைப் பற்றியும் சிறிது சிந்திப்போம்.


தமிழ் வேதத்தின் பெருமையை அவ்வாழ்வார்களுள் ஒருவரான ஸ்ரீமதுரகவிகள், “அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள் கண்டீர்! இவ்வுலகினில் மிக்கதே!” என்று உலகைக் காட்டிலும் பெரியதாய் கருதுகிறார். இவ்வருளிச் செயல்களை.


பகீரதன் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொணர்ந்தது போன்றே இத்தமிழ் மறையும் ஸ்ரீமந்நாதமுனிகள் என்னும் பெரிய ஆச்சாரியரால் யோகத்தினால் நம்மாழ்வாரிடமிருந்து நேரில் பெற்று உலகுக்கு பாட்டுடனும், பண்ணுடனும், இசையாகக் கற்பிக்கப்பட்டது என்பர் பெரியோர்.


“தானம் வழங்கி தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்” என்று ஸ்ரீமந்நாதமுனிகளை வேதாந்த தேசிகர் கொண்டாடுகிறார். மேலும் இப்பிரபந்தங்களைப் பற்றி கூறுகையில்,

"தொகை நாலாயிரமும் எங்கள் வாழ்வே" எனவும் "செய்யதமிழ் மாலைகள் நாம் தெளியவோதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே." என்னும் அவ்வாசாரிய சிரேஷ்டர் கொண்டாடுகிறார் என்றால் வேறு வார்த்தைகள் தேவையேயில்லை.


இந்தப் பிரபந்தங்களை வேதங்களைக் காட்டிலும் உயர்ந்ததாகவே கருதுகின்றனர் வைணவர்கள். வைணவ ஸம்ப்ரதாயத்தை நிறுவிய உடையவர் ராமானுஜரும் இப்பிரபந்தங்களின் உட்பொருளைக் கொண்டே பிரம்ம சூத்திரங்களை வியாக்யானமிட்டார் என்பர் பெரியோர்கள்.


பக்தியோகமும், அதன் சாரமாகிய பிரபத்தியும் விளக்கியருளிய ஆழ்வார்கள் இப்பக்தியை வெளிப்படுத்த கோவில்களில் குடிகொண்டு இவ்வுலகிலுள்ளோர் யாவரும் எக்காலத்திலும் கண்டு களிக்கக்கூடிய விக்ரஹ உருவில் விளங்கும் எம்பெருமான்கள் மீது அளவிலாத பக்தியும் காதலும் கொண்டதாக பாசுரங்களால் ஸேவித்ததை அறிகின்றோம்.


"பின்னானார் வணங்கும் சோதி" என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்ட அர்ச்சாவதாரமே நம்போன்றவர்க்கு தஞ்சமளிக்கக் கூடியதாகும். வைகுண்டத்தில் இருக்கும் பிரம்ஹம் அர்ச்சையின் வடிவில் வந்து நம்மை சுலபத்தில் ரக்ஷிப்பதாலும், அர்ச்சகர், மனிதர்கள் இவர்களுடைய பராதீனத்திற்கு அடிமைப்பட்டுள்ளதாலும் பரமயோகியர்க்கும் மனதாலும், வாக்கினாலும் அறிய முடியாத பரம் பொருள் மூர்த்திகளை "கிளி கொத்திய கனி” என்றும் ஆழ்வார்களை கிளியாகவும், கடவுளை கனியாகவும் கூறுவது உண்டு.


“ஏரார் முயல்விட்டுக் காக்கைப் பின் போவதே" என்று இந்த பூவுலகில் கண்டு களிக்கக் கூடிய அர்ச்சா மூர்த்தியை விட்டு மேலுகத்தில் போய் மரணத்துக்குப் பின் பிரபந்நர்களுக்கு மட்டும் காணக்கூடிய ஒரு வஸ்து அர்ச்சைக்கு சிறிது குறைவானது போன்றது என்கிற ஆழ்வாருடைய வாக்கும் சிந்திக்கத் தக்கதாகும்.


இறைவன் தம்மை வெளிகாட்டியதற்கு உதாரணங்கள் பல உள்ளன. இவ்வாழ்வார்கள் விஷயத்தில் கருணை கூர்ந்து திருக்கோவிலூரில் ஆழ்வார்கள் மூவரையும் ஓர் இரவில் நெருக்க அவர்களின் ஒருவர் யோகத்தாலே உலகையே அகலாக்கி, கடலை நெய்யாக்கி சூரியனை விளக்காகவும், மற்றவர் சிந்தையில் ஞானத்தையும் ஆர்வத்தையும் சேர்த்து தீபம் காட்ட மற்றவர் கண்ணால் பார்த்து “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று ஆனந்தித்தார்கள்.


மற்றொரு உதாரணம் குடந்தை ஆராவமுதாழ்வார், 'ஆழ்வார் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” என்று கட்டளையிட அதற்கு பதில் சொல்ல எம்பிரானும் தலையை தூக்க ஆழ்வாரும், 'வாழிகேசனே'' என்று சொன்னது உண்மையல்லவா?


அப்படி ஆழ்வார்களால் கொண்டாடப்பட்ட மூர்த்திகள் கோவில் கொண்டுள்ள தலங்கள் 108 ஆகும். இவைகள் சோழ நாட்டில் 40-ம், பாண்டிய நாட்டில் 18ம், தொண்டை நாட்டில் 22ம், மலை நாட்டில் 13ம், நடுநாட்டில் 2ம், வடநாட்டில் 12ம், திருநாட்டில் 1மாக அமைந்துள்ளது என்றும் இவைகளையே “திருப்பதிகள்” என்றும் “கோவில்” என்றும் திவ்ய தேசங்கள் என்றும் வைணவம் பறைசாற்றுகின்றது.


இந்த திவ்யதேசங்கள் எல்லாவற்றிற்கும் சென்று சேவித்தும், ஆழ்வார்கள் அருளிச் செய்த (நான்காயிரம்) நாலாயிர திவ்யப் பிரபந்தகங்களை தினம் ஒரு பாசுரம் வீதம் அனுசந்தித்து எம்பெருமானின் பேரருளை பெற்று உய்வோமாக!


நன்றி - சப்தகிரி 2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக