ஆழ்வார் பசி தீர்த்த அமுதன் திருக்கண்ணங்குடி ஸ்ரீதாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோயில்

ஆழ்வார் பசி தீர்த்த அமுதன் திருக்கண்ணங்குடி ஸ்ரீதாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோயில்


கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீது பக்தி கொண்டு எந்நேரமும் அவன் நினைவில் திளைத்தார் மகரிஷி வசிஷ்டர். கண்ணனும் வெண்ணெயும் இணைபிரியாததாயிற்றே! எனவே, வெண்ணெயைத் திரட்டி, அதைக் கெட்டியாக்கி கண்ணன் உருவம் செய்து பூஜித்து வந்தார். வசிஷ்டரின் பக்தியால் அந்த வெண்ணெய் இளகவில்லை. இவரது பக்தியின் சிறப்பு அறிந்து ஒருநாள் கண்ணனே நேரில் வந்தான்- ஒரு குழந்தையின் வடிவாக. நேரே பூஜை இடத்துக்குச் சென்ற அந்தக் குழந்தை வெண்ணெய்க் கண்ணன் உருவத்தை எடுத்து வாயில் விழுங்கிச் சுவைத்தது. வசிஷ்டருக்கு கோபம் வந்தது. குழந்தையை விரட்டினார். அது பிடிபடவில்லை. குழந்தையின் வேகத்துக்கு வசிஷ்டரால் ஈடுகொடுக்க முடியவில்லை. பிடிபடாது ஓடிய குழந்தை மகிழ மரம் நிறைந்திருந்த வனத்தில் ஓர் ஆசிரமத்துக்குள் சென்றது. அங்கே தவத்தில் இருந்த முனிவர்கள், வந்த குழந்தை யாரெனக் கண்டுகொண்டார்கள். எவனைத் தரிசிப்பதற்காக தவமாய்த் தவமிருந்தார்களோ அவனே நேரில் வந்தால்.. தங்கள் பாசக் கயிற்றால் அவனைக் கட்டிப் போட்டனர். கண்ணன் சொன்னான்... சீக்கிரம் என்ன வேண்டுமோ கேளுங்கள்... வசிஷ்டர் துரத்திக்கொண்டு வருகிறார். அவர்களோ, "கண்ணா உன் தரிசனத்துக்காகத்தானே நாங்கள் தவமிருந்தோம். எங்களுக்குக் காட்சியளித்தது போல் நீ, இங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் காட்சி தந்து அருள வேண்டும்'. அதே நேரம் வசிஷ்டரும் வந்தார். கண்ணன் காலைப் பிடித்துக் கட்டிக் கொண்டார். இப்படி கண்ணன் தாம்புக் கயிறால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனான். வசிஷ்டரின் பிடிக்குள் கட்டுண்டு நின்றதால் ஊர் கண்ணன்குடியானது.

கிருஷ்ணாரண்யம் எனப்படும் இத்தலம், பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்களில் ஒன்று. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய ஐந்து தலங்களையும் பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்கள் என்பர். இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணம் கூறும். ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் இவை ஐந்தினாலும் புகழ்பெற்ற இடம் என்பதால் பஞ்ச பத்ரா என்று ஆனது.

திருக்கண்ணங்குடி அருகேயுள்ள மற்ற நான்கு தலங்களையும் சேர்த்து பஞ்சநாராயணத் தலம் என்பர். இங்கே மூலவர் திருநாமம் லோகநாதப்பெருமாள் என்பது. உற்ஸவர்: தாமோதர நாராயணன். ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீற்றிருக்கும் அழகே அழகு. தாயார்: லோகநாயகி. அரவிந்தநாயகி என்பது உற்ஸவர் தாயாரின் திருநாமம். மகிழ மரமே தல விருட்சமாக உள்ளது. சிரவண புஷ்கரிணி தீர்த்தம்.

இங்கே பெருமாள், பிருகு முனிவர், பிரம்மா, உபரிசரவஸ், கெüதம ரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பிரத்யட்சமாகி அருள் புரிந்துள்ளார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்தப் பெருமாளைப் பாடியுள்ளார். மேலும், வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள் மனமுவந்து கொண்டாடிய பெருமாள் இவர்.

திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே ஜாடையில் இருப்பதுவாம். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். மற்ற திவ்ய தேசங்களில் இரு கரம் குவித்த நிலையில் கருடாழ்வார் இருப்பார். ஆனால் இங்கே இரு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இது வைகுண்டத்திலுள்ள கருடனின் காட்சி என்பர்.

இந்தத் தலத்தைப் பற்றிக் கூறும்போது, ஒரு பழமொழியாக ""காயாமகிழ், உறங்காப்புளி, ஊறாக்கிணறு, தோலா வழக்கு- திருக்கண்ணங்குடி'' என்பார்கள். 

உறங்காப்புளி: திருமங்கையாழ்வார் அரங்கன் ஆலயத்தில் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடப் பணிக்கு வேண்டிய திரவியம் இல்லை. அப்போது "நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ளது. அதைக் கொண்டுவந்து மதில் கட்டலாம்' என்று இவரது சீடர்கள் கூற, ஆழ்வாரும் நாகை சென்று அச்சிலையைக் கண்டு, அறம் பாடினார். சிலை வடிவம் மட்டும் அவ்வாறே இருக்க, சுற்றி வேயப்பட்ட தங்கம் தானாக வந்து விழுந்ததாம். அதை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும்போது, இவ்வூரின் வழியாக வந்தவர் கால்கள் நோவு எடுக்க சாலையோர சேறு சகதி நிறைந்த நிலத்தில் அதைப் புதைத்துவிட்டு புளியமரத்தினடியில் படுத்துறங்க எண்ணினார். புளிய மரத்தைப் பார்த்து "நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கக் கூடாது' என்று கூறி கண்ணயர்ந்தார். மறுநாள் விடிந்தபொழுது, வயலுக்குச் சொந்தக்காரன் உழத் தொடங்க, புளிய மரம் இலைகளை உதிர்த்து ஆழ்வாரை எழுப்பியதாம். எனவே அவர் மரத்தைப் பார்த்து "உறங்காப்புளி வாழ்க' என்றாராம்.

இப்போதும் சிறு மேடாக உறங்காப்புளி இருந்த இடத்தைக் காணலாம்.

தீரா வழக்கு!: பின்னர் ஆழ்வாருக்கும் நிலத்தின் சொந்தக்காரனுக்கும் நிலப்பிரச்னை எழுந்தது. வாதம் முற்றி, ஊர்ப் பஞ்சாயத்தில் சென்றது. நிலத்துச் சொந்தக்காரன் தனது உரிமைப் பட்டாவை பஞ்சாயத்தாரிடம் காட்டினான். பஞ்சாயத்தார் ஆழ்வாரிடம் கேட்க, "எனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இங்கே தங்கியிருந்து நாளை சென்று நானும் உரிமைப் பட்டயத்தைக் கொண்டு வருகிறேன்' என்றார். ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது. வழக்கும் முடிவுறாமல் போனது. அன்று முதல் இன்றுவரை இந்த ஊரில் எந்த வழக்கு ஏற்பட்டாலும் சரியான தீர்ப்பில்லாமல் தீரா வழக்காகவே (தோலா வழக்காகவே, தீராத வழக்காகவே) இருந்து வருகிறதாம்.

ஊறாக்கிணறு!: ஒரு நாள் தங்கிச் செல்ல அவகாசம் கேட்ட ஆழ்வாருக்கு சிறிது நேரத்தில் தாகம் எடுத்தது. கிணற்றடியில் நீர் இறைத்த பெண்களிடம் தாகம் தணிக்க நீர் கேட்டார். இவர் நிலத்துக்கு வழக்குரைத்தது போல் நம்மிடமும் ஏதாவது செய்தால் என்னாவது என்று எண்ணி தண்ணீர் தரமுடியாது என்றனர். வருந்திய ஆழ்வார், "இந்த ஊரின் கிணறுகளில் நீர் ஊறாமல் போகக் கடவது' என்று சபித்துவிட்டார். அது இன்றும் தொடர்கிறதாம். கிடைக்கும் நீரும் உப்புநீராகத்தான் உள்ளதாம். அதிசயமாக கோயிலுக்குள் திருமஞ்சனத்துக்காக எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயா மகிழ்! பசி மயக்கத்தில் மகிழ மரத்தடியில் அமர்ந்தார் ஆழ்வார். அப்போது ஸ்ரீகிருஷ்ணனே தீர்த்தமும் பிரசாதமும் ஏந்தி வந்து இவரைத் தட்டியெழுப்பி, உணவைக் கொடுத்தார். தன்னை மறந்த நிலையில் உணவுண்டு ஏறிட்டுப் பார்த்த ஆழ்வார், வந்தவனைக் காணாது ஆச்சர்யம் அடைந்தார். அந்த மகிழ்வில் மகிழ மரத்தைப் பார்த்து "நீ என்றும் பசுமையுடன் இளமை குன்றாமல் காயாமகிழ மரமாக இருப்பாய்' என்றார்.
இவ்வாறு இந்தத் தலத்துக்கென சில தடங்களைப் பதித்த ஆழ்வார் அன்று இரவோடு இரவாக வயலில் இருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்று விட்டார்.

சிறப்பு: 108 வைணவத் திருப்பதிகளில் 18வது தலமும் சோழ நாட்டுத் தலங்கள் நாற்பதில் 26வது தலமுமாக விளங்குகிறது திருக்கண்ணங்குடி.

பிரார்த்தனை: இங்கே பெருமாளுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

திருப்பணி: சமீபத்தில் இத்திருக்கோயிலில் பாலாலயம் நடைபெற்றுள்ளது. திருப்பணி வேலைகள் முடிந்து விரைவில் மஹாசம்ப்ரோஷணம் நடக்க வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம்.

அமைவிடம்: நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள ஆழியூரில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். ஆழியூருக்கு பேருந்து வசதி நிறைய உண்டு.

கோயில் தரிசன நேரம்: காலை 8-12, மாலை 5-9 வரை.

தொடர்புக்கு: 99431 38591
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை