அதிகப் பார்வை

“மகனைப் பிரிந்த தந்தையின் தவிப்பு” - கோமான் ஶ்ரீ பாலாஜி


வா, போகு, வா, இன்னம் வந்து ஒருகால்

கண்டு போ, மலராள் கூந்தல்*

வேய்போலும் எழில் தோளி தன் பொருட்டா

விடையோன் தன் வில்லைச் செற்றாய்!*

மா போகு நெடுங் கானம் வல் வினையேன்

மனம் உருக்கும் மகனே!* இன்று

நீ போக, என் நெஞ்சம் இரு பிளவாய்ப்

போகாதே நிற்குமாறே!


குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியில் ஒன்பதாம் திருமொழி மிகவும் உருக்கமானது. ஆழ்வார் முன்னர் ஏழாம் திருமொழியில் தேவகியின் புலம்பலை பாடி அருளியவர் இந்த திருமொழியில், தன்னைத் தசரதனாகவே பாவித்து, கைகேயிக்கு கொடுத்த வரத்தினால் இராமன் காடு சென்றபோது தசரதன் அடைந்த ஆற்றாமையை இதில் வெளிப்படுத்துகிறார். ஒரு தந்தையின் உள்ளத்தில் பாசமும் கடமையும் மோதும் வேதனையை இந்த ஒற்றைப் பாசுரம் முழுமையாகப் பதிவு செய்கிறது.


இதன் எளிய அர்த்தத்தை முதலில் பார்ப்போம். 


சீதையை மணப்பதற்காகச் சிவபெருமானின் வில்லை ஒடித்த வீர மகனே! என் இராமனே! யானைகள் உலவும் அடர்ந்த காட்டிற்கு நீ போகிறாயே! மகா பாவியான என் மனதை உருகச் செய்யும் மகனே! இங்கே வா... இல்லை, காட்டுக்குப் போ... மீண்டும் ஒருமுறை வா... போகும் முன் என் முகம் பார்த்துவிட்டுப் போ... என்று பிதற்றுகிறேன். நீ பிரிந்து சென்ற பிறகும் என் இதயம் இரண்டாகப் பிளந்து உயிர் போகாமல் இருக்கிறதே, என் நெஞ்சம் அவ்வளவு வலியதோ?” என்று தசரதன் புலம்புகிறார்.


சற்று விரிவாய் பார்ப்போம்.


இராமன் பதினான்கு ஆண்டுகள் காடு போக வேண்டும் தன் மகன் பரதன் அரசாள வேண்டும்என்று கைகேயிக்கு வரமளித்த தசரதன் இராமனை நோக்கி "வா" - மகனே! சற்று என் அருகில் வா.


"போகு- சரி, இனிச் செல்வாயாக (கடமை கருதி).


"வா- மறுபடியும் வா (பாசம் பொங்க).


"இன்னம் வந்து ஒருகால் கண்டு போ- போகும்போது மீண்டும் ஒரு முறை என்னைப் பார்த்துவிட்டுப் போ.


இந்த நான்கு வார்த்தைகளில் ஒரு தந்தையின் மனம் எவ்வளவு தடுமாறுகிறது என்பதைக் காணலாம். மகனை காட்டிற்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது, ஆனால் அனுப்ப மனம் இடம் தரவில்லை.


பொதுவாக ஒருவரைவாஎன்போம் அல்லதுபோஎன்போம். ஆனால் தசரதன் இங்கே குழம்புகிறார்.


மகனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வரும்போது "வா" என்கிறார்.


கைகேயிக்குக் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்து விடுகிறது, தர்மத்தைக் காக்க "போ" என்கிறார்.


அவன் அங்கிருந்து போனவுடன் மீண்டும் பார்க்கத் துடித்து "வா" என்கிறார்.


இறுதியாக, ”சரி போய்விடு, ஆனால் போகும் முன் கடைசியாக ஒருமுறை என் முகம் பார்த்துவிட்டுப் போ" என்று கெஞ்சுகிறார். இது பாசத்திற்கும் தர்மத்திற்கும் இடையே ஒரு தந்தை படும் போராட்டத்தின் உச்சம். சோகத்தால் ஏற்பட்ட ஒரு விதமான மனப்பிறழ்வு இது.


"மலராள் கூந்தல் வேய்போலும் எழில் தோளி தன் பொருட்டா- மலராள் கூந்தல்என்றால் பூக்களைத் தரிக்கும் கூந்தல் கொண்டவள், வேய்போலும் எழில் தோள்என்றால் மூங்கில் போன்ற அழகிய தோள்களை உடையவள், யார் நம் சீதை பிராட்டி தான். பொருட்டா- அப்பேற்பட்ட அழகிய தோள்களை உடைய சீதாதேவியை மனம் புரிவதற்காக, "விடையோன் வில்லைச் செற்றாய்" - யாராலும் வளைக்கவே முடியாத சிவதனுசை ஒடித்தாய் இராமா நீ!


இன்று அதே வீர மகன், ஒரு பெண்ணின் (கைகேயி) அதுவும் தன் மனைவியின் சொல்லுக்காகக் காடு செல்கிறானே என்ற ஏக்கம் இங்கே வெளிப்படுகிறது.


"மா போகு நெடுங்கானம்- யானைகள் திரியும் பெரிய காடு. அடர்ந்த, ஆபத்துகள் நிறைந்த, கொடிய விலங்குகள் வாழும் காடு. அரண்மனை வளர்ப்பில் வளர்ந்த இளவரசன் அத்தகைய காட்டில் பதினான்கு ஆண்டுகள் வாழப் போகிறான் என்ற எண்ணமே தசரதனை நொறுக்குகிறது.


"வல் வினையேன் மனம் உருக்கும் மகனே- “கொடிய வினைகளைச் செய்த நான்" என்று தசரதன் தன்னையே குறை கூறிக் கொள்கிறார்.


இங்கே இரண்டு விளக்கங்கள் உண்டு. இத்தகைய துன்பத்தை அனுபவிக்க வேண்டிய பாவங்களை நான் முன்னர் செய்திருக்க வேண்டும். சிரவணன் என்கிற ஒரு பிராமண சிறுவனை நான் தவறுதலாகக் கொன்ற பாவத்தின் பலனாக இன்று என் மகனைப் பிரிகிறேன்.


"இன்று நீ போக, என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே!”- இது பாடலின் உச்சக்கட்ட வேதனை. "மகனே! நீ காட்டுக்குப் போகிறாய். என் இதயம் ஏன் இரண்டாகப் பிளந்து விழவில்லை? எப்படி நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்?" என்ற கேள்வி இது. உயிர் போக வேண்டிய துயரம் ஏற்பட்டும், உயிர் போகாமல் இருப்பதே மிகப்பெரிய வேதனை என்பது இதன் பொருள்.


ஏதாவது மிகுந்த அதிர்ச்சியான செய்தி கேட்டாலோ அல்லது நிகழ்வின் போதோ இதயம் வெடித்து (இதயம் வெடிக்குமா என்று கேட்கக் கூடாது. ஒரு வார்த்தைக்கு சொல்வார்கள்) உயிர் போகும் என்பார்கள். "என் உயிர் இன்னும் போகவில்லையே, என் இதயம் என்ன கல்லா?" என்று தசரதன் தன்னைத்தானே நொந்துகொள்கிறார்.


இந்தப் பாசுரம், ஒரு தந்தையின் உள்ளத்தில் பாசமும் கடமையும் மோதும் போராட்டத்தை, மகனைப் பிரிவதை விட மரணமே மேல் என்ற வேதனையை, ஆனால் உயிர் போகாமல் வாழ வேண்டிய சாபத்தை - இவை யாவற்றையும் சில வரிகளில் பதிவு செய்கிறது.


"வா போகு வா" என்ற மூன்று சொற்களில் ஒரு தந்தையின் முழு இதயமும் அடங்கியுள்ளது. இதுவே இப்பாசுரத்தின் இலக்கிய மேன்மை.


குலசேகராழ்வார் தசரதனாகவே மாறிப் பாடியதால் தான், ஆயிரமாண்டுகள் கடந்தும் இந்த "வா, போகு, வாஎன்ற பிதற்றல் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.


குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்

Post a Comment

புதியது பழையவை