அதிகப் பார்வை

“நரசிம்மமே அழகு” - கோமான் ஶ்ரீ பாலாஜி


அழகியான் தானே, அரி உருவன் தானே*

பழகியான் தாளே பணிமின்* குழவியாய்த்

தான் ஏழ் உலகுக்கும், தன்மைக்கும் தன்மையனே*

மீனாய், உயிர் அளிக்கும் வித்து


திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதியின் 22-வது பாசுரம் இது. எம்பெருமானின் பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே "அழகால்" உயர்ந்தது என்பதையும், ஆபத்து நேரிடும்போது காக்கும் அவனது தன்மையையும் மிக அழகாகப் பேசுகிறது. நரசிம்மனாகக் காத்து, பழகியவனாக அருளி, குழந்தையாக உலகைக் காத்த எம்பெருமானின் சிறப்பை இப்பாடல் எடுத்துரைக்கிறது. இந்தப் பாசுரத்தில் எம்பெருமானின் பல்வேறு திருக்கோலங்களையும், அவதாரங்களையும் எடுத்துரைத்து, அவரது திருவடிகளையே நாம் பணிய வேண்டும் என்று உபதேசிக்கிறார்.


அழகியான் தானே அரி உருவன் தானே!” - திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரத்தையே (அரி உருவம்) "அழகியான்" என்று போற்றுகிறார். தூணிலிருந்து உடனே தோன்றி பிரகலாதனின் துயர் தீர்த்த அந்த "வேகம்" தான் அவனது அழகு. அதனால்தான் நரசிம்மர் இன்றும் "அழகிய சிங்கர்" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.


பழகியான் தாளே பணிமின் - எம்பெருமான் ஏதோ எட்டாத உயரத்தில் இருக்கும் இறைவன் அல்ல; அநாதிகாலமாக நம்மைத் தொடர்ந்து காத்து வரும் "பழகிய நபர்". நம்மிடம் மிக நெருக்கமாகப் பழகிய அந்த எம்பெருமானின் திருவடிகளை (தாள்) எப்போதும் வணங்குங்கள் என்கிறார் ஆழ்வார்.


குழவியாய்த் தான் ஏழ் உலகுக்கும்…” - பிரளய காலம் அதாவது உலகம் அழியும் நிலை வந்தபோது, சிறிய குழந்தையாய், அதாவது ஆலிலைக்கண்ணன் ஆக மாறி, ஏழு உலகங்களையும் தன் வயிற்றுக்குள் வைத்துப் பாதுகாத்தவன் அவன். 


தன்மைக்கும் தன்மையனே- பஞ்சபூதங்களின் இயல்புகளுக்கு ஆதாரமானவன் நம் எம்பெருமான். நிலத்தின் மணம், நீரின் சுவை என ஒவ்வொன்றிலும் அவன் உறைந்திருக்கிறான். இவ்வாறு உலகத்தின் இயல்புகளுக்கும் அதாவது தன்மைக்கும், அந்த இயல்புகளைத் தாங்கும் தலைவனுமாகவும் அவனே இருக்கிறான்.


மீனாய் உயிர் அளிக்கும் வித்து- மத்ஸ்ய அவதாரம் (மீன்) எடுத்து, எல்லா உயிரினம், மரம், செடி, கொடி, விலங்குகள் என எல்லாம் அழிந்துவிடாமல் உயிர் வித்துக்களைப் பாதுகாத்து மீண்டும் முளைக்கச் செய்யும் "வித்தாக" இருப்பவனும் அவனே.


இந்த உலகைப் படைத்தவனும் அவனே, மீனாக வந்து காத்தவனும் அவனே, ஆலிலைக் கண்ணனாய் உலகை விழுங்கிப் பாதுகாத்தவனும் அவனே. இப்படி எல்லாம் பெரிய பெரிய செயல்களை எல்லாம் செய்தவன், அடியவன் அழைத்த குரலுக்கு சற்றும் தாமதியாமல் உடனே தூணிலிருந்து சீறி வந்த அந்த நரசிம்மக் கோலமே ஆழ்வாரின் கண்ணுக்கு மிகவும் அழகானதாகத் தெரிகிறது.


ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை. கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும்  ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.  பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். எனவே அவர் தான் அழகு!” என்று இதற்கு ஒரு அர்த்தமும் எடுத்துக் கொள்ளலாம்.


ஒற்றை வரியில் இப்பாசுரத்தின் அர்த்தம் சொல்வதென்றால், "நமக்குத் துன்பம் வரும்போது ஓடோடி வந்து காப்பவனே மிக அழகானவன்" என்பதாகும்.


திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.

Post a Comment

புதியது பழையவை