வெள்ளி, 29 அக்டோபர், 2004

இந்த நாலாயிர பிரபந்தத்தின் உள்ளே புகுமுன் சிறிது இலக்கியத்தையும், பாவகையையும் சிறிது பார்க்கலாம். முதலிலேயே குறிப்பிடுகிறேன், நான் தமிழ் இலக்கனம் படிக்கவில்லை, நாள் கூறும் கருத்துகளில் தவறிருப்பின் தெரியபடுத்துங்கள் திருத்திக்கொள்கிறேன். பெரும்பாலும் தமிழ் பாக்கள் 1. வெண்பா, 2. ஆசிரியப்பா, 3. கலிப்பா, 4. வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். ஒவ்வொரு பாவுக்கும் 1. தாழிசை, 2. துறை, 3. விருத்தம் என்னும் மூவகைச் செய்யுளினங்கள் உண்டு.

தமிழ் இலக்கியத்தில் வெண்பா ஒரு தனித்த சிறப்புக்குரியதாகும். ஆசிரியப்பாவும் வெண்பாவும் முதற்பா என்றே அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியர், வஞ்சிப்பா ஆசிரிய நடையுடையது என்றும், கலிப்பா வெண்பா நடையுடையது என்றும் குறிப்பிடுவார். ஆசிரியப்பாவில் ஒரு கருத்தை வெளியிடுவது மிக எளிது. புலவர்களின் உள்ளக் கருத்தை அப்படியே உணர்த்தவல்லது ஆசிரியப்பா. ஆழ்வார்கள் பெரும்பாலும் தமது பாடல்களை ஆசிரியப்பாவிலும் வெண்பாவிலுமே அமைத்துள்ளனர். இவை இரண்டைத் தவிர ஆழ்வார்கள் கலிப்பாவில் பல விருத்தங்கள் எழுதியுள்ளனர். வெண்பா எழுதுவது அவ்வளவு எளிதல்ல என்றும், ஆசிரியப்பாவே மிக எளிதானது என்பதால் பெரும்பாலும் ஆசிரியப்பாவிலேயே எழுதியுள்ளனர். இவை இரண்டு மட்டும் போதுமா? ஏதாவது புதுமை வேண்டாமா... வந்துவிட்டது விருத்தம். விருத்தம் என்றால் புதுமை என்று அர்த்தம் கொள்ளலாம். ஒரே வகையான நடையும் ஓசையும் உடைய ஆசிரியப்பாவில் வெவ்வேறு வகையான உணர்ச்சிகளையமைப்பதில் எவ்வளவோ தடைகள் உண்டென்பதை இடைக்காலப் புலவர்கள் (அதாவது ஆழ்வார்கள்) உணர்ந்தார்கள்.

விருத்தம் என்பது வெவ்வேறு வகை நடையும், வகை வகையான ஓசையும் அமைந்து மாறிமாறி வரக்கூடியதாக இருத்தலைக் கண்டு அதைப் போற்றத் தொடங்கினார்கள். ( டாக்டர் மு.வரதராசன்).

ஆசிரிய விருத்தம் (ஆசிரியப்பா - விருத்தம்) கழிநெடிலடியாசிரிய விருத்தம் என்ற முழுமையான பெயருடையது. ஓரடியில் ஆறு சீரும் அதற்கு மேலும் இருப்பது கழிநெடிலடியாசிரியப்பா.

செய்யுளில் வரும் வரிக்கு அடி என்பது பெயர் அந்த அடி குறைந்த அளவு இரண்டு சீர்களை கொண்டு வரும்.இவற்றின் வகையினைப் பார்ப்போம்.... 1. குறளடி - இரண்டு சீர்களை உடையது 2. சிந்தடி - மூன்று சீர்களை உடையது. 3. நேரடி - நான்கு சீர்களைக் கொண்டது. இஃது அளவடி என்றும் கூறப்படும். 4. நெடிலடி - ஐந்து சீர்களைக் கொண்டது. 5. கழி நெடிலடி - ஆறும் ஆறுக்கு தேற்பட்ட சீர்களை உடையது. என்ன குழப்பமாகிவிட்டதா?...சீர் என்பது அசைகளால் ஆவது. அசை என்பது எழுத்துக்களால் ஆவது. இந்த அசை நேரசை, நிரையசை என இருவகைப்படும். ஐயோ போதுமென்கிறீர்களா ஒழுங்காக ஒப்பித்தேனா தெரியவில்லை... இதெல்லாம் எதற்கு என்றால் பாடலின் மேல் இது கலித்தாழிசை என்றும் இது நேரிசை வெண்பா என்றெல்லாம் சின்னச்சின்ன குறிப்புகள் வரும் அதற்காக தான் இதெல்லாம். மறுபடி கூறுகிறேன் நான் தமிழறிஞனல்ல.... தவறிருப்பின் சுட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இனி பாடல்களைப் பார்ப்போம்..... வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக