ஊரிலேன், காணி இல்லை, உறவு மற்று ஒருவர் இல்லை*
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி*
காரொளி வண்ணனே! என் கண்ணனே! கதறுகின்றேன்*
ஆருளர் களைக்கண்? அம்மா! அரங்க மா நகருளானே!
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய 'திருமாலை' பிரபந்தத்தின் 29-வது பாசுரம், சரணாகதி தத்துவத்தின் உச்சம். ஒரு மனிதன் எம்பெருமானிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்கும்போது எவ்வளவு எளிமையாக, அதே சமயம் எவ்வளவு உருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
இந்தப் பாசுரத்தை அரங்கனும் ஆழ்வாரும் உரையாடுவது போல் சற்று முயற்சித்துப் பார்ப்போமா. அதிகப் பிரசங்கித்தனம் என்றால் மன்னிப்பீராக.
அரங்கனின் சன்னதியில் நம் தொண்டரடிப் பொடியாழ்வார் கண்ணீர் மல்க இப்பாசுரத்தை பாடி கதருகின்றார். ஆழ்வாரின் கதறல் அங்கே அறிதுயில் கொண்டிருக்கும் அரங்கனை குடைந்தெடுத்திருக்கும் ஏன் இந்த ஆழ்வான் இப்படி நம் முன் கதருகின்றான் என்ற கேள்வி அவனுக்குப் பிறந்தது. இதுவும் அவனின் லீலை தானே அவன் அறியாததா? அவன்தான் பேசும் அரங்கன் அல்லவா, உடன் ஆழ்வாருடன் உரையாடத் தொடங்கிவிட்டான்.
அரங்கன்: "ஆழ்வானே! கண்களைத் திற, நீயோ என் மீது அளவற்ற அன்பு கொண்டவன். அனவரதமும் என் நாமத்தைச் சொல்பவன். அப்படி இருக்கையில், 'கதறுகின்றேன்' என்று ஏன் இவ்வளவு வருந்துகிறாய்? உனக்கு என்ன குறை?”
ஆழ்வார்: (கண்களில் நீர் மல்க) "அரங்கா! என் பேசும் தெய்வமே, திருவரங்கம், திருமலை, சாளக்ராமம் போன்ற திவ்ய தேசங்களில் பிறக்கும் பாக்கியம் எனக்கு வாய்க்கவில்லை. அங்கே பிறந்திருந்தால் அந்த மண்ணில் பிறந்ததற்காகவே நீ என்னை ஆட்கொண்டிருப்பாய். அதுவும் இல்லையே! அதனால்தான் “ஊரிலேன்” என்றேன்”
அரங்கன்: “சரி முக்தித் தரும் நகரேழில் பிறக்கவில்லையென்றால் என்ன? உனக்குச் சொந்தமாக நிலபுலன்கள் (காணி) இருந்தால், அதனை வைத்து எனக்கு ஏதாவது கைங்கர்யம் செய்து நீ என்னை அடையலாமே?”
ஆழ்வார்: "பரமமூர்த்தியே! எனக்கு ஒரு குழியளவு 'காணியும் இல்லை'. ஒருவேளை எனக்கு இங்கு நிலம் இருந்திருந்தால், அந்த நிலத்தைப் பார்க்கச் செல்லும் வழியிலாவது உன் திருக்கோயிலைக் கண்டு தினமும் உன்னைத் தரிசித்திருப்பேன். அந்த வாய்ப்பையும் நான் பெறவில்லை. கைங்கர்யம் செய்யத் தேவையான செல்வமும் என்னிடம் இல்லை.”
அரங்கன்: "சரி, ஊரும் இல்லை, காணியும் இல்லை. உனக்கு வேண்டியவர்கள், உற்றார் உறவினர்கள் யாராவது இங்கு இருப்பார்களே? அவர்கள் மூலமாவது என்னை வந்தடையலாமே?”
ஆழ்வார்: "ஐயனே! எனக்கு 'உறவு மற்று ஒருவர் இல்லை'. திவ்யதேசங்களில் வசிக்கும் நண்பர்களோ, உறவினர்களோ இருந்தாலாவது அவர்கள் பின்னால் வந்து உன்னைச் சேவித்திருப்பேன். (குரல் தழுதழுக்க) உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு உறவே இல்லை! நீரே என் உற்ற உறவு! நீரே என் அப்பன்! நீரே என் அன்னை! நீரே என் எல்லாம்!”
அரங்கன்: (மனம் இளகி) ஆழ்வாரே, இவ்வளவு குறைகள் இருந்தாலும், என் திருவடிகளை மட்டுமாவது உறுதியாக பற்றிக் கொண்டீரா?
ஆழ்வார்: (தலை குனிந்து) அதுவும் சரியாக இல்லையே அரங்கா! “பாரில் நின் பாத மூலம் பற்றிலேன்” - இந்த பூமியில் வாழும் காலத்தில், உமது பொன்னடிகளை உமது திவ்ய திருவடிகளை உரிய முறையில், உறுதியான பற்றுடன் நான் கதியாக பற்றவில்லையே!”
அரங்கன்: (புன்னகையுடன்) ஆழ்வாரே, நீர் பற்றவில்லை என்று சொன்னாலும், உம்முடைய இந்த அன்பான அழைப்பே ஒரு பற்று அல்லவா? நான் வாமனனாக அவதரித்தபோது இந்தப் பூமியை ஒரே அடியில் அளந்தேன். அந்த திருவடியின் சம்பந்தம் இந்த பூமி முழுவதற்கும் ஏன் அதில் வசிக்கும் அனைத்து ஜீவராசிக்கும் உண்டு. அப்படியானால் உமக்கும் என் திருவடி சம்பந்தம் இருக்கிறதே!
ஆழ்வார்: "நிச்சயமாக இல்லை! அந்த சமயம் நான் பிறக்கவேயில்லையே அதனால் உன்னுடைய மேன்மையான திருவடிகளைச் சரியான முறையில் பற்றத் தெரியாத பாவி நான். எந்த ஒரு தகுதியும் இல்லாத நிலையில் நான் நிற்கிறேன்.”
அரங்கன்: "இவ்வளவு இல்லையென்று சொல்லும் நீ, இப்போது என்ன செய்யப்போகிறாய்?”
ஆழ்வார்: (கண்ணீருடன்) “ஆருளர் களைக்கண்?” - “அரங்கா! உன்னைத் தவிர வேறு யார் என் துன்பத்தை களைந்து என்னை ஆதரிக்க முடியும்? வேறு எந்த தெய்வமும் என்னை காக்க முடியாது! நீ ஒருவனே என் ரக்ஷகன்!”
“அம்மா!” - ஓ ஸ்வாமி! ஒரு தாய் தன் குழந்தையின் காலைப் பற்றிய கையை விடாமல் தூக்கி அரவணைப்பாள் அல்லவா? அது போல நீயும் என்னை காக்க வேண்டும்!
“அரங்க மா நகருளானே!” - திருவரங்கம் என்னும் பூலோக வைகுண்டத்தில், அந்த புண்ணிய பெருநகரில் பள்ளி கொண்ட ரங்கநாதப் பெருமாளே! என்னை காப்பாற்று!
அரங்கன்: (கருணை பொங்க) ஆழ்வாரே! நீர் "ஊரிலேன், காணியில்லை, உறவில்லை, பற்றிலேன்" என்று சொன்னாலும், உம்முடைய இந்த கதறல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கும் தீந்தமிழில் ஒரு பாசுரம் கிடைத்தது!
நீர் சொல்வது சரிதான் - உமக்கு வேறு எந்த தெய்வமும் இல்லை. ஏனென்றால் நானே உமது எல்லாமுமாக இருக்கிறேனே! உமது இந்த சரணாகதியே போதும்! நான் உம்மை காப்பேன்!
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் மூன்று முக்கியமான உண்மைகளை நமக்கு உணர்த்துகிறார்.
நம் குறைகளை நேர்மையாக ஒப்புக்கொள்ளுதல் - திவ்ய தேச அல்லது முக்தித் தரும் நகரேழில் ஜன்மம் இல்லை, அவனுக்கு கைங்கர்யம் செய்ய காணி நிலம் இல்லை, திவ்ய தேசங்களில் உறவு இல்லை, திருவடி பற்று கூட சரியாக இல்லை என்று வெளிப்படையாக சொல்கிறார்.
இவையெல்லாவற்றையும்விட முழு சரணாகதி - "ஆருளர் களைக்கண்?" - உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற அறுதியிட்ட நம்பிக்கை.
பகவானின் கருணையே கதி - நம் தகுதிகள் அல்ல, பகவானின் பரம கருணையே நம்மை காக்கும் என்ற த்வய மந்திர தத்துவம்.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்!

கருத்துரையிடுக