அதிகப் பார்வை

“பல்லியும் பரந்தாமனும்” - கோமான் ஶ்ரீ பாலாஜி


ஒரு நல்ல மாலை வேளையில் காஞ்சிப் பெருமாளை சேவித்துவிட்டு வரதனும் ரங்கனும் பிரகாரத்தைச் சுற்றி  நடந்து வருகையில், சந்தேகத்துடன் வரதன்…


வரதன்: ரங்கா! பார்த்தாயா இந்த தங்க பல்லியை தரிசிக்க எவ்வளவு கூட்டம் நிக்குது. எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது, திருமங்கையாழ்வார் பாசுரங்கள் ஒன்றில் "கொட்டாய் பல்லிக் குட்டி" என்று வருகிறதே? அவர் இந்த காஞ்சி பல்லியை தான் சொல்லுகிறாரா?


ரங்கன்: (புன்னகையுடன்) ஓ! அந்தப் பாசுரமா? இல்லை வரதா, அது மிகுந்த பக்திச் சுவை நிறைந்தது. நம் திருமங்கையாழ்வார், தன்னை ஒரு பெண்ணாக பாவித்து பரகால நாயகியாகி, எம்பெருமான் மீது கொண்ட காதலால் ஏங்கி உருகிப் பாடியப் பாசுரம் அது.


வரதன்: பெண்ணாக பாவித்தா? அது எப்படி?


ரங்கன்: அவர் தன்னை ஒரு பெண்ணாக பாவித்துக் கொண்டு அதற்கு 'பரகால நாயகி' என்று பெயரிட்டும் கொண்டு நிறைய பாசுரங்கள் அருளியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் நம் வைணவக் கோட்பாட்டின்படி பகவான் ஒருவன் மட்டும்தான் புருஷன் மற்ற அனைவரும் பெண்கள் அதனால்தான் ஆழ்வார்கள் சில நேரங்களில் தங்களைத் தலைவியாகக் கருதி, எம்பெருமானைத் தலைவனாகக் கொண்டு, தமிழ் சங்க இலக்கியக் கொள்கைப்படி காதல் வேதனையுடன் பாடுவார்கள். மடலேறுவார்கள். நவவித பக்திகளில் ஒன்றான ‘மாதுர்ய பாவ அனுபவம்’ என்றும் இது சொல்லப்படுகிறது.


வரதன்: ஓ! புரிகிறது. ஆனால் பல்லிக்கும் இந்த பாசுரத்திற்கும் என்ன சம்பந்தம்?


ரங்கன்: நல்ல கேள்வி! அந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது வரதா. வீட்டில் எங்காவது பல்லி கொட்டினால் அதாவது சத்தமிட்டால், அது எந்த திசையில் கொட்டுகிறது என பஞ்சாங்கம் பார்த்து நாம் நினைத்த காரியம் நடக்குமா அல்லது நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருந்தினர் வருவார்களா என்று சகுனம் பார்ப்பார்கள். இங்கே இந்த தங்க பல்லியைக் காண வந்திருக்கும் கூட்டம் அதற்காக இல்லை. எங்கே அந்த பாசுரத்தை ஒரு முறை சொல்லு.


வரதன்: "கொட்டாய், பல்லிக் குட்டி! குடம் ஆடி, உலகு அளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வர கொட்டாய், பல்லிக் குட்டி!"


ரங்கன்: அருமை வரதா! இப்போது ஒவ்வொரு வார்த்தையாகப் பார்ப்போமா?


வரதன்: நிச்சயமாக ரங்கா! முதலில் "கொட்டாய், பல்லிக் குட்டி!" என்பதைப் பாருங்கள். பல்லியை கூட "குட்டி" என்று எவ்வளவு அன்பாக அழைக்கிறார்!


ரங்கன்: அதுதான் ஆழ்வாரின் பெருந்தன்மை! எவ்வளவு சிறிய உயிரினம் என்றாலும், அதனிடமும் கூட மிகுந்த மரியாதையுடன் பேசுகிறார். நம் காகுத்தன் இராமன் அணிலை எவ்வளவு வாஞ்சையுடன் தடவி கொடுத்தார் அல்லவா. "குட்டி" என்று அழைப்பதில் அவ்வளவு பாசம் இருக்கிறது.


வரதன்: உண்மைதான்! அடுத்து "குடம் ஆடி" என்று வருகிறதே, அதற்கு என்ன பொருள்?


ரங்கன்: இங்கு இரண்டு விதமான கருத்துகள் உள்ளது. ஒன்று பாகவத்தில் வரும் கதையின் படி கண்ணனின் பேரன் அநிருத்தனை பானாசுரனிடமிருந்து மீட்டெடுக்க கண்ணன் குடக்கூத்தாடினான் என்றும் மற்றொன்று ஆயர்பாடியில் கண்ணன் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அவை கீழே விழாதபடித் தூக்கிப் போட்டு, தோள்களிலும் தலையிலும் வைத்து ஆடிய நடனத்திற்கு 'குடக்கூத்து' என்றும் பெயர். அதைத்தான் 'குடம் ஆடி' என்கிறார். நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


வரதன்: புரிகிறது ரங்கா! அடுத்து 'உலகு அளந்த' என்று வருகிறதே?


ரங்கன்: அது நம் திருவிக்கிரம அவதாரம்! ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ அவன்.


வரதன்: அற்புதம்! குடக்கூத்து ஆடிய கண்ணனும் அவனே, உலகம் அளந்த திரிவிக்கிரமனும் அவனே!


ரங்கன்: சரியாகச் சொன்னாய் வரதா! இப்போது அடுத்த வரியைப் பார்ப்போம். 'மட்டார் பூங்குழல்' என்கிறாரே? மட்டு என்றால் தேன் என்று பொருள். 'மட்டார்' என்றால் தேன் நிறைந்த என்று அர்த்தம். ‘பூங்குழல்’ என்றால் வண்டுகள் மொய்க்கும் தேன் நிறைந்த மலர்களைத் தன் திருக்குழலில், அதாவது கூந்தலில் சூடியவன் நம் மாதவன். அந்த நறுமணம் கமழும் கூந்தலை உடைய எம்பெருமானை வரச் சொல்லி கொட்டாய் அதாவது சத்தமிடு என்று கெஞ்சுகிறார். இப்போது கடைசி வார்த்தையைப் பார்ப்போம். 'மாதவன்' என்று சொல்கிறாரே, அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?


வரதன்: திருமாலின் மற்றொரு பெயர் அல்லவா? கேசவாதி நாமங்களில் ஒன்றல்லவா.


ரங்கன்: ஆமாம், ஆனால் அதன் பொருள் என்ன என்று சொல்கிறேன் கேள். 'மா' என்றால் திருமகள், அதாவது ஶ்ரீ லட்சுமி. 'தவன்' என்றால் கணவன். ஆக, திருமகளின் நாயகன்! இதை "ஶ்ரிய: பதி" (திருமகளின் கேள்வன்) என்று நம் வைணவத்தில் கொண்டாடுவார்கள். "சிறிய பல்லியே! நீ சத்தமிட்டு நல்ல செய்தி சொல். குடக்கூத்தாடியவனும், ஓங்கி உலகு அளந்த உத்தமனும், தேன் நிறைந்த மலர்கள் சூடிய கூந்தலை உடையவனும், திருமகளின் நாயகனுமான அந்த ‘மாதவன்’ என் வீட்டுக்கு வரப் போகிறான் என்று சொல்லி, நீ சத்தமிடு பல்லிக் குட்டி!"


வரதன்: (உருகி) ரங்கா, என்ன ஒரு பக்தி! என்ன ஒரு ஏக்கம்! ஆழ்வார் எவ்வளவு ஆவலுடன் மாதவனை எதிர்பார்க்கிறார் பாருங்கள்!


ரங்கன்: அதுதான் விரக பக்தி வரதா. பரகால நாயகியாக இருக்கும் ஆழ்வார், தன் தலைவனைக் காண ஏங்குகிறார். ஒவ்வொரு நொடியும் அவன் வருவானா என்று காத்திருக்கிறார். இது பெரிய திருமொழியில் பத்தாவது பத்து, பத்தாம் திருமொழியான திருத்தாய் என்கிற பதிகத்தில் நான்காவது பாசுரம், இதற்கு முந்தைய பாசுரங்களில் செம்போத்து, காகம், குயில், என்றும் அடுத்த பாசுரங்களில் கிளி, கோழி, கருமாமுகில் அதாவது மேகம் போன்றவற்றையெல்லாம் தூதாகக் கேட்டு கடைசியில் ‘குடந்தை கிடந்த மால்’ என்று அவரின் பெருமைகளை கூறுவார். பத்துப் பாடல்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும் வரதா. அதுமட்டுமல்ல, இதில் இன்னொரு அழகு இருக்கிறது வரதா. ஆழ்வார் தன்னைவிட மிகச் சிறிய உயிரினமான பல்லியிடமும் கூட மிகுந்த பணிவுடன் பேசுகிறார். "கொட்டாய்" என்று கெஞ்சுகிறார், கட்டளையிடவில்லை.


வரதன்: இன்னொரு விஷயம் கவனித்தீர்களா? பாசுரத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் "கொட்டாய், பல்லிக் குட்டி!" என்று வருகிறது.


ரங்கன்: கூர்ந்து கவனித்திருக்கிறாய்! முதல் கொட்டாய், தன் தலைவன் இங்கே வருவான் என்று பல்லியை குறி சொல்ல சொல்வது, இரண்டாவது கொட்டாய் தன் தலைவனாம் மாதவனை இங்கே வர வை என்பது மேலும் அது ஆழ்வாரின் அவசரத்தையும் ஆவலையும் காட்டுகிறது. ஒரு முறை சொன்னாலே போதாது, மீண்டும் மீண்டும் "கொட்டு, கொட்டு" என்று கெஞ்சுகிறார். அவ்வளவு துடிப்பு! அவ்வளவு ஏக்கம்.


வரதன்: பரகால நாயகி, மாதவனுக்காக காத்திருக்கும் வேதனை எவ்வளவு கொடியது என்று புரிகிறது.


ரங்கன்: ஆமாம் வரதா. காதலில் பிரிவு மிகக் கொடுமையானது. அதுபோல பக்தியிலும், பெருமானைப்  பிரிந்திருக்கும் வேதனை தாங்க முடியாதது. அந்த வேதனையிலிருந்து தப்பிக்க, எதையும் பற்றிக்கொள்கிறார் ஆழ்வார். சுவரில் இருக்கும் பல்லியைக் கூட!


வரதன்: அருமை! இனிமேல் வீட்டில் பல்லி சத்தமிட்டால் என்ன நினைவுக்கு வரும் தெரியுமா?


ரங்கன்: என்ன?


வரதன்: திருமங்கையாழ்வாரும், அவர் ஏங்கிய எம்பெருமான் மாதவனும்தான் நினைவுக்கு வருவார்கள். "கொட்டாய் பல்லிக் குட்டி!" என்று மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்.


ரங்கன்: (மகிழ்ச்சியுடன்) அற்புதம்! இதுதான் ஆழ்வார் பாசுரங்களின் நோக்கம். நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு செயலிலும் பெருமானை நினைக்க வைப்பது.


வரதன்: இப்போது முழுப் பாசுரத்தையும் மீண்டும் ஒருமுறை படிக்கலாமா?


ரங்கன்: நிச்சயமாக! இப்போது படித்தால், ஒவ்வொரு வார்த்தையின் ஆழமும் புரியும்.


வரதன்: "கொட்டாய், பல்லிக் குட்டி! குடம் ஆடி, உலகு அளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வர கொட்டாய், பல்லிக் குட்டி!”


(இருவரும் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருக்கிறார்கள். கோவில் மணி மீண்டும் ஒலிக்கிறது.)


வரதன்: இதுபோல் இன்னும் எத்தனை அழகான பாசுரங்கள் இருக்கும் நம் ஆழ்வார்களிடம்!


ரங்கன்: ஆயிரக்கணக்கில்! ஒவ்வொன்றும் ஒரு முத்து. நாம் ஒவ்வொன்றாக அனுபவிக்கலாம்.


வரதன்: ஆமாம். "கொட்டாய் பல்லிக் குட்டி!" என்ற அந்த அழகான வரிகளை நமக்குத் தந்த திருமங்கையாழ்வாருக்கு நன்றி.


ரங்கன்: திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!


வரதன்: பரந்தாமன் திருவடிகளே சரணம்!


(இருவரும் எழுந்து கோவிலை நோக்கி வணங்குகிறார்கள். மாலை வேளை ஆரத்தி ஒலிக்கத் தொடங்குகிறது. அவர்கள் கோவிலுக்குள் செல்கிறார்கள்.)


Post a Comment

புதியது பழையவை