இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச்சுரம்*
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்*
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி, கேசனே!"
திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தத்தின் இந்தப் புகழ்பெற்ற பாசுரம், கும்பகோணம் (திருக்குடந்தை) ஆராவமுதப் பெருமாள் மீது பாடப்பட்டது. பக்தியின் உயர்வால் இறைவனையே எழுந்து பேசச் சொன்ன ஆழ்வாரின் கட்டளை கலந்த அன்பையும், அதற்கு இணங்கி எழுந்த எம்பெருமானின் எளிமையையும் பார்ப்போம்.
திருமழிசை ஆழ்வார், திருக்குடந்தையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமானைப் பார்க்கிறார். பெருமாளின் அழகை அனுபவித்தபோது, அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல், அசையாமல் கண் வளர்ந்தருளுவதைக் கண்டார். அவர் மனதில் ஒரு சந்தேகம் எழுகிறது. இறைவன் ஏன் இப்படிப் படுத்து உறங்குகிறான்? ஒருவேளை அவன் உடல் களைத்துப் போயிருக்குமோ என்று எண்ணுகிறார்.
“நடந்த கால்கள் நொந்தவோ?” - பெருமாளே நீ வாமன அவதாரத்தில், உலகத்தையே உன் திருவடிகளால் அளந்தபோது ஏற்பட்ட களைப்பா? அல்லது இராம அவதாரத்தில், சீதையைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து நடந்தததால் உன் திருவடிகள் வலி எடுக்கிறதோ?
அதனால்தான் இந்த காவிரி கரையில் வந்து இளைப்பாறுகிறாயோ என்று ஆழ்வார் தன் "அதிசங்கையை" (மிதமிஞ்சிய அன்பு கலந்த அச்சம்) வெளிப்படுத்துகிறார்.
“நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ?” - பூமிப் பிராட்டியை இரணியாட்சன் என்ற அசுரன் கவர்ந்து சென்று கடலுக்கு அடியில் மறைத்து வைத்தபோது, இறைவன் மகா வராஹ (பன்றி) அவதாரம் எடுத்து, அந்த ஆழ்கடலைத் தோண்டி, தன் ஒற்றைக் கொம்பில் பூமியைத் தாங்கி மீட்டெடுத்தான். அண்ட சராசரங்களும் அதிரும்படி நிகழ்ந்த அந்தப் பெரும் முயற்சியால் உன் திருமேனி (உடல்) குலுங்கி, அதனால் ஏற்பட்ட உடல் சோர்வு இன்னும் நீங்கவில்லையோ? என ஆழ்வார் வினவுகிறார்.
“இலங்கு மால் வரைச்சுரம் கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்” - மலைகளையும், கரடுமுரடான பாலை நிலங்களையும் கடந்து வரும் காவிரி, பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யமாக (உபசாரமாக) அவன் திருவடியில் புகுவதற்காக மிக வேகமாகப் பாய்ந்து வருகிறாள். அப்படிப்பட்ட காவிரி கரையில் உள்ள திருக்குடந்தையில் "கிடந்தவாறு" இருக்கிறாயே கேசவனே! என்று அழைக்கிறார். இங்கு காவிரி நதியின் அழகு வர்ணிக்கப்படுகிறது. காவிரி, பெருமாளுக்கு ‘கீதோபசாரம்’ (இசை வழிபாடு) செய்வதற்காக வேகமாக ஓடிவருகிறாள் என்பது நயம்.
“கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” - பெருமாள் பேசாமல் கண்வளர்ந்தருளுவதைப் (தூங்குவதைப்) பார்த்த ஆழ்வாருக்குப் பொறுக்கவில்லை. "கிடந்தவாறு எழுந்திருந்து பேசு" என்கிறார். அதாவது, "உன் சோர்வு எனக்குப் புரிகிறது, அதனால் நீ முழுமையாக எழுந்து அமர்ந்து சிரமப்பட வேண்டாம், ஆனால் படுத்த நிலையிலேயே சற்றே தலை நிமிர்ந்து என்னிடம் பேசு" என்று அன்புக் கட்டளையிடுகிறார்.
அடியவர்கள் ஏது கேட்டாலும் மறுக்கத் தெரியாத அந்த ஆராவமுதன், ஆழ்வாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு எழத் தொடங்கினான். எம்பெருமான் எழ முயற்சிப்பதைக் கண்டு பதறிப்போன ஆழ்வார், "வாழி கேசனே!" என்று பாடி, அந்தத் திருக்கோலம் கலையாமல் அப்படியே இருக்க வேண்டும் என வாழ்த்துகிறார்.
இந்த நிகழ்வின் காரணமாகவே, இன்றும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பெருமாள் முழுமையாகப் சயனிக்காமலும், முழுமையாக எழாமலும், சற்றே தலை நிமிர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். எப்பொழுது ஆழ்வார் “எழுந்து வா” என்று சொன்னாலும் பெருமாள் தயார் நிலையிலே இருப்பதாகவும் சொல்வார்கள். இதற்கு "உத்தான சயனம்" என்று பெயர்.
இப்பாசுரம் வெறும் பெருமாளை பாடும் துதி மட்டுமல்ல; இது பெருமானுக்கும் பக்தர்களுக்கும் இடையிலான உறவின் உன்னதத்தைச் சொல்கிறது.
பெருமாள், தன் அடியாருக்காக, தன் ஆழ்வாருக்காக சயனத்திலிருந்து சற்றே எழ முயற்சித்ததால் அவனுக்கு "ஆராவமுதாழ்வான்" என்று பெயர் (அடியவனைப் போலப் பணிந்தவன்).
இறைவனையே எழுந்து பேசு என்று ஏவியதால் திருமழிசை ஆழ்வாருக்கு "திருமழிசைப்பிரான்" (பெருமானுக்குத் தலைவன்) என்று பெயர் ஏற்பட்டது. இவர் ஏற்கனவே தன் சீடன் கணிக்கண்ணனுக்காக பெருமாளையே “உன் பைந்நாகப் பாயை சுருட்டிக் கொண்டு வா” என்றவர் தானே. இவர் சொன்ன வன்னம் பெருமாளும் செய்தானே.
பிற்காலத்தில் இந்த ஆராவமுதப் பெருமாளின் திருவருளால் தான் ஶ்ரீமந் நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை தொகுக்க முடிந்தது. இது வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான நிகழ்வு. அந்நிகழ்வு நடக்கவில்லையென்றால் பிரபந்தம் ஏது.
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக