ஶ்ரீமந் நாராயணனின் திருப்பாத கமலங்களை அடைய, பாலகன் பக்த ப்ரஹ்லாதன் காட்டிய ஒன்பது வடிவங்களுள் மூன்றாவது ஸ்மரணம். முந்தைய இரண்டு பதிவுகளில், பகவானின் திருநாமம், திருக்குணங்கள், அவதார மகிமைகளைக் கேட்கும் ச்ரவணத்தையும், அவற்றை நாவினால் பாடிப் போற்றும் கீர்த்தனத்தையும் பார்த்தோம். ஆனால் கேட்டதும் பாடியதும் அதோடு முடிந்துவிடக் கூடாது. அவை மனத்தில் ஆழமாகப் பதிந்து, இடையறாத நினைவாக நிலைக்க வேண்டும். பகவானைப் பற்றிய அந்தத் தொடர்ச்சியான நினைவே “ஸ்மரணம்”.
“ஸ்மரணம்” என்றால் கண்களை மூடிக்கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அமர்ந்து தியானிப்பது என்று சுருக்கிவிட வேண்டியதில்லை. பகவானுடைய திருநாமம், திருவுருவம், கல்யாணக் குணங்கள், அவதாரங்கள், திவ்ய லீலைகள் ஆகியவற்றை அன்போடு மனத்தில் நினைத்திருப்பதும் ஸ்மரணமே. அன்றாடக் கடமைகளிலும் உலகியல் பணிகளிலும் ஈடுபட்டிருக்கும்போதும், மனம் பகவானை முழுவதுமாக மறந்துவிடாமல் அவனோடு ஒரு உள்ளார்ந்த தொடர்பைப் பேணுவதே இந்தப் பயிற்சியின் அழகு. இப்படி இடைவிடாது நினைக்கும் மனம் நாளடைவில் அந்தச் சிந்தனையிலேயே நிலைபெற்று, அமைதியையும் ஆனந்தத்தையும் பகவத் அனுபவத்தையும் அடைகிறது.
ஆனால் மனத்தை ஓரிடத்தில் நிறுத்துவது எவ்வளவு கடினம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். பகவானை நினைக்க அமர்ந்தால், அன்று நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. நாளை செய்யப் போகும் வேலைகள் வந்து நிற்கின்றன. குடும்பம், செல்வம், உடல்நிலை என்று எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையைப் பகவான் கீதையில் ஓர் அழகான உவமையால் விளக்குகிறார்:
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா ।
யோகினோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மன: ॥
– பகவத் கீதை 6.19
காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட விளக்கு அசையாமல் எரிவதுபோல, அடக்கப்பட்ட மனம் தியானத்தில் அசையாமல் நிலைத்திருக்கும் என்பது இதன் பொருள். இது ஒரே நாளில் கைகூடுவதல்ல. மீண்டும் மீண்டும் பகவானை நினைக்கும்போது, மனம் மெல்ல மெல்ல அதற்குப் பழகுகிறது.
இந்தச் சிந்தனையின் அழகை நம் ஆழ்வார்கள் அற்புதமாக அனுபவித்திருக்கிறார்கள். பூதத்தாழ்வார் தம் இரண்டாம் திருவந்தாதியின் முதல் பாசுரத்தில், சிந்தையையே ஒரு விளக்கின் திரியாக ஏற்றிக் காட்டுகிறார்:
"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்."
பகவான்மீது கொண்ட அன்பே அகல் விளக்கு. அவனை அடைய வேண்டும் என்ற ஆர்வமே அதில் ஊற்றிய நெய். அவனை நினைத்து உருகும் சிந்தையே திரி. அந்த விளக்கிலிருந்து எழுவது ஞானச் சுடர். அன்பு வளர வளர நினைப்பு இயல்பாகிறது. நினைக்க நினைக்க அந்த நினைவு நம் மனத்தையே மாற்றுகிறது. ஆகவே “ஸ்மரணம்” என்பது வெறும் மனப்பயிற்சி அல்ல, அன்போடும் பக்தியோடும் அவனை நினைப்பது.
இந்த ஸ்மரணத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் பாலகன் ப்ரஹ்லாதனே. அவனுடைய வாழ்க்கையைப் பார்த்தால் ஸ்மரணத்தின் உண்மைப் பொருள் தெளிவாகும். ஹிரண்யகசிபு தவத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில், ப்ரஹ்லாதனின் தாய் கயாது நாரத மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தாள். அப்போது நாரதர் அவளுக்குப் பகவத் தர்மத்தை உபதேசித்தார். அதைத் தாயின் கருவிலிருந்த ப்ரஹ்லாதனும் கேட்டான். பிற்காலத்தில் தன் நண்பர்களிடமே அவன் இதைச் சொல்கிறான். கருவிலேயே கேட்ட அந்த உபதேசம், அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த ஸ்மரணமாக மலர்ந்தது.
தன் சகோதரன் ஹிரண்யாக்ஷன் திருமாலின் வராஹ அவதாரத்தால் கொல்லப்பட்டதால், ஹிரண்யகசிபு திருமாலின் மீது கடும் பகை கொண்டிருந்தான். ஆனால் அதே திருமாலின் திருவடிகளில் அசையாத பற்றுக் கொண்ட தன் மகனின் மனத்தை மாற்ற அவனால் முடியவில்லை. மகனைக் குருகுலத்துக்கு அனுப்பி கல்வி புகட்டச் செய்தான். ஆனால் ப்ரஹ்லாதனின் மனத்தில் நாராயண நாமமும் நாராயண சிந்தனையும் ஏற்கெனவே ஆழ வேரூன்றிவிட்டன. பின்னர் ஒருநாள் மகனை அழைத்து, "நீ கற்றவற்றுள் சிறந்தது எது?" என்று கேட்டபோதும், அவன் உலக விஷயங்களைப் பேசவில்லை. நாராயணனின் திருவடிகளைப் பற்றியே பேசினான். எவ்வளவு தடுத்தும் அவன் நாராயண நினைவை விடவில்லை.
ஹிரண்யகசிபுவின் கோபம் பெருகியது. ப்ரஹ்லாதனை அழிக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. விஷம் கொடுக்கப்பட்டது. நச்சுப் பாம்புகளிடம் விடப்பட்டான். மதயானைகளின் முன் நிறுத்தப்பட்டான். நெருப்பில் இடப்பட்டான். மலையுச்சியிலிருந்து தள்ளப்பட்டான். ஆனாலும் அவன் மனம் மாறவில்லை. அதற்குக் காரணம் அவன் உடல் வலிமை அல்ல. அவன் மனம் நாராயணனிடத்தில் நிலைத்திருந்தது. உடலுக்கு நேர்ந்த துன்பங்கள் எதுவும் அவனுடைய மனத்தில் பதிந்திருந்த நாராயண நினைவை அசைக்க முடியவில்லை. இங்குதான் ப்ரஹ்லாதனின் “ஸ்மரணம்” நமக்குப் பெரிய பாடமாகிறது. எந்தச் சிக்கலும் இல்லாதபோது பகவானை நினைப்பது எளிது. சிக்கல் வந்தபோதும் அவனை மறவாதிருப்பதே உண்மையான பக்தி.
ஒரு கட்டத்தில் ஹிரண்யகசிபுவின் சினம் உச்சத்தை எட்டியது. "உன் நாராயணன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான். ப்ரஹ்லாதனுக்கு அதில் சிறிதும் தயக்கமில்லை. "அவன் எங்கும் இருக்கிறான்" என்றான். "இந்தத் தூணிலும் இருக்கிறானா?" என்ற கேள்விக்கும் அவன் நம்பிக்கை அசையவில்லை. அடுத்து நடந்தது என்ன, நாம் அறிந்ததே. தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மப் பெருமாள் வெளிப்பட்டு ஹிரண்யகசிபுவை அழித்தார். ஆனால் நரசிம்மர் தோன்றியது மட்டுமே ப்ரஹ்லாதனின் பக்திக்குச் சான்று அல்ல. "நாராயணன் எங்கும் இருக்கிறான்" என்ற நம்பிக்கை, சோதனைகளின் உச்சத்திலும் அவன் மனத்தில் அசையாமல் நின்றதே அவன் ஸ்மரணத்தின் பெருமை.
மற்ற அவதாரங்கள் ஒரு திட்டமிட்ட காலத்தில் தோன்றின; நரசிம்மரோ பக்தனின் வார்த்தையைக் காக்க, அந்தக் கணத்திலேயே தோன்றினார். ப்ரஹ்லாதன் கொண்டிருந்த நம்பிக்கை வீண்போகக் கூடாது என்பதற்காக, ஹிரண்யகசிபு தூணைத் தட்டிய அந்தக் கணமே அதைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வெளிப்பட்டார் என்று முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் ஸ்வாமி தமது உபன்யாசத்தில் விளக்கியுள்ளார்.
இந்த ஸ்மரணத்துக்கு நம் ஆழ்வார், ஆசாரிய பரம்பரையில் மிக அழகான முன்னுதாரணம் நம்மாழ்வார். திருக்குருகூரில், ஆதிசேஷனின் அம்சமாகப் போற்றப்படும் புளிய மரத்தடியில், உலகியல் நினைவுகளிலிருந்து விலகிப் பரமாத்ம சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் அவர். குருபரம்பரை மரபின்படி, அங்கே யோக நிலையில் அமர்ந்து பகவானின் திருவடிகளையே இடையறாது தியானித்தார். அவர் உள்ளம் எப்போதும் பெருமானிடமே நிலைத்திருந்தது. அந்த ஆழ்ந்த அனுபவமே பின்னர் திருவாய்மொழி என்னும் ஒப்பற்ற ஞானப் பொக்கிஷமாக நம்மை வந்தடைந்தது.
அவருடைய ஸ்மரணத்தை இன்னும் நெருக்கமாக உணர்த்தும் ஒரு பாசுரம் இருக்கிறது:
"உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென்றே..."
– திருவாய்மொழி 6.7.1
உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும்கூடக் கண்ணன் எம்பெருமானே என்கிறார்! பகவானை நினைப்பதற்கு வேறு ஒரு பொருளைத் தேட வேண்டியதில்லை. நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பொருளிலும் அவனுடைய தொடர்பையே கண்டார் ஆழ்வார். இங்கே நினைப்பது என்பது தனியாக நேரம் ஒதுக்கி அமர்ந்து செய்வது மட்டுமல்ல. வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்திலும் அவனையே காண்பது. உண்ணும்போதும் பருகும்போதும் கடமைகளைச் செய்யும்போதும், மனத்தின் ஒரு மூலையில் பெருமானின் நினைவு ஒளிர்ந்துகொண்டிருக்க வேண்டும். அதுவே ஸ்மரணத்தின் அழகு.
ப்ரஹ்லாதன் மனத்தில் நாராயணன் இடைவிடாது நின்றான். நம்மாழ்வாரோ தாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பொருளிலும் கண்ணனையே கண்டார். ஒருவரின் ஸ்மரணம் சோதனைகளின் நடுவே வெளிப்பட்டது. மற்றவரின் ஸ்மரணம் அன்றாட வாழ்வின் ஒவ்வோர் அனுபவத்திலும் வெளிப்பட்டது.
பூதத்தாழ்வார் சொன்னதுபோல, அன்பைத் தகளியாக்குவோம், ஆர்வத்தை நெய்யாக்குவோம், உருகும் சிந்தையைத் திரியாக்குவோம். அதில் ஏற்றிய ஞானச் சுடரைப் புயல் வந்தாலும் அணையவிடாமல் காப்போம். ப்ரஹ்லாதனின் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தருவது இதுவே. சோதனைகள் வந்தாலும் பகவானை மறவாதே. துன்பங்கள் சூழ்ந்தாலும் நாராயண நாமத்தை விடாதே. உலகம் முழுவதும் எதிர்த்து நின்றாலும், "நாராயணன் இருக்கிறான்" என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடாதே.
இதுவரை கண்ட மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்தவை. ச்ரவணத்தில் பகவானைப் பற்றிக் கேட்டோம். கீர்த்தனத்தில் அவன் புகழ் பாடினோம். ஸ்மரணத்தில் அவனை மனத்தில் நிறுத்துகிறோம். கேட்டது மனத்தில் பதிய வேண்டும். பதிந்தது நாவில் வெளிப்பட வேண்டும். வெளிப்பட்டது மீண்டும் மனத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டும். பரீக்ஷித்துக்குக் கேட்டலின் வழியாக அனுபவம் கிடைத்தது. சுகதேவரின் திருவாயில் அதே அனுபவம் கீர்த்தனமாக ஒலித்தது. ப்ரஹ்லாதன் வாழ்வில் அது இடையறாத ஸ்மரணமாக நின்றது. நம்மாழ்வாரின் அனுபவத்தில் அந்த ஸ்மரணம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிறைந்திருந்தது.
நாமும் இம்மூன்றையும் நம் வாழ்வில் இணைத்துக்கொள்வோம். கேட்போம், பாடுவோம், நினைப்போம். அப்போது பகவான் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நினைக்கப்படும் தெய்வமாக அல்லாமல், நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் உடனிருப்பவனாக மெல்ல மெல்ல உணரப்படுவான். ப்ரஹ்லாதனின் அசையாத ஸ்மரண பக்தியும், நம்மாழ்வாரின் இடையறாத நினைவும், நம் மனத்திலும் பகவானை மறவாமல் இருக்கும் வரத்தை அருளட்டும்.
அடுத்ததாக, ஶ்ரீமந் நாராயணனின் திருவடிகளைச் சேவிக்கும் பாதஸேவனம். அந்த நான்காவது வடிவத்தைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய பக்தரைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
அடியேன்,
#கோமான்_ஶ்ரீ_பாலாஜி
#நவவித_பக்தி

கருத்துரையிடுக