வெள்ளி, 5 நவம்பர், 2004

திருப்பல்லாண்டு 3,4

பெரியாழ்வார் அருளிச்செய்த

திருப்பல்லாண்டு

முதற்பத்து3

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்

கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோம்

ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை

பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே.

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல், எம்பெருமானுக்கு சேவை செய்வதையே கருத்தாகக் கொண்டு வாழும் நீங்கள். வந்து மண்ணும் மணமுங் கொண்மின், அவ்வாறு பெருமாளுக்கு

சேவை செய்யும் நீங்கள் இந்த மண்ணையும் மண்ணில் விளைகின்ற அனைத்தையும் உமதாக்கிக்கொள்ளுங்கள். கூழாட்பட்டு நின்றீர்களை, கூழுக்கு (உணவுக்கு) ஆசைப்பட்டு மற்றவர்களிடத்தில் அடிமையாக தொழில் செய்துக் கொண்டிருப்பீர்களானால். எங்கள் குழுவினில் புகுதலொட்டோம், அவ்வாறு இருக்கும் உங்களை எங்கள் குழுவான பெருமானுக்கு தொண்டு செய்யும் குழுவில் உங்களை சேர்க்கமாட்டோம். ஏழாட்காலும் பழிப்பிலோம், ஏழு பிறவியிலும் எந்தவிதமான பாவ காரியங்களை செய்யாமலும் எந்தவிதமான பழிக்கு ஆளகாமாலும் இருக்கும் நாங்கள். நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை, அப்படி எந்த பழிபாவத்திற்கும் ஆளாகாமல இருக்கும் நாங்கள் இராட்சதர்கள் வாழ்ந்த இலங்கை மாநகரிலே. பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே, அப்படி இராட்சதர்கள் வாழ்ந்த இலங்கையை பெரும் போர்கொண்டு அழித்த அந்த சக்கரவர்த்தித் திருமகனாம் இராமனுக்கு பல்லாண்டு கூறுவோம் வாருங்கள்...

4

ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து

கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ

நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று

பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே.ஏடுநிலத்திடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து, ஏடுநிலத்திடுவதன் - இந்த உடல் மண்ணுக்குப் போகுமுன் எங்கள் குழுவாம் இறைத்தொண்டு செய்யும் குழுவுக்கு வாருங்கள். கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லை கூடுமினோ, அவ்வாறு உடல் மண்ணுக்கு போகுமுன் எங்கள் குழுவில் வந்து சேர மனமுள்ளவர்கள் நீங்கள் இதுவரை எந்த

கடவுளை நினைத்திருந்தாலும் எங்கள் இறைவனாம் கண்ணனை தொண்டு செய்தீர்களானால் உங்கள் தொல்லைகள் ஒழியுமன்றோ.நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாவென்று, நாடு நகரம் எங்கும் ஓம் நமோ நாராயணா வென்று பாடுவோம் வாருங்கள். பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே., பெருமானின் நாமத்தை பாடும் மனமுடையவர்களே வாருங்கள் நம் பெருமாளாம் கண்ணனை பல்லாண்டுப் பாடுவோம் வாருங்கள்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக