நவவித பக்தி – கோமான் ஶ்ரீ பாலாஜி


"ஜீவாத்மாவான நம் இறுதி இலக்கு பரமாத்மாவான பகவானை அடைவதே. ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் அவனை நாம் எளிதில் அடைய முடியுமா? முடியுமென்றால், அதற்கான வழி என்ன?" என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் எழுந்திருக்கும். ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் மனம் உருகி நிற்கும்போதோ, இதிகாச புராணங்களைப் படிக்கும்போதோ, உபன்யாசங்களைக் கேட்கும்போதோ, பகவானின் திருவடிகளை அடைந்த மகான்களின் வாழ்க்கையைப் பற்றி அறியும்போதோ இந்தக் கேள்வி இயல்பாகவே நம் உள்ளத்தில் தலைதூக்குகிறது.


"ஆம், அவனை அடைவதற்குப் பல வழிகள் உண்டு" என்பதே நம் முன்னோர்கள் தரும் விடை. அந்த வழிகளுள் எளிமையானதும், எல்லோருக்கும் எட்டக்கூடியதுமாகப் போற்றப்படுவது பக்தி. ஆனால் அந்தப் பக்தி எப்படியெல்லாம் வகைப்படும்? ஒருவர் கண்ணீர் மல்கப் பாடுவதும், இன்னொருவர் மௌனமாக மனதிற்குள்ளேயே பகவானை நினைத்து உருகுவதும், மற்றொருவர் இடைவிடாது பகவானுக்குத் தொண்டு செய்வதுமாய் இவை எல்லாமும் பக்திதானா? பக்திக்கு இத்தனை முகங்கள் உண்டென்றால், அவற்றை வகைப்படுத்திச் சொன்னவர் யார்? அவர் அதை யாரிடம், எந்தச் சூழலில் சொன்னார்? அந்த வகைகளை நம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிப் பகவானின் திருவருளைப் பெற்றவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் செல்லும் சிறு பயணமே இந்தத் தொடர்.


பக்தியின் இந்த ஒன்பது வடிவங்களை நமக்கு எடுத்துரைத்தவர் ஒரு முற்றும் துறந்த முனிவரோ, பேரரசரோ அல்லர். அசுர குலத்தில் பிறந்தும் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளில் அசைக்க முடியாத பக்தி கொண்டிருந்த ஒரு சின்னஞ்சிறு பாலகன், பக்த ப்ரஹ்லாதன். அவன் எடுத்துரைத்த அந்த வடிவங்களே பின்னாளில் "நவவித பக்தி" என்று போற்றப்படுகின்றன. பக்தி ஒரே வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை அவை காட்டுகின்றன. ஒருவருக்குப் பகவானின் திருக்கதைகளைக் கேட்பதின் மூலம் அது மலரலாம். இன்னொருவருக்கு பகவானின் திருநாமத்தைப் பாடுவதில் பூக்கலாம். வேறொருவருக்கு இடைவிடாத பகவத் நினைவாகவும், சேவையாகவும், நட்பாகவும் வெளிப்படலாம். இறுதியில், தன்னையே பகவானுக்கு முழுமையாக ஒப்படைக்கும் நிலையிலும் நிறைவடையலாம்.


இவற்றை விரிவாகப் பார்ப்பதற்கு முன், ப்ரஹ்லாதன் இவற்றை எப்போது, யாரிடம், எந்தச் சூழலில் சொன்னான் என்பதை அறிவது அவசியம். அசுரர்களின் அரசனான ஹிரண்யகசிபுவுக்கு மகனாகப் பிறந்தவன் ப்ரஹ்லாதன். குருகுலத்தில் கல்வி கற்றுத் திரும்பிய மகனை ஒருநாள் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, அன்போடு ஹிரண்யகசிபு கேட்டான்: "மகனே, நீ கற்றவற்றுள் உனக்கு மிகச் சிறந்ததாகத் தோன்றுவது எது?" சிறுவன் சற்றும் தயங்கவில்லை. "நான்", "எனது" என்ற பற்றில் சிக்கி உலக இன்பங்களில் உழல்வதைவிட, அவற்றை விடுத்து ஸ்ரீஹரியின் திருவடிகளைச் சரணடைவதே மனிதப் பிறவியின் உயர்ந்த பயன் என்பதே நான் கற்றவற்றுள் சிறந்தது” என்றான்.


தன் பகைவனாகக் கருதிய நாராயணனின் பெருமையை, தன் மகனே பேசக் கேட்டு ஹிரண்யகசிபுவுக்குக் கோபம் பொங்கியது. சண்டன், அமர்க்கன் ஆகிய குருகுல ஆசிரியர்களிடம் ப்ரஹ்லாதனின் மனதை மாற்றும்படி கட்டளையிட்டான். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும், அந்தப் பிஞ்சு உள்ளத்தில் குடிகொண்ட நாராயண பக்தியை அசைக்க முடியவில்லை. சில காலம் கழித்து மீண்டும் மகனை அழைத்து, முன்பு கேட்ட அதே கேள்வியை ஹிரண்யகசிபு கேட்டான். அப்போது ப்ரஹ்லாதன் சொன்ன பதிலே, பக்தியின் ஒன்பது வடிவங்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியது.


“ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்மநிவேதனம் ॥”


“இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திச்சேந் நவலக்ஷணா

க்ரியேத பகவத்யத்தா தந்மந்யே(அ)தீதமுத்தமம் ॥”

– ஶ்ரீமத் பாகவதம் 7.5.23–24


முதல் ஸ்லோகம் சொல்வது இதுதான். பகவானின் திருநாமத்தையும் திருக்குணங்களையும் திருக்கதைகளையும் கேட்பது ச்ரவணம். அவற்றைப் பாடிப் போற்றுவது கீர்த்தனம். எப்போதும் அவனை நினைத்திருப்பது ஸ்மரணம். அவனுடைய திருவடிகளைச் சேவிப்பது பாதஸேவனம். முறைப்படி ஆராதிப்பது அர்ச்சனம். தாழ்மையோடு வணங்குவது வந்தனம். அவனுக்குத் தொண்டனாக இருந்து கைங்கர்யம் செய்வது தாஸ்யம். அவனை உற்ற நண்பனாகக் கொண்டு உரிமையோடு பழகுவது ஸக்யம். இறுதியாகத் தன்னையே முழுமையாக அவனிடம் ஒப்படைப்பது ஆத்மநிவேதனம்.


ப்ரஹ்லாதன் இதோடு நிற்கவில்லை. இரண்டாம் ஸ்லோகத்தில் தன் தந்தையின் கேள்விக்கு முழுமையான விடையைச் சொல்கிறான். இந்த ஒன்பது வகைப் பக்தியையும் விஷ்ணுவுக்கே அர்ப்பணித்து, நேரடியாக அவனிடமே பக்தி செய்பவனை, உயர்ந்த கல்வியைக் கற்றவன் என்றே தான் கருதுவதாக உரைக்கிறான். "நீ கற்றவற்றுள் சிறந்தது எது?" என்ற ஹிரண்யகசிபுவின் கேள்விக்கு இதுவே ப்ரஹ்லாதனின் பதில். இவை ஒன்பது வடிவங்களாகத் தோன்றினாலும் எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றே: நாராயணனிடம் பக்தியை வளர்த்து, அவன் திருவடிகளை அடைவது. அதனால்தான் இந்த ஒன்பதும் சேர்ந்து "நவவித பக்தி" எனப்படுகின்றன.


சரி, இப்போது ஒரு கேள்வி எழலாம், ஏன் ஒன்பது? ஒரே வழி போதாதா? இந்தக் கேள்வி எழத்தானே செய்யும். மனிதர்கள் எல்லோரும் ஒரே இயல்புடையவர்கள் அல்லர். ஒவ்வொருவரின் குணமும், பழக்கங்களும், எண்ண ஓட்டங்களும் வேறு. ஒரே கதவு மட்டும் இருந்தால் பலர் வெளியிலேயே நின்றுவிடுவர். ஒருவருக்குக் கேட்பது இனிக்கும், இன்னொருவருக்குப் பாடுவது, மற்றொருவருக்குத் தொண்டு. ஆகவே ஒன்பது கதவுகள் இருக்கின்றன, எல்லாம் ஒரே இல்லத்தை நோக்கியே திறக்கின்றன அது பகவானின் திருவடி. 


இந்த நவவித பக்தியின் ஒன்பது வழிகளுக்கு அப்பாலும், பகவானை வெவ்வேறு உணர்வுகளின் மூலம் அடைந்தவர்கள் பலர் உண்டு என்பதை நாரதர் தருமனுக்கு எடுத்துரைக்கும் பாகவதப் பகுதியிலும் காண்கிறோம். முனிவர்கள் பக்தியாலும், பாண்டவர்கள் உறவாலும் தோழமையாலும், கோபியர் பேரன்பாலும் அவனை அடைந்தனர். சிசுபாலனோ, பகவானிடம் கொண்ட பகையினாலேயே இடைவிடாது அவனையே நினைத்துக் கொண்டிருந்தான். இவ்வாறு வெவ்வேறு உணர்வுகளின் மூலம் பகவானை அடைந்தவர்களைப் பற்றிப் பாகவதம் எடுத்துரைக்கிறது. ஆனால் பகவானிடம் அன்பும் பக்தியும் கொண்டு அவனைச் சரணடைவதே உயர்ந்ததும் இனிமையானதுமான வழி. அதனால்தான் ப்ரஹ்லாதன் பக்தியின் ஒன்பது வடிவங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.


அசுர குலத்தில், அசுர மன்னனின் அரண்மனையில் வளர்ந்த ஒரு சிறுவனுக்கு இத்தகைய ஞானம் எங்கிருந்து வந்தது? அதற்கும் ஶ்ரீமத் பாகவதமே விடை தருகிறது. ப்ரஹ்லாதனின் தாய் கயாது கருவுற்றிருந்த காலத்தில் நாரத மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தாள். அப்போது நாரதர் அவளுக்கு நாராயணனின் மகிமையையும் பக்தியின் பெருமையையும் உபதேசித்தார். அந்த உபதேசத்தைத் தாயின் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆகவே ப்ரஹ்லாதனின் பக்தி, குழந்தையாகப் பிறந்த பிறகு திடீரெனத் தோன்றியதல்ல. கருவிலேயே கேட்ட உபதேசம் அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து, பிறந்த பின்னும் அவனது இயல்பான வாழ்க்கையாகவே மலர்ந்தது. உலக இன்பங்களில் பற்றில்லாமல், சிறு வயதிலேயே அவனால் நாராயணனின் திருவடிகளில் உறுதியாக நிற்க முடிந்ததன் காரணம் இதுவே.


இனி வரும் பதிவுகளில் இந்த ஒன்பது வடிவங்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம். ஒவ்வொன்றுக்கும், அதைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய ஓர் உத்தம பக்தரின் சரித்திரத்தை இணைத்துக் காண்போம். அந்த மகான்களின் வாழ்க்கைச் சம்பவங்களை அறியும்போது, பக்தி என்பது வெறும் சொற்களில் அடங்குவதல்ல, வாழ்ந்து காட்டப்பட வேண்டியது என்பது நமக்குப் புலனாகும். இதிகாச புராணங்களில் மட்டுமின்றி, ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலும் ஆச்சார்யர்களின் திருவாழ்க்கையிலும் இந்த ஒவ்வொரு பக்தியும் எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்பதையும், அடியேனுக்குத் தெரிந்த வரையில் பகிர்ந்துகொள்கிறேன். எங்காவது புரிதலிலோ பதிவிலோ பிழை இருந்தால், பெரியோர்கள் தயைகூர்ந்து திருத்த வேண்டுகிறேன். அடியேன் சிறியன், ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் காட்டிய பக்திப் பாதையில் நாமும் சிறிதாவது நடந்து பார்க்க வேண்டும் என்ற சின்ன ஆசை மட்டுமே.


ப்ரஹ்லாதன் உச்சரித்த அந்த ஒன்பது வடிவங்களில் முதல் சொல் "ச்ரவணம்". பகவானின் திருநாமத்தையும் திருக்கதைகளையும் திருக்குணங்களையும் கேட்டு, அந்தக் கேள்வியின் வழியே உயர்ந்த நிலையை எட்டிய மகான்களின் சரித்திரத்தோடு நம் நவவித பக்திப் பயணத்தைத் தொடங்குவோம்.


அடியேன்,
#கோமான்_ஶ்ரீ_பாலாஜி

#நவவித_பக்தி

Post a Comment

புதியது பழையவை