வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கோதை ஆண்டாள் நம்மை ஆள்கிறாள்

* ஆண்டாள் காட்டிய உயர்ந்தவழி சரணாகதி தத்துவம். இறைவனிடம் முழுமையாக சரணடைய வேண்டும். அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும், இந்த உலகை வெறுக்க இறைவனிடம் சரணடைவதைத் தவிர சிறந்த வழியில்லை.

* சுவாமிதேசிகன் ஆண்டாளைச் சிறப்பிக்கும் கோதாஸ்துதியில், ""விஷ்ணு சித்தரின் திருமகளான கோதை( ஆண்டாள்)
என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதுக்கு இனியவளான அவள் எப்போதும் இதயத்தில் பிரகாசிக்கவேண்டும்,'' என்று பிரார்த்தனை செய்கிறார்.

* பூமாதேவியே ஆடிப்பூரத்தில் அவதரித்தாள். பெரியாழ்வார் அவளுக்கு "கோதை' என்று பெயரிட்டு வளர்த்தார். "கோதா' என்னும் சொல்லுக்கு "நல்ல வாக்கு தருபவள்' என்று பொருள். அவளைத் தியானம் செய்தால் நமக்கு நல்ல வாக்கைக் கொடுத்தருள்வாள்.

* மாயவனாகிய திருமாலைக் கட்டிப்போட ஆண்டாள் இருவித மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூமாலை. மற்றொன்று பாமாலை. பாமாலையைப் பாடிச் சமர்ப்பித்தாள். பூமாலையைச் சூடி அவனுக்கு உகந்து அளித்தாள். அதனால், "சூடிக்கொடுத்த நாச்சியார்' என்னும் பெயர் பெற்றாள்.

* ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் கிருஷ்ணபக்தியில் திளைத்தவர். எப்போதும் அவளிடம் கிருஷ்ண சரிதத்தை எடுத்துச் சொல்லி வந்தார். இதனால் பிஞ்சுமனதில் கிருஷ்ணபக்தி ஆழமாக வேரூன்றியது. சின்னப் பெண்ணானாலும் திருமாலைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனால், சிறுமியான அவள் இந்த விஷயத்தை பிறரிடம் எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்தாள். இதனால் தான், வரவரமுனிகள் ஆண்டாளை "பிஞ்சாய்ப் பழுத்தாளை' என்று குறிப்பிட்டுள்ளார்.

* ஆண்டாள் என்றால் "ஆள்பவள்' . அவள் அன்பினால் பூமாலை புனைந்து கண்ணனை ஆண்டாள். நம்மையும் இன்று ஆண்டு கொண்டிருக்கிறாள்.

* ஆண்டாள் பாடிய திருப்பாவையில் 30 பாசுரங்கள் உள்ளன. அதில் முதல் பத்தில் திருமாலின் திருநாமத்தைச் சொல்லவும், அடுத்த பத்தில் திருவடியில் மலர்களை இட்டு அர்ச்சனை செய்ய வேண்டுமென்றும், மூன்றாம் பத்தில் நம்மையே இறைவனுக்கு ஆத்ம சமர்ப்பணமாக கொடுக்க வேண்டுமென்றும் சொல்கிறாள்.

* வேதம் படிப்பது கடினமானது. வேத மந்திர ஒலியை நாபி, கழுத்து, உதடு என்று உடம்பில் ஒவ்வொரு இடத்தில் இருந்து எழுப்ப வேண்டியிருக்கும். அதற்குரிய ஸ்வரம் பிடிபடுவது அதை விட கஷ்டம். ஆனால், வேதத்தின் சாறைப் பிழிந்த ஆண்டாள் பாசுரமாக்கி திருப்பாவையாக நமக்கு வழங்கி இருக்கிறாள். அதைப் படிப்பது எளிது.

* யாகசாலையில் வேள்வி நடத்தும் அந்தணர்கள் திரவியங்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் சேர்ப்பார்கள். ஆண்டாளோ, தன்னுடைய உடல்,பொருள்,ஆவி என்னும் மூன்றையும் பக்தி என்னும் நெய்தடவி வடபத்ரசாயி பெருமாளிடம் சேர்த்து விட்டாள்.

* மனம் நினைப்பதையே சொல்ல வேண்டும். சொல்வதையே செயலாக்க வேண்டும். மனச்சுத்தத்தோடு ஆண்டாளின் பெயரை அடிக்கடி சொல்லுங்கள். பலனைப் பெறுங்கள்.

வணங்கி சொல்கிறார் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சார்யார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக