“எப்பாவம் பலவும் இவையே செய்து…” - கோமான் ஶ்ரீ பாலாஜி

 


ஶ்ரீ:

ஶ்ரீமதே இராமாநுஜாய நம:


எப்பாவம் பலவும் இவையே செய்து, இளைத்தொழிந்தேன்*

துப்பா! நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*

செப்பு ஆர் திண் வரை சூழ் திரு வேங்கட மாமலை* என்

அப்பா! வந்து அடைந்தேன்: அடியேனை ஆட்கொண்டருளே


புரட்டாசி மாதம் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது திருவேங்கடமுடையான். திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி, தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் இந்தப் புனிதமான மாதத்தில், திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையானை நோக்கிப் பாடிய இந்தப் பாசுரத்தை அநுசந்திப்பது மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.


தன்னிடம் இருக்கும் குறைகளையெல்லாம் ஒளிக்காமல் ஒப்புக்கொண்டு, “என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை; உன்னையே வந்து அடைந்தேன்; என்னை நீயே ஆட்கொண்டருள வேண்டும்” என்று பெருமானிடம் இறைஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.


இப்பாசுரத்தில் ஆழ்வார் தன்னுடைய சிறுமையையும் இயலாமையையும் வெளிப்படுத்துவதோடு, எம்பெருமானுடைய சாமர்த்தியம், தந்தைமை, கருணை, ரக்ஷகத்துவம் ஆகிய பெருமைகளையும் ஒருங்கே அநுபவிக்கிறார்.


“எப்பாவம் பலவும் இவையே செய்து, இளைத்தொழிந்தேன்”

எப்பாவம் பலவும் இவையே செய்து - பலவகையான பாவங்களையே தொடர்ந்து செய்து,


இளைத்தொழிந்தேன் - அவற்றால் துன்புற்று, சோர்ந்து, இளைத்துப் போய்விட்டேன்.


ஆழ்வார் தம்முடைய பாவங்களை எண்ணிப் பட்டியலிடவில்லை. “எப்பாவம் பலவும்” என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்.


கொலை, களவு போன்ற பாவங்கள் மட்டுமல்ல; கள் குடித்தல் முதலான மகாபாதகங்களும், அவற்றைத் தொடர்ந்து வரும் பாவங்களும், அவற்றுடன் தொடர்புடைய பிற குற்றங்களும் எண்ணிலடங்காமல் தன்னிடம் இருப்பதாக ஆழ்வார் தன்னைத் தாழ்த்திக் கூறுகிறார்.


“நான் செய்த பாவங்கள் அனைத்தும் எனக்கே முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவை அனைத்தும் உனக்குத் தெரியும்” என்ற உணர்வும் இதில் அடங்கியுள்ளது.


பாவங்களைச் செய்து கொண்டே இருப்பதால் உடல் மட்டும் அல்ல; மனமும் சோர்ந்து போகிறது. அந்தச் சோர்வின் உச்ச நிலையில்தான் ஆழ்வார் அடுத்த அடியைப் பாடுகிறார்.


“துப்பா!” - சாமர்த்தியம் உடையவனே! ரக்ஷிப்பதற்குத் தேவையான சக்தி முழுவதையும் உடையவனே!


எம்பெருமானை “துப்பா!” என்று அழைக்கிறார் ஆழ்வார்.


இங்கு ஒரு அழகான சொல் நயம் உள்ளது. “துப்பு” என்பது சாமர்த்தியம், ஆற்றல் என்பதைக் குறிக்கும். எம்பெருமானை அழைக்கும் போது, “துப்பா!” - உன்னிடம் சக்தி இருக்கிறது என்று கூறுகிறார்.


அதே நேரத்தில் தன்னைப் பற்றிக் கூறும்போது, “நிற்கின்றிலேன்” - என்னிடம் ஆற்றல் இல்லை என்கிறார்.


இவ்வாறு எம்பெருமானுடைய சாமர்த்தியத்தையும், தன்னுடைய அசக்தியையும் எதிரெதிராக நிறுத்தி, தன்னுடைய இயலாமையை ஆழ்வார் வெளிப்படுத்தும் இந்த நயம் மிகவும் ரசிக்கத்தக்கது.


“நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்”


நின் அடியே - உன்னுடைய திருவடிகளையே,


தொடர்ந்து ஏத்தவும் - இடைவிடாமல் துதிக்கவும்,


கிற்கின்றிலேன் - என்னால் இயலவில்லை; அதற்குரிய ஆற்றல் என்னிடம் இல்லை.


இங்கு ஆழ்வாரின் நைச்சியானுசந்தானம் இன்னும் ஆழமாகிறது. “உலக விஷயங்களில் ஈடுபட்டு நான் சோர்ந்துவிட்டேன்” என்று மட்டும் சொல்லவில்லை. “உன்னுடைய திருவடிகளையே தொடர்ந்து ஏத்துவதற்குக்கூட என்னால் இயலவில்லை!” என்று வருந்துகிறார்.


மனத்தால் தியானம் செய்வது போன்றவற்றையும், வாக்கினால் ஸ்தோத்ரம் செய்வது போன்றவற்றையும் தொடர்ந்து செய்யும் ஆற்றல் தன்னிடம் இல்லாததை உணர்கிறார்.


அப்படியானால், பெரிய பெரிய பிராயச்சித்தங்களைச் செய்து தன்னுடைய பாவங்களையெல்லாம் போக்கிக்கொள்ளும் சக்தி தன்னிடம் எங்கிருந்து வரும்?

இதுவே ஆழ்வாருடைய அடுத்த நிலைக்கு அவரை அழைத்துச் செல்கிறது.


ஸுக்ருதங்கள் இருந்திருக்குமோ?


மோட்சத்திற்கு விரோதமான பாவங்கள் தன்னிடம் நிறைந்திருப்பதை ஆழ்வார் உணர்கிறார். அத்தகைய பாவங்கள், மோட்சத்திற்கு உபாயமாகக் கருதப்படும் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்ற வழிகளுக்கும் தடையாக இருப்பதால், அவற்றுக்கு உரிய அதிகாரியாகத் தன்னால் இருக்க முடியாது என்கிறார்.


அதே நேரத்தில், “என்னிடம் எந்த நன்மையும் இல்லையா? நான் ஏதேனும் தர்மம் செய்திருக்கிறேனா?” என்பதும் தனக்குத் தெரியவில்லை என்கிறார். ஆனால், அறியாமலோ, எதிர்பாராமலோ, வேறு ஒரு நோக்கத்திற்காகவோ தன்னால் செய்யப்பட்ட சில நற்செயல்கள் இருந்திருக்கலாம் என்பதையும் அவர் மறுக்கவில்லை.


அவற்றை ஆசார்யர்கள் மூன்று வகையாக எடுத்துக்காட்டுகின்றனர். (நன்றி - வைணவன் குரல் புரட்டாசி 2026)


1. அஜ்ஞாத ஸுக்ருதம்

ஸுக்ருதம் என்று அறியாமலேயே செய்யப்படும் நற்செயல். உதாரணமாக, ஒரு மாடு கோயிலைச் சுற்றி ஓடுகிறது. அதைத் தொடர்ந்து பிடிப்பதற்காக ஒருவர் கோயிலைச் சுற்றி வருகிறார். அவர் “நான் கோயிலைப் பிரதக்ஷிணம் செய்கிறேன்” என்ற எண்ணத்துடன் சுற்றவில்லை. ஆனால், அறியாமலேயே கோயிலைச் சுற்றியதால், பிரதக்ஷிணத்தின் புண்ணியம் அவருக்கு ஏற்படுகிறது.

அதேபோல், ஒரு விளக்கில் ஒருவர் நெய் ஊற்றி வைத்திருக்கிறார். இன்னொருவர் அதில் திரியை இட்டு எம்பெருமானுக்காக விளக்கேற்றுகிறார். அந்த நபர் நெய் ஊற்றப்பட்டிருப்பதைத் தானே ஏற்பாடு செய்யவில்லை என்றாலும், அவனுடைய செயலால் விளக்கேற்றும் கைங்கரியம் நிறைவேறுகிறது. இத்தகையவை அஜ்ஞாத ஸுக்ருதம்.


2. யத்ருச்சா ஸுக்ருதம்

எதிர்பாராமல் நிகழ்வதால் ஏற்படும் நற்செயல். ஒருவர் வேறு ஒரு காரியத்திற்காக ஒரு இடத்திற்குச் செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக எம்பெருமானுடைய மஹோத்ஸவம் நடைபெறுவதைக் காண்கிறார். பெருமானைத் தரிசித்து, அவனை வணங்குகிறார். அவர் பெருமானைக் காண வேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கே செல்லவில்லை. ஆனாலும், எதிர்பாராதவிதமாக எம்பெருமானைத் தரிசித்து வணங்கியதால் ஏற்படும் புண்ணியம் யத்ருச்சா ஸுக்ருதம் எனப்படுகிறது.


3. ப்ராஸங்கிக ஸுக்ருதம்

வேறு ஒரு நோக்கத்திற்காகச் செய்யப்பட்ட செயல், எதிர்பாராதவிதமாக நன்மையை விளைவிப்பது. விவசாயத்திற்காக ஒருவர் கிணறு வெட்டுகிறார். அவருடைய நோக்கம் விவசாயத்திற்குத் தண்ணீர் பெறுவது மட்டுமே. ஆனால் அந்தக் கிணற்றிலிருந்து வழிப்போக்கர்களும் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக்கொள்கிறார்கள். அவருடைய நோக்கம் பிறருடைய தாகத்தைத் தீர்ப்பது அல்ல. இருந்தாலும், அவருடைய செயலால் பிறருக்குப் பயன்பாடு கிடைக்கிறது. இது ப்ராஸங்கிக ஸுக்ருதம்.


அதேபோல், ஒருவன் தன் மகனுக்கு “நாராயணா” என்று பெயரிடுகிறான். மகனை அழைப்பதற்காக அவன் “நாராயணா!” என்று கூறுகிறான். அவனுடைய நோக்கம் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்வது அல்ல. ஆனாலும், எம்பெருமானுடைய திருநாமமே அவன் வாயிலிருந்து வெளிப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் ப்ராஸங்கிக ஸுக்ருதமாக அமைகிறது. இவ்வாறான தர்மங்களுக்கு வேறு பலன் வேண்டுமென்ற நோக்கம் இல்லாததால், அவை நிஷ்காம கர்மங்களைப் போன்றவை என்று பெரியோர்கள் விளக்குகின்றனர்.


ஆனால் ஆழ்வாரின் மனநிலை என்ன?


இத்தகைய சிறிய நற்செயல்கள் தன்னிடம் இருந்திருக்கலாம் என்பதை ஆழ்வார் மறுக்கவில்லை.


முன்பு எம்பெருமானுடைய திருவடியைச் சில சமயங்களில் வணங்கியிருக்கலாம். அதன் பலனாக சில சிறிய உலக சுகங்களும் கிடைத்திருக்கலாம். ஆனால் அந்தச் சுகங்களின் நிலையாமையையும், அவற்றில் உள்ள குற்றங்களையும் உணர்ந்த பிறகு, அவற்றை மீண்டும் நாட வேண்டாம் என்று ஆழ்வார் தெளிவடைகிறார்.


இப்போது அவருடைய ஒரே விருப்பம், “உன் அடியையே தொடர்ந்து, அதுவே சிறந்த உபாயம் என்று பற்றிக்கொள்ள வேண்டும்.” ஆனால் அதற்கும் தன்னிடம் ஆற்றல் இல்லை! இதுதான் இந்தப் பாசுரத்தின் நெகிழ்ச்சியான திருப்பம்.


“செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை”


செப்பார் திண்வரை சூழ் - அரண் போல அமைந்துள்ள திண்ணிய மலைகளால் சூழப்பட்ட,


திருவேங்கட மாமலை - மேன்மை பொருந்திய திருவேங்கடமலை.


திருவேங்கடமலை சுற்றிலும் திடமான மலைப்பகுதிகளால் சூழப்பட்டிருக்கிறது. பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடம் சுற்றிலும் மலைகள் அரண் போல அமைந்திருப்பதை ஆழ்வார் மிகவும் அழகாகக் கொண்டாடுகிறார். மாணிக்கத்தைச் சுற்றி அதற்குப் பாதுகாப்பாகச் செப்புப் பொருத்துவது போல, திருமலையில் பள்ளமான பகுதியில் எம்பெருமான் எழுந்தருளியிருக்க, அவரைச் சுற்றியுள்ள மலைகள் அரண் போல உயர்ந்து நிற்கின்றன என்ற நயத்தையும் இங்கு அனுபவிக்கலாம்.


அதனால் தான், “செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை” என்று அந்த மலையின் பெருமையைப் பாடுகிறார்.


“என் அப்பா!” - எல்லாம் செய்ய வல்லவன், என் தந்தையும்!


இதுவரை, “துப்பா!” என்று எம்பெருமானுடைய சாமர்த்தியத்தைப் போற்றிய ஆழ்வார், அடுத்த கணமே “என் அப்பா!” என்று உரிமையோடு அழைக்கிறார். இது மிகவும் அழகான அனுபவம்.


தன்னைப் போன்ற இயலாத ஒருவனைக் காப்பதற்குத் தேவையான சக்தி அவனிடம் இருக்கிறது; அதைவிட முக்கியமாக, என்னைத் தன்னுடையவனாக ஏற்றுக்கொள்ளும் உரிமையும் அன்பும் அவனிடம் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு ஆழ்வார் அழைக்கிறார்.


“வந்து அடைந்தேன்” - இப்பாசுரத்தின் மிக முக்கியமான சொல் இதுதான். 


“என்னால் பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியவில்லை.”


“என்னால் பெரிய பிராயச்சித்தங்களைச் செய்ய முடியவில்லை.”


“என்னால் மனத்தால் தியானிக்கக்கூட முடியவில்லை.”


“வாக்கினால் உன் திருவடிகளைத் தொடர்ந்து ஏத்தவும் முடியவில்லை.”


இவ்வளவு இயலாமைகளையும் உணர்ந்த பிறகு, ஆழ்வார் வேறு எந்த வழியையும் தேடவில்லை. “வந்து அடைந்தேன்” என்று நேராக எம்பெருமானுடைய திருவடிகளில் வந்து விழுகிறார்.


இறுதியில் “அடியேனை ஆட்கொண்டருளே!” என்று இறைஞ்சுகிறார். இது வெறும் வேண்டுகோள் அல்ல. தன் சிறுமையையும், எம்பெருமானுடைய சாமர்த்தியத்தையும் உணர்ந்த பிறகு, “இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது; நீயே என்னை ஆட்கொள்ள வேண்டும்” என்ற முழுமையான நம்பிக்கையின் வெளிப்பாடு. “அப்பா!” என்று அழைத்துவிட்டதால், அந்த உறவின் அடிப்படையில் ஒரு உரிமையோடு “என்னை ஆட்கொள்வது உனது பொறுப்பு; நான் வந்து உன் திருவடிகளில் அடைந்துவிட்டேன்” என்ற மனநிலையையும் இங்கு காணலாம்.


ஆழ்வார் தம்முடைய தகுதியைக் காட்டி எம்பெருமானை அடையவில்லை. தம்முடைய இயலாமையை காட்டி அவனை அடைகிறார். அதனால்தான் “துப்பா!”

என்று அவனுடைய சாமர்த்தியத்தை நம்பி, “அப்பா!” என்று அவனுடைய உறவை நம்பி, “வந்து அடைந்தேன்” என்று அவனுடைய திருவடிகளைப் பற்றுகிறார்.


புரட்டாசி மாதத்தில் திருவேங்கடமுடையானை நினைத்து அநுசந்திக்க வேண்டிய மிக அருமையான பாசுரம் இது.


நம்முடைய பாவங்களையும் குறைகளையும் எண்ணி மனம் தளராமல், திருமங்கையாழ்வாரைப் போல நம்முடைய இயலாமையை எம்பெருமானிடம் ஒப்புக்கொண்டு, “என்னால் ஒன்றும் முடியவில்லை; நீயே சாமர்த்தியமுடையவன்; நீயே என் அப்பன்; உன் திருவடிகளையே வந்து அடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டருளே!” என்று அவனுடைய திருவடிகளில் சரணடைவோம்.


திருவேங்கடமுடையான், தன்னை நோக்கி வரும் அடியவர்களின் குற்றங்களை எண்ணாமல், அவர்களுடைய “வந்து அடைந்தேன்” என்ற ஒரு சொல்லையே பற்றிக்கொண்டு அருள்புரியட்டும். அவன் திருவடிகளைப் பற்றிய நம் மனம் என்றும் விலகாமல் இருக்கட்டும்.



திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம். 

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

🙏🙏🙇‍♂️🙇‍♂️

அடியேன்,

கோமான் ஶ்ரீ பாலாஜி

Post a Comment

புதியது பழையவை