அதிகப் பார்வை

"எல்லாம் உனதே எம்பெருமானே!" - கோமான் ஶ்ரீ பாலாஜி


யானே என்னை அறியகிலாதே*

யானே என்-தனதே என்றிருந்தேன்*

யானே நீ, என் உடைமையும் நீயே*

வானே ஏத்தும் எம் வானவர் ஏறே.


நம்மாழ்வாரின் இந்தத் திருவாய்மொழிப் பாசுரம் (2.9.9), நம்முடைய உண்மை நிலையை உணர்த்தி நமக்கும் பகவானுக்கும் உள்ள தொடர்பை விளக்கி நாம் செய்யும் தவறினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


யானே என்னை அறியகிலாதே- ஒரு வேடன் கையில் சிக்கிய சிறுவயது இளவரசன், தன்னை வேடன் என்றே நினைத்து வளர்வதைப் போல, நான் உனக்கு என்றும் அடிமை (சேஷன்) என்பதை அறியாமல் இருந்தேன்.


யானே என்-தனதே என்றிருந்தேன்- "நான் சுதந்திரமானவன்" என்றும், "இந்தச் சொத்துக்கள் இந்த பந்துக்கள் எல்லாம் என்னுடையவை" என்றும் அகந்தையில் (அகங்காரம், மமகாரம்) மூழ்கிக் கிடந்தேன். 


யானே நீ- இப்போது உண்மை தெரிந்துவிட்டது. உன்னைத் தவிர எனக்குத் தனித்து இயங்கும் தன்மை இல்லை. என் உயிருக்குள் உயிராக (அந்தர்யாமி) நீயே இருக்கிறாய். அதனால் "நான்" என்று சொல்லும் வார்த்தையும் கூட உன்னையே குறிக்கிறது.


என் உடைமையும் நீயே- என்னிடம் உள்ள பொருள், அறிவு, செயல் என அனைத்தும் உன்னுடைய சொத்தே (உடைமை). நீயே என் செல்வம்.


வானே ஏத்தும் எம் வானவர் ஏறே- இடைவிடாது உன்னைத் துதிக்கும் நித்யசூரிகளுக்கும் தேவர்களுக்கும் தலைவனே! அவர்களோடு எனக்கும் உன்னிடம் ஒரே விதமான தொடர்பு (சம்பந்தம்) இருந்தாலும், இத்தனை காலம் நான் உன்னை அறியாமல் வீணாகக் கழித்துவிட்டேனே!


"நான் யார்? எனது இயல்பு என்ன?" என்பதை உணராத நிலையில் நான் இருந்தேன். இறைவனின் சொத்தான நான், என்னைச் சுதந்திரமானவன் என்று தவறாக நினைத்தேன்.


உண்மை ஞானம் இல்லாததால், "நான் தான் எல்லாவற்றையும் செய்கிறேன் (அகங்காரம்)" என்றும், "சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை (மமகாரம்)" என்றும் மமதையில் வாழ்ந்து வந்தேன். இந்த 'நான்', 'எனது' என்னும் பிணிதான் என்னை உன்னிடமிருந்து பிரித்து வைத்திருந்தது.


உன் அருளால் இப்போது உண்மை தெரிந்தது. "யானே நீ" என்றால், "நானும் நீயும் ஒன்று" என்பதல்ல; மாறாக, "நீ இன்றி எனக்குத் தனி இருப்பு இல்லை" என்று பொருள். ஒரு உடலில் உயிர் எப்படித் தங்கியிருக்கிறதோ, அதுபோல என் ஆத்மாவிற்குள் அந்தர்யாமியாக (உயிராக) நீயே இருக்கிறாய். அதனால் 'நான்' என்று சொல்லும் போதே அது உன்னையே குறிக்கிறது. இந்த இடத்தில்யானேஎன்று ஏகாரத்தில் உரைப்பதால் இவ்வாறு அர்த்தம் கொள்ள வேண்டும்.


நான் உனக்குச் சொந்தமானவன்; என்னிடம் உள்ள அனைத்தும் உனக்கே உடைமையானவை. என்னைப் பாதுகாக்கும் பொறுப்பும் உன்னுடையதே. இனி, எனக்கென்று தனி விருப்பமோ, தனி உரிமையோ எதுவுமில்லை. 


இப்பாசுரத்தில் ஆழ்வார் பெருமானிடத்தில் ஆத்ம சமர்ப்பனம் செய்கிறார். 


இப்பாசுரத்தில் உள்ள முக்கியக் கருத்து என்னவென்றால் "யான், எனது" என்னும் செருக்கை அறுக்கச் சொல்கிறது. நான் (I) என்பது கர்த்தாவல்ல, இறைவனின் கருவி.

எனது (Mine) என்பது சொத்தல்ல, இறைவனின் உடைமை.


இந்தத் தெளிவு வந்துவிட்டால், ஒரு மனிதன் எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுபட்டு இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுவான் என்பதே ஆழ்வார் காட்டும் வழி.


வானவர் ஏறே! என்று அழைப்பதன் மூலம், விண்ணுலக தேவர்கள் எந்நேரமும் உன்னை இப்படி உணர்ந்து போற்றுகிறார்கள், இப்போது நானும் அந்த நிலையை இப்போது உணர்ந்து அடைய முயல்கிறேன் என்று ஆழ்வார் நெகிழ்கிறார்.


இன்றைய வாழ்விற்கு, இந்தப் பாசுரம் நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால், நாம் எதையும் "நம்முடையது" என்று பற்றிக் கொள்ளாமல், எல்லாம் இறைவன் அருளால் வந்தவை என்ற பணிவுடன் வாழ வேண்டும். அகங்காரத்தை விட்டு, பணிவுடன், "எல்லாம் உன்னுடையதே" என்ற மனநிலையில் வாழும்போது, உண்மையான அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும்.


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.


Post a Comment

புதியது பழையவை